என் மலர்
உலகம்

இந்தியா- பாகிஸ்தான் போரை நானே நிறுத்தினேன்.. பாகிஸ்தான் தளபதியை சந்தித்த பின் டிரம்ப் பேட்டி!
- பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனீர் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்புடன் மதிய உணவு அருந்தினார்.
- எனக்குப் பாகிஸ்தானைப் பிடிக்கும்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரில் தான் மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.
இன்று (ஜூன் 18), பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனீர் தனது ஐந்து நாள் அமெரிக்கப் பயணத்தின் ஒரு பகுதியாக வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்புடன் மதிய உணவு அருந்தினார்.
இந்த சந்திப்புக்குப் பிறகு வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் போரைத் தான் நிறுத்தியதாக மீண்டும் கூறினார்.
டிரம்ப் தனது உரையில், "இந்தியா-பாகிஸ்தான் போரை நான் மத்தியஸ்தம் செய்து நிறுத்தினேன். எனக்குப் பாகிஸ்தானைப் பிடிக்கும். மோடி சிறந்த மனிதர் என நினைக்கிறேன். அவருடன் நேற்று இரவு நான் பேசினேன்.
மோடியுடன் நாங்கள் வணிக ஒப்பந்தம் செய்ய இருக்கிறோம். பாகிஸ்தான் போரை நிறுத்துவதற்கு அசீம் முனீர் முக்கிய காரணம். இதேபோன்று இந்தியா தரப்பில் போரை நிறுத்த மோடி முக்கியமானவர். போரை நிறுத்த இவர்கள் இருவருமே செல்வாக்கு மிகுந்தவர்களாக இருந்தனர். இரு முக்கிய அணு ஆயுத நாடுகளுக்கு இடையே நான் போரை நிறுத்தியுள்ளேன்," என்று குறிப்பிட்டார்.
முன்னதாக, 'ஆபரேஷன் சிந்தூர்' விவகாரத்தில் எந்தவித மத்தியஸ்தமும் நடைபெறவில்லை என்றும், பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதாலேயே போர் நிறுத்தம் செய்யப்பட்டது, இதில் அமெரிக்காவுக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி டிரம்ப்பிடம் தொலைபேசியில் தெரிவித்ததாக இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.






