search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பிரதமர் மோடி எதிர்ப்பு பிரசாரத்தை கமல்ஹாசன் கையில் எடுக்கிறார்
    X

    பிரதமர் மோடி எதிர்ப்பு பிரசாரத்தை கமல்ஹாசன் கையில் எடுக்கிறார்

    • அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கமல்ஹாசனை நேரில் சந்தித்து பேசி உள்ளார்.
    • தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் உடன் ஒருங்கிணைந்து செயல்பட தி.மு.க. முடிவு செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாக களம் இறங்கியுள்ளன.

    இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு இடம் ஒதுக்கப்படாத நிலையில் மேல்-சபை எம்.பி. பதவி ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

    கோவை பாராளுமன்ற தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மேல்-சபை எம்.பி. பதவி மட்டுமே மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வழங்கப்பட்டிருப்பது அந்த கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


    இருப்பினும் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய ஆயத்தமாகி வருகிறார்கள். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தேர்தலில் போட்டியிடாத நிலையில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியிலும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

    கமல்ஹாசனை பொறுத்தவரையில் கட்சி தொடங்கிய நாளில் இருந்தே பாரதிய ஜனதா கட்சி மற்றும் பிரதமர் மோடி எதிர்ப்பை கடுமையாக காட்டி வருகிறார் பாரதிய ஜனதா ஆட்சியில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் இதற்கு முன்பு பல்வேறு அறிக்கைகளில் அவர் குற்றம் சாட்டி இருக்கிறார்.

    தேர்தல் நேரங்களில் இது தொடர்பாக வீடியோக்களையும் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியினரால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் பிரசாரம் செய்யும் போது மத்திய அரசை கண்டித்தும் பிரதமர் மோடியை அதிக அளவில் விமர்சித்தும் பேச உள்ளார். மோடி எதிர்ப்பை முழுமையாக கையில் எடுக்க அவர் முடிவு செய்து இருக்கிறார். தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் 40 வேட்பாளர்களையும் ஆதரித்து அவர் தேர்தல் பிரசார களத்தில் பேச இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.


    இந்திய குடியுரிமைச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சமீபத்திய பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி கமல்ஹாசன் தனது தேர்தல் பிரசாரத்தின் போது கடுமையாக விமர்சிக்க உள்ளார்.

    இது பற்றி மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறும் போது, "எங்கள் தலைவர் கமல்ஹாசனின் பிரசாரம் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு நிச்சயம் வலு சேர்க்கும் வகையில் அமையும். அதே நேரத்தில் அவரது பிரசாரம் மக்கள் மத்தியில் பேசப்படும் வகையிலும் மாறி இருக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    இதற்கிடையே அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கமல்ஹாசனை நேரில் சந்தித்து பேசி உள்ளார். அப்போது தேர்தல் பிரசாரத்தில் மேற்கொள்ள வேண்டிய வியூகங்கள் பற்றி இருவரும் பேசி இருக்கிறார்கள்.

    இந்த சந்திப்பு தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் பதிவையும் வெளியிட்டு உள்ளார். அதில் நாடு காக்கும் ஒற்றை நோக்கம். அதற்கான செயல்பாடுகளின் திட்டம் பற்றி ஆலோசிக்க தமிழ்நாடு அமைச்சர் அன்பு இளவல் டி.ஆர்.பி.ராஜாவை சந்திப்பு. நிறைவான உரையாடல் என்று குறிப்பிட்டுள்ளார்.

    அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவும் தனது எக்ஸ் தள பக்கத்தில் கமல்ஹாசன் சந்திப்பு பற்றி குறிப்பிட்டுள்ளார். முத்தமிழறிஞர் கலைஞரின் தமிழை நேசித்து அவரிடமே கலைஞானி என்று பட்டம் பெற்றவர், சமத்துவமும் பகுத்தறிவும் அரசியல் பார்வையாகக் கொண்டிருப்பவர், மதவெறி-மக்கள் விரோத பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்திட இந்தியா கூட்டணியில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலினுடன் இணைந்து களமாடும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து பாராளுமன்றத் தேர்தல் களத்திலும்-தளத்திலுமான ஒருங்கிணைப்புப் பணிகள் குறித்து ஆலோசித்தோம்.

    மகத்தான வெற்றிப் பயணத்தின் தொடக்கம் என்று அதில் கூறி இருக்கிறார். இதன் மூலம் தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் உடன் ஒருங்கிணைந்து செயல்பட தி.மு.க. முடிவு செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

    Next Story
    ×