என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பீகாரை தொடர்ந்து பிரதமர் மோடி தமிழகம் வருகை- பா.ஜ.க.வினர் உற்சாகம்
    X

    பீகாரை தொடர்ந்து பிரதமர் மோடி தமிழகம் வருகை- பா.ஜ.க.வினர் உற்சாகம்

    • இயற்கை விவசாயம் குறித்த மாநாடு 19-ந் தேதி தொடங்கி 21-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
    • மாநாடு முடிந்து தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை மோடி சந்தித்து பேச வாய்ப்பு.

    பிரதமர் மோடி கடைசியாக கடந்த ஜூலை மாதம் தூத்துக்குடி மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கு வருகை தந்தார்.

    3 மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் மோடி வருகிற 19-ந் தேதி தமிழகம் வருகை தர உள்ளார். கோவையில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் இயற்கை விவசாயம் குறித்த மாநாடு 19-ந் தேதி தொடங்கி 21-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

    இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இந்த தகவலை தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்தார்.

    மாநாட்டை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி 19-ந் தேதி கர்நாடக மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வருகிறார். அன்று மதியம் கொடிசியாவில் நடைபெறும் விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

    மாநாட்டில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொள்கிறார்கள். 50 இயற்கை வேளாண் விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார்.

    சுமார் ஒரு மணி நேரம் இந்த மாநாட்டு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார். இந்த ஒரு நிகழ்ச்சியில் மட்டுமே மோடி பங்கேற்க உள்ளதாகவும், அதன்பிறகு கோவையில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    மாநாடு முடிந்து தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை மோடி சந்தித்து பேச வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

    பிரதமர் மோடியின் தற்போதைய தமிழக பயணம் பா.ஜ.க.வினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் இரு கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன.

    இதனால் பா.ஜ.க.வினர் உற்சாகத்தில் உள்ளனர். மீண்டும் பீகாரில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமையும் பட்சத்தில், அது அடுத்தடுத்த தேர்தல்களில் எதிரொலிக்கும் என்று அக்கட்சியினர் நம்புகின்றனர்.

    பீகார் தேர்தல் முடிவடைந்த சூழலில், பா.ஜ.க.வின் பார்வை அடுத்து தேர்தல் நடைபெற உள்ள தமிழகம் பக்கம் திரும்பி இருக்கிறது. இந்தநிலையில் மோடி வருகை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இனி வரும் காலங்களில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பயணம் தமிழகத்தில் தொடரும் என பா.ஜ.க.வினர் தெரிவித்துள்ளனர்.

    பிரதமர் மோடி வருகை தொடர்பாக போலீசாரிடம் கேட்டபோது இதுவரை தங்களுக்கு முறையான அறிவிப்பு எதுவும் வரவில்லை எனவும், அறிவிப்பு வந்தால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் எனவும் கூறினர்.

    Next Story
    ×