என் மலர்
உக்ரைன்
- ரஷிய படையெடுப்புக்கு பிறகு முதல் முறையாக உக்ரைன் வந்தார் அமெரிக்க அதிபர்
- நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுதங்களை வழங்குவது தொடர்பாக ஜெலன்ஸ்கி கேட்டுக்கொண்டார்.
கீவ்:
உக்ரைன் மீது ரஷியா தனது ராணுவ நடவடிக்கைகளை தொடங்கி ஒரு வருடம் ஆக உள்ளது. ரஷியாவின் தாக்குதலுக்கு மேற்கத்திய நாடுகளின் உதவியுடன், உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் போர் முடிவுக்கு வராமல் நீண்டுகொண்டே செல்கிறது. உக்ரைனுக்கு கனரக ஆயுதங்களை வழங்க உள்ளதாக நட்பு நாடுகள் கூறி உள்ளன. இதனால் வரும் நாட்களில் போர் தீவிரமடையலாம்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று திடீரென உக்ரைன் வந்தார். ரஷிய படையெடுப்புக்கு பிறகு முதல் முறையாக உக்ரைன் வந்த அவர், அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து, சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். இரு தரப்பும் உக்கிரமான தாக்குதலை தொடங்குவதற்கு தயாராகி வரும் நிலையில், ஜோ பைடனின் இந்த திடீர் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த சந்திப்பின்போது உக்ரைனுக்கு நீண்டதூரம் சென்று தாக்கும் ஆயுதங்களை வழங்குவது தொடர்பாக அமெரிக்காவிடம் உக்ரைன் அதிபர் கேட்டுக்கொண்டார். உக்ரைனுடன் அமெரிக்கர்கள் துணை நிற்பதாகவும், உலகம் உங்களுடன் நிற்கிறது என்றும் ஜோ பைடன் கூறினார். ஆயுத விநியோகத்தை அதிகரிப்பதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார்.
உறுதியளித்தபடி ஆயுத விநியோகத்தை விரைவுபடுத்தவேண்டும் என நட்பு நாடுகளுக்கு உக்ரைன் அழுத்தம் கொடுக்கிறது. உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்க மேற்கு நாடுகளை கேட்டுக்கொண்டுள்ளது.
- குடியிருப்புகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், மின்நிலையங்கள் என ரஷியா தாக்குதல்களை நடத்தியது.
- ரஷியாவால் தோல்விகளை ஏற்றுக்கொள்ள முடியாததால் மக்களை தொடர்ந்து பயமுறுத்துகிறது.
கீவ்:
உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. உக்ரைன் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்கிய ரஷிய படைகள், உக்ரைனின் முக்கிய பகுதிகளை கைப்பற்றி உள்ளன. மேற்கத்திய நாடுகளின் உதவியால் ரஷியா தொடர்ந்து ரஷியாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் ரஷிய படைகளுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுவருகிறது.
ஆரம்பத்தில் உக்ரைனின் ராணுவ நிலைகள் மட்டுமே இலக்கு என கூறி தாக்குதல் நடத்திய ரஷியா, பின்னர் குடியிருப்புகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், மின்நிலையங்கள் என முன்னேறி ஆக்ரோஷமாக தாக்குதல்களை நடத்துகிறது. இதில் அப்பாவி மக்கள் பலியாகி உள்ளனர். ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், ரஷியா இன்றும் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. மொத்தம் ரஷியா தரப்பில் 71 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், அதில் 61 ஏவுகணைகளை உக்ரைன் விமானப்படை மற்றும் ராணுவத்தின் பிற படைப்பிரிவினர் தாக்கி அழித்ததாகவும் உக்ரைன் வான் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
பெரும்பாலான ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திவிட்டதாக உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் தெரிவித்தார். ரஷியாவால் தோல்விகளை ஏற்றுக்கொள்ள முடியாததால் மக்களை தொடர்ந்து பயமுறுத்துகிறது. உக்ரேனிய எரிசக்தி அமைப்பை அழித்து, உக்ரேனியர்களுக்கு மின்சாரம், லைட், தண்ணீர் சப்ளை கிடைக்காமல் செய்வதற்காக மற்றொரு முயற்சி இது என்றும் அவர் குறிப்பிட்டார்.
- உக்ரைன் நாடு மீது தாக்குதல் நடத்திய ரஷியா அந்த நாட்டின் பல பகுதிகளை பிடித்து கொண்டது.
- ரஷியா மீதான உக்ரைன் தாக்குதல் மேலும் தீவிரம் அடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வாஷிங்டன்:
ரஷியா-உக்ரைன் இடையேயான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
உக்ரைன் நாடு மீது தாக்குதல் நடத்திய ரஷியா அந்த நாட்டின் பல பகுதிகளை பிடித்து கொண்டது. ரஷியாவின் பிடியில் இருக்கும் பகுதிகளை மீட்க உக்ரைன் கடும் போர் புரிந்து வருகிறது.
பல மாதங்கள் ஆனபின்பும் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுத உதவிகளை செய்து வருகிறது.
இதற்கிடையே அமெரிக்க அரசு உக்ரைனுக்கு 2.17 பில்லியன் அளவுக்கு ஆயுத உதவி வழங்க உள்ளதாக தெரிவித்து இருந்தது. இந்த உதவியின் போது தங்களுக்கு நீண்ட தூரம் சென்று தாக்கும் டாங்கிகள் மற்றும் ஏவுகணைகளை வழங்க வேண்டும் என உக்ரைன் கோரி இருந்தது.
முதலில் இதனை வழங்க தயக்கம் காட்டிய அமெரிக்கா இப்போது, அதி நவீன ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்க முன்வந்துள்ளது.
ஏற்கனவே அறிவித்தபடி உக்ரைனுக்கு வழங்க உள்ள ஆயுதங்களில் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள், டாங்கிகள் ஆகியவற்றை வழங்க முன்வந்துள்ளது.
இதன்மூலம் இனி ரஷியா மீதான உக்ரைன் தாக்குதல் மேலும் தீவிரம் அடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
- ரஷியாவைப் பொருத்தவரை இது போரில் நேரடி ஈடுபாடாகவே கருதப்படுகிறது.
கீவ்:
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் ஒரு வருடத்தை நெருங்கி உள்ளது. உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷியப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றன.
உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன. தொடர்ந்து நீடிக்கும் இந்தப் போரில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் அதிகளவில் ஏற்பட்டுள்ளன.
இதற்கிடையே, ரஷியாவின் தாக்குதலை சமாளித்து பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைனுக்கு நவீன டாங்கிகள் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குவதற்கு மேற்கத்திய நாடுகள் முடிவு செய்துள்ளன. உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்ப ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கு ரஷியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நவீன டாங்கிகள் வழங்கும் மேற்கத்திய நாடுகளின் முடிவானது, அவர்கள் இந்த போரில் நேரடியாக பங்கேற்பதாகவே அர்த்தம் என ரஷியா எச்சரித்துள்ளது.
இந்நிலையில், நவீன டாங்கிகள் அனுப்பப்படும் என அமெரிக்கா மற்றும் ஜெர்மனி அறிவித்த 24 மணி நேரத்துக்குள் உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 11 பேர் பலியாகினர் என தகவல் வெளியாகின.
- தன்னார்வ உதவி ஊழியர்கள் பலர் போருக்கு மத்தியில் உக்ரைனுக்கு சென்று அந்த நாட்டு மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்து வருகின்றனர்.
- இருவரும் போரில் இறந்துவிட்டதாக அவர்களது குடும்பங்கள் தெரிவித்துள்ளன.
லண்டன்:
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா 11 மாதங்களுக்கும் மேலாக போர் நடத்தி வருகிறது. இந்த போர் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிரை பறித்ததோடு, லட்சக்கணக்கான மக்களை அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புக செய்துள்ளது. கல்வி, வேலை மற்றும் பிற தேவைகளுக்காக உக்ரைனுக்கு சென்ற வெளிநாட்டினர் பெரும்பாலானோர் போர் தொடங்கியதும் அங்கிருந்து வெளியேறினர். அதே சமயம் வெளிநாடுகளை சேர்ந்த தன்னார்வ உதவி ஊழியர்கள் பலர் போருக்கு மத்தியில் உக்ரைனுக்கு சென்று அந்த நாட்டு மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கிறிஸ் பாரி மற்றும் ஆண்ட்ரூ பாக்சா ஆகிய இரு தன்னார்வ உதவி ஊழியர்கள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் உக்ரைனில் தன்னார்வ பணிகளை மேற்கொண்டு வந்தனர். குறிப்பாக இவர்கள் இருவரும் போர் முனையில் சிக்கும் பகுதிகளில் இருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் பணிகளை செய்து வந்தனர். அந்த வகையில் கிழக்கு உக்ரைனின் சோலேடார் நகரில் மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்த கிறிஸ் பாரி, ஆண்ட்ரூ பாக்சா ஆகிய இருவரும் கடந்த 6-ந் தேதி திடீரென மாயமாகினர். அவர்களின் கதி என்ன? என்பது தெரியாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் அவர்கள் இருவரும் போரில் இறந்துவிட்டதாக அவர்களது குடும்பங்கள் தெரிவித்துள்ளன. சோலேடார் நகரில் இருந்து மக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர்களது கார் மீது பீரங்கி குண்டு வீசப்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்த இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகம் உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. மேலும் உக்ரைனில் இங்கிலாந்து குடிமக்கள் யாரும் இருந்தால் உடனடியாக வெளியேற வேண்டுமெனவும் வலியுறுத்தி உள்ளது.
- போரின் பாதிப்புகள் குறித்து ஜெலன்ஸ்கியிடம் போரிஸ் ஜான்சன் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.
- டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் உக்ரைன் பற்றிய குழு விவாதத்தில் பங்கேற்றார்
கீவ்:
ரஷியா நடத்தி வரும் போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் திடீர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். போரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்ட போரிஸ் ஜான்சன், தலைநகர் கீவிற்குச் சென்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியை சந்தித்தார். அப்போது, போரின் பாதிப்புகள் குறித்து செலன்ஸ்கியிடம் போரிஸ் ஜான்சன் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.
தற்போதைய பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், போரிஸ் ஜான்சனின் உக்ரைன் வருகைக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
போரிஸ் ஜான்சன் பிரதமராக இருந்தபோதும், பதவிக்காலம் முடிந்தபிறகும் உக்ரைனுக்கு பலமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு, டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் உக்ரைன் பற்றிய குழு விவாதத்தில் அவர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
- மழலையர் பள்ளி அருகே ஹெலிகாப்டர் விழுந்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் பலியாகினர்.
- இந்த விபத்தில் இறந்தவர்களில் உக்ரைன் உள்துறை மந்திரியும் அடங்குவார்.
கீவ்:
உக்ரைன் தலைநகர் கீவின் கிழக்கு புறநகர் பகுதியில் உள்ள மழலையர் பள்ளி அருகே ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானதில் அந்நாட்டு உள்துறை மந்திரி டெஸின் மொனஸ்டிர்ஸ்கி உள்பட 18 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தலைநகர் கீவில் நடந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில் அதிபர் ஜெலன்ஸ்கி பங்கேற்றார். அப்போது ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
- லண்டன் பி.பி.சி. நிறுவனம் குஜராத் கலவரம் குறித்து ஆவணப்படம் தயாரித்துள்ளது.
- பாகிஸ்தான் வம்சாவளி எம்.பி. இம்ரான் உசைன் இதுபற்றி கேள்வி எழுப்பினார்.
லண்டன் :
கடந்த 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியானார்கள். அப்போது, குஜராத் முதல்-மந்திரியாக நரேந்திர மோடி இருந்தார். இதற்கிடையே, லண்டன் பி.பி.சி. நிறுவனம் குஜராத் கலவரம் குறித்து 'இந்தியா: தி மோடி கொஸ்டின்' என்ற தலைப்பில் 2 பகுதிகள் கொண்ட ஆவணப்படம் தயாரித்துள்ளது.
முதல் பகுதி, கடந்த செவ்வாய்க்கிழமை ஒலிபரப்பானது. அதில், குஜராத் கலவரத்தில் மோடிக்கு நேரடி தொடர்பு இருப்பது இங்கிலாந்து அரசுக்கு தெரியும் என்று கூறப்பட்டுள்ளது. 2-வது பகுதி, 23-ந் தேதி ஒலிபரப்பாகிறது. இந்த ஆவணப்படத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியதாவது:-
பி.பி.சி. ஆவணப்படம், அடிப்படையற்ற ஒன்றை முன்னிறுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட பிரசார படம். அதில், பாரபட்சமும், தொடரும் காலனி ஆதிக்க மனப்பான்மையும் அப்பட்டமாக தெரிகிறது. இந்த பிரச்சினையை மீண்டும் கிளற விரும்புபவர்களின் வெளிப்பாடாக அப்படம் தோன்றுகிறது. அதன் நோக்கமும், அதற்கு பின்னால் உள்ள செயல்திட்டமும் நமக்கு வியப்பளிக்கிறது என்று அவர் கூறினார்.
இந்தநிலையில், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது, பாகிஸ்தான் வம்சாவளி எம்.பி. இம்ரான் உசைன் இதுபற்றி கேள்வி எழுப்பினார். பி.பி.சி. ஆவணப்படத்தில் கூறப்பட்ட தகவல்களில் உங்களுக்கு உடன்பாடு இருக்கிறதா? என்று அவர் கேட்டார். அதற்கு பிரதமர் ரிஷி சுனக், பிரதமர் மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
எந்த நாட்டில் மக்கள் துன்புறுத்தப்பட்டாலும் நாம் சகித்துக் கொள்ள மாட்டோம். ஆனால், அந்த ஜென்டில்மேன் பற்றி முன்வைக்கப்படும் அனைத்து கருத்துகளிலும் எனக்கு உடன்பாடு இருப்பதாக கூற முடியாது என்று அவர் கூறினார்.
- அமெரிக்கா அளித்த நவீன டிரோன்கள் உதவியுடன் அவர்கள் மீண்டும் தீவிர போரில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- உக்ரைன் ராணுவமோ தங்கள் வீரர்கள் உறைபனியிலும் காவல் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளது.
ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் ராணுவத்துக்கு அமெரிக்கா உதவி செய்து வருகிறது. இதனால் உக்ரைன் ராணுவம், ரஷியாவிடம் இழந்த பகுதிகளை மீண்டும் மீட்டு வருகிறது.
மேலும் அமெரிக்கா அளித்த நவீன டிரோன்கள் உதவியுடன் அவர்கள் மீண்டும் தீவிர போரில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆனால் ரஷிய அதிபர் புடின் கூறும்போது, "உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும்" என்று கூறியுள்ளார்.
ஆனால் உக்ரைன் ராணுவமோ தங்கள் வீரர்கள் உறைபனியிலும் காவல் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளது.
இது தொடர்பாக உறைபனியில் படுத்தபடி உக்ரைன் ராணுவ வீரர்கள் துப்பாக்கிகளுடன் இருக்கும் காட்சிகளை இணையத்தில் வெளியிட்டுள்ளது.
இக்காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- மழலையர் பள்ளி அருகே ஹெலிகாப்டர் விழுந்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 குழந்தைகளும் உயிரிழப்பு.
- 10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவின் கிழக்கு புறநகர் பகுதியில் உள்ள மழலையர் பள்ளி அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் உக்ரைனின் உள்துறை அமைச்சர் உள்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
உக்ரைனின் அவசர சேவைக்கு சொந்தமான இந்த ஹெலிகாப்டர் உள்துறை அமைச்சர் டெஸின் மொனஸ்டிர்ஸ்கி உள்பட 8 பேர் பயணம் செய்த நிலையில் விபத்துக்குள்ளானது.
மழலையர் பள்ளி அருகே ஹெலிகாப்டர் விழுந்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.
இவர்களை தவிர, 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 10 பேர் குழந்தைகள் என தேசிய தலைமை காவலர் இஹோர் கிளிமென்கோ தெரிவித்துள்ளார்.
- இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
- இதுவரை ரஷியா 1,16,950 வீரர்களை இழந்துள்ளதாக உக்ரைன் கூறி உள்ளது.
உக்ரைன் மீது ரஷியா தனது ராணுவ நடவடிக்கையை தொடங்கி கிட்டத்தட்ட 11 மதங்கள் ஆகின்றன. ரஷியாவின் தாக்குதல்களுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு பல உயிர்கள் பலியாகி உள்ளன. ஏராளமானோர் உயிருக்கு பயந்து வீடுகளை காலி செய்து விட்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்துள்ளனர். உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் உக்ரைன் அரசு தரப்பில் அவ்வப்போது தங்கள் ராணுவ நடவடிக்கைகள் மற்றும் ரஷியா தரப்பில் ஏற்பட்ட சேதம் குறித்து புள்ளிவிவரங்கள் வெளியிடப்படுகிறது. அவ்வகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரம் அதிர வைத்துள்ளது.
உக்ரைனுக்குள் முழு அளவில் படையெடுப்பை தொடங்கிய 2022 பிப்ரவரி மாதத்தில் இருந்து இதுவரை ரஷியா 1,16,950 வீரர்களை இழந்துள்ளதாக கூறி உள்ளது. இந்த தகவல் உண்மையாக இருந்தால், முதல் உலகப் போரில் அமெரிக்கா இழந்த வீரர்களை விட ரஷியாவுக்கு இந்த போரில் அதிக வீரர்களை பலி கொடுத்திருப்பதாக அர்த்தம்.
உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் தனது டுவிட்டர் பக்கத்தில், உக்ரைனில் ரஷிய படைகளுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்த புள்ளி விவரத்தை ஷேர் செய்துள்ளது. அதில், ரஷியாவிற்கு சொந்தமான 3,121 பீரங்கிகள் மற்றும் 4,877 வாகனங்கள் மற்றும் எரிபொருள் பீரங்கிகள், 2,104 பீரங்கி அமைப்புகள் முழு அளவிலான தாக்குதலின் போது அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
முதல் உலகப் போரில் மொத்தம் 1,16,516 அமெரிக்கர்கள் இறந்துள்ளனர். அவர்களில் 53,402 பேர் போர்க்களத்தில் இறந்தனர், மீதமுள்ள 63,114 பேர் ஐரோப்பாவில் பணியாற்றும்போது, போர் அல்லாத பிற பாதிப்புகளாலும், இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் காரணமாகவும் இறந்தனர் என்று நியூஸ் வீக் தெரிவித்துள்ளது.
அதேசமயம், உக்ரைன் போரில் இதுவரை 6,000க்கும் குறைவான ரஷிய வீரர்களே இறந்திருப்பதாக ரஷியா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதாகவும் நியூஸ் வீக் தெரிவித்துள்ளது.
- அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த ஏவுகணை தாக்குதலில் பலி எண்ணிக்கை 35 ஆனது.
- மாயமான 35 பேரை தேடி வருகிறோம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கீவ்:
உக்ரைனில் ரஷிய படைகள் தொடர்ந்து உக்கிரமான தாக்குதலை நடத்திவருகின்றன. டினிப்ரோ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தைக் குறிவைத்து ரஷியா நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. பல வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன.
குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். அங்கு மீட்பு பணி நடைபெறுகிறது.
இந்த தாக்குதலில் 15 வயது சிறுமி உள்பட 21 பேர் உயிரிழந்திருப்பதாக முதல்கட்ட தகவல் வெளியானது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடைபெறுகிறது.
இத்தாக்குதலில் அடுக்குமாடி குடியிருப்பில் பல வீடுகள் சேதமடைந்தன. நூற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர் என அதிபர் மாளிகையின் மூத்த அதிகாரி கைரிலோ திமோஷென்கோ கூறினார்.
இந்நிலையில், உக்ரைன் அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெற்ற ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. இதில் 75 பேர் காயமடைந்துள்ளனர் என்றும், மாயமான 35 பேரை தேடி வருகிறோம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.






