என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    த.வெ.க., நா.த.க. உடன் கூட்டணி வைக்க வேண்டும்: ஓபிஎஸ்-க்கு அழுத்தம் கொடுக்கும் ஆதரவாளர்கள்
    X

    த.வெ.க., நா.த.க. உடன் கூட்டணி வைக்க வேண்டும்: ஓபிஎஸ்-க்கு அழுத்தம் கொடுக்கும் ஆதரவாளர்கள்

    • ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களிடமும் ஓ.பன்னீர்செல்வம் கருத்துக்கள் கேட்டார்.
    • நாளை திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

    சென்னை:

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை பொதுத்தேர்தலை சந்திக்க ஒவ்வொரு கட்சிகளும் இப்போதே தயாராகி வருகிறது அந்த வகையில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்து உள்ள நிலையில் இந்த கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் சேரும் என்பது இன்னும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.

    இந்த சூழலில் அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை தொடர்ந்து நடத்தி வருகிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் இவருக்கு மாவட்டச் செயலாளர்கள் நிர்வாகிகள் உள்ளனர்.

    பா.ஜ.க.வுடன் நெருக்கம் வைத்துள்ள ஓ.பன்னீர் செல்வம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை பொதுத்தேர்தலில் யாருடன் கூட்டணி சேருவார் என்ற எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    பா.ஜ.க.-அ.தி.மு.க.வுடன் கூட்டணி ஏற்பட்டுள்ள நிலையில் இந்த கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் சேர்த்துக் கொள்ளப்படுவாரா? என்பது இன்னமும் தெரியவில்லை.

    காரணம் கடந்த பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்ட நிலையில், மீண்டும் அவரை அ.தி.மு.க. கூட்டணியில் சேர்க்கும் நிலையில் இல்லை என்றே தெரிகிறது. எனவே பா.ஜ.க.விடம் பேசி அவர்கள் ஒதுக்கும் இடங்களில்தான் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் போட்டியிட முடியும் என அக்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். அப்படியே போட்டியிட்டாலும் சுயேட்சை சின்னம் அல்லது தாமரை சின்னத்தில்தான் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.

    இந்த நிலையில், ஓ.பன்னீர் செல்வம் மாவட்டச் செயலாளர்களின் கருத்தை அறிய சென்னையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடத்தினார். மயிலாப்பூரில் உள்ள நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களிடமும் ஓ.பன்னீர்செல்வம் கருத்துக்கள் கேட்டார். கட்சியின் எதிர்காலம், தேர்தல் கூட்டணி வியூகம் குறித்து அவர் விரிவாக பேசியதாக தெரிகிறது.

    மேலும் ஓ.பன்னீர்செல்வம் வழங்கிய படிவத்தில் "த.வெ.க., நா.த.க. உடன் கூட்டணி வைக்க வேண்டும்" என நிர்வாகிகள் எழுதித் தந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இன்று மாலையில் தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், புதுச்சேரி மாநில நிர்வாகிகளிடம் கருத்துக்கள் கேட்கிறார்.

    நாளை திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

    இதன் பிறகு பா.ஜ.க.விடம் உள்ஒதுக்கீடு பெற்று தேர்தலில் போட்டியிடலாமா? அல்லது கூட்டணி வியூகத்தை மாற்றி அமைக்கலாமா? என்பது குறித்து ஓ.பன்னீர் செல்வம் முடிவெடுத்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×