என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    • சீனா - இங்கிலாந்து இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது.
    • எங்கள் மதிப்புகள், நலன்களுக்கு சீனா ஒரு சவாலை முன்வைத்திருக்கிறது.

    லண்டன் :

    ஹாங்காங், உய்குர் இன முஸ்லிம்கள் மீதான அடுக்குமுறை உள்ளிட்ட விவகாரங்களில் சீனா மற்றும் இங்கிலாந்து இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது.

    இந்த சூழலில் சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற இங்கிலாந்தை சேர்ந்த பிரபல செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளரை போலீசார் அடித்து, உதைத்து கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் இங்கிலாந்தின் பிரதமராக சமீபத்தில் பதவியேற்ற இந்திய வம்சாவளி ரிஷி சுனக் முதல் முறையாக தனது வெளியுறவு கொள்கை குறித்து நேற்று உரையாற்றினார். அப்போது சீனாவுடான இங்கிலாந்தின் உறவு குறித்து அவர் கூறும்போது, "முன்னாள் பிரதம மந்திரி டேவிட் கேமரூனால் ஏற்படுத்தப்பட்ட இங்கிலாந்து-சீனா உறவுகளின் பொற்காலம் முடிந்துவிட்டது. வணிகம் தானாகவே இரு நாடுகளுக்கிடையே சமூக, அரசியல் சீர்திருத்தத்துக்கு வழிவகுக்கும். எங்கள் மதிப்புகள், நலன்களுக்கு சீனா ஒரு சவாலை முன்வைத்திருக்கிறது.

    உலகளாவிய பொருளாதார உறுதித்தன்மை, பருவநிலை மாற்றம் போன்ற விவகாரங்களில் சீனாவின் முக்கியத்துவத்தை நாம் வெறுமனே புறக்கணிக்க முடியாது. ஆனால், இது இன்னும் பெரிய சர்வாதிகாரத்தை நோக்கி நகரும்போது இன்னும் தீவிரமாக வளரும். அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் பல நாடுகள் இதை புரிந்துகொண்டிருக்கின்றன. சீனா உள்நாட்டு மற்றும் உலகளாவிய பாதுகாப்புக்கு முதல் அச்சுறுத்தல்" என கூறினார்.

    • இங்கிலாந்து அமைச்சர் காவின் வில்லியம்சன் ராஜினாமா செய்துள்ளார்.
    • இது பிரதமர் ரிஷி சுனக்குக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    லண்டன்:

    இங்கிலாந்தின் ஆளும் பழமைவாத கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் அந்நாட்டு பிரதமராக பதவியேற்றார்.

    பொருளாதார சிக்கலில் இருந்து நாட்டை விடுவிக்க போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் அவரை தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.

    இதற்கிடையே, எந்த துறைகளும் ஒதுக்கப்படாத இணை அமைச்சர் காவின் வில்லியம்சன், சக எம்.பி., ஒருவரை துன்புறுத்தும் வகையில், மொபைல் போனில் செய்திகள் அனுப்பியதாக புகார் எழுந்தது. ஊடகங்களில் செய்திகள் வெளியானதால் சில மூத்த அதிகாரிகளும் புகார் தெரிவித்தனர்.

    சில பிரச்னைகளால் ஏற்கனவே இரண்டு முறை அமைச்சர் பதவியில் இருந்து விலகியவர் காவின் வில்லியம்சன். அவர் அமைச்சராக நியமிக்கப்பட்டபோதே சர்ச்சை எழுந்தது.

    இந்நிலையில், தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக காவின் வில்லியம்சன் அறிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், விசாரணை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடக்க போதிய ஒத்துழைப்பு அளிப்பேன். என்னால் இந்த அரசின் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதை தடுக்கும் வகையிலேயே பதவியை ராஜினாமா செய்கிறேன் என தெரிவித்தார்.

    • நிரவ் மோடி 3 ஆண்டுகளாக லண்டன் வேண்ட்ஸ்வெர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • அவரை இந்தியாவுக்கு அழைத்து வரும் முயற்சியில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    லண்டன்:

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி, இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். சி.பி.ஐ. அளித்த புகாரின் பேரில் அங்கு கைது செய்யப்பட்டு 3 ஆண்டுகளாக லண்டன் வேண்ட்ஸ்வெர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை இந்தியாவுக்கு அழைத்துவரும் முயற்சியில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை லண்டன் ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

    அதில் நிரவ் மோடி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவர் தற்கொலை செய்துகொள்ளக்கூடிய அபாயம் குறித்து விசாரிக்கப்பட்டது. அப்போது, சிறையில் நிரவ் மோடியிடம் நேரடியாக ஆய்வு செய்த 2 உளவியல் நிபுணர்கள், அவர் மன அழுத்தத்துடனும், தற்கொலை எண்ணத்துடனும் இருப்பதாக தெரிவித்தனர்.

    அதேநேரம் இந்தியாவில் நிரவ் மோடிக்கான பாதுகாப்பு குறித்து இந்திய அதிகாரிகள் சார்பில் ஆஜரான வக்கீல் உறுதியளித்தார். நிரவ் மோடி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவரது தனிப்பட்ட நலனை காப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும் என அவரது வக்கீல் வாதிட்டார்.

    இந்நிலையில் நிரவ் மோடி நாடு கடத்தப்படுவதற்கு எதிராக செய்த மேல்முறையீட்டு மனுவை லண்டன் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    அவர் மனநிலை காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் அபாயம் இருப்பதைக் காரணமாகக் காட்டி, இந்தியாவில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் பண மோசடி வழக்குகளையும் எதிர்கொள்வதிலிருந்து தப்பிப்பது நியாயமாகாது என்றும் லண்டன் ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.

    கடந்த பிப்ரவரி மாதம் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டா் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என்று தீா்ப்பளித்திருந்தது சரியே எனவும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

    • வீசப்பட்ட முட்டைகள் அரச குடும்பத்தினர் மீது படவில்லை
    • முட்டைகளை வீசிய நபரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

    லண்டன்:

    இங்கிலாந்தின் வடக்கு நகரமான யார்க்க்ஷைரில் நடந்து சென்ற அரசர் மூன்றாம் சார்லஸ் மற்றும் அவரது மனைவி ராணி கமிலா ஆகியோரை நோக்கி முட்டைகளை வீசிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பிரிட்டிஷ் போலீசார் தெரிவித்துள்ளனர். அரசரும் அவரது மனைவியும் மிக்லேகேட் பார் வழியாக யார்க்க்ஷைர் நகருக்குள் நுழைந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அரசர் வரும்போது முட்டைகள் பறந்து வந்து விழுவது தெரிகிறது. ஆனால் அந்த முட்டைகள் அரச குடும்பத்தினர் மீது படவில்லை. இதையடுத்து முட்டைகளை வீசிய நபரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். 

    • இந்தியர்கள் 9 லட்சத்து 20 ஆயிரம் பேர் உள்ளனர்.
    • பாகிஸ்தானியர்கள் 6 லட்சத்து 24 ஆயிரம் பேர் உள்ளனர்.

    லண்டன் :

    இங்கிலாந்தில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டு அந்த நாட்டின் தேசிய புள்ளியியல் அலுவலகம் நடத்திய புள்ளிவிவர சேகரிப்பில் இங்கிலாந்து மற்றும் வேல்சில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் இந்தியர்களே அதிகம் என்கிற தகவல் தெரிய வந்துள்ளது.

    இங்கிலாந்து மற்றும் வேல்சில் வசிக்கும் 6 பேரில் ஒருவர் வெளிநாட்டில் பிறந்தவர் என்றும், வெளிநாட்டவர்களில் இந்தியர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருப்பதாகவும் அந்த புள்ளிவிவர தகவல்கள் கூறுகின்றன.

    இது குறித்து இங்கிலாந்து தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "2011ம் ஆண்டில் இங்கிலாந்து மற்றும் வேல்சில் வசித்த வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 75 லட்சமாக இருந்த நிலையில் 2021-ம் ஆண்டில் அது 25 லட்சம் அதிகரித்து, 1 கோடியாக ஆனது.

    இதில் அதிகபட்சமாக இந்தியர்கள் 9 லட்சத்து 20 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு அடுத்தபடியாக போலந்து நாட்டினர் 7 லட்சத்து 43 ஆயிரம் பேரும், பாகிஸ்தானியர்கள் 6 லட்சத்து 24 ஆயிரம் பேரும் உள்ளனர்" என கூறப்பட்டுள்ளது.

    • அரசர் மூன்றாம் சார்லஸ் கடந்த செப்டம்பர் மாதம் அரியணை ஏறினார்.
    • மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா அடுத்த ஆண்டு மே மாதம் 6-ம் தேதி நடைபெறும்.

    லண்டன்:

    இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் செப்டம்பர் மாதம் 8-ம் தேதி மரணமடைந்தார். அதை தொடர்ந்து அவரது மகன் சார்லஸ் புதிய மன்னராக முடிசூடினார். அவர் மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படுகிறார். சார்லஸ் மன்னர் செப்டம்பரில் அரியணை ஏறினார்.

    இதற்கிடையே, மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா அடுத்த ஆண்டு (2023) மே மாதம் 6-ம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்தது. இதில், பாரம்பரிய மரபுப்படி, கையில் செங்கோல், தடி ஆகியவற்றை ஏந்தி மூன்றாம் சார்லஸ் மன்னர் அரியணையில் அமர்வார். பிறகு, மூத்த மதகுருமார்களால் புனிதப்படுத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட பிறகு, மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு புனித எட்வர்டின் கிரீடம் சூட்டப்படும். பின்னர் பக்கிங்ஹாம் அரண்மனையின் பால்கனியில் இருந்து சார்லஸ் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.

    இந்நிலையில், அரசர் மூன்றாம் சார்லசின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு அவருக்கு கவுரவம் சேர்க்கும் வகையில், மே 8-ம் தேதி வங்கி விடுமுறையாக இருக்கும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அரசர் மூன்றாம் சார்லசின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு கூடுதலாக வங்கி விடுமுறை நாளை அறிவிக்க பிரதமர் முடிவு செய்துள்ளார். இதன்படி, மே 6-ம் தேதி முடிசூட்டு விழாவை தொடர்ந்து, மே 8-ம் தேதி வங்கி விடுமுறையாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

    அரசர் மூன்றாம் சார்லசின் முடிசூட்டு விழாவில் நாட்டு மக்கள் அனைவரும் கலந்து கொண்டு, சிறப்பிக்கும் வகையிலும், அவருக்கு கவுரவம் அளிக்கும் வகையிலும் நாடு முழுவதும் வங்கி விடுமுறை அமலில் இருக்கும்.

    • 1½ வயது ஆண் குழந்தைக்கு தாயான பாரா, நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
    • பாரா வழக்கமான பரிசோதனைக்காக வாடகை காரில் ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

    லண்டன்

    இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்த 26 வயது பெண் பாரா காகனிண்டின். ஏற்கனவே 1½ வயது ஆண் குழந்தைக்கு தாயான பாரா, நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று பாரா வழக்கமான பரிசோதனைக்காக வாடகை காரில் ஆஸ்பத்திரிக்கு சென்று கொண்டிருந்தார். கார் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் சென்றுகொண்டிருந்தபோது பாராவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து பாரா காரிலேயே அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அதன் பின்னர் கார் ஆஸ்பத்திரி சென்றடைந்ததும் அங்கு தயாராக இருந்த டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் தாயையும், சேயையும் மீட்டு சிகிச்சை அளித்தனர். தற்போது இருவரும் நலமாக உள்ளனர்.

    இதனிடையே ஓடும் காரில் குழந்தை பெற்றெடுத்தபோது காரில் ஏற்பட்ட அசுத்தத்தை காரணம் காட்டி பாராவுக்கு வாடகை கார் நிறுவனம் அபராதம் விதித்துள்ளது. காரில் ஏற்பட்ட அசுத்தத்தை சுத்தம் செய்ய 60 பவுண்டு (சுமார் ரூ.5,700) செலுத்த வேண்டுமென பாராவுக்கு அந்த வாடகை கார் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    • இங்கிலாந்து புதிய பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கபட்டார்.
    • லண்டன் டவுணிங் வீதியில் உள்ள 10-வது இல்லத்தில் குடும்பத்துடன் தங்கி இருந்தார்.

    லண்டன்:

    இங்கிலாந்து புதிய பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கபட்டார். அந்நாட்டு வரலாற்றில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் பிரமதமரானது இதுவே முதல் முனறயாகும்.

    ரஷி சுனக்கின் மனைவி பெயர் அக்‌ஷயா மூர்த்தி .இவர் இன்போசிஸ் நிறுவன தலைவர் நாராயணமூர்த்தியின் மகள் ஆவார். ரிஷி சுனக்-அக்‌ஷதா மூர்த்தி தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இங்கிலாந்தில் போரிஸ்ஜான்சன் பிரதமராக இருந்த போது ரிஷி சுனக் நிதி மந்தரியாக இருந்தார். அந்த சமயம் அவர் லண்டன் டவுணிங் வீதியில் உள்ள 10-வது இல்லத்தில் குடும்பத்துடன் தங்கி இருந்தார்.

    கடந்த ஏப்ரல் மாதம் அவர் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து மேற்கு லண்டனில் இருக்கும் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றார். மகள்கள் படிக்கும் பள்ளி இதன் அருகில் இருப்பதால் அவர் இந்த வீட்டில் குடியேறினார்.

    தற்போது அவர் பிரதமராக ஆனதையடுத்து மீண்டும் டவுணிங் வீதியில் உள்ள 10-ம் நம்பர் கொண்ட சிறிய இல்லத்துக்கு குடும்பத்துடன் திரும்ப முடிவு செய்துள்ளார்.

    இங்கிலாந்தை பொறுத்த வரை 1735-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்தவர்கள் 10-ம் எண் கட்டிடத்தின் அருகில் உள்ள 11-ம் நம்பர் கொண்ட இல்லத்தில் தான் குடியிருந்து வந்தனர். 4 படுக்கை வசதிகளுடன் மிக பெரியதாக இருக்கும் இந்த கட்டிடத்தை அவர்கள் பிரதமர் அலுவலகமாகவும், அதிகாரபூர்வ இல்லமாகவும் பயன்படுத்தி வந்தனர்.

    ஆனால் தற்போது இந்த இல்லத்தில் தங்காமல் பிரதமர் ரிஷி சுனக் தான் ஏற்கனவே வசித்த 10-ம் நம்பர் இல்லத்தில் குடியேற உள்ளார். இந்த வீடு 11-ம்நம்பர் இல்லத்தை விட சிறியதாகும். இருந்த போதிலும் அமைதியான சூழ்நிலையில் இந்த வீடு அமைந்து இருப்பதாலும் அந்த வீடு தனக்கும், குடும்பத்தினருக்கும் மிகவும் பிடித்து இருப்பதாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

    • மாற்று கருத்து கொண்டவர்களுக்கும் மந்திரிசபையில் ரிஷி சுனக் இடம் அளித்துள்ளார்.
    • போரிஸ் ஜான்சன், லிஸ் டிரஸ் மந்திரிசபையில் இடம் பெற்றிருந்தவர்களுக்கும் வாய்ப்பு தந்து அரசியல் அரங்கை அதிர வைத்துள்ளார்.

    லண்டன்

    இங்கிலாந்தின் பிரதமராக நேற்று முன்தினம் பொறுப்பேற்றுள்ள ரிஷி சுனக் தனது மந்திரிசபையை அமைத்துள்ளார்.

    கட்சியையும், நாட்டையும் ஒன்றிணைத்து, பொருளாதார ஸ்திரத்தன்மையை, நம்பிக்கையை மீட்டெடுப்பேன் என பிரதமர் பொறுப்பை ஏற்றபோது, அளித்த உறுதியை நிரூபிக்கிறவகையில் மாற்று கருத்து கொண்டவர்களுக்கும் மந்திரிசபையில் ரிஷி சுனக் இடம் அளித்துள்ளார். குறிப்பாக போரிஸ் ஜான்சன் மற்றும் லிஸ் டிரஸ் மந்திரிசபையில் இடம் பெற்றிருந்தவர்களுக்கும் வாய்ப்பு தந்து அரசியல் அரங்கை அதிர வைத்துள்ளார்.

    ரிஷி சுனக்கின் புதிய மந்திரிசபை விவரம் வருமாறு:-

    * துணை பிரதமராக டொமினிக் ராப் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் போரிஸ் ஜான்சன் மந்திரிசபையில் துணை பிரதமர் பதவி விகித்தவர் ஆவார்.

    * ஜெரேமி ஹண்ட், நிதி மந்திரி பதவிக்கு வந்துள்ளார். இவர், லிஸ் டிரஸ் மந்திரிசபையில் நிதி மந்திரி குவாசி நீக்கப்பட்ட பின்னர் அந்த பதவிக்கு வந்தவர்.

    * லிஸ் டிரஸ் மந்திரிசபையில் உள்துறை மந்திரி பதவி வகித்து, அதிமுக்கிய ஆவணம் ஒன்றை தனது தனிப்பட்ட இ-மெயில் வழியாக சக எம்.பி.க்கு அனுப்பி சர்ச்சையில் சிக்கி பதவி விலகியவர் இந்திய வம்சாவளியான சூவெல்லா பிரேவர்மன் ஆவார். இவரை ரிஷிசுனக் மீண்டும் உள்துறை மந்திரி பதவியில் அமர்த்தி இருக்கிறார்.

    * லிஸ் டிரஸ் மந்திரிசபையில் அங்கம் வகித்த ராணுவ மந்திரி பென் வாலஸ், வெளியுறவு மந்திரி ஜேம்ஸ் கிளவர்லி அப்படியே ரிஷி சுனக் மந்திரிசபையிலும் தொடருகிறார்கள். இவர்கள் போரிஸ் ஜான்சன் ஆதரவாளர்கள். அவர்களையும் ஒதுக்கிவிடவில்லை என்று ரிஷி சுனக் காட்டி உள்ளார்.

    * லிஸ் டிரஸ் ராஜினாமாவைத் தொடர்ந்து, பிரதமர் பதவி போட்டியில் தனக்கு எதிராக களத்தில் குதித்த பென்னி மார்டண்ட், தொடர்ந்து நாடாளுமன்ற மக்கள் சபை தலைவராக பதவி வகிப்பார் என ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.

    * வர்த்தக மந்திரியாக கிராண்ட் ஷாப்ஸ், பணிகள், ஓய்வூதியத்துறை மந்திரியாக மெல் ஸ்டிரைட், கல்வித்துறை மந்திரியாக கில்லியன் கீகன், சுகாதார மந்திரியாக ஸ்டீவ் பார்க்ளே, போக்குவரத்து மந்திரியாக மார்க் ஹார்பர், சர்வதேச வர்த்தக மந்திரியாக கெமி பெடனோக், கலாசார மந்திரியாக மிச்செல்லி டொனெலன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தனது மந்திரிசபையில் போரிஸ் ஜான்சன், லிஸ் டிரஸ் ஆதரவாளர்களுக்கும் ரிஷி சுனக் இடம் அளித்து இருப்பது குறித்து பிரதமர் அலுவலக வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கையில், "கட்சியின் திறமையானவர்களை இது ஒன்றிணைக்கிறது" என தெரிவிக்கின்றன.

    முக்கிய ஆவணம் ஒன்றை தனது சொந்த இ-மெயில் வழியாக சக எம்.பி.க்கு அனுப்பி சர்ச்சையில் சிக்கி பதவி விலகிய சூவெல்லா பிரேவர்மனுக்கு ரிஷி சுனக் மீண்டும் உள்துறை மந்திரி பதவியை அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதை எதிர்க்கட்சியான தொழிற்கட்சி விமர்சித்துள்ளது.

    ஆனால் இதை வெளியுறவு மந்திரி ஜேம்ஸ் கிளவர்லி நியாயப்படுத்தி உள்ளார். இது பற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், "சூவெல்லா பிரேவர்மன் தனது தவறை ஒப்புக்கொண்டு விட்டார். அதற்காக அவர் மன்னிப்பு கேட்டு விட்டார்" என தெரிவித்தார்.

    மேலும், உள்துறை மந்திரி பதவியில் அவரது அனுபவத்தை பிரதமர் ரிஷி சுனக் மதிக்கிறார் எனவும் குறிப்பிட்டார்.

    ஆனால் சூவெல்லா பிரேவர்மன் மீண்டும் உள்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று தாராளவாத ஜனநாயக கட்சி (லிபரல் டெமாகிரட்ஸ்) வலியுறுத்தி உள்ளது.

    இதுபற்றி அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் அலிஸ்டெயிர் கார்மிச்சேல் தெரிவிக்கையில், "சூவெல்லா பிரேவர்மன் நியமனம் குறித்து மந்திரிசபை அலுவலகம் விசாரணை நடத்த வேண்டும். அவருக்கு பதவி அளிப்பதாக மூடிய அறைக்குள் ரிஷி சுனக் வாக்குறுதி அளித்தார் என்பது உள்ளிட்ட விஷயங்கள் ஆராயப்பட வேண்டும் என கூறி உள்ளது.

    இந்த நிலையில் தனது மந்திரிசபையின் முதல் கூட்டத்தை பிரதமர் ரிஷி சுனக் நேற்று நடத்தினார். அதில் நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • மது அருந்துதல் உள்ளிட்ட எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர்.
    • இந்து மத பற்றாளர். அதன்படி வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருப்பவர்.

    இங்கிலாந்து நாட்டின் பிரதமராகி, முதல் இந்திய வம்சாவளி பிரதமர் என்ற புதிய சரித்திரத்தைப் படைத்திருக்கிறார், 42 வயதே ஆன ரிஷி சுனக்.

    இவர் 1980-ம் ஆண்டு, மே மாதம் 12-ந்தேதி இங்கிலாந்து நாட்டின் சவுதாம்ப்டன் நகரில் பிறந்தார்.

    இவரது தந்தை கென்யாவில் பிறந்த யஷ்விர் சுனக், தாய் தான்சானியாவில் பிறந்த உஷா சுனக். இந்த தம்பதியரின் 3 குழந்தைகளில் மூத்தவர் ரிஷி சுனக். தம்பி சஞ்சய், மனநல டாக்டர், தங்கை ராக்கி, கல்விக்கான ஐ.நா.உலகளாவிய நிதியத்தில் பணி.

    இவரது பெற்றோரின் பூர்வீகம், இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் ஆகும். யஷ்விர் சுனக், இங்கிலாந்து அரசின் என்.எச்.எஸ். டாக்டர். உஷா சுனக், சொந்தமாக மருந்துக்கடை நடத்துகிறார்.

    ரஷி சுனக், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் லிங்கன் கல்லூரியில் தத்துவம், அரசியல், பொருளாதாரம் (பிபிஇ) படித்து பட்டம் பெற்றார். அதையடுத்து ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்து எம்.பி.ஏ. பட்டம் பெற்றார்.

    ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம்தான் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அங்குதான் அவர் தனது காதல் மனைவி அக்‌ஷதாவை முதன் முதலாக சந்தித்தார். ரிஷியை போன்று அவரும் எம்.பி.ஏ. தான் படித்துக்கொண்டிருந்தார்.

    அங்கே அவர்கள் இருவர் இடையே காதல் மலர்ந்தது. தனது காதலரை அறிமுகம் செய்து தந்தையான 'இன்போசிஸ்' தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் என்.ஆர்.நாராயணமூர்த்திக்கு அக்‌ஷதா எழுதிய கடிதத்தில், "உங்களுக்கு அவரைப்பற்றி விவரிக்க வேண்டுமென்றால் அவர் புத்திசாலி, அழகானவர், மிக முக்கியமாக அவர் நேர்மையானவர்" என உருகி இருக்கிறார்.

    இந்த தம்பதியரின் திருமணம், 2009-ம் ஆண்டு பெங்களூருவில் நடந்தேறியது. 2 நாள் நடந்த மண விழாவில் 'விப்ரோ' நிறுவனர் அசீம் பிரேம்ஜி, கிரிக்கெட் வீரர் அனில்கும்ப்ளே, தொழில் அதிபர் நந்தன் நிலகேணி, பேட்மிண்டன் வீரர் பிரகாஷ் படுகோனே என பல பிரபலங்கள் பங்கேற்று வாழ்த்தி இருக்கிறார்கள்.

    இந்த தம்பதியருக்கு கிருஷ்ணா, அனுஷ்கா என 2 செல்ல மகள்கள்.

    ரிஷி சுனக் அரசியலுக்கு வருவதற்கு முன்னால் முதலீட்டு வங்கியான கோல்டுமேன் சாக்ஸில் 2001-04 இடையே பணியாற்றி இருக்கிறார். அதையடுத்து சில்ட்ரன்ஸ் முதலீட்டு நிதி நிர்வாகத்தில் பணியாற்றி உள்ளார். அமெரிக்காவில் கலிபோர்னியாவில் தனது முன்னாள் சகாக்களின் நிதி நிறுவனத்தில் சேர்ந்துள்ளார்.

    2013-2015 இடையேயான காலத்தில் தனது மாமனார் என்.ஆர்.நாராயணமூர்த்தியின் கேட்டமரன் வெஞ்சர்ஸ் முதலீட்டு நிறுவனத்தின் இயக்குனராக இருந்துள்ளார்.

    மது அருந்துதல் உள்ளிட்ட எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர், தனி மனித வாழ்வில் ஒழுக்கமானவர் என்பது ரிஷியின் குறிப்பிடத்தக்க நற்பண்புகள்.

    தினந்தோறும் காலையில் உடற்பயிற்சி செய்வது இவருக்கு பிடித்தமானது.

    இந்து மத பற்றாளர். அதன்படி வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருப்பவர்.

    2015-ம் ஆண்டு ரிச்மாண்ட் தொகுதியில் இருந்து கன்சர்வேடிவ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தொகுதியை அந்த கட்சி 100 ஆண்டுகளுக்கு மேலாக தன் வசம் வைத்திருக்கிறது என்பது சிறப்பு தகவல்.

    2017-ம் ஆண்டு, 2019-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று தொகுதியை தக்கவைத்தார்.

    2019-ல் அப்போதைய நிதி மந்திரி சாஜித் ஜாவித்தின் கீழ் கருவூல தலைமைச்செயலாளர் பதவி வகித்தார்.

    2020-ம் ஆண்டு போரிஸ் ஜான்சன் அரசில் நிதி மந்திரியாக பதவி வகித்தார். இந்த ஆண்டு போரிஸ் ஜான்சன் சர்ச்சைகளில் சிக்கியபோது, ரிஷி சுனக் நிதி மந்திரி பதவியை விட்டு விலகினார்.

    போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியை விட்டு விலகியபோது, பிரதமர் பதவி போட்டியில் ரிஷி சுனக் குதித்தார். 'நீயா, நானா?' என்கிற அளவுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தினார். ஆனால் இறுதி வாக்கெடுப்பில் அவர் லிஸ் டிரஸிடம் வெற்றிவாய்ப்பை இழந்தார்.

    இங்கிலாந்தில் 'மினி பட்ஜெட்' தாக்கல் செய்து அந்த நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பின்னடைவுகள் ஏற்பட்டு லிஸ் டிரஸ், வெறும் 45 நாட்களே பதவி வகித்த நிலையில், கடந்த 20-ந் தேதி ராஜினாமாவை அறிவித்தார்.

    மீண்டும் பிரதமர் பதவிக்கு குறிவைத்து, கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பதவி போட்டியில் இறங்கினார், ரிஷி சுனக். போட்டியில் குதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போரிஸ் ஜான்சன் கடைசி நேரத்தில் பின்வாங்க, இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் மக்கள் சபை தலைவர் பென்னி மார்டண்ட் போட்டியிடத்தேவையான 100 எம்.பி.க்கள் ஆதரவை திரட்ட முடியாமல் போக, ரிஷி சுனக் வெற்றிக்கனியைப் பறித்தார்.

    இந்த ஆண்டின் தீபாவளி பரிசு, அவருக்கு கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பதவி.

    அப்போது அவர் சொன்னது- "இங்கிலாந்து மாபெரும் நாடு. ஆனால் நாம் மிகப்பெரிய பொருளாதார சவாலை சந்தித்து வருகிறோம் என்பதில் சந்தேகம் இல்லை. நமக்கு இப்போது தேவை ஸ்திரத்தன்மையும், ஒற்றுமையும்தான். நமது கட்சியையும், நாட்டையும் ஒன்றிணைத்து அழைத்துச்செல்வதற்கு நான் அதிக முக்கியத்துவம் தருவேன். ஏன் என்றால் நாம் தற்போதைய சவால்களை சந்தித்து, நம் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு சிறந்த, வளமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு ஒரே வழி இதுதான்" என்பதாகும்.

    நேற்று லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் சார்லசை லிஸ் டிரஸ் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். அதையடுத்து ரிஷி சுனக், மன்னரை சந்தித்து பேசினார். அப்போது அவரை நாட்டின் பிரதமராக நியமிக்கும் உத்தரவை மன்னர் சார்லஸ் வழங்கினார். அவர் நியமித்துள்ள முதல் பிரதமர் ரிஷி சுனக்தான். இங்கிலாந்தின் புதிய பிரதமர் ஆகி இருக்கிறார் ரிஷி சுனக்.

    1783-ம் ஆண்டு அந்த நாட்டில் வில்லியம் பிட் மிக இளம் வயது பிரதமர் என்ற பெயரைப்பெற்றிருந்தார். அதன் பின் இந்த ஆண்டு நமது ரிஷி சுனக் மிக இளைய வயது பிரதமர் ஆகி வரலாற்றைத் திருப்பிப்போட்டிருக்கிறார். வில்லியம் பிட்டின் வயதையும் திருப்பிப்போட்டிருக்கிறார். ஆமாம் அவருக்கு வயது 24. இவருக்கு வயது '42'.

    தனது மருமகன் ரிஷி சுனக் பிரதமராகிறார் என அறிந்த உடன் அவரை வாழ்த்தி மாமனார் என்.ஆர்.நாராயணமூர்த்தி சொன்ன வார்த்தைகள் இவை-

    "வாழ்த்துகள் ரிஷி. நாங்கள் உங்களால் பெருமிதம் அடைகிறோம். நீங்கள் வெற்றி பெற வாழ்த்துகிறோம். நீங்கள் இங்கிலாந்து மக்களுக்கு தன்னாலான ஆகச்சிறந்ததை செய்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது."

    ஆமாம், அந்த நம்பிக்கையில்தான் ரிஷி சுனக்கை இங்கிலாந்து தனது பிரதமர் ஆக்கி அழகு பார்க்கிறது.

    • ரிஷி சுனக் பொறுப்பேற்ற சில மணி நேரங்களிலேயே அதிரடி நடவடிக்கைகள் எடுக்க தொடங்கினார்.
    • இங்கிலாந்து துணைப் பிரதமர் மற்றும் நீதித்துறை செயலாளராக டொமினிக் ராப் நியமிக்கப்பட்டார்.

    லண்டன்:

    இங்கிலாந்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற சில மணி நேரங்கள் ரிஷி சுனக் அதிரடி நடவடிக்கைகளை ஆரம்பித்தார்.

    முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ்ஸின் மந்திரி சபையில் பதவியில் இருந்த பலரை ராஜினாமா செய்யுமாறு புதிய பிரதமர் ரிஷி சுனக் கேட்டுள்ளார்.

    இங்கிலாந்து துணைப் பிரதமர் மற்றும் நீதித்துறை செயலாளராக டொமினிக் ராப் நியமிக்கப்பட்டுள்ளார்.டொமினிக் ராப் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் மந்திரி சபையில் துணைப் பிரதமர் பதவியில் இருந்தவர்.

    அதன்படி, வணிக செயலாளர் ஜேக்கப் ரீஸ்-மோக், நீதித்துறை செயலாளர் பிராண்டன் லூயிஸ், வேலை மற்றும் ஓய்வூதிய செயலாளர் க்ளோ ஸ்மித் மற்றும் மேம்பாட்டு அமைச்சர் விக்கி போர்ட் ஆகியோர் ராஜினாமா செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அலோக் சர்மா மந்திரி பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

    இங்கிலாந்தின் நிதி மந்திரியாக ஜெர்மி ஹன்ட் நீடிக்கிறார். நாதிம் ஜஹாவிக்கு புதிதாக மந்திரி சபையில் பதவி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கான துறை ஒதுக்கப்படவில்லை.

    பென் வாலஸ் மீண்டும் வெளியுறவுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜேம்ஸ் கிளெவர் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு விவகாரங்களுக்கான செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

    பாராளுமன்ற கருவூலத்தின் செயலாளராக சைமன் ஹார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், சமீபத்தில் பதவி விலகிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுவெல்லா பிரேவர்மெனை உள்துறை மந்திரியாக மீண்டும் நியமனம் செய்து ரிஷி சுனக் உத்தரவிட்டுள்ளார்.

    • பிரதமர் ரிஷி சுனக் நாட்டு மக்களுக்கு முதல் முறையாக உரையாற்றினார்.
    • புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க இந்த அரசு உறுதி எடுத்துள்ளது என்றார்.

    லண்டன்:

    பிரிட்டன் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரிஷி சுனக் இன்று மன்னர் மூன்றாம் சார்லசை சந்தித்தார். அப்போது அவரை பிரதமராக நியமனம் செய்து, புதிய அரசை அமைக்கும்படி கேட்டுக் கொண்டார். புதிய பிரதமராக தேர்வான ரிஷி சுனக்குக்கு உலக தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பிரதமர் ரிஷி சுனக் நாட்டு மக்களுக்கு முதல் முறையாக உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    இங்கிலாந்து பொருளாதாரத்தை மீட்க முழு முயற்சி எடுப்பேன். எனது செயல்களால் நாட்டைப் பெருமைப்படுத்துவேன்.

    கடினமான முடிவுகள் வர உள்ளன. இரவு பகல் பாராமல் உழைப்பேன். எனது நடவடிக்கைகள் மூலம் நாட்டை ஒருங்கிணைப்பேன். எனது பணி மூலம் மக்களின் நம்பிக்கையை பெறுவேன்.

    கொரோனா சமயத்தில் மக்கள் மற்றும் வணிகங்களைப் பாதுகாக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வதைப் பார்த்தீர்கள்.

    நான் வழிநடத்தும் அரசாங்கம் அடுத்த தலைமுறையினரையும், உங்கள் பிள்ளைகளையும், பேரக்குழந்தைகளையும் கடனாகச் செலுத்திவிடாது.

    பிரதமர் பதவிக்கான பொறுப்பு கடமைகளை உணர்ந்து கன்சர்வேடிவ் கட்சியின் முக்கிய கோட்பாடுகளைச் செயல்படுத்துவேன் என தெரிவித்தார்.

    ×