search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாநில மக்களின் உணர்வுகளை மதிக்கும் அரசு மத்தியில் அமைய வேண்டும்- கனிமொழி
    X

    மாநில மக்களின் உணர்வுகளை மதிக்கும் அரசு மத்தியில் அமைய வேண்டும்- கனிமொழி

    • தொழில் அதிபர்கள், வியாபாரிகள், விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்து வருகிறது.
    • மத்திய அரசின் ஜி.எஸ்.டி.யால் தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    சேலம்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வியாபாரிகள், தொழில் முனைவோர், நிறுவனங்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் உட்பட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கருத்து கேட்டு வருகிறார்கள். கோவையில் நேற்று கருத்து கேட்பு நிகழ்ச்சி நடந்த நிலையில் இன்று சேலம் 5 ரோடு ஜென்னிஸ் கேட்வே ஓட்டலில் சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

    இதில் தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் தி.மு.க. விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், வர்த்தகர் அணி துணை தலைவர் கோவி.செழியன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., அயலக அணி செயலாளர் எம்.எம்.அப்துல்லா எம்.பி., மருத்துவ அணி செயலாளர் டாக்டர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., சென்னை மாநகர மேயர் பிரியா உள்ளிட்ட அறிக்கை தயாரிக்கும் குழுவினர் பங்கேற்றனர்.


    கருத்து கேட்பு கூட்டத்தில் நாமக்கல் முட்டை கோழி பண்ணையாளர்கள், லாரி உரிமையாளர்கள், பஸ் உரிமையாளர்கள் சங்கம் , துணி ஏற்றுமதியாளர்கள், பட்டு உற்பத்தியாளர்கள், கைத்தறி உற்பத்தியாளர்கள், தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் உரிமையாளர்கள், ட்ரெய்லர் உரிமையாளர்கள், மோட்டார் மெக்கானிக் சங்கம், பழங்குடியினர் மக்கள் சங்கம், பால் உற்பத்தியாளர் சங்கம், அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம், வியாபாரிகள் சங்கம், நெசவாளர் சங்கம், நூல் உற்பத்தியாளர் சங்கம், மரவள்ளி கிழங்கு விவசாயிகள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்களை சார்ந்தவர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தங்களது கருத்துக்களை மனுவாக வழங்கினர். அப்போது முக்கிய கருத்துக்களை அவர்கள் நேரடியாக நிர்வாகிகளிடம் தெரிவித்தனர்.

    அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலித்து தேர்தல் அறிக்கையில் சேர்க்க நடவடிக்கை எடுப்பதாக குழுவினர் உறுதி அளித்தனர்.

    தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்து அவர்களது கருத்துக்களை கேட்டு அறிந்து நேரடியாக பெற்று தேர்தல் அறிக்கை தயாரிக்க வேண்டும் என்று எங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் அனைத்து தரப்பினர் கலந்துகொண்டு கருத்துக்களை பகிர்வதுடன் சில முக்கியமானவற்றை நேரடியாக எங்களிடம் தெரிவிக்கலாம்.


    தொழில் அதிபர்கள், வியாபாரிகள், விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்து வருகிறது. வெள்ள நிவாரணம் கொடுக்க மறுத்து வருகிறது. மத்திய அரசின் ஜி.எஸ்.டி.யால் தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பல குழப்பங்கள் அதில் இருக்கிறது. ஆனால் மத்திய அரசு இதை கண்டு கொள்ளவில்லை. கோரிக்கையை காது கொடுத்து கேட்கவும் தயாராக இல்லை.

    மத்திய அரசு நாம் சொல்வதை கேட்கும் அரசாக அமைய வேண்டும். மக்களை ஒருங்கிணைத்து அழைத்து செல்லும் அரசாக அது இருக்க வேண்டும். ஒற்றுமையான மத்திய அரசாக , வேலைவாய்ப்பு உருவாக்கும் அரசாங்கமாக உரிமைகளை மதிக்கும் அரசாக இருக்க வேண்டும். மக்களையும், மொழி உணர்வையும் மதிக்கும் அரசாக உருவாக்க வேண்டும். அதன் அடிப்படையில் இந்த பாராளுமன்ற தேர்தலை அனைவரும் இணைந்து எதிர் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×