என் மலர்
உலகம்

நேபாளத்தில் துணிகரம்: முன்னாள் பிரதமர் மனைவி போராட்டக்காரர்களால் எரித்துக் கொலை
- இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்தது.
- பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
காத்மண்டு:
நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யத் தவறிய இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து நேற்று போராட்டம் வெடித்தது. இதையடுத்து இந்தத் தடை நள்ளிரவில் நீக்கப்பட்டது.
இதற்கிடையே, நேபாள பிரதமர் சர்மா ஒலி பதவி விலகக் கோரி இளைஞர்கள் 2 ஆம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். நேபாள நாட்டின் அதிபர் மற்றும் பிரதமர் இல்லங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். பாராளுமன்ற கட்டிடத்துக்கு தீ வைத்தனர். இதையடுத்து, பாராளுமன்றம் முழுவதும் கரும் புகை சூழ்ந்தது. இதேபோல், விமான நிலையம் அருகிலும் தீ வைத்ததால், விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று சர்மா ஒலி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். நேற்று உள்துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், பிரதமர் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
பிரதமர் சர்மா ஒலியை தொடர்ந்து ஜனாதிபதி ராம் சரண் பவ்டெல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் நேபாள அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேபாள முன்னாள் பிரதமர் ஜாலா நாத் கனலின் மனைவி போராட்டக்காரர்களால் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ஜாலா நாத் கனல் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதில் படுகாயம் அடைந்த அவரது மனைவி உயிரிழந்தார்.






