என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஜனநாயகன் தணிக்கை விவகாரத்தில் பாஜகவை சாடும் காங்கிரஸ்: திமுகவின் ரியாக்ஷன் என்ன?
- இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை நடிகரும், தவெக தலைவருமான விஜய் வாய்திறக்கவில்லை.
- காங்கிரஸின் தேசியத்தலைவரும், மாநிலத்தலைவரும் என்ன சொல்கிறார்களோ அதைப்பற்றிதான் திமுக பேசவேண்டும்
விஜய்யின் ஜனநாயகன் பட தணிக்கை சான்றிதழ் விவகாரம், சினிமாவைத்தாண்டி அரசியலில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. அரசியல் உள்நோக்கத்திற்காகத்தான் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிக்கப்படுகிறது என பலதரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
பல நடிகர்களும் இதுதொடர்பாக தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை நடிகரும், தவெக தலைவருமான விஜய்யே வாய்திறக்கவில்லை. தமிழ்நாடு காங்கிரஸும் இந்த விவகாரத்தில் பாஜகவை குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் விஜய்க்கும் ஆதரவு தெரிவித்தற்கும், கூட்டணிக்கும் எந்த தொடர்பும் கிடையாது என திமுக செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர்,
"பாஜக, ஒன்றிய அரசுக்கு உட்பட்ட அனைத்து துறைகளிலும் தலையிட்டு, தங்களுடைய எதிரிகளை மடக்குவதற்கு, அவர்களை தன்வழிக்கு கொண்டுவருவதற்கு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது உலகறிந்த உண்மை.
பாஜக விஜய்யை தங்கள் பக்கம் இழுப்பதற்கு ஒரு நடவடிக்கையை மேற்கொள்கிறது. அதை தணிக்கைக்குழு மூலம் செய்கிறது. இதன் அடிப்படையில்தான் காங்கிரஸ் விஜய்க்கு ஆதரவாக பாஜகவை விமர்சிக்கிறது. இதற்கும், கூட்டணிக்கும் தொடர்பு கிடையாது. காங்கிரஸின் தேசியத்தலைவரும், மாநிலத்தலைவரும் என்ன சொல்கிறார்களோ அதைப்பற்றிதான் திமுக பேசவேண்டும்." என தெரிவித்துள்ளார்.






