search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க. மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்க சோனியா-பிரியங்கா இன்று இரவு சென்னை வருகை
    X

    தி.மு.க. மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்க சோனியா-பிரியங்கா இன்று இரவு சென்னை வருகை

    • மாநாட்டுக்கு தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றுகிறார்.
    • மாநாட்டு ஏற்பாடுகள் உள்ளிட்டவைகளை அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் முன்னின்று கவனித்து வருகின்றனர்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் அவர் பிறந்த தினமான ஜூன் 3-ந்தேதி முதல் இந்த ஆண்டு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதையொட்டி தி.மு.க. சார்பிலும், அரசு சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில் தி.மு.க.வின் ஒவ்வொரு அணிகளின் சார்பிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட நிலையில் இப்போது தி.மு.க. மகளிரணி சார்பில் மகளிர் உரிமை மாநாடு சென்னையில் நாளை நடத்தப்படுகிறது.

    தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. முன்னின்று நடத்தும் இந்த 'மகளிர் உரிமை மாநாடு' நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நாளை மாலை 4.30 மணிக்கு பிரமாண்டமாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த மாநாட்டில் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய மகளிர் தலைவர்களை பங்கேற்க செய்ய கனிமொழி எம்.பி. அழைப்பு அனுப்பி இருந்தார்.

    அந்த அழைப்பை ஏற்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான அவரது மகள் பிரியங்கா காந்தி, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் சுப்ரியா சுலே, பீகார் மாநில உணவுத்துறை அமைச்சர் ஐக்கிய ஜனதாதள தேசிய நிர்வாக குழு உறுப்பினர் லெஷி சிங், மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சுபாஷினி அலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் ஆனிராஜா, திரிணாமுல் காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் சுஷ்மிதா தேவ், ஆம் ஆத்மி கட்சி தேசிய செயல் உறுப்பினரான டெல்லி சட்டசபை துணை சபாநாயகர் ராக்கி பிட்லன் உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் பெண் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.

    இந்த மாநாட்டுக்கு தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றுகிறார். துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. முன்னிலை வகிக்கிறார்.

    மாநாட்டு தொடக்கத்தில் மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் வரவேற்று பேசுகிறார். மகளிர் தொண்டரணி செயலாளர் நாமக்கல் ராணி நன்றி கூறுகிறார்.

    இந்த மாநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெண்கள் முன்னேற்றத்துக்கு அயராது பாடுபட்டது குறித்தும் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியது, அரசு வேலைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு உள்ளிட்ட பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான பல சட்டங்களை கொண்டு வந்தது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் குறித்து மாநாட்டில் விளக்கி பேச உள்ளனர்.

    இது தவிர இன்றைய அரசியலில் பெண்களின் நிலைப்பாடு அவர்களது வளர்ச்சி மற்றும் பாராளுமன்ற தேர்தல் வியூகம் குறித்தும் இந்த மாநாட்டில் தலைவர்கள் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அவரது மகள் பிரியங்கா காந்தி இருவரும் இன்றிரவு 10.40 மணிக்கு விமானம் மூலம் சென்னை வருகிறார்கள்.

    அவர்கள் இருவரும் கிண்டி ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்கள். இதேபோல் மாநாட்டுக்கு வருகை தரும் மற்ற பெண் தலைவர்கள் அனைவருக்கும் அதே ஓட்டலில் அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

    அனைத்து வி.ஐ.பி.க்களும் கிராண்ட் சோழா ஓட்டலில் தங்குவதால் ஓட்டலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தி.மு.க. மகளிரணி நிர்வாகிகள், பெண் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பெண் தலைவர்கள் கவுன்சிலர்கள் என அனைத்து தரப்பு மகளிர் அணியினரும் கலந்து கொள்ள உள்ளனர்.

    இந்த மாநாட்டு ஏற்பாடுகள் உள்ளிட்டவைகளை அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் முன்னின்று கவனித்து வருகின்றனர்.

    Next Story
    ×