என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பாராளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து எழுப்புவோம் - கனிமொழி எம்.பி.
- 100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதி வரவில்லை.
- பல மாநிலங்களில் BLO-க்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தி.மு.க. மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
நாளை மறுநாள் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் மத்திய அரசை வலியுறுத்தி 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தி.மு.க. எம்.பி.க்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பிரச்சனைகள், குறிப்பாக SIR பிரச்சனையை எழுப்ப வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் 100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதி வரவில்லை. கல்விக்காக SSA வழியாக வரவேண்டிய அந்த நிதியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்க இருக்கிறோம்.
நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை அதிகரிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள். அதற்காக ஒரு குழு வந்து ஆய்வு செய்துவிட்டு சென்றார்கள். ஆனால் எந்த பதிலும் இல்லை. சமீபத்தில் நடந்த நிலைக்குழு கூட்டத்திலும் நான் வலியுறுத்தி இருக்கிறேன். அந்த பிரச்சனையையும் பாராளுமன்றத்தில் எழுப்புவோம்.
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தையும் மத்திய அரசு நிராகரித்துள்ளது. அதையும் எழுப்ப இருக்கிறோம்.
தமிழ்நாட்டிற்கு முக்கியமாக இருக்கக்கூடிய, நாட்டிற்கு முக்கியமாக இருக்கக்கூடிய பல பிரச்சனைகள் குறித்து பாராளுமன்றத்தில் எழுப்ப வேண்டும் என்று முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.
SIR என்பது அடித்தட்டு மக்கள், BLO-க்கள் மீது அக்கறையின்றி, மனிதாபிமானமே இல்லாமல் நடத்தக்கூடிய ஒரு திட்டமாக உள்ளது.
பல மாநிலங்களில் BLO-க்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.
தமிழ்நாட்டிற்கு மிக குறுகிய அவகாசத்தில் நிறைவேற்றப்பட வேண்டும், முடிக்கப்பட வேண்டும் என்று அழுத்தம் தரப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் ஒரு போராட்டமாகத்தான் இந்த பணிகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இந்த சூழ்நிலையில் மழைக்காலம் என்பதை கூட கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் எல்லா அதிகாரிகளும் மழையில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு அங்கு செய்ய வேண்டிய பணிகளை விட்டுவிட்டு இங்கு SIR பணியில் கவனம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்கள்.
மக்களை பற்றி அக்கறையே இல்லாமல் இந்த நேரத்தில் குறுகிய காலத்தில் போதிய அவகாசம் தராமல் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
இவ்வாறு அவர் கூறினார்.






