search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க.-காங்கிரஸ் தொகுதி பங்கீடு பற்றி டெல்லியில் 29-ந் தேதி தலைவர்கள் ஆலோசனை
    X

    தி.மு.க.-காங்கிரஸ் தொகுதி பங்கீடு பற்றி டெல்லியில் 29-ந் தேதி தலைவர்கள் ஆலோசனை

    • கடந்த பாராளுமன்ற தேர்தலில் 10 மாநிலங்களிலும் காங்கிரஸ் பெற்ற வெற்றி, தோல்வி அந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்படுகிறது.
    • தமிழக காங்கிரஸ் நிலவரம் பற்றி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி முழுமையான அறிக்கை தயாரித்து உள்ளார்.

    பா.ஜனதாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா கூட்டணியை மேலும் வலிமைப்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அதற்கு வசதியாக 10 மாநிலங்களில் செல்வாக்கு மிக்க மாநில கட்சிகளுடன் சுமூகமான தொகுதி பங்கீட்டை நடத்தி முடிக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    தமிழ்நாடு, பீகார், உத்தர பிரசேதம், மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், காஷ்மீர், பஞ்சாப், மராட்டியம், டெல்லி ஆகிய மாநிலங்களில் சுமூகமான தொகுதி பங்கீடு செய்தால் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் பொது வேட்பாளரை நிறுத்த முடியும் என்று கருதுகிறது.

    எனவே இந்த 10 மாநிலங்களிலும் காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிட வேண்டும், மாநில கட்சிகளுக்கு எத்தனை தொகுதி கொடுக்க வேண்டும் என்பதை முதலில் முடிவு செய்ய தீர்மானித்துள்ளனர். இதற்காக டெல்லியில் வருகிற 29, 30-ந் தேதிகளில் 2 நாட்கள் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் நடக்கிறது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழகம் உள்பட 10 மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது. 10 மாநில தலைவர்களிடமும் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்த உள்ளனர்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் 10 மாநிலங்களிலும் காங்கிரஸ் பெற்ற வெற்றி, தோல்வி அந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்படுகிறது. கடந்த தேர்தலில் போட்டியிடும் இடங்கள் பற்றியும் விவாதிக்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில் மாநில கட்சிகளிடம் தொகுதிகளை பெற பட்டியல் தயாரிக்கப்படும்.

    இதற்காக முழு அளவில் அறிக்கைகள் தயாரித்து தயாராக வருமாறு மாநில தலைவர்களுக்கு காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழக காங்கிரஸ் நிலவரம் பற்றி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி முழுமையான அறிக்கை தயாரித்து உள்ளார்.

    டெல்லியில் 29, 30-ந் தேதிகளில் ஆலோசனை கூட்டம் நடக்கும்போது தமிழக காங்கிரசின் செல்வாக்கு மற்றும் எத்தனை தொகுதிகளில் போட்டியிட ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது பற்றி கே.எஸ்.அழகிரி விரிவாக தெரிவிப்பார். அதன் அடிப்படையில் தி.மு.க.விடம் தொகுதிகளை பெறுவது பற்றி காங்கிரஸ் மேலிடம் இறுதி முடிவு செய்யும்.

    Next Story
    ×