search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க.-தே.மு.தி.க. கூட்டணி பேச்சுவார்த்தை தள்ளிப்போகிறது
    X

    அ.தி.மு.க.-தே.மு.தி.க. கூட்டணி பேச்சுவார்த்தை தள்ளிப்போகிறது

    • மேல்சபை எம்.பி.பதவி தொடர்பாக அ.தி.மு.க. தரப்பில் இருந்து இன்னும் சாதகமான பதில் ஏதும் வரவில்லை என்று தே.மு.தி.க. நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
    • அடுத்த வாரம் மீண்டும் சந்தித்து பேசிக் கொள்ளலாம் என்கிற மன நிலைக்கு சென்று உள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெறுவதை தே.மு.தி.க. உறுதி செய்துள்ளது.

    கடந்த 1-ந்தேதி அன்று விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டுக்கு சென்று அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினர் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதாவை சந்தித்து பேசினர். அப்போது கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இதை தொடர்ந்து கடந்த 6-ந்தேதி அன்று தே.மு.தி.க. குழுவினர் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு சென்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தினார்கள். இந்த சந்திப்புக்கு பின்னர் பேட்டி அளித்த தே.மு.தி.க. நிர்வாகிகள் வெற்றிக் கூட்டணியில் இடம் பெற்றுள்ளோம் என்று தெரிவித்தனர்.

    இதையடுத்து உடனடியாக 3-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் தே.மு.தி.க.வுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது தெரியவரும் என்றும் எதிர் பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில் கூட்டணி தொடர்பாக நேற்று பேட்டி அளித்த பிரேமலதா, கூட்டணி பற்றி தே.மு.தி.க. இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்று கூறி புதிய குண்டை தூக்கி போட்டுள்ளார். தே.மு.தி.க.வுக்கு ஒரு மேல்சபை எம்.பி.பதவியை கட்டாயம் தர வேண்டும் என்று அ.தி.மு.க.விடம் கேட்டிருப்பதாகவும் இதில் நல்ல முடிவு எட்டப்படும் என நம்புவதாகவும் பிரேமலதா கூறியிருந்தார். இதனால் அ.தி.மு.க.- தே.மு.தி.க. கூட்டணியில் புதிய புகைச்சல் உருவாகி உள்ளது.

    இதையடுத்து அ.தி.மு.க.-தே.மு.தி.க. கூட்டணி பேச்சுவார்த்தை தள்ளிப் போயுள்ளது. மேல்சபை எம்.பி.பதவி தொடர்பாக அ.தி.மு.க. தரப்பில் இருந்து இன்னும் சாதகமான பதில் ஏதும் வரவில்லை என்று தே.மு.தி.க. நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    இதனால் அடுத்த வாரம் மீண்டும் சந்தித்து பேசிக் கொள்ளலாம் என்கிற மன நிலைக்கு சென்று உள்ளனர்.

    இதற்கிடையே இன்று 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனை தே.மு.தி.க.வினர் மறுத்தனர்.

    இது தொடர்பாக தே.மு.தி.க. தரப்பில் கேட்டபோது, எங்கள் கட்சியின் தொகுதி பங்கீட்டு குழுவில் இடம்பெற்றுள்ள நிர்வாகிகள் இருவர் வெளியூரில் இருக்கிறார்கள். அவர்கள் செவ்வாய்கிழமை சென்னை வருகிறார்கள். அதன் பிறகு பேச்சுவார்த்தை நடைபெறும் என்றனர்.

    இதன் மூலம் செவ்வாய் அல்லது புதன்கிழமை பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதே நேரத்தில் ஒரு மேல்சபை எம்.பி. பதவி வேண்டும் என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா பிடிவாதம் காட்டுவதும் கூட்டணி பேச்சுவார்த்தை தள்ளி போக முக்கிய காரணம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Next Story
    ×