என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பா.ம.க. கொறடா அருளை நீக்கக்கோரி எம்.எல்.ஏ.க்கள் மனு
- நேற்று முன்தினம் சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் அருளை பா.ம.க.வில் இருந்து நீக்கி அன்புமணி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
- அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை என்று ராமதாஸ் கூறியிருந்தார்.
சென்னை:
பா.ம.க.வில் தந்தை மகனுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், நிர்வாகிகள் சிலர் ராமதாசுக்கு ஆதரவாகவும், சிலர் அன்புமணிக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர். இதனிடையே, மூச்சு உள்ளவரை பா.ம.க. தலைவர் தானே என ராமதாசும், வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் என்று அன்புமணியும் பேசி வருகிறார்கள். இதற்கிடையே, அன்புமணி ஆதரவாளர்களை ராமதாசும், ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணியும் நீக்கி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம், சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் அருளை பா.ம.க.வில் இருந்து நீக்கி அன்புமணி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து, நேற்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், எம்.எல்.ஏ. பதவியில் இருந்து யாரையும் நீக்க முடியாது. அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை. எம்.எல்.ஏ.க்களை நீக்க பா.ம.க. கொறடா தான் சபாநாயகருக்கு பரிந்துரை செய்ய முடியும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், சட்டமன்றக்குழு கொறடா அருளை மாற்றக்கோரி பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் மனு அளித்தனர்.
பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேஸ்வரன், சதாசிவம், மயிலம் சிவக்குமார் மற்றும் வழக்கறிஞர் பாலு ஆகியோர் சட்டப்பேரவை செயலரை சந்தித்து மனு அளித்துள்ளனர். புதிய கொறடாவாக மயிலம் எம்.எல்.ஏ. சிவக்குமாரை நியமிக்கவும் சட்டப்பேரவைச் செயலாளரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.