search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இருள் விலக்கி துன்பங்களை நீக்கும் தீப ஒளி: தலைவர்கள் வாழ்த்து
    X

    இருள் விலக்கி துன்பங்களை நீக்கும் தீப ஒளி: தலைவர்கள் வாழ்த்து

    • மக்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகிட இறைவனின் அருள் கிடைக்கட்டும்.
    • மக்களுக்கு மகிழ்ச்சி மீண்டும் கிடைக்க வேண்டும் என்றால், சமூகத் தீமைகள் அனைத்தும் விலக வேண்டும்; நன்மை ஒளி மாநிலம் முழுவதும் பரவ வேண்டும்.

    சென்னை:

    நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்:-

    தீபாவளி திருநாள் நாட்டு மக்களிடையே ஒற்றுமை உணர்வையும் சகோதரத்துவத்தையும் பலப்படுத்துகிறது. சாதி மத பேதங்களைக் கடந்து கொண்டாடப்படும் இந்த தீபாவளித் திருநாள் அனைவரது வாழ்விலும் ஒளிமயமான எதிர்காலத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டுவர வாழ்த்துகிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் 'சுய சார்பு இந்தியா' கொள்கையை பின்பற்றி தீபாவளியைக் கொண்டாடுவோம். இந்திய கலைஞர்கள் உற்பத்தி செய்த பரிசு பொருட்களை வாங்கி பிறருக்கு கொடுத்து, நம் நாட்டு நெசவாளர்கள் தயாரித்த உடைகளை உடுத்தி தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடுவோம். இந்த தீபாவளி கொண்டாட்டம் பாரத தேசத்தை பொருளாதார ரீதியில் உயர்த்துவதாக இருக்கட்டும்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:-

    மக்களை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கிய நரகாசுரன் எனும் அரக்கனை திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள், இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் சுடர் விட்டு பிரகாசிக்கும் தினமாகவும் மக்களால் கருதப்படுகிறது.

    தீபாவளித் திருநாளில் மக்கள் அதிகாலை எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, தங்கள் இல்லங்களில் தீபங்களை ஏற்றி, வளமான வாழ்விற்கு இறைவனை வழிபட்டு, உற்றார் உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி, விருந்துண்டு, பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள்.

    தித்திக்கும் இந்த தீபாவளித் திருநாளில், துன்பங்கள் நீங்கி என்றும் இன்பங்கள் மலரும் தீப ஒளியாக இந்த தீபாவளி அமையட்டும்; மக்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகிட இறைவனின் அருள் கிடைக்கட்டும்; இன்று பெருகும் இன்பம் அனைவரிடமும் என்றும் நிலைக்கட்டும். மக்கள் அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்று இன்புற்று வாழ்ந்திட வேண்டும் என்று மனதார வாழ்த்தி, அனைவருக்கும் எம்.ஜி.ஆர். , அம்மா ஆகியோரது நல்வழியில், இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு உரித்தாக்கிக்கொள்கிறேன்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:-

    பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடுங்கள். வழக்கம்போல் மற்ற மதத்தவரோடு வாழ்த்துகளையும் இனிப்புகளையும் பகிர்ந்து கொள்வோம். வெறுப்புணர்வு வளர்த்தெடுக்கப்பட்டுள்ள சூழலில் இந்த தீபாவளி பண்டிகையை மத நல்லிணக்கத்தின் அடையாளமாகக் கொள்வோம். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:-

    தீபாவளி பண்டிகை நாளில் அனைவரும் நல்ல உடல் நலத்தோடு வாழவும், வாழ்வில் துன்பம் விலகி, இன்பம் பெருகவும், செல்வம் செழித்து எல்லோரது இல்லத்திலும், உள்ளத்திலும் மகிழ்ச்சி பெருகவும், அனைவருக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    மக்களுக்கு மகிழ்ச்சி மீண்டும் கிடைக்க வேண்டும் என்றால், சமூகத் தீமைகள் அனைத்தும் விலக வேண்டும்; நன்மை ஒளி மாநிலம் முழுவதும் பரவ வேண்டும். அதற்கு கல்வியும், வேலைவாய்ப்பும் கட்டாயமாகும். கல்வி, வேலைவாய்ப்பு மட்டுமின்றி, சமூக நீதி, அமைதி, வளம், வளர்ச்சி, ஒற்றுமை, நல்லிணக்கம், சகோதரத்துவம், பன்முகத்தன்மை உள்ளிட்டவை பெருகவும், மக்களின் வாழ்வில் இல்லாமை இருள் விலகி இன்ப ஒளி நிறையவும் தீப ஒளி வகை செய்யட்டும் என்று வாழ்த்துகிறேன்.

    பா.ம.க. தலைவர் டாகடர் அன்புமணி ராமதாஸ்:-

    நாட்டிலும், வீட்டிலும் இருளை நீக்கி, ஒளியை நிறைக்கும் தீபஒளித் திருநாள் இனிவரும் ஆண்டுகள் அனைத்தும் மகிழ்ச்சியையும், வளர்ச்சியையும் மட்டுமே வழங்க வேண்டும். அதற்கு தமிழகத்தில் உழவும், தொழிலும் சிறக்க வேண்டும். தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் முன்னேற வேண்டும். மக்களிடையே அன்பு, நட்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவை மலர வேண்டும்; போட்டி, பொறாமை, பகைமை, வெறுப்பு போன்றவை விலக வேண்டும் என்று கூறி தீப ஒளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்:-

    நாட்டு மக்களை பெருந்துன்பத்திற்குள்ளாக்கிய நரகாசூரன் எனும் அரக்கனை திருமால் அழித்த இந்த தினமே தீபாவளிப் பண்டிகையாக அனைவராலும் கொண்டாடப்படுகிறது. அதர்மம் என்றைக்கும் நிலைத்ததில்லை என்பதை உணர்த்தி, தீமைகள் எனும் இருளை விலக்கி, நன்மை எனும் வெளிச்சத்தை பரப்பும் இத்திருநாளில் அனைவரிடத்திலும் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் நிறைந்து அன்பு தழைக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

    புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்:-

    நம்நாடு இன்றைக்கு உலகின் வல்லரசு நாடுகளுக்கு இணையாக வல்லரசு நாடாக வளர்ந்து வருகிறது. விஞ்ஞானம், மருத்துவம், வேளாண்மை, அறிவியல் தொழில்நுட்பம், கணினி தொழில்நுட்பம் என்று அனைத்து துறைகளிலும் நம்நாடு அபரிமிதமான வளர்ச்சி அடைந்து உள்ளது. நாட்டினை சூழ்ந்துள்ள தீமைகளை நாம் அனைவரும் ஒன்றுபட்டு வெல்வோம் என்று சபதம் ஏற்போம். நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்:-

    தீபாவளி திருநாளில் அனைவரும் அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து தீபாவளி திருநாளை கொண்டாடி மகிழ்வார்கள். தீபஒளி ஏற்றி இஷ்ட தெய்வங்களை வணங்கி அனைவரும் புத்தாடைகள் அணிந்து புதுப்பொலிவுடன் தீபாவளி திருநாளை கொண்டாடி மகிழ வாழ்த்துகிறேன்.

    தொழில் அதிபர் டாக்டர் வி.ஜி.சந்தோசம்:-

    தீபாவளி நன்நாளில் பரஸ்பர நல்லுறவுடன் ஏழை, எளியோர்க்கு உதவிகள் செய்து, நண்பர்கள் உறவினர்கள் இடையே இனிப்புகள், பரிசுகள் வழங்கி நம் இதய அன்பைப் பகிர்ந்து கொள்வோம். இந்த இன்பத் திருநாளில் நாம் எல்லோரும் ஒற்றுமையுடன் நல்லுறவுடன் ஒருமைப்பாட்டைக் காத்து வாழவேண்டும் என்று வாழ்த்தி மகிழ்கின்றேன். அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்.

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்:-

    அனைவரின் வாழ்க்கையிலும் இருளும், துன்பமும் நீங்கி மத்தாப்பு போல வெளிச்சமும், மகிழ்ச்சியும் கிடைத்திட தீபாவளி திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-

    சாதி, மத, இன, மொழி, பேதங்கள் கடந்து, இந்திய மக்கள் மனதில் சமத்துவம் என்னும் புனித எண்ணம் தழைத்தோங்கட்டும். எளியவர்க்கான தேவையும், உழைப்புக்கேற்ற ஊதியமும், உரிமையும் கிடைக்கப்பெற்று, எல்லாரும் எல்லாமும் பெறும் நிலைக்கு உயர உறுதியுடன் ஒன்றிணைந்து செயலாற்றுவோம். உலகெங்கும் வாழும் இந்திய மக்களுக்கு இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சமத்துவ மக்கள் கழகம் தலைவர் எர்ணாவூர் நாராயணன்:-

    ஏழை, எளியவர்கள், தொழிலாளர்கள் பிற்படுத்தப்பட்டவர்களை சூழ்ந்திருக்கும் கொடிய துன்பங்கள், வறுமைகள் என்கிற நரகாசுரனை வீழ்த்தி அனைவரது வாழ்விலும் தீபாவளி திருநாளில் தீபமாக ஒளி ஏற்றுவோம்.

    சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் விதமாகவும் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை வாங்கி, அரசு அறிவுறுத்தல் படி விபத்தில்லா தீபாவளியாக கொண்டாடுவோம். தீபாவளி திருநாள் காணும் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்.

    தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் நாசே ராமச்சந்திரன்:-

    உங்கள் வாழ்க்கையில் துன்பங்கள் கரைந்து இன்பங்கள் மலர்ந்து ஒளிமயமான எதிர்காலம் அமைந்து உங்கள் இல்லங்களிலும், உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்க.... அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் சங்க அகில இந்திய தலைவர் வி.என்.கண்ணன்:-

    தீப ஒளியினை போல் தமிழக மக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலாளர்கள் கட்டுமான தொழிலாளர்கள் வாழ்க்கை பிரகாசமாக மேம்பட எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

    மேலும் காங்கிரஸ் எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், விஜயகுமார் என்ற விஜய் வசந்த், திரிணாமுல் காங்கிரஸ் தமிழக பொருளாளர் மு.மாரியப்பன், இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடென்ட் அபு பக்கர், தமிழக சமாஜ்வாதி கட்சி தலைவர் லோகநாதன் யாதவ், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் மாநில தலைவர் டாக்டர் மணி அரசன், தேசிய தலைவர் பா.இசக்கிமுத்து, ஆகியோர் தீபாவளி வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×