search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க.வின் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்துக்கு பா.ம.க. ஆதரவு: அன்புமணி ராமதாஸ்
    X

    அரூரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேட்டியளித்த காட்சி.

    தி.மு.க.வின் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்துக்கு பா.ம.க. ஆதரவு: அன்புமணி ராமதாஸ்

    • தமிழகத்தில் கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
    • தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களின் சட்ட மசோதாக்கள் நிலுவையில் இருக்கிறது.

    அரூர்:

    தருமபுரி மாவட்டத்துக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்த பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அரூரில் செய்திகளை சந்தித்தார்.

    தருமபுரி மாவட்டத்தில் மரவள்ளி கிழங்கு, புளி, மஞ்சள், கரும்பு உள்ளிட்ட வேளாண் சார்ந்த பொருட்கள் அதிக அளவில் உற்பத்தியாகின்றன.

    வேளாண் விளைபொருள்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றவும், விவசாயிகள் பயன்பெறும் வகையில் தருமபுரி மாவட்டத்தில் புதிய தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும். சென்னை அதன் சுற்று வட்டாரப் பகுதியில் மட்டுமே தொழிற்சாலைகளை ஏற்படுத்துவதை தமிழக அரசு கைவிட வேண்டும்.

    தமிழகத்தில் கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் போதை ஒழிப்பு பிரிவுக்கு கூடுதலாக 18 ஆயிரம் போலீசார்களை பணியில் அமர்த்த வேண்டும். நீட் தேர்வில் விலக்கு கோரும் கோரிக்கையை அனைத்து கட்சிகளும் இணைந்து வலியுறுத்த வேண்டும். சித்தேரி, வத்தல்மலையை சுற்றுலா தலமாகவும், தீர்த்தமலையை ஆன்மீக தலமாகவும் தமிழக அரசு மாற்ற வேண்டும். தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் ரோப் கார் வசதி ஏற்படுத்த வேண்டும்.

    அரூரை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும். தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், காரல்மார்க்ஸ் ஆகியோர்தான் பா.ம.க.வின் முன்னோடிகள். எனவே, எங்கள் கட்சியின் வழிகாட்டிகள், முன்னோடிகளை எதிர்பவர்களை பா.ம.க. எதிர்க்கும். இந்தியாவில் சமூக நீதியை கொண்டு வந்தவர் தந்தை பெரியார். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் கோவில் முன்பாக உள்ள பெரியார் சிலைகள் அகற்றப்படும் என மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். அவரது கருத்து எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை. தமிழக கவர்னர் நடுநிலையாக செயல்பட வேண்டும். தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களின் சட்ட மசோதாக்கள் நிலுவையில் இருக்கிறது.

    தருமபுரி மாவட்டத்தில் காவிரி உபரி நீர் திட்டம் வேண்டும் என்று கையெழுத்து இயக்கம் நடத்தியபோது சாதி, மதம், அரசியல் கட்சிகளை அப்பாற்பட்டு அனைவரும் ஒன்றிணைந்து திட்டத்தை நிறைவேற்றுவதற்காக கையெழுத்திட்டனர்.

    அதேபோல நீட் என்பது தமிழகத்தில் பொது பிரச்சனை ஆகையால் தி.மு.க.வின் நீட் எதிரான கையெழுத்து இயக்கத்திற்கு நாங்களும் ஆதரவு தருவோம் என்றும் நீட் தேர்வில் அரசியல் செய்யக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×