என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு?
- பா.ஜ.க.வுடன் மீண்டும் கூட்டணி ஏற்பட்ட பிறகு எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியை சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
- தி.மு.க. மீதான மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் போட்டுள்ள வழக்குகளை வேகப்படுத்த எடப்பாடி பழனிசாமி கேட்டு கொள்வார் என்று கூறப்படுகிறது.
சென்னை:
பிரதமர் மோடி வருகிற 26 மற்றும் 27-ந் தேதி என 2 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். அவர் 26-ந்தேதி மாலத்தீவில் இருந்து புறப்பட்டு இரவு 7.50 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார். அங்கு அவர் விரிவாக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைக்கிறார்.
பின்னர் இரவு திருச்சி செல்கிறார். அங்கு இரவு தங்குகிறார். 27-ந்தேதி அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் நடக்கும் ஆடித் திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார். அந்த நிகழ்ச்சியை முடித்து விட்டு பகல் 2.25 மணிக்கு பிரதமர் மோடி திருச்சியில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதாவது அவர் திருச்சியில் 26-ந்தேதி இரவு அல்லது 27-ந்தேதி காலையில் பிரதமர் மோடியை சந்திப்பார் என்று கூறப்படுகிறது.
பா.ஜ.க.வுடன் மீண்டும் கூட்டணி ஏற்பட்ட பிறகு எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியை சந்திப்பது இதுவே முதல் முறையாகும். ஏனென்றால் கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க.வும் - பா.ஜ.க.வும் தனித்தனியாக தேர்தலை சந்தித்தன. தற்போது மீண்டும் இருகட்சிகளும் கூட்டணி அமைத்து இருக்கிறது. ஆனால் இந்த கூட்டணி பேச்சுவார்த்தை அனைத்தும் உள்துறை மந்திரி அமித்ஷா முன்னிலையில்தான் நடந்தது.
3-வது முறையாக மோடி பிரதமராக பொறுப்பேற்ற பின்பு எடப்பாடி பழனிசாமி அவரை சந்திக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பு நிகழ்ச்சிக்காக எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற தனது பிரசாரத்தை மாற்றி அமைத்து உள்ளார். அதாவது 26-ந்தேதி அவர் சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை ஆகிய சட்டசபை தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்வதாக இருந்தது. தற்போது அதனை 29-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக அ.தி.மு.க. தலைமைக்கழகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருக்கிறது. ஆனால் அதில் காரணங்கள் ஏதும் குறிப்பிடப்படவில்லை.
இருப்பினும் பிரதமர் மோடியை சந்திக்கத்தான் நிகழ்ச்சியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே அமித்ஷா, 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று, அதில் பா.ஜ.க. அங்கம் வகிக்கும் என்று கூறி வருகிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறார். இந்த கருத்து மோதல், 2 கட்சி தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியுடன் பேசுவார் என்று தெரிகிறது. அதேபோல தி.மு.க. மீதான மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் போட்டுள்ள வழக்குகளை வேகப்படுத்த எடப்பாடி பழனிசாமி கேட்டு கொள்வார் என்று கூறப்படுகிறது.






