என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கரூர் சம்பவத்தை மையமாக வைத்து விஜய்யை அரசியலில் இருந்து வெளியேற்ற திட்டமிடுகிறார்கள்- கிருஷ்ணசாமி
- கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் வீட்டிலேயே முடங்கி கிடக்காமல் வெளியே வரவேண்டும்.
- சம்பவம் நடந்து 7 நாட்கள் ஆகியும் இன்னும் அவர் வெளியில் வராமல் இருப்பது அரசியல் தலைவருக்கு நல்லது அல்ல.
சென்னை:
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சி தலைமை அலுவலகத்தில் அந்த கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விஜய்யை கைது செய்ய வேண்டும் என்று சில பேர் கூறிக் கொண்டிருக்கிறார்கள், இது நடந்தது எப்படி என்பதை கண்டுபிடிக்க வேண்டுமே தவிர, அவர் மீது ஒட்டுமொத்தமாக குற்றம் சாட்டக் கூடாது.
இந்த சம்பவத்தை வைத்து விஜய்யை அரசியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என திட்டமிட்டு காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட்டு வருகிறார்கள். அவரை மொத்தமாக காலி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார்கள். ஏற்கனவே காவல்துறை விஜய்யின் மாநாடுகளை பார்த்திருக்கிறது. கட்சியை சார்ந்தவர்கள் மட்டுமின்றி அனைவரும் அவரைப் பார்ப்பதற்கு வருவார்கள். அப்படி இருக்கும்போது அவரது பிரசாரத்துக்காக ஒதுக்கப்பட்ட இடம் சரியான தேர்வு இல்லை. இதனை காவல்துறை அவரிடம் அறிவுறுத்தி இருக்க வேண்டும்.
பெரிய வாகனமாக இருந்தபோதிலும் குறுகிய பாதையில் குவிந்திருந்த மக்கள் இடையே நகர்ந்து சென்று கொடுக்கப்பட்ட இடத்தில் தான் நீங்கள் பேச வேண்டும் என்று காவல்துறை சொல்லி வற்புறுத்தி உள்ளே அனுப்பி இருக்கிறார்கள்.
சம்பவம் நடந்த உடனே விஜய்யை காவல்துறையினரே உடனடியாக வெளியேறுங்கள் என்று கூறினார்களா? அல்லது அவரே வெளியேறினாரா என்பது போன்ற விவரங்களும் இந்த விஷயத்தில் வெளிவர வேண்டும்.
இது பற்றி வெளிப்படையாக விசாரணை நடத்த வேண்டும். கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் வீட்டிலேயே முடங்கி கிடக்காமல் வெளியே வரவேண்டும். சம்பவம் நடந்து 7 நாட்கள் ஆகியும் இன்னும் அவர் வெளியில் வராமல் இருப்பது அரசியல் தலைவருக்கு நல்லது அல்ல.
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி கொடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் அவர் அரசியலுக்கு வந்து உள்ளார். எனவே அவரை முடித்து கட்டிவிட வேண்டும் என்கிற எண்ணத்தில் செயல்படுவது சரியல்ல. இவ்வாறு அவர் கூறினார்.






