என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

'சாரி' தான் முதல்வரின் பதிலா?: மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்- ஆர்.பி.உதயகுமார்
- முதல்வரின் பேச்சில் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லையே என்கிற கவலை மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
- போலீசார் தானாகவே முன்வந்து ஏன் விசாரிக்க வேண்டும்? அவர்களை விசாரிக்குமாறு உத்தரவிட்டது யார்?
மதுரை:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் தனிப்படை போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சம்பந்தப்பட்ட போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த நிலையில் மேற்கண்ட சம்பவத்தை கண்டித்து சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இன்று அ.தி.மு.க., பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார், பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, பெரிய புள்ளான், முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் மற்றும் திரளான அ.தி.மு.க. பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொண்டு தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது:-
மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமாரை 27-ந்தேதி திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர். போலீசார் தாக்கியதிலே அவர் இறந்து இருக்கிறார். தமிழகம் முழுவதும் 2021 முதல் தற்போது வரை 25 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்துள்ளனர்.
மரணமடைந்த அஜித்குமார் குடும்பத்தினரிடம் பேசிய முதலமைச்சர் தொலைபேசி உரையாடல் அலட்சியத்தின் உச்சமாக இன்றைக்கு பார்க்கப்படு கிறது. கொலை செய்தது உங்கள் அரசு, ஆனால் சாரி என்பதுதான் உங்கள் பதிலா?
முதல்வரின் பேச்சில் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லையே என்கிற கவலை மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. என்ன பண்ணணுமோ பண்ணி கொடுக்க சொல்றேன் என்று சொல்லுகிறீர்களே? அப்பாவி அஜித்குமார் உயிரை திருப்பி கொடுக்க முடியுமா?
அஜித்குமார் இறந்து 4 நாட்கள் கழித்து, எதிர்க்கட்சியான அ.தி.மு.க. சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அதன் அடிப்படையில் நீதிமன்றம் விசாரித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்த பிறகு எப்.ஐ.ஆர். கைது எல்லாம் நடந்திருப்பதை நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள்.
போலீசார் தானாகவே முன்வந்து ஏன் விசாரிக்க வேண்டும்? அவர்களை விசாரிக்குமாறு உத்தரவிட்டது யார்?
திருட்டு வழக்கில் போலீசார் விசாரிக்க உரிமை உள்ளது. ஆனால் எதற்கு தாக்கினார்கள் என்பது தான் மக்களின் கேள்வி. காவல்துறை இன்றைக்கு அஜாக்கிரதையாக பணியாற்றி இந்த கொலைக்கு காரணமாக இருந்தது என்று மு.க.ஸ்டாலின் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த காரணத்தால் அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழப்புக்கு காவல்துறையை கையில் வைத்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் தான் பொறுப்பு. ஆகவே அவருடைய அரசு மரணங்களை தொடர்ந்து நடத்தி இருக்கிறது.
இதற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியை மு.க.ஸ்டாலின் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்பது தமிழ்நாடு மக்களின் தீர்ப்பு. இதற்கு அவர் முன்வரவில்லை என்றால், மக்கள் தருவார்கள் தகுந்த தீர்ப்பு.
இவ்வாறு அவர் பேசினார்.






