search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவுவது தமிழகத்துக்கு கிடைத்த கவுரவம்- மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேட்டி
    X

    பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவுவது தமிழகத்துக்கு கிடைத்த கவுரவம்- மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேட்டி

    • புதிய பாராளுமன்ற மக்களவையில் சபாநாயகருக்கு அருகே செங்கோல் நிறுவப்பட உள்ளது.
    • ஒரு தலைபட்சமாக இல்லாமல் அனைவருக்குமான ஆட்சியாக நடத்த செங்கோல் உறுதுணையாக இருக்கும்.

    சென்னை :

    புதிய பாராளுமன்றத்தில் தமிழக செங்கோல் நிறுவப்படுவது தொடர்பாக சென்னை கவர்னர் மாளிகையில் கவர்னர்கள் ஆர்.என்.ரவி, தமிழிசை சவுந்தரராஜன், இல.கணேசன், மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், எல்.முருகன், அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் பங்கேற்ற கூட்டம் நடந்தது. அப்போது மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற புதிய கட்டிடத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் போது 1947-ல் நடந்த ஒரு முக்கியமான சம்பவம். ஆங்கிலேயர்கள் ஆட்சி முடிந்து அவர்கள் கையில் இருந்து நமது மக்கள் கையில் ஆளுமை கிடைத்தபோது, அந்த ஆளுமையை, பரிமாற்றத்தை எப்படி செய்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டக்கூடிய ஒரு நிகழ்ச்சி.

    அதை நாட்டின் முதல் பிரதமராக இருந்த ஜவகர்லால் நேருவே அதில் பங்கேற்று அந்த பரிமாற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த பரிமாற்றம் நடந்திருக்கிறது. செங்கோல் தான் அந்த பரிமாற்றம். அது நடந்த சமயம் இரவு 10.30 மணி முதல் 12 மணிக்குள்ளாக நடந்த விஷயம். அந்த பரிமாறுதல் அப்போது தான் நடந்திருக்கிறது.

    நாம் கொண்டாடக்கூடிய சுதந்திரம், அந்த பரிமாற்றத்தால் கிடைத்தது. அந்த சுதந்திரத்தை நாம் கொண்டாடுகிறோம். ஆளுமை பரிமாறுதல் பூர்வீகத்தில் எப்படி நடந்தது என்பதை தேடி கண்டு பிடித்து இன்று வரை செய்கிறார்கள்.

    நாம் எந்த ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் அடைந்தோமோ அந்த ஆங்கிலேயர்கள் கூட இன்று அவர்களின் நாட்டில் 1670-ம் ஆண்டு வாக்கில் நடந்த அதே பாணியில் இன்றும் அங்கு அரசு பரிமாறுதல் நடக்கிறது. சுதந்திரம் என்பது செங்கோல் பரிமாற்றத்தால் கிடைத்தது.

    இந்த பரிமாறுதல் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டுக்கு மிகப்பெருமையான பங்கு இருக்கிறது. ஆங்கிலேயர்கள் ஆட்சியை மாற்றும் போது இதை எப்படி செய்ய வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்கள்.

    இந்தியாவில் எப்படி செய்தால் ஏற்புடையதாக இருக்கும் என்று கேட்டனர். அந்த ஏற்புடையது என்ன என்பதை விவரிக்க அப்போதைய பிரதமர் நேரு, ராஜாஜியிடம் கலந்து ஆலோசனை செய்தார். ராஜாஜி பின்னர் ஆதீனங்களை கலந்தாலோசனை செய்து திருவாவடுதுறை ஆதீனத்தின் மூலமாக அது தரும தண்டம் எனப்படும் செங்கோல் என கூறப்பட்டது.

    அந்த செங்கோலை அன்றைக்கு உற்பத்தி செய்யவில்லை. தமிழ்நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரத்தில் இருக்கக் கூடிய ஒரு விஷயத்தை அழகாக எடுத்து சொல்லி அதை இன்னும் நமது நல்ல காலமாக அதை தயார் செய்த உம்மிடி ஜூவல்லர்ஸ் பெரியவர்கள் இருவரும் இன்றும் இருக்கிறார்கள். அவர்களும் இந்த நிகழ்ச்சி பற்றி பேச தயாராக இருக்கிறார்கள்.

    புதிய கட்டிடத்தை நிர்மாணம் செய்த தொழிலாளர்களையும், செங்கோலை செய்து கொடுத்த உம்மிடி பெரியவர்களையும், பிரதமர் நரேந்திர மோடி 28-ந்தேதி பாராளுமன்றத்தில் கவுரவிப்பார்.

    புதிய பாராளுமன்ற மக்களவையில் சபாநாயகருக்கு அருகே செங்கோல் நிறுவப்பட உள்ளது. ஒரு தலைபட்சமாக இல்லாமல் அனைவருக்குமான ஆட்சியாக நடத்த செங்கோல் உறுதுணையாக இருக்கும். பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்க தருமபுரி, திருவாவடுதுறை உள்ளிட்ட 20 ஆதீனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. நாடு சுதந்திரம் பெற்றதை செங்கோல் குறிக்கிறது.

    ஆட்சி பரிமாற்றத்தை குறிக்க செங்கோல் பரிமாற்றம் செய்யும் முறை இன்னும் பல நாடுகளில் அமலில் உள்ளது.

    புதிய பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்படுவது தமிழ்நாட்டிற்கு பெருமை. செங்கோல் நிறுவப்படுவதில் அரசியல் செய்ய எதுவும் இல்லை. அடுத்த 100 வருடத்திற்கு நாட்டின் சின்னமாக செங்கோல் இருக்கப் போகிறது. மக்களுக்காகவாவது பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ள வேண்டும்.

    ஜனாதிபதி பதவியை மிகவும் உயர்வாக கருதுகிறோம். அது ரப்பர் ஸ்டாம்ப் பதவி அல்ல. ஜனநாயகத்தின் கோவிலான பாராளுமன்ற கட்டிடத்தை திறக்கும் நிகழ்ச்சியில் எதிர்க்கட்சிகள் உள்பட அனைவரும் பங்கேற்க வேண்டும். பிரதமரை பிடிக்கவில்லை என்றாலும் பாராளுமன்றத்துக்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டும்.

    செங்கோல் என்பது தமிழகத்துக்கு கவுரவமான, மிகப்பெரிய கவுரவம். புதிய பாராளுமன்ற திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க கூடாது. முன்பு ஜனாதிபதியை விமர்சித்தவர்கள்தான் தற்போது அவரை கொண்டு விழாவை நடத்த வேண்டும் என்கின்றனர்.

    சைவ மதத்தை சார்ந்து செங்கோல் வைக்கப்படவில்லை. திருக்குறளில் செங்கோல் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த போது நிகழ்ந்த ஆட்சி பரிமாற்றத்தை மறு உருவாக்கம் செய்கிறோம்.

    எந்தவித மத அடையாளமும் இல்லாமல் மரபு ரீதியாக செங்கோல் வைக்கப்படுகிறது.

    நேரு பிரதமராக இருந்த போது அவரிடம் வழங்கப்பட்ட செங்கோல் பாராளுமன்றத்தில் வைக்கப்படவில்லை. அது அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த செங்கோலுக்கு உள்ள பெருமையை உணர்த்தும் வகையில் பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் வைக்கிறார்.

    மதுரைக்கே அரசியாக விளங்கும் மீனாட்சி அம்மன் கையில் கூட செங்கோல்தான் உள்ளது. திருவிழா நேரங்களில் செங்கோலுடன் தான் மீனாட்சி அம்மன் காட்சி அளிப்பார். மதுரை எனது பிறந்த மண் என்பதால் இதை சொல்கிறேன்.

    புதிய பாராளுமன்றத்தை ஜனாதிபதியை வைத்து திறக்கவில்லை என்று விவாதம் எழுகிறது. சமீபத்தில் சத்தீஷ்கரில் புதிய தலைமை செயலகத்தை சோனியா காந்தி திறந்து வைத்தார். தெலுங்கானாவில் சட்டசபை கட்டிட திறப்பு விழாவுக்கு அம்மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. முதலமைச்சர் தான் திறந்தார். ஆனால் இப்போது மட்டும் விமர்சனம் செய்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×