என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    விளாத்திகுளம் அருகே மாணவி கொடூரக்கொலை: காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்
    X

    விளாத்திகுளம் அருகே மாணவி கொடூரக்கொலை: காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

    • காட்டுப்பகுதியில் மாணவி முகம் மற்றும் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
    • குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளியின் 17 வயது மகள் குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இவர் நேற்று முன்தினம் பொதுத்தேர்வு எழுதி விட்டு மாலையில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டு அருகே உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அருகே உள்ள பகுதிகளில் தேடினர். ஆனால் மாணவி கிடைக்கவில்லை. இதையடுத்து மாணவியின் தந்தை குளத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் மாணவி சிறுமி என்பதால் விளாத்திகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்குமாறு போலீசார் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

    பின்னர் நேற்று காலை விளாத்திகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும் புகார் அளிக்கச் சென்றபோதும் உடனடியாக புகார் பதிவு செய்யப்படவில்லை என உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதையடுத்து மீண்டும் குளத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    நேற்று மாலை வேடநத்தம் கிராமம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் மாணவி முகம் மற்றும் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார். அவரது ஆடைகள் களைந்த நிலையில் இருந்தது.

    இதுகுறித்த தகவலின் பேரில் குளத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டு பின்னர் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மாணவி காணாமல் போன தகவலை தெரிவித்தபோதும் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டிய உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஆத்திரமடைந்து வேடநத்தம்-குறுக்குச்சாலை சாலையில் வேடநத்தம் பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், மாணவி மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்தும் முழுமையான விசாரணை நடத்த வேண்டும், மேலும் புகார் அளிக்கச் சென்றபோது அலைக்கழித்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மதன், டி.எஸ்.பி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனும் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என போலீசாரிடம் வலியுறுத்தினார்.

    இதற்கிடையே, மாணவியின் உறவினர்கள் போராட்டம் நள்ளிரவிலும் நீடித்தது. பின்னர் அங்கிருந்து கலைந்து சென்ற அவர்கள் இன்று காலை வேடநத்தம் பகுதியில் சாலையோரம் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். எனினும், அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனைத் தொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மதன் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.

    மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானாரா?அல்லது வேறு காரணம் ஏதும் உள்ளதா? என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை சேகரித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    பள்ளி மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரவீனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    மாணவியை காணவில்லை என பெற்றோர் புகார் கூறியும் முறையாக விசாரிக்கவில்லை என ஆய்வாளர் மீது புகார் எழுந்துள்ளது.

    புகார் கூறியதுமே தேடி இருந்தால் மாணவியை காப்பாற்றி இருக்கலாம் என்றும், புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் பெண் இன்ஸ்பெக்டர் அவதூறாக பேசியதாகவும் பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர்.

    இந்நிலையில் காவல் நிலைய ஆய்வாளர் பிரவீனாவை பணியிடை நீக்கம் செய்து நெல்லை சரக டிஐஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×