search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்ட ஏற்பாடு- மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் தலைவர் கார்கே ஆலோசனை
    X

    எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்ட ஏற்பாடு- மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் தலைவர் கார்கே ஆலோசனை

    • தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினுடனும் மல்லிகார்ஜூன கார்கே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
    • காங்கிரஸ் தலைவர் கார்கேயிடம் சில திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்வா? சாவா? என்ற மிகப்பெரிய சவாலை உருவாக்கி இருக்கிறது. கடந்த 2 பொதுத் தேர்தல் களில் பா.ஜனதாவிடம் படு தோல்வியை தழுவிய காங்கிரஸ் கட்சி 3-வது முறையாக பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

    கடந்த 2 தேர்தல்களில் ஏற்பட்ட மோசமான தோல்வி ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக தலைவர் பதவியில் இருந்து சோனியா, ராகுல் விலகி நிற்கும் நிலையில், கர்நாடகாவை சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே காங்கிரசுக்கு தலைமை பொறுப்பேற்று அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொண்டுள்ளார்.

    நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டினால் மட்டுமே பா.ஜனதாவை வீழ்த்த முடியும் என்ற நிர்ப்பந்தமான நிலையில் காங்கிரஸ் கட்சி சிக்கியுள்ளது. கார்கே பொறுப்பேற்றதும், இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். ஆனால் மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், சந்திரசேகர ராவ், சந்திரபாபு நாயுடு போன்ற தலைவர்கள் அவருக்கு சாதகமான பதிலை சொல்லவில்லை.

    இதனால் நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஓரணியில் ஒன்று திரளுமா? என்பதில் கேள்வி குறி எழுந்தது. இந்நிலையில் சமீபத்தில் ராகுல் காந்தியிடம் இருந்து எம்.பி. பதவி பறிக்கப்பட்டதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக 19 எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு பாராளுமன்றத்திலும், பாராளுமன்ற வளாகத்திலும் போராட்டங்கள் நடத்தின.

    ராகுல் பதவி பறிப்பு விவகாரத்தில் கைகோர்த்த எதிர்க்கட்சிகளை அப்படியே பாராளுமன்றத் தேர்தல் வரை ஒருங்கிணைத்து கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக உள்ளது. இதற்கான நடவடிக்கைகள் 2 தினங்களுக்கு முன்பு தொடங்கின.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களிடம் பேசத் தொடங்கி உள்ளார். குறிப்பாக மாநிலங்களில் பலத்த செல்வாக்குடன் இருக்கும் கட்சிகளுடன் கார்கே பேசி இப்போதே ஒரு முடிவுக்கு வர திட்டமிட்டுள்ளார். அதன்படி அவர் இந்த வார தொடக்கத்தில் இருந்து பேச்சு வார்த்தையை தொடங்கி உள்ளார்.

    தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினுடனும் மல்லிகார்ஜூன கார்கே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது நாடு முழுவதும் உள்ள எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.

    எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும்போது ஏற்படும் சவால்களை எப்படி எதிர்கொள்வது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கார்கே விவாதித்ததாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி, தெலுங்கானா கட்சிகளை எப்படி பேசி சமாளிப்பது என்றும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

    காங்கிரஸ் தலைவர் கார்கேயிடம் சில திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. எனவே எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் பணியில் காங்கிரசுக்கு மிக முக்கிய பலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்வார் என்று கருதப்படுகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பேசிய பிறகு பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோருடனும் மல்லிகார்ஜூன கார்கே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். விரைவில் நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி மிகப்பெரிய கூட்டம் நடத்த கார்கே ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×