search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    2024-ல் ஆட்சி மாற்றம் ஏற்படும்: பா.ஜ.கவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்- திருமாவளவன்

    • தென்னிந்திய மாநிலங்களில் பா.ஜ.க. வினவருக்கு இறுக்கமான சூழல் நிலவுகிறது.
    • காங்கிரஸ் கட்சியா பாஜகவா என்றில்லாமல் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை அடிப்படையில் எதிர்க்கட்சியினர் ஒன்றிணைய வேண்டும்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விருதுகள் வழங்கும் விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமையில் நடந்தது. விழாவுக்கு பொதுச்செயலாளர்கள் சிந்தனை செல்வன், துரை ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகுத்தனர்.

    ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி வரும் தலைவர்களை ஊக்குவிக்கும் விதமாக சமூகநீதி, சமத்துவம், பன்மைத்துவம், மத சார்பின்மை போன்றவற்றிற்காக பாடுபடும் சான்றோரை கவுரவிக்கும் வகையில் அம்பேத்கர் சுடர் விருது சி.பி.எம்.எம்.எல். பொதுச்செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யாவுக்கும், பெரியார் ஒளி விருது, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் ராஜாவுக்கும், காமராஜர் கதிர் விருது தமிழக சபாநாயகர் அப்பாவுக்கும் திருமாவளவன் வழங்கி பாராட்டினார்.

    காயிதே மில்லத் பிறை விருது பெங்களூரு சட்ட பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் மோகன் கோபாலுக்கும், செம்மொழி ஞாயிறு விருது தமிழறிஞர் தாயம்மாள் அறவாணனுக்கும் திருமாவளவன் வழங்கி கவுரவித்தார். விருதுகளுடன் ஒவ்வொருவருக்கும் ரூ.50 ஆயிரம் பொற்கிழியும் அவர் வழங்கினார்.

    கூட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது:-புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் செங்கோலை வைப்பதற்கான தேவை என்ன இருக்கிறது? அந்த திறப்பு விழாவிற்கு தமிழ்நாட்டில் இருந்து ஆதீனங்களை வரவழைத்து தேவாரம் பாடலைப் பாட வைப்பதற்கான அவசியம் என்ன?

    தென்னிந்திய மாநிலங்களில் பா.ஜ.க. வினவருக்கு இறுக்கமான சூழல் நிலவுகிறது. கர்நாடகாவில் கூட மெல்ல மெல்ல முன்னேறி உள்ளனர், ஆனால் தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் ஒன்று, இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே அவர்கள் திக்கு முக்காடுகின்றனர். எனவே திட்டமிட்டு அவர்கள் தென்னிந்தியாவில் ஊடுருவ முயற்சிக்கிறார்கள்.பா.ஜ.க.வினர் தமிழ்நாட்டை குறிவைத்து விட்டனர்.

    இந்திய தேசத்தை காப்பாற்ற நாம் ஒன்றிணைய வேண்டும். காங்கிரஸ் கட்சியா பாஜகவா என்றில்லாமல் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை அடிப்படையில் எதிர்க்கட்சியினர் ஒன்றிணைய வேண்டும்.

    பா.ஜ.க. சங்பரிவார் அமைப்புகள் அமைக்க நினைப்பது இந்த கஷ்டம் என்னும் தேசியமே. இந்து ராஷ்ட்ரம் என்பது பிராமண தேசம் என்பது தான் உண்மையான பொருள். இந்த அடிப்படை புரியாமல் மோடியும் அண்ணாமலையும் பிராமணர்களுக்கு எடுபிடி வேலை செய்து வருகின்றனர். இப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடும் என்று அறிவித்திருக்கிறார்கள். மக்கள் தொகை அடிப் படையில் நாடாளுமன்ற உறுப்பினரின் எண்ணிக்கை கூடினால் அதனை வரவேற்கலாம்.

    ஆனால் பாஜகவினர் திட்டமிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை வட மாநிலங்களில் மட்டும் உயர்த்தி அதன்பின் தேர்தல் வந்தாலும் மத அரசியலைத் தூண்டி தனக்கென தனி மெஜாரிட்டியை பெற்று தொடர்ந்து ஆட்சியில் இருக்கலாம் என்ற தொலை நோக்கு பார்வையுடன் திட்டமிட்டு இந்த அறிவிப்பை செய்து இருக்கிறார்கள். பா.ஜ.க.வினரை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும், கட்சிகள் இணையாவிட்டாலும் மக்கள் விரட்டி அடிப்பார்கள். 2024-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் நிகழும். ஆட்சி மாற்றம் நிகழும் போது திரவுபதி முர்மு நிச்சயமாக மரியாதை செய்யப்படுவார்.

    தமிழ்நாட்டில் 2 எம்.பி.க்கள் 4 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட சின்ன கட்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்க லாம், ஆனால் இந்திய அளவில் சனாதனத்தை எதிர்க்கும் வலிமையான கட்சி விடுதலை சிறுத்தைகள்.

    பா.ஜ.க.வை வீழ்த்துவது ஒன்றுதான் நம் முன்னால் இருக்கின்ற ஒற்றை சவால் என்கின்ற அடிப்படையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

    இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

    விழாவில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பொதுசெயலாளர் டி.ராஜா பேசியதாவது:-

    தலைவர்களின் பெயர்களில் விருதுகள் வழங்குவது, இந்தியாவை இடது பக்கம் திருப்புவது காலத்தின் தேவையாக இருக்கிறது என்பதை இந்த விழா உணர்த்துகிறது.

    இந்திய நாடு எந்த காலத்திலும் ஒரு மதம் சார்ந்த நாடாக போய் விடக்கூடாது என்று அம்பேத்கர் பேசினார், ஆனால் இன்று மோடி ஆட்சி காலத்தில் நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது?

    மோடி அரசு கார்ப்பரேட் முதலாளிகளுக்கான அரசு, ஏழைகளுக்கான அரசு அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்க வேண்டும். மைய அரசு அதிகாரங்களை குவித்துக் கொள்ளக் கூடாது. இந்திய பொருளாதாரம் சிக்கலில் உள்ளது.

    ஜனநாயகத்தின் தாய் வீடாக இந்தியா திகழ்ந்து வருகிறது. நாட்டின் முதல் குடிமகள் திரௌபதி முர்மு எங்கே? இந்த நாடு மாற்றத்தை எதிர்நோக்கி இருக்கிறது மாற்றத்திற்கான போர் குரலை மக்கள் எழுப்ப தொடங்கிவிட்டனர்.

    நாடு பாதுகாக்கப்பட வேண்டுமானால் பாசிச பா.ஜ.க. அரசு தூக்கி எறியப்பட வேண்டும். பா.ஜ.க. அரசு ஜனநாயகத்தையே தவிர்த்து வருகிறது. இதனை முறியடித்து நாடு, அரசியல் சட்டம், ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டுமானால் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் எம்.எல்.ஏ.க் கள் எஸ்.எஸ்.பாலாஜி, வூளூர் ஷாநவாஸ், பனையூர் பாபு, மாநில் நிர்வாகிகள் வன்னி அரசு, உஞ்சை அரசன், பாவரசு, பால சிங்கம், தயாளன், தகடூர் தமிழ் செல்வன், பாவலன், வீர ராஜேந்திரன், வக்கீல் பார்வேந்தன், பள்ளிக் கரணை ஆர்.பன்னீர்தாஸ், மாவட்ட செயலாளர்கள் வி.கோ.ஆதவன், இரா. செல்வம், செல்லத்துரை, அம்பேத்வளவன், ரவி சங்கர் மற்றும் நீல சந்திர குமார், முருகையன், சிறுத்தை வீ.கிட்டு, செம்பை வீரமுத்து, கே.சந்திரன், ஸ்டீபன், எழிலரசு, மயிலை குமரப்பா, ஆ.வேலாயுதம், ஜெயபாபு சோழன், கடலூர் துணை மேயர் தாமரை செல்வன், பாவேந்தன், நந்தன், ஆதிமொழி, சேலம் காயத்ரி, அருண்பிரேம், லைவ் கார்த்திக், பரம செல்வம், விடுதலை, தாமரை உள்ளிட்ட ஆயிரக்கணக் கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×