என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அன்று தெர்மாகோல்... இன்று கொசுவலை... இணையத்தில் வைரலாகும் வீடியோ - நெட்டிசன்கள் கிண்டல்
- கொசுக்கடியில் இருந்து தப்பிக்க பொதுமக்களும் தாங்கள் சுயமாக பல முயற்சிகளை மேற்கொள்கிறார்கள்.
- விமர்சனங்களும், கேலி-கிண்டல் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னையில் சமீப காலமாகவே கொசுக்களின் பெருக்கம் அதிகரித்து வருகிறது. வழக்கமாக மழை காலங்களில் தான் கொசுக்களின் உற்பத்தி அதிகமாக இருக்கும். அதனால் பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் தவிக்கும் நிகழ்வுகள் அரங்கேறும். ஆனால் இப்போதெல்லாம் கோடை காலத்தில் கூட கொசுக்கடிக்கு பஞ்சமில்லை. மழைக்காலம், குளிர்காலம், கோடை காலம் என எல்லா பருவ காலத்திலுமே சென்னையில் கொசுக்களின் தொல்லை அதிகரித்தே வருகிறது.
அதிலும் வடகிழக்கு பருவமழைக்கு பிறகு சென்னையில் கொசுக்களின் ஆதிக்கம் மிகவும் அதிகரித்து விட்டது. புற்றீசல் போல பல்கிப் பெருகிய கொசுக்கள் காரணமாக சென்னை மக்கள் பெரும்பாலானோர் இரவு தூக்கத்தை தொலைப்பது தினமும் அரங்கேறி வருகிறது. இரவு 7 மணிக்கு மேல் பொது வெளியில் சாலையோரம் சிறிது நேரம் நின்றாலே கொசுக்கள் மொத்தமாக மொய்த்துக்கொண்டு கடிக்கின்றன.
இதுவரை இல்லாத வகையில் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து இருப்பதால் பொதுமக்கள் தாங்க முடியாத சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். கொசுக்களை ஒழிக்க மாநகராட்சி எந்த அக்கறையும் காட்டவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். வாகனங்களில் கொசுமருந்து புகை அடிப்பது பெயரளவுக்கு மட்டுமே நடப்பதாகவும், அதனால் கொசுக்கள் ஒழியவில்லை என்பதும் பொதுமக்களின் ஆதங்கமாக உள்ளது.
கொசுக்கடியில் இருந்து தப்பிக்க பொதுமக்களும் தாங்கள் சுயமாக பல முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். கொசுவர்த்தி ஏற்றினாலும், கிரீம் பயன்படுத்தினாலும் அவற்றுக்கு கொசுக்கள் சீக்கிரமே பழகி விடுவதாகவும், அதனால் நிரந்தர பலனில்லை என்பதும் பொதுமக்களின் கருத்தாக உள்ளது.
பெரும்பாலானோருக்கு அலர்ஜி பாதிப்பு இருப்பதால் கொசுக்கடியில் இருந்து தப்பிக்கும் ஸ்பிரே உள்ளிட்டவற்றையும் பயன்படுத்த முடிவதில்லை. இதனால் கொசுக்கடியில் இருந்து தப்பிக்க வழியில்லாமல் பொதுமக்கள் தவிக்கிறார்கள். மேலும் கொசுக்கள் உற்பத்தி அதிகரிப்பால் பொதுமக்களுக்கு காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கொசுக்களை ஒழிப்பதற்காக நூதன முயற்சி ஒன்றை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் புதிதாக கையாண்டு வருகிறார்கள். மழைநீர் வடிகால்களுக்கு கொசுவலை போர்த்தும் திட்டம் தான் அது. முதல் கட்டமாக திருவொற்றியூர், திரு.வி.க.நகர் உள்ளிட்ட பல்வேறு மண்டலங்களில் இந்த பணிகள் நடந்து வருகிறது.
சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரை வடிகால்வாயில் விழச் செய்வதற்காக ஆங்காங்கே சிறிய அளவிலான தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தொட்டிகளின் மூடியை திறந்து கொசுவலை போர்த்தி, அதன் மேல் மீண்டும் மூடி வைக்கப்படுகிறது. மழைநீர் வடிகால்வாய் தொட்டிக்குள் உள்ள கொசுக்கள் தொட்டி மூடியில் உள்ள துளை வழியே வெளியேறுவதை தடுக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால் சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் இந்த முயற்சியானது பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக வலைதளங்களில் வறுத்தெடுக்கிறார்கள்.
இது தொடர்பான விமர்சனங்களும், கேலி-கிண்டல் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த கொசுவலை முயற்சியால் உண்மையிலேயே பயன் இருக்குமா என்கிற சந்தேகத்தையும் சிலர் எழுப்பி வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தெர்மாக்கோல் மிகவும் பிரபலமானதை யாரும் மறந்துவிட முடியாது. வைகை அணையில் தண்ணீர் ஆவியாகாமல் இருக்க அப்போது அமைச்சராக இருந்த செல்லூர் ராஜூ அணை நீரின் மேற்பரப்பில் தெர்மாகோலை மிதக்கவிட்டார். ஆனால் தண்ணீரில் ஏற்பட்ட அலையால் அனைத்து தெர்மாக்கோல்களும் சில நிமிடங்களிலேயே கரை ஒதுங்கின. அந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.
அந்த தெர்மாக்கோல் முயற்சியுடன், இந்த கொசுவலை முயற்சியை தொடர்புபடுத்தி 'அன்று தெர்மாக்கோல் இன்று கொசுவலை' என்று பலரும் இப்போது நகைச்சுவையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்த விமர்சனங்கள் வலைதளங்களை ஆக்கிரமித்து வருகிறது.
'கொசுவை பிடிக்க வலைவிரிக்கும் சென்னை மாநகராட்சி... வாகன ஓட்டிகளே உஷார்!', கொசு வலைகளை கரையான் அரிக்காமல் இருக்க பூச்சி மருந்து தெளிக்கப்படுமா?, 'கொசு உற்பத்தியை தடுக்க புதிய வழி... நீங்க ஒரு சிட்டி விஞ்ஞானி!', 'தெர்மாக்கோல் சம்பவமே இதைவிட பரவாயில்லை போல!', 'மதுரைக்கு தெர்மாக்கோல்,,, சென்னைக்கு கொசுவலை...' என்று நகைச்சுவையாக பதிவிட்டு வருகிறார்கள்.
திரைப்படத்தில் வரும் 'என் கட்சிக்கு மட்டும் நிதி நெருக்கடி இல்லாமல் இருந்திருந்தால் ஒரு பிரமாண்டமான கொசுவலையை வாங்கி தொகுதி முழுவதும் பந்தல் போட்டு மூடி இருப்பேன்... என்னால் முடியவில்லையே...' என்று நடிகர் வடிவேல் பேசும் சினிமா டயலாக்கையும் பதிவிட்டு வருகிறார்கள்.
கவுண்டமணி, செந்தில் காமெடியில் செந்தில், கவுண்டமணியிடம், செந்தில் கேள்வி எழுப்புகிற 'மீனுக்கு வலை போட்டா வலைக்குள்ள என்ன இருக்கும்? மீன் இருக்கும். மானுக்கு வலை போட்டா வலைக்குள் என்ன இருக்கும்? மான் இருக்கும். கொசுவுக்கு வலைபோட்டா வலைக்குள் என்ன இருக்கும்? என்ற காமெடியையும் பதிவிட்டுள்ளனர்.
எது எப்படியோ சென்னையில் கொசு ஒழிந்தால் போதும்... அதுதான் பொதுமக்களின் விருப்பம்.






