என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    திமுக-வை வீழ்த்தும் சக்தியுள்ள ஒரே கட்சி அதிமுக மட்டுமே: விஜய்க்கு இ.பி.எஸ். பதிலடி
    X

    திமுக-வை வீழ்த்தும் சக்தியுள்ள ஒரே கட்சி அதிமுக மட்டுமே: விஜய்க்கு இ.பி.எஸ். பதிலடி

    • இந்த நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஆனால் அவர்கள் சாதித்தது என்ன?
    • எடுத்தவுடன் எந்த இயக்கமும் ஆட்சிக்கு வந்ததாக சரித்திரம் கிடையாது.

    மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இன்று காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

    அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    மக்கள் செல்வாக்கு பெற்றதைப் போலவும், நாட்டுக்கு உழைத்தது போலவும், அவர்கள் வந்துதான் மக்களைக் காப்பாற்றப்போவது போலவும் சிலர் அடுக்குமொழியால் பேசிவருகிறார்கள். யாரென்று புரிந்துகொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

    நான் உங்கள் முன் பேசுகிறேன் என்றால் எனது அரசியல் வாழ்க்கை 51 ஆண்டு காலம். 1976-ல் கிளைக்கழகச் செயலாளராக பொறுப்பேற்றேன் அதிலிருந்து படிப்படியாக உயர்ந்து உங்கள் முன் நிற்கிறேன், இது உழைப்பால் நிற்கிறேன். சிலர் உழைப்பே கொடுக்காமல் பலனை எதிர்பார்க்கிறார்கள், அது நிலைக்காது. ஏனெனில், உழைப்புதான் நிரந்தரம்.

    திமுகவை வீழ்த்தும் சக்தியுள்ள ஒரே கட்சி அதிமுக மட்டுமே. தமிழகத்தில் அதிக உறுப்பினர் கொண்ட இயக்கம் அதிமுக. தமிழகத்தில் அதிக ஆண்டுகள் ஆட்சி செய்தது அதிமுக அரசு. பொன்விழா கண்ட கட்சி. ஆக அதிமுகவை எந்தக் கொம்பனாலும் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது.

    இந்த நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஆனால் அவர்கள் சாதித்தது என்ன? எடுத்தவுடன் எந்த இயக்கமும் ஆட்சிக்கு வந்ததாக சரித்திரம் கிடையாது. எம்ஜிஆர், அண்ணா, அம்மா எல்லோரும் எடுத்ததுமே முதல்வர் ஆகவில்லை. மக்கள் நன்மதிப்பைப் பெற்றபின்னர்தான் முதல்வராக வர முடிந்தது.

    அதிமுகவில் எங்களுக்கு அடையாளம் என்றால் உழைப்பு, சேவை, விஸ்வாசம். மற்றவர்களைப் போல திரைப்படங்களில் நடித்து அதன்மூலம் வருமானத்தைப் பெற்று, ஓய்வுபெறும் காலத்தில் அரசியல் கட்சி தொடங்கிய நிலை கிடையாது. இளமைப் பருவத்திலே எம்ஜிஆரால் ஈர்க்கப்பட்டு 51 ஆண்டுகாலம் அதிமுகவுக்காக பாடுபட்டு படிப்படியாக வந்து பொதுச்செயலாளராக ஆனேன். சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அடுத்து உங்களால் முதல்வர் ஆக்கப்பட்டேன். இதற்கு ஒரே அடையாளம் உழைப்பு, விஸ்வாசம், சேவை. இதற்குக் கிடைத்ததுதான் பொதுச்செயலாளர், முதல்வர் பதவி.

    ஒரு திரைப்படத்தில் நடித்தவுடனே ஹீரோ ஆகமுடியாது, பல படத்தில் நடித்த பிறகே ஸ்டார் ஆக முடியும். சினிமாவிலே அப்படி என்றால் அரசியலில் எப்படியிருக்கும் என்பதை சிந்திக்க வேண்டும். அதிமுகவில் நான் இருந்ததால்தான் சேவை செய்ய வாய்ப்புக் கிடைத்தது. இது சிலருக்குப் பொறுக்கவில்லை. எடுத்தவுடனே எல்லாம் கிடைக்க வேண்டும் என எண்ணுகிறார்கள். சேவை செய்தால்தான் நிரந்தரமாக இருக்கும், நிலைக்கும்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    Next Story
    ×