என் மலர்
பாகிஸ்தான்
- பஞ்சாப் மாகாணத்தில் கடுங்குளிர் காரணமாக குழந்தைகளுக்கு நிமோனியா வேகமாக பரவுகிறது.
- கடந்த வருடம் 990 பேர் உயிரிழந்ததால், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தீவிரம்.
பாகிஸ்தானில் கடுங்குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக பஞ்சாப் மாகாணத்தில் அதிக அளவில் குளிர் வாட்டி வதைக்கிறது. கடுங்குளிர் காரணமாக குழந்தைகள் பெருமளவில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். அப்படி பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 36 பேர் கடந்த வாரம் உயிரிழந்ததாக பஞ்சாப் மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், நிமோனியாவால் பாதிக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வருகிற 31-ந்தேதி வரை பள்ளிகளில் காலை கூட்டத்திற்கு (morning assemblies) தடைவிதிக்கப்பட்டுள்ளது. நர்சரி குழந்தைகளுக்கு வருகிற 19-ந்தேதி வரை தடுப்பூசி செலுத்த அறிவிக்கப்பட்டள்ளது.
மேலும் குழந்தைகள் மாஸ்க் அணிய வேண்டும். கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். வெதுவெதுப்பான ஆடைகள் அணிய வேண்டும். இவைகள் நிமோனியா தொற்றிக் கொள்வதில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லாகூர் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளில் 10-ல் 8 பேர் நிமோனியால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வருடம் பஞ்சாப் மாகாணத்தில் 990 குழந்தைகள் நிமோனியாவால் உயிரிழந்துள்ளனர். அதேபோன்று பலி எண்ணிக்கை அதிகரிக்குமோ? என அதிகாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
நிமோனியாவில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது குறித்து பஞ்சாப் மாகாண காபந்து முதலமைச்சர் நக்வி, மூத்த டாக்டர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
- போலியோ தடுப்பு முகாமிற்கு பாதுகாப்பு வழங்க காவல்துறையினர் சென்றனர்
- காயமடைந்தவர்களில் 2 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
பாகிஸ்தானில் சமீப சில மாதங்களாக நாடு முழுவதும் ஆங்காங்கே பயங்கரவாதிகளால் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும், தற்கொலை படை தாக்குதல்களும் நடைபெறுகின்றன.
பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ளது கைபர் பக்துங்க்வா பிராந்தியம் (Khyber Pakhtunkhwa province). இங்குள்ள பஜவுர் (Bajaur) மாவட்டத்தின் மெஹ்முந்த் பகுதியில், போலியோ நோய் தடுப்புக்காக தடுப்பூசி செலுத்தும் முகாம் ஒன்று நடைபெற இருந்தது.
இதற்கு பாதுகாப்பு வழங்க காவல்துறையினர் நியமிக்கப்பட்டனர்.
இப்பணிக்காக சுமார் 25 காவல்துறையினரை ஏற்றி கொண்டு சென்ற காவல்துறை டிரக் ஒன்றின் அருகே சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.
இந்த பயங்கரவாத தாக்குதலில் சுமார் 5 காவல்துறையினர் உயிரிழந்தனர்; 20 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்த காவல்துறையினர் பஜவுர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2 பேர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எதிர்பாராத இந்த குண்டு வீச்சு சம்பவத்தினால், அப்பகுதியில் நடைபெறுவதாக இருந்த போலியோ தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டது.
"இது போன்ற கோழைத்தனமான தாக்குதல்களால் காவல்துறையினரின் மன உறுதியும் முனைப்பும் எந்த வகையிலும் குறைந்து விடாது" என கைபர் பக்துங்க்வா பிராந்திய காபந்து முதல்வர் அர்ஷத் ஹுசைன் ஷா தெரிவித்தார்.
இன்னும் சில தினங்களில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடியும், பயங்கரவாத தாக்குதல்களும் அடுத்து வரும் ஆட்சிக்கு சவாலாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
- தேர்தலை ஒத்திவைக்கக் கோரும் தீர்மானம் நிறைவேற்றம்.
- தீர்மானத்திற்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் எதிர்ப்பு.
பாகிஸ்தான் நாட்டில் பிப்ரவரி மாதம் 8-ம் தேதி பொது தேர்தல் நடத்துவதற்கு அந்நாட்டு தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதுதொடர்பாக ஏராளமான பிரச்சினைகள் ஏற்பட்ட நிலையில், பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அறிவிக்கப்பட்ட தேதியில் தேர்தலை நடத்தி முடிக்க அந்நாட்டு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில், பாகிஸ்தானில் அடுத்த மாதம் நடைபெற இருந்த பாராளுமன்ற தேர்தல் ஒத்திவைக்கப்படுகிறது. இதற்கான தீர்மானம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. பாராளுமன்ற தேர்தலை ஒத்திவைக்க கோரும் தீர்மானத்திற்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப், பாகிஸ்தான் தகவல் தொடர்பு துறை மந்திரி முர்தாசா சோலங்கி எதிர்ப்பு தெரிவித்தனர்.

தீர்மானத்தின் படி பாகிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான குளிர்காலம் நிலவுவதால், மக்கள் வாக்களிக்க அதிக எண்ணிக்கையில் வர முடியாத சூழல் ஏற்படலாம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
திட்டமிட்டப்படி பாராளுமன்ற தேர்தலை நடத்தி முடிக்க அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தேர்தலை ஒத்திவைக்கக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பது அந்நாட்டு அரசியலில் பரபரப்பான சூழலை உருவாக்கியுள்ளது.
- பேட் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. தேர்தல் ஆணையத்தின் முடிவை 9-ந்தேதி வரை கோர்ட்டு நிறுத்தி வைத்தது.
- தற்போது கிரிக்கெட் பேட் சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையம் உத்தரவை உறுதி செய்தது.
பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்கிடையே பல்வேறு வழக்குகள் தொடர்பாக சிறையில் உள்ள முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாய் கட்சி தலைவரான இம்ரான் கான் இரண்டு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த 2 மனுக்களை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.
இந்த நிலையில் இம்ரான் கான் கட்சிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 22-ந்தேதி அக்கட்சி சின்னமான கிரிக்கெட் பேட் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. தெக்ரிக்-இ-இன்சாப்பின் உட்கட்சி தேர்தலில் சட்ட விதிமுறைகளை மீறியதாக சின்னத்தை ரத்து செய்தது.
இதை எதிர்த்து பெஷாவர் ஐகோர்ட்டில் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி வழக்கு தொடர்ந்து உள்ளது. இதில் தேர்தல் ஆணையத்தின் முடிவை 9-ந்தேதி வரை கோர்ட்டு நிறுத்தி வைத்தது.
கோர்ட்டின் இந்த உத்தரவை மறுஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்தது. அதில் தீர்ப்பளித்த கோர்ட்டு, கிரிக்கெட் பேட் சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையம் உத்தரவை உறுதி செய்தது. தேர்தல் ஆணையத்தின் முந்தைய உத்தரவு பிராந்திய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது.
பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாக் கட்சிக்கு ஆதரவாக வழங்கப்பட்ட இடைக்கால உத்தரவு திரும்ப பெறப்படுகிறது. தேர்தல் ஆைணயம் அதன் அரசியல் அமைப்பு தேர்தல் செயல்முறையை தொடங்கு மாறு அறிவுறுத்தப்படுகிறது என்று கோர்ட்டு தீர்ப்ப ளித்தது.
இதுகுறித்து பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் தலைவர் கோஹர்கான் கூறும்போது,
தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வோம்.
பிப்ரவரி 8-ம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலை கட்சி புறக்கணிக்கும் எந்த வாய்ப்பும் இல்லை. எங்களுக்கு கிரிக்கெட் மட்டையை ஒதுக்க முடியாவிட்டால், எங்களுக்கு வேறு சின்னம் தருமாறு சுப்ரீம் கோர்ட்டில் நாங்கள் கேட்போம் என்றார்.
- 52 வயது நபர் ஒருவர் தனக்கு விருப்பமான பெண்ணை திருமணம் செய்ய விரும்பினால்?
- ஒருவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்து, காதலை விட்டு பிரிந்து செல்ல நேரிட்டால்?
பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு வருகிற பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் அன்வர்-உல்-ஹக் கக்கர் காபந்து பிரதமராக இருந்து வருகிறார்.
காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இருப்பதை வெளிப்படுத்தும் விதமாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடைவிதித்தார்.
புத்தாண்டையொட்டி சிலர் அவரிடம் வீடியோ மெசேஜ் மூலம் நகைச்சுவையான கேள்விகளை கேட்டனர். அதற்கு இவரும் நகைச்சுவை வடிவில் பதில் அளித்தார். அதை பார்ப்போம்.
"52 வயது நபர் ஒருவர் தனக்கு விருப்பமான பெண்ணை திருமணம் செய்ய விரும்பினால்?" என ஒருவர் கேள்வி கேட்டுள்ளார்.
அதற்கு அன்வர் உல் ஹக் கக்கர் "நிச்சயமாக, 82 வயதானும் கூட அவர் அதை கருத்தில் கொள்ளலாம்." எனப் பதில் அளித்தார்.
மற்றொருவர் "அழவைக்கக் கூடிய அளவிற்கு கொடுமையான மாமியார் ஒருவருக்கு கிடைத்தால் என்ன செய்யது?" என்று கேள்வி கேட்டிருந்தார்.
அதற்கு கக்கர் "அவர் நெருக்கடியை எதிர்கொள்ளும் படிப்பில் (crisis management course) சேர வேண்டியிருக்கும்" எனப் பதில் அளித்தார்.
இன்னொருவர் "ஒருவர் மற்றொருவரை ஈர்க்க விரும்பும்போது, அவரிடம் பணம் இல்லை என்றால் அவர் என்ன செய்ய வேண்டும்" என்று கேட்டுள்ளார்.
அதற்கு கக்கர் "என வாழ்நாளில் நான் யாரையும் ஈர்க்கும் வகையில் நடந்து கொள்ள முயற்சிக்க வில்லை. ஆனால், பலரால் நான் ஈர்க்கப்பட்டுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.
கடைசியாக ஒருவர் "ஒருவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்து, காதலை விட்டு பிரிந்து செல்ல நேரிட்டால் என்ன செய்வது?" என்று கேட்டுள்ளார்.
அதற்கு கக்கர் "வாய்ப்புகள் மூலம் நீங்கள் காதலை பெறுகிறீர்கள். உங்களது திறமைக்கு ஏற்ப வேலையை பெறுகீறரக்ள் என்று நினைக்கிறேன். உங்களின் திறமைக்கேற்ப வேலை வாய்ப்பு கிடைக்கும். வாய்ப்பை (காதல்) தவற விடாதீர்கள்" என பதில் அளித்துள்ளார்.
- 2024ல் உள்நாட்டு மொத்த உற்பத்தி 0.5 சதவீதம் குறைய உள்ளதாக எச்சரித்தது ஐஎம்எஃப்
- அத்தியாவசிய பொருட்களின் விலை, வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது
கடந்த ஜூலை மாதம், பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு, வாஷிங்டனை மையமாக கொண்ட ஐஎம்எஃப் (IMF) எனும் சர்வதேச நிதி நாணயம், $1.2 பில்லியன் வழங்கியிருந்தது.
பாகிஸ்தானின் பொருளாதார நிலையை ஆய்வு செய்த ஐஎம்எஃப், தற்போது $700 மில்லியன் நிதியுதவி வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த டிசம்பர் மாதம், இது குறித்து முடிவெடுக்கவிருந்த அதன் செயற்குழு சந்திப்பு, தள்ளி போடப்பட்டது. தொடர்ந்து, வரும் ஜனவரி 11 அன்று இது குறித்து ஆலோசிக்க உள்ளது.
பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) இவ்வருடம் 0.5 சதவீதம் குறைய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள ஆணையம், அதிகரிக்கும் விலைவாசியினால் பொருளாதாரம் நிலையற்றதன்மையை அடைந்திருப்பதாக எச்சரித்துள்ளது.
கடந்த 2023 டிசம்பர் 22 காலகட்டத்தில், அந்நாட்டின் மத்திய வங்கியில் டாலர் கையிருப்பு $853 மில்லியன் அளவிற்கு உயர்ந்தது. இது ஐஎம்எஃப் விதித்திருந்த இலக்கை விட பாகிஸ்தான் கரன்சியில் ரூ.43 பில்லியன் அதிகம்.
கடந்த நவம்பர் மாதம், அந்நாட்டு நிதியமைச்சர், "மிக விரைவாக நிதியுதவி தேவைப்படுகிறது" என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டே நிதியுதவி வழங்கினாலும், அதற்கு ஈடாக பாகிஸ்தானுக்கு ஐஎம்எஃப் பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. இவற்றை கடைபிடித்தாக வேண்டிய கட்டாயத்தால் பாகிஸ்தான் பல இலவசங்களையும், மானியங்களையும் நிறுத்தியுள்ளது.
இதன் விளைவாக பால், உணவு, பெட்ரோல், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு வரலாறு காணாத உயர்வு அங்கு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அங்கு சில வாரங்களில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் இவையனைத்தும் எதிரொலிக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
- இம்ரான் கானின் வேட்பு மனு, தேர்தல் ஆணையத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது
- நேர்மையற்றவர் எனும் தீர்ப்பால் போட்டியிடும் தார்மீக உரிமையை இழக்கிறார் என்றது ஆணையம்
பிப்ரவரி 8 அன்று பாகிஸ்தானில் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
இதில் போட்டியிட பாகிஸ்தான் பிடிஐ (PTI) எனப்படும் தெஹ்ரிக்-ஏ-இன்சாஃப் (Tehreek-e-Insaf) கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான 71 வயதான இம்ரான் கான் வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால், ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றவரான அவரது மனு, பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. அவருடன் அக்கட்சியை சேர்ந்த பல மூத்த தலைவர்களின் வேட்பு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
முறையற்ற காரணங்களை கூறி இம்ரானின் மனு தள்ளுபடி ஆனதாக அவர் கட்சி, தேர்தல் ஆணையத்தை விமர்சித்திருந்தது.
இம்ரான் கானின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கான காரணத்தை தற்போது பாகிஸ்தானின் தேர்தல் ஆணையம் சுமார் 8 பக்கம் கொண்ட அறிக்கையில் வெளியிட்டிருக்கிறது.
ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இஸ்லாமாபாத் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இம்ரான் கான் நேர்மையற்றவர் என தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. அத்தகைய ஒருவர் தேர்தலில் போட்டியிட தார்மீக உரிமை இழந்தவராகிறார். இம்ரானின் பெயரை முன்மொழிந்தவரும், வழிமொழிந்தவரும் அவர்கள் கூறிய தொகுதிகளில் வசிக்கவில்லை; அதுவும் ஒரு காரணம். அரசு கஜானாவிற்கு சேர்க்க வேண்டிய பொருளை முறைகேடாக பயன்படுத்தி லாபம் ஈட்டிய வழக்கில் நேர்மையற்றவராக கருதி தேர்தலில் போட்டியிட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த தகுதியின்மை அவருக்கு தொடர்கிறது. தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதே தவிர, தீர்ப்பு நிறுத்தி வைக்கப்படவில்லை. எனவே தேர்தலில் போட்டியிடும் தார்மீக உரிமையை இம்ரான் இழக்கிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பிடிஐ கட்சியின் 90 சதவீத தலைவர்களின் வேட்பு மனுக்கள் தேர்தல் ஆணையத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் வேட்புமனுவை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் நிராகரித்தது.
- நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு தகுதிநீக்கம் செய்யப்பட்டவர் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
லாகூர்:
பாகிஸ்தானில் பிப்ரவரி 8-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிடுவதற்காக முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் பிரதமருமான இம்ரான்கான் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளான லாகூர் மற்றும் மியான்வாலி ஆகிய 2 தொகுதிகளில் இம்ரான்கான் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இம்ரான்கானின் வேட்பு மனுக்களை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் இன்று நிராகரித்துள்ளது.
லாகூரில் இருந்து நிராகரிக்கப்பட்ட வேட்பாளர்களின் பட்டியலில் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது, ஏனெனில் அவர் அந்தத் தொகுதியில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர் அல்ல என்பதாலும், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு தகுதிநீக்கம் செய்யப்பட்டவர் எனவும் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
2018 முதல் 2022 வரை பதவியில் இருக்கும்போது அரசு பரிசுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த குற்றத்திற்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 2008 மும்பை தொடர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டு பாகிஸ்தானில் உள்ளார்.
- முக்கிய வழக்கில் அவரை நாடு கடத்த வேண்டும் என இந்தியா வேண்டுகோள் விடுத்திருந்தது.
2008-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி திடீரென மும்பைக்குள் புகுந்த தீவிரவாதிகள் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தினர். பிரபல தாஜ் ஓட்டல் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 175 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலில் 9 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். அஜ்மல் கசாப் உயிருடன் பிடிபட்டார். மத்திய அமைப்புகள் தீவிர விசாரணை மேற்கொண்டதில் இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சயீத் எனத் தெரியவந்தது.
சயீத் பாகிஸ்தானில் இருந்து வருவதாகவும், அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால், ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் இல்லை என பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வந்தது. ஐ.நா. சபையில் இந்தியா ஆதாரத்துடன் பாகிஸ்தான் மீது குற்றம்சாட்டியது. இருந்த போதிலும் பாகிஸ்தான் அவரை பாதுகாத்து வருகிறது.
இந்த நிலையில்தான் ஹபீஸ் சயீத்தை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியா பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொட்பானர் மும்தாஜ் ஜஹ்ரா பலோச் கூறுகையில் "இந்திய அதிகாரிகளிடம் இருந்து வேண்டுகோள் வந்துள்ளது. அதை பாகிஸ்தான் பெற்றுள்ளது. பண மோசடி வழக்கில் ஹபீஷ் சயீத்தை நாடு கடத்த வேண்டும் (இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்) என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தான்- இந்தியா இடையே ஒப்படைப்பு தொடர்பான இருநாட்டு ஒப்பந்தம் இல்லை" என்றார்.
இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட வழக்கை எதிர்கொண்டு வரும் ஹபீஸ் சயீத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ள என இந்திய வெளியுறவுத்தறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லஷ்கர்-இ-தொய்பா (Let) பயங்கரவாத குழுவின் நிறுவனரான ஹபீஸ் சயீத்தை ஐ.நா., தடைசெய்யப்பட்ட பயங்கரவாதி என அறிவித்தது.
- இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் உள்ள 21 ஆயிரம் பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு.
- சுமார் 9 ஆயிரம் குழந்தைகள் இந்த சண்டையில் கொல்லப்பட்டுள்ளனர்.
2023-ம் ஆண்டு முடிவடைந்து 2024-ம் பிறக்க இன்னும் இரண்டு நாட்கள்தான் உள்ளது. உலக நாடுகள் புத்தாண்டை வரவேற்க உள்ளன. நாளைமறுதினம் முதல் உலக நாடுகள் ஒவ்வொன்றாக புத்தாண்டை வரவேற்கும். நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள தீவுகள் புத்தாண்டை வரவேற்கும்.
இந்தியா ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் புத்தாண்டை கொண்டாட இருக்கிறது. இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் அரைமணி நேரம் கழித்து புத்தாண்டு பிறக்கும். இந்த நிலையில் பாகிஸ்தானில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு காபந்து (caretaker) பிரதமர் அன்வாருல் ஹக் கக்கர் தடைவிதித்துள்ளார்.

இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர் "பாலஸ்தீனத்தின் துயரமான சூழ்நிலையை மனதில் வைத்து, நமது பாலஸ்தீன சகோதர, சகோதரிகளுக்கு ஒற்றுமையை காட்ட, புத்தாண்டு தொடர்பான எந்தவொரு நிகழ்ச்சியையும் நடத்துவதற்கு கடுமையான தடைவிதிக்கப்படும்.

விதிமுறை அனைத்தையும் மீறி இஸ்ரேல் படை 21 ஆயிரம் பாலஸ்தனீர்களை கொன்று குவித்துள்ளது. இதில் 9 ஆயிரம் குழந்தைகள் அடங்குவர். அப்பாவி குழந்தைகள் படுகொலை, காசா மற்றும் மேற்கு கரையில் ஆயுதமின்றியுள்ள பாலஸ்தீனர்கள் இனப்படுகொலை ஒட்டுமொத்த பாகிஸ்தான் மக்களையும், முஸ்லிம் உலகத்தையும் கவலையைில் ஆழ்த்தியுள்ளது " என்றார்.
- கடன் வழங்க பல்வேறு நிபந்தனைகளை ஐஎம்எஃப் விதித்தது
- தற்கொலை படை தாக்குதல்களால் ஏராளமானோர் உயிரிழந்தனர்
அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள பாகிஸ்தானில் வருட தொடக்கத்திலேயே, ஒரு டாலருக்கு பாகிஸ்தானிய ரூபாய் 300 எனும் அளவிற்கு அந்நாட்டு கரன்சி மதிப்பிழந்தது.
சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்க பல நிபந்தனைகளை விதித்தது. அவற்றை ஏற்கும் சூழலால் மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கினார்கள். பெட்ரோல் மற்றும் பால் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் கடுமையான விலையேற்றத்தை சந்தித்தது. நாடு முழுவதும் பல மணி நேரங்கள் மின்சாரம் இன்றி மக்கள் தவித்தனர். நிலைமையை சமாளிக்க அரசு இலவசமாக மாவு வழங்கியது. இதனை பெற ஏற்பட்ட நெரிசலில் 10 பேர் உயிரிழந்தனர்.
முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சட்டவிரோதமாக பரிசு பொருட்களை விற்றதாக தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து வந்து பாகிஸ்தானில் தங்கியிருந்த லட்சக்கணக்கான அகதிகளை பாகிஸ்தான் திருப்பி அனுப்பியது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கிடையே உறவு நலிவடைந்தது.
ஆப்கானிஸ்தான் ஆதரவுடன் இயங்கும் பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.
மொத்தத்தில், தொடக்கம் முதலே 2023 பாகிஸ்தானுக்கு சிறப்பானதாக இல்லை.
- பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல்.
- அக்கட்சியின் பெண்கள் பிரிவு தேசிய செயலாளராக உள்ளார்.
பாகிஸ்தான் நாட்டில் பொதுத்தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 8-ந்தேதி நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 266 இடங்கள் மற்றும் 4 மாகாண சட்டபேரவைக்கான 600 இடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கி நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது.
இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-என், இம்ரான் கான் தலைமையிலான தெக்ரீக்-இ-இன்சாப், மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.
இத்தேர்தலில் முதன்முதலாக இந்து சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவர் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அவரது பெயர் சவீரா பிரகாஷ். கைபர் பக்துன்காவின் புனர் மாவட்டத்தில் உள்ள தொகுதியில் (PK-25) பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இவரது தந்தை ஓம் பிரகாஷ் ஓய்வு பெற்ற மருத்துவர்.
சவீரா பிரகாஷ் கடந்த ஆண்டு கைபர் பக்துன்காவின் அபோதாபாத் சர்வதேச மருத்துவ கல்லூரியில் படிப்பை முடித்தார். பாகிஸ்தான் மக்கள் கட்சியின் புனர் மாவட்ட பெண்கள் பிரிவு பொது செயலாளராக உள்ளார். பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் பொது இடங்களில் ஐந்து சதவீதம் பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சவீரா பிரகாஷ் அளித்துள்ள பேட்டியில் "தனது தந்தையின் வழியை பின்பற்றி பின் தங்கிய மக்களுக்காக பணியாற்றுவேன். பெண்கள் முன்னேற்றத்துக்காகவும், அவர்களின் உரிமைக்காகவும் பாடுபடுவதற்காகவும் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்துள்ளேன்" தெரிவித்துள்ளார்.






