என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தி.மு.க. எம்.எல்.ஏ. மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது- மாணிக்கம் தாகூர்
    X

    தி.மு.க. எம்.எல்.ஏ. மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது- மாணிக்கம் தாகூர்

    • என்னை பொறுத்த அளவில் காங்கிரஸ் கட்சியை யாரெல்லாம் அவமானப்படுத்துகிறார்களோ அவர்களை தயவு பார்க்க மாட்டேன்.
    • வருகிற சட்டமன்றத் தேர்தலில் மதுரை வடக்கு தொகுதியை காங்கிரஸ் கட்சி கேட்டு பெறும்.

    திருமங்கலம்:

    திருப்பரங்குன்றத்தில் மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்துக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாட்டில் வெறுப்பு அரசியலை ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் தொடர்ந்து செய்து வருகிறது. காந்தியின் நினைவு நாளை ஒருமைப்படுத்தும் நாளாக பார்க்கிறேன்.

    சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து தலைவர் ராகுல் காந்தியை கனிமொழி சந்தித்து பேசி உள்ளார். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது அவர்களுக்கு தான் தெரியும். ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக சொல்கிறேன். காங்கிரஸ் கட்சி பொறுத்தவரை தலைமை நியமித்த குழு தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும். வருகிற சட்டமன்றத் தேர்தலில் மதுரை வடக்கு தொகுதியை காங்கிரஸ் கட்சி கேட்டு பெறும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைவரை சந்தித்து பேசி உள்ளேன்.

    என்னை பொறுத்த அளவில் காங்கிரஸ் கட்சியை யாரெல்லாம் அவமானப்படுத்துகிறார்களோ அவர்களை தயவு பார்க்க மாட்டேன். காங்கிரஸ் கட்சியின் தன்மானம் முக்கியமானது. காங்கிரஸ் கட்சி தொண்டர்களை இழிவுபடுத்துவதையும், அவமதிப்பதையும் எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி குறித்து அவதூறாக பேசிய தி.மு.க. மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக மாநில தலைவரும் தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதி கோரிக்கை வைத்துள்ளார். அவர் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்பிக்கை உள்ளது.

    இந்தியா கூட்டணி என்பது பாராளுமன்ற தேர்தலுக்காக உருவாக்கப்பட்டது. மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதை ஒட்டிய காங்கிரஸ் சகோதரர்களை பாராட்டுகிறேன்.

    வடக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி பலமாக உள்ளது. அங்கு அமைப்பு ரீதியாக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடத்த உள்ளோம் காங்கிரஸ் கட்சியின் பலத்தை காட்டுவோம். காங்கிரஸ் கட்சிக்காரர்கள் வந்தே மாதரம் என்று சொல்வது மட்டும் கிடையாது. திருப்பி அடிக்கவும் தெரியும். முதலில் தேர்தல் அறிவிக்கட்டும். கூட்டணி முடிவான பின் தொகுதி பங்கீடு பற்றி பிறகு பேசுவோம் என்றார்.

    Next Story
    ×