search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவில் விழாவில் தி.மு.க.-அ.தி.மு.க. மோதல்: முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 6 பேர் கைது
    X

    அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்பலம்.

    கோவில் விழாவில் தி.மு.க.-அ.தி.மு.க. மோதல்: முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 6 பேர் கைது

    • முன்விரோதம் காரணமாக நேற்று முன்தினம் இரவு இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
    • கருவனூர் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் எம்.சத்திரப்பட்டி அருகே உள்ளது கருவனூர் கிராமம். இங்குள்ள பத்திரகாளி அம்மன், பாரைகருப்பு அய்யனார் கோவிலில் கடந்த வாரம் திருவிழா நடந்தது. இந்த திருவிழாவில் ஊர் முக்கியஸ்தர்களுக்கு முதல் மரியாதை அளிக்கப்படுவது வழக்கம்.

    இந்த முதல் மரியாதையை பெறுவது தொடர்பாக முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பொன்னம்பலத்தின் மருமகன் பழனிக்குமாருக்கும், தி.மு.க.வை சேர்ந்த வேல்முருகன் தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இவர்களை ஊர் பொதுமக்கள் தடுத்து சமரசம் செய்து வைத்தனர்.

    இந்த முன்விரோதம் காரணமாக நேற்று முன்தினம் இரவு இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் தி.மு.க., அ.தி.மு.க.வினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் ஒரு கும்பல் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பொன்னம்பலத்தின் வீட்டு மீது சரமாரியாக கற்களை வீசி தாக்கியது. இதில் வீட்டின் ஜன்னல் கதவுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடிகள் உடைந்து சிதறின.

    வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காருக்கும் அந்த கும்பல் தீ வைத்தது. இதில் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இருசக்கர வாகனங்களையும் சேதப்படுத்தினர். அப்போது வேல்முருகன் தரப்புக்கும், பொன்னம்பலம் தரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் பொன்னம்பலத்தின் மருமகன் பழனிக்குமார் (40) மற்றும் சுப்பையா (68), சூர்யா (23), விஜய் (27), வேல்விழி (35) ஆகிய 5 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    இந்த தாக்குதலில் வேல்முருகன் தரப்பை சேர்ந்த சிலருக்கும் காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக இருதரப்பிலும் எம்.சத்திரப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து பழனிக்குமார் கொடுத்த புகாரின்பேரில் தி.மு.க.வை சேர்ந்த கிளை செயலாளர் வேல்முருகன், செந்தமிழன், ராஜ்மோகன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 18 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    திருப்பதி கொடுத்த புகாரின்பேரில் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பொன்னம்பலம், அவரது மகன்கள் திருச்சிற்றம்பலம், தில்லையம்பலம் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 20 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள். இருதரப்பையும் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அந்த பகுதியில் நிலவிவரும் பதட்டத்தை தணிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    கருவனூர் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கோவில் விழாவில் முதல் மரியாதை அளிப்பது தொடர்பான விவகாரத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தரப்பினரிடையே ஏற்பட்ட இந்த மோதல் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×