என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பிரதமர் மோடி கூறியது முழுக்க முழுக்க உண்மை- அற்ப அரசியலை முதல்வர் நிறுத்திக்கொள்ள வேண்டும்: அண்ணாமலை
    X

    பிரதமர் மோடி கூறியது முழுக்க முழுக்க உண்மை- அற்ப அரசியலை முதல்வர் நிறுத்திக்கொள்ள வேண்டும்: அண்ணாமலை

    • திமுகவின் ஊழலும், போலி வேடமும் மக்கள் மத்தியில் அம்பலப்படும்போதெல்லாம், அதனை மடைமாற்ற, மக்கள் மத்தியில் பிரிவினையைத் தூண்டுவது திமுகவின் வழக்கம்.
    • தமிழக மக்களைக் குறிப்பிட்டதாக மடைமாற்ற முயற்சிப்பது, மு.க.ஸ்டாலின் வகிக்கும் முதலமைச்சர் பதவிக்கே அவமானம்.

    தமிழக பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவரும் தேசிய பொதுக்குழு உறுப்பினருமான அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    திமுகவின் ஊழலும், போலி வேடமும் மக்கள் மத்தியில் அம்பலப்படும்போதெல்லாம், அதனை மடைமாற்ற, மக்கள் மத்தியில் பிரிவினையைத் தூண்டுவது திமுகவின் வழக்கம். நகராட்சி நிர்வாகத் துறையில், ரூ.888 கோடி ஊழல் நடந்திருப்பது வெளியானவுடன், அதனை மறைக்கும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    உழைக்கும் பீகார் மக்களைத் திமுகவினர் துன்புறுத்துகின்றனர் என்று, பிரதமர் நரேந்திர மோடி கூறியது முழுக்க முழுக்க உண்மை. தமிழக அமைச்சர்கள் பொன்முடி, டி.ஆர்.பி. ராஜா, எம்.பி. தயாநிதி மாறன், ஆ.ராசா தொடங்கி, கடைக்கோடி திமுக நிர்வாகிகள் வரை, பீகார் மக்களை ஏளனமாகப் பேசியதும், அவர்கள் மீது தாக்குதலுக்குத் தூண்டுவதைப் போல பேசியதும், தமிழக மக்கள் அறிவார்கள்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இந்த காணொளியிலேயே, நமது பாரதப் பிரதமர், தமிழகத்தில், பீகார் மக்களை திமுகவினர் துன்புறுத்துகிறார்கள் என்று பேசியிருப்பது தான் இருக்கிறது.

    எப்படி, திமுகவினர் தமிழகத்தின் அவமானச் சின்னமாக இருக்கிறார்களோ, அதே போல, பிரதமர் அவர்கள் திமுகவினரைக் குறிப்பிட்டதை, தமிழக மக்களைக் குறிப்பிட்டதாக மடைமாற்ற முயற்சிப்பது, மு.க.ஸ்டாலின் வகிக்கும் முதலமைச்சர் பதவிக்கே அவமானம். தாத்தா காலத்தில் தொடங்கிய இந்த அற்ப அரசியலை, பேரன் காலத்திலும் தொடர்வதை, முதலமைச்சர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×