search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மினி ஆட்டோ மீது கண்டெய்னர் மோதியது விபத்து- டிரைவர் உள்பட 3 பேர் உடல் நசுங்கி பலி
    X

    மினி ஆட்டோ மீது கண்டெய்னர் மோதியது விபத்து- டிரைவர் உள்பட 3 பேர் உடல் நசுங்கி பலி

    • சென்னை நோக்கி சென்ற கண்டெய்னர் லாரியுடன் நேருக்கு நேர் மோதியது.
    • கண்டெய்னர் லாரியின் டிரைவரான நெல்லையை சேர்ந்த பேச்சிமுத்து பாண்டியன் என்பவர் படுகாயம் அடைந்தார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் இருந்து சேலம் நோக்கி இன்று காலை 7 மணி அளவில் ஒரு மினி ஆட்டோ வந்து கொண்டிருந்தது. மினி ஆட்டோவை விழுப்புரத்தை சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் அரக்கோணம் பகுதியை சேர்ந்த சுதர்சன் மற்றும் குடியாத்தம் பகுதியை சேர்ந்த பிரகாசம் ஆகியோரும் வந்தனர்.

    சேலம்-சென்னை புறவழிச் சாலையில் வாழப்பாடி கிழக்குக்காடு அருகே மினி ஆட்டோ வந்தபோது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கண்டெய்னர் லாரியுடன் நேருக்கு நேர் மோதியது.

    இந்த விபத்தில் மினி ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. இதில் டிரைவர் பிரவீன்குமார், சுதர்சன் மற்றும் பிரகாசம் ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

    இது குறித்து தகவலறிந்த வாழப்பாடி போலீசார், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் அங்கிருந்த சுங்கச்சாவடி பணியாளர்களுடன் சேர்ந்து கிரேன் எந்திரத்தை பயன்படுத்தி 3 பேர் உடலையும் மீட்டனர். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தில் கண்டெய்னர் லாரியின் டிரைவரான நெல்லையை சேர்ந்த பேச்சிமுத்து பாண்டியன் என்பவர் படுகாயம் அடைந்தார். அவரையும் மீட்ட போலீசார் சிகிச்சைக்காக வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கோர விபத்து குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஹரி சங்கரி, இன்ஸ்பெக்டர் உமாசங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

    இந்த விபத்தால் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்களை அப்புறப்படுத்திய போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மினி ஆட்டோ மீது லாரி மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×