என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ராணுவ வீரர்களை மதிக்கிறேன் - சர்ச்சை பேச்சுக்கு செல்லூர் ராஜு விளக்கம்
- ராணுவ வீரர்கள் என்ன எல்லையில போய் சண்டையா போட்டாங்க? என செல்லூர் ராஜு சர்ச்சை பேச்சு
- போருக்கு தேவையான தொழில்நுட்பங்களையும், கருவிகளையும் வாங்கிக் கொடுத்தது மத்திய அரசுதான்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.
இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக நேற்று அறிவித்தது. நாளை சண்டை நிறுத்தம் தொடர்பாக இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.
இதனிடையே இந்திய ராணுவத்திற்கு மரியாதையை செலுத்தும் விதமாக சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
இந்நிலையில், பிரதமர் மோடிக்குதான் திமுகவினர் நன்றி கூற வேண்டும், இந்திய ராணுவத்திற்கு அல்ல என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "ராணுவ வீரர்கள் என்ன எல்லையில போய் சண்டையா போட்டாங்க? போருக்கு தேவையான தொழில்நுட்பங்களையும், கருவிகளையும் வாங்கிக் கொடுத்தது மத்திய அரசுதான். பாதுகாப்புத்துறை அமைச்சர் , உள்துறை அமைச்சர் ஆகியோர் கேட்ட ஆயுதங்களை பிரதமர் மோடி வாங்கிக் கொடுத்தார். எனவே திமுகவினர் பிரதமர் மோடியைதான் பாராட்ட வேண்டும். இவர்களின் நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்" செல்லூர் ராஜு தெரிவித்தார்.
ராணுவ வீரர்கள் எல்லையில போய் சண்டை போட்டார்களா? என்று செல்லூர் ராஜு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ராணுவ வீரர்கள் தொடர்பாக சர்ச்சையாக பேசியது தொடர்பாக செல்லூர் ராஜு விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "செய்தியாளர்கள் சந்திப்பில் இரவு பகல் பார்க்காமல் நாட்டுக்காக பாடுபடும் நம்ம இராணுவ வீரர்களை மதிக்காமல் பேசியதாக வந்துள்ள செய்திகள் தவறு ,எங்க பொதுச் செயலாளர் அண்ணன் EPS பாராட்டியுள்ளார் , எங்க குடும்பமே முன்னால் இராணுவ வீரர்களை கொண்டது இன்று நேற்று நாளை எப்பொழுது மதிக்கிரேன் !!!" என்று பதிவிட்டுள்ளார்.






