என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாட்டில் பா.ஜ.க.வால் ஒரு போதும் காலூன்ற முடியாது- அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா
- தமிழ்நாடு மக்கள் எந்தக் காலத்திலும் அதை விரும்பியதில்லை.
- பா.ஜ.க.வுடன் கூட்டணி என்பது தேர்தல் காலத்தில் செய்யப்படும் ஒரு தற்காலிக ஏற்பாடு தான்.
சென்னை:
பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணி உறுதியானது முதல் விமர்சனங்களும், சலசலப்பும் தொடர்ந்து கொண்டே உள்ளது. சில தினங்களுக்கு முன்பு நாளிதழுக்கு பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் அரசு அமைக்கும், அதில் பா.ஜ.க. கட்சியின் பங்கு இருக்கும் என்றார்.
மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, தேர்தலில் நாங்கள் அ.தி.மு.க தலைமையின் கீழ் போட்டியிடுகிறோம். முதலமைச்சர் அ.தி.மு.க.வில் இருந்து வருவார் என்று அமித் ஷா கூறியிருந்தார். இதனால் அ.தி.மு.க. -பா.ஜ.க. நிர்வாகிகள் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் பா.ஜ.க.வால் ஒரு போதும் காலூன்ற முடியாது. கூட்டணிக்கு தலைமை அ.தி.மு.க. தான், தலைவர் எடப்பாடி பழனிசாமி தான். இதை பா.ஜ.க. ஏற்கவில்லை என்றால், இரு கட்சிகளுக்கான ஒருங்கிணைப்பு சாத்தியமில்லை.
பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்ததால் சிறுபான்மையினரின் வாக்குகள் பெரும்பாலும் கிடையாது. கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழ்நாடு மக்கள் எந்தக் காலத்திலும் அதை விரும்பியதில்லை.
தேசிய ஜனநாயக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளர் குறித்த பா.ஜ.க.வின் திட்டம் ஒன்றும் பலிக்காது. எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் வேட்பாளர். பா.ஜ.க.வுடன் கூட்டணி என்பது தேர்தல் காலத்தில் செய்யப்படும் ஒரு தற்காலிக ஏற்பாடு தான் என்றார்.