என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    உங்கள் சகாவைப் பார்த்தாவது மனம் மாறுங்கள் முதல்வர் அவர்களே..!- நயினார் நாகேந்திரன்
    X

    உங்கள் சகாவைப் பார்த்தாவது மனம் மாறுங்கள் முதல்வர் அவர்களே..!- நயினார் நாகேந்திரன்

    • ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்களின் நலனைக் காக்க வேண்டாமா?
    • திமுக அரசிடம் தமிழக மக்களுக்கு உள்ள கடைசி எதிர்பார்ப்பு.

    பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    உங்கள் சகாவைப் பார்த்தாவது மனம் மாறுங்கள், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே!

    'பி.எம்., ஸ்ரீ' எனப்படும், பிரதமரின் முன்னேறும் இந்தியாவுக்கான பள்ளிகள் திட்டத்தில் இணைய கேரள அரசு முடிவு செய்துள்ள செய்தி தங்கள் காதுகளுக்கு எட்டியிருக்கும் என நம்புகிறேன்.

    இத்திட்டத்தில் இணைந்ததற்கான காரணமாகப் பொதுவெளியில் என்ன கூறினாலும், இதன் வாயிலாக ஸ்மார்ட் வகுப்புகள், டிஜிட்டல் நூலகம், டிஜிட்டல் ஆய்வகம், விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய மைதானம், இன்னோவேஷன் கவுன்சில் போன்ற வசதிகளுடன் கூடிய முன்மாதிரிப் பள்ளிகளாக அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும். இதனால், கேரளாவின் பல லட்சம் ஏழைப் பிள்ளைகள் இலவசமாகத் தரமான கல்வியைப் பெற முடியும் என்பது தங்களுக்கும் தெரியும்.

    தொட்டதற்கெல்லாம் அண்டை மாநிலங்களை உற்றுநோக்கும் நீங்கள், உங்கள் கம்யூனிஸ்ட் சகாவான பினராயி விஜயன்

    அவர்கள் ஆளும் கேரளாவைப் பார்த்து மனம் மாறினால் என்ன? "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" என்று ஆடம்பர விழாக்களை மட்டும் நடத்தினால் போதுமா? ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்களின் நலனைக் காக்க வேண்டாமா? அவர்களை முன்னேற்ற வேண்டாமா?

    ஆட்சி முடியும் தருவாயிலாவது, தமது அரசியல் காழ்ப்புணர்ச்சியைவிட்டு, தமிழக மாணவர்களின் நலன் காக்க முன்வர வேண்டும் என்பது தான் திமுக அரசிடம் தமிழக மக்களுக்கு உள்ள கடைசி எதிர்பார்ப்பு. அதையாவது நிறைவேற்றுங்கள் முதல்வரே!

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×