என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    விஜய் அவருக்கான ஸ்டைலில் பேசி இருக்கிறார்- பிரேமலதா விஜயகாந்த்
    X

    விஜய் அவருக்கான ஸ்டைலில் பேசி இருக்கிறார்- பிரேமலதா விஜயகாந்த்

    • பிரசாரத்தை தொடங்கி உள்ள விஜய்க்கு என்னுடைய வாழ்த்துகள்
    • இப்போது விஜய்க்கு இருக்கும் நெருக்கடியை போன்று 20 வருடத்திற்கு முன்பே சந்தித்தவர் விஜயகாந்த்.

    திருச்சி:

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் உள்ளம் தேடி இல்லம் நாடி, கேப்டன் ரத யாத்திரை புரட்சி பயணம் மேற்கொண்டுள்ளார். திருச்சி மாவட்டத்துக்கு அவர் நேற்று 2 நாள் சுற்று பயணமாக வந்தார். திருச்சியில் பூத் முகவர்களுடன் ஆலோசனை நடத்திய அவர் மாலையில் முசிறி தா.பேட்டையில் கேப்டன் ரத யாத்திரையில் கலந்து கொண்டார்.

    இன்று காலை திருச்சி தெற்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் கட்சியின் 21-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் விஜயகாந்தின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாவட்டம் மணப்பாறை சாலை முள்ளிப்பாடியில் அமைக்கப்பட்டிருந்த 73 அடி உயர பிரமாண்ட கொடிக்கம்பத்தில் தே.மு.தி.க. கொடியேற்றி, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி பேசினார். இதில் கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷ், மாநில இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    பின்னர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜனவரி 9-ந் தேதி கடலூரில் நடைபெற உள்ள மாநில மாநாட்டில் எங்களின் நிலைப்பாடு என்ன? யாருடன் கூட்டணி உள்ளிட்ட அனைத்து கேள்விக்கு பதில் அறிவிப்போம். பிரசாரத்தை தொடங்கி உள்ள விஜய்க்கு என்னுடைய வாழ்த்துகள்.

    ஒவ்வொருக்கும் ஒவ்வொரு ஸ்டைல், அதே போல் விஜய் கட்சி ஆரம்பித்து இருக்கிறார். அவருக்கு எப்படி பேச வேண்டும் என்பது தெரியாதா?.

    அவரை குறை சொல்லவோ, விமர்சனம் செய்யவோ, ஆலோசனை சொல்லவோ நாங்கள் இல்ல. அவர் அவருக்கான ஸ்டைலில் பேசி இருக்கிறார். இப்போது விஜய்க்கு இருக்கும் நெருக்கடியை போன்று 20 வருடத்திற்கு முன்பே சந்தித்தவர் விஜயகாந்த்.

    புதிதாக வருபவர்களுக்கு எல்லா சவால்களும் இருக்கும். சவால்களை முறியடித்து வெற்றி காணும் போது தான் அது மக்களால் அங்கீரிக்கப்படும். திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வருபவர்கள் பிரபலமானவர்கள். அதனால் தான் நெருக்கடிகள் அதிகம். ஆனால் நாங்கள் அதையெல்லாம் பார்த்தவர்கள், இதுவெல்லாம் எங்களுக்கு பெரிதல்ல.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×