என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

டெல்லியில் ரகசிய சந்திப்பு: அமித்ஷா-செங்கோட்டையன் பேசியது என்ன? பரபரப்பு தகவல்கள்
- டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ். ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அ.தி.மு.க.வினரை முழுவதுமாக அணி திரட்ட முடியவில்லை.
- எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையனை கொம்பு சீவி விட்டு என்ன நடக்கப் போகிறது? என்று கேள்வி எழுப்பினார்.
சென்னை:
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசிய பரபரப்பு அடங்குவதற்குள், அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையனும் ரகசியமாக டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசி விட்டு சென்னை திரும்பி இருப்பது அ.தி.மு.க.வினர் மத்தியில் சூட்டை கிளப்பி இருப்பதுடன் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே அமித்ஷா-செங்கோட்டையன் சந்திப்பின் போது பேசப்பட்டது என்ன? என்பது பற்றி பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வரும் நிலையில் மீண்டும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டாம் என்று அமித்ஷா, செங்கோட்டையனிடம் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
இது பற்றி தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறும் போது, டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ். ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அ.தி.மு.க.வினரை முழுவதுமாக அணி திரட்ட முடியவில்லை. அப்படி இருக்கும் போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையனை கொம்பு சீவி விட்டு என்ன நடக்கப் போகிறது? என்று கேள்வி எழுப்பினார். எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி விட்டு செங்கோட்டையனை அவருக்கு எதிராக எப்படி திருப்பி விட முடியும் என்பதும் பாரதிய ஜனதா கட்சியினரின் கேள்வியாக உள்ளது.






