search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகள் வெளியிட்ட வீடியோ, வேலையிழந்த தந்தை: ஆப்பிள் அதிரடி
    X

    மகள் வெளியிட்ட வீடியோ, வேலையிழந்த தந்தை: ஆப்பிள் அதிரடி

    ஆப்பிள் நிறுவன பொறியாளர் ஒருவரின் மகள் யூடியூபில் வெளியிட்ட வீடியோ வைரலானதை தொடர்ந்து, தந்தையை ஆப்பிள் நிறுவன பணியில் இருந்து நீக்கி ஆப்பிள் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
    சான்பிரான்சிஸ்கோ:

    ஆப்பிள் நிறுவனத்தின் பொறியாளர் ஒருவரின் மகள் ஐபோன் X ஹேன்ட்ஸ்-ஆன் (அறிமுக) வீடியோ யூடியூபில் வைரலானதை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் குறிப்பிட்ட பொறியாளரை வேலையில் இருந்து நீக்கியுள்ளது.

    ஐபோன் X இடம்பெற்றிருந்த வீடியோ ஒன்றை புரூக் அமீலியா பீட்டர்சன் என்பவர் யூடியூபில் வெளியிட்டிருந்தார். ஆப்பிள் நிறுவனத்தின் மூத்த பொறியாளரான பீட்டர்சன் ஐபோன் X சாதனத்தின் RF மற்றும் வயர்லெஸ் சர்கியூட் வடிவமைப்பில் பணியாற்றியுள்ளார். அந்த வகையில் பீட்டர்சன் மகள் வெளியிட்ட வீடியோ யூடியூபில் பிரபலமானதை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் பீட்டர்சனை பணியில் இருந்து நீக்கியுள்ளது.



    'எனது தந்தை ஆப்பிள் நிறுவன பணியை இழந்துவிட்டார். முன்னாள் ஆப்பிள் ஊழியரான எனது தந்தை ஐபோன் X ஸ்மார்ட்போனை நான் பயன்படுத்த எனக்கு வழங்கிய குற்றத்திற்கான முழு பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு வழங்கப்பட்ட ஐபோன் X சாதனத்தை எனக்கு வழங்கியதன் மூலம் ஆப்பிள் நிறுவன விதிமுறையை அவர் மீறிவிட்டார். ஆப்பிள் நிறுவன விதிமுறைகளை மீறுவோருக்கு எவ்வித மன்னிப்பும் கிடையாது என்போதோடு குறிப்பிட்ட வீடியோவினை யூடியூபில் இருந்து நீக்க ஆப்பிள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.' என அமீலியா பீட்டர்சன் சமீபத்தில் வெளியிட்ட யூடியூப் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

    அமீலியா வெளியிட்ட ஐபோன் X அறிமுக வீடியோவில் ஐபோன் X சார்ந்து ரகசிய தகவல்கள், இன்னும் வெளியாகாத ஆப்பிள் சாதனங்களின் குறியீட்டு பெயர்கள் மற்றும் ஆப்பிள் பணியாளர்களுக்கு மட்டுமான கியூ.ஆர் கோட் உள்ளிட்டவை ஆப்பிள் நோட்ஸ் செயலியில் காணப்பட்டது.



    வெளியீட்டிற்கு முன் சாதனம் வெளியான சம்பவத்தில் பொறியாளர் வேலையிழப்பது ஆப்பிள் வரலாற்றில் ஏற்கனவே அரங்கேறியுள்ளது. முன்னதாக 2010-ம் ஆண்டு ஆப்பிள் இணை நிறுவனரான ஸ்டீவ் வோஸ்னியாக் ஆப்பிள் ஐபேட் 3ஜி சாதனத்தை வாங்க வரிசையில் நின்ற போது அவரிடம் சில நிமிடங்கள் அதே சாதனத்தை காண்பித்த சோதனை பொறியாளர் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

    இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாதனமாக இருந்த ஐபோன் X இந்தியா உள்பட உலகின் 55-க்கும் அதிகமான நாடுகளில் முன்பதிவு செய்யப்படுகிறது. ஆப்பிள் வரலாற்றில் விலை உயர்ந்த ஐபோன் சாதனம் முன்பதிவு துவங்கிய 10 நிமிடங்களில் முழுமையாக விற்று தீர்ந்தது. இதன் விநியோகம் நவம்பர் 3-ம் தேதி துவங்குகிறது. ஆப்பிள் ஐபோன் X (64 ஜிபி) விலை ரூ.89,000 மற்றும் 256 ஜிபி மாடல் ரூ.1,02,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×