search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எந்த தேர்தல் வந்தாலும் அ.ம.மு.க வெற்றி பெறும்- டிடிவி தினகரன் பேச்சு
    X

    எந்த தேர்தல் வந்தாலும் அ.ம.மு.க வெற்றி பெறும்- டிடிவி தினகரன் பேச்சு

    பரமத்தியில் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அமமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய தினகரன், எந்த தேர்தல் வந்தாலும் நாங்கள் வெற்றி பெறும் என்று கூறினார். #ttvdinakaran

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நேற்று (புதன்கிழமை) இரவு நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசியதாவது:-

    இந்த ஆட்சியாளர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கூட்டம் என்றாலே பயந்து கொண்டு கூட்டம் நடத்த அனுமதி அளிப்பதில்லை. ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்துக்கு சென்று தான் கூட்டம் நடத்தும் நிலை உள்ளது.

    இந்த கூட்டத்திற்கு கூட முதலில் கேட்டது 19-ந் தேதி. ஆனால் ஜல்லிக்கட்டை காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பிறகு நீதிமன்றம் மூலம் இக்கூட்டம் நடத்த அனுமதி பெற்று உள்ளோம். இது போன்று அ.ம.மு.க நடத்தம் பெரும்பாலான கூட்டங்களுக்கும் இதே நிலைதான்.

    அம்மாவின் ஆட்சி என்று சொல்லிக்கொள்ளும் இப்போதைய ஆட்சியாளர்கள் அ.ம.மு.க என்று சொன்னாலே அச்சப்படுகின்றனர். இவர்கள்தான் இப்படி என்றால் பிரதான எதிர்கட்சியான தி.மு.க.வும் ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுக்கு பின் எங்களை பார்த்து அஞ்சுகிறது.

    திருவாரூர் தொகுதியில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி 2016ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2016 தேர்தலில் மாநிலத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் சுமார் 63 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் கருணாநிதி இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார்.

    ஆனால் அங்கு இடைத்தேர்தல் அறிவித்தபோது ஆளும் கட்சி மட்டுமல்லாது, தி.மு.க.வினரும் நீதிமன்ற படியேறி இடைத் தேர்தலை தடுத்து நிறுத்தினர். கருணாநிதி செய்த துரோகத்தினால் எம்.ஜி.ஆரால் உருவானது தான் அ.தி.மு.க. 30 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது துரோகிகள் இந்த இயக்கத்தை சிதைக்க பார்க்கின்றனர்.

    எடப்பாடி பழனிச்சாமி முதல்-அமைச்சர் ஆகக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்த செம்மலை தற்போது கொடநாடு விவகாரத்தில் அவருக்கு பக்கவாத்தியம் வாசிக்கிறார். இவருக்கு ஏற்பட்ட மனமாற்றத்திற்கான காரணம் மக்களுக்கு தெரியும். பதவி, பணம், அதிகாரம் என்பதற்காக என்னவேண்டுமானாலும் பேசலாம் என்ற நிலையில் சில அமைச்சர்கள் உள்ளனர்.

    அரசியலில் எத்தனையோ துரோகங்கள் பார்த்திருக்கிறோம் ஆனால் இப்படிப்பட்ட துரோகத்தை பார்த்ததில்லை. இப்போதுள்ள அமைச்சர்கள் சிலர் பேசுவது ஆயுள்காலம் முழுவதும் அமைச்சர்களாக இருப்பது போல் எண்ணிக் கொள்கின்றனர். ஜெயலலிதா இல்லை என்ற தைரியத்தில் அமைச்சர்கள் சிலர் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என பேசுகின்றனர். இதற்கெல்லாம் வருகிற ஏப்ரல், மே மாதத்தில் தேர்தலில் பதில் சொல்லியாக வேண்டும். கொடநாடு விவகாரத்தில் முதல்-அமைச்சர் ஏன் பதற்றப்படுகிறார்.

    சிலைக்கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ விசாரணைக்கு பரிந்துரைக்கும் அரசு கொடநாடு விவகாரத்தை ஏன் பரிந்துரைக்க கூடாது.

    விரைவில் 21 சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் பாராளுமன்ற பொதுத் தேர்தல்கள் வர உள்ளது. இந்த தேர்தலில் இப்போதுள்ள ஆட்சியாளர்களுக்கு டெபாசிட் கூட கிடைக்காது. ஓட்டுக்கு எத்தனை ஆயிரம் பணம் கொடுத்தாலும் மக்கள் இவர்களிடம் ஏமாற மாட்டார்கள். எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட இந்த கட்சி இதுவரைக்கும் தோல்வியை சந்தித்ததே இல்லை. ஆனால் இப்போது இந்த கட்சியின் நிலை என்ன என்பது மக்கள் அறிவார்கள்.

    ஆர்.கே நகரில் 41 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். திருவாரூரில் தேர்தல் நடந்திருந்தால் அ.ம.மு.க 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கும். இனி எப்போது எந்த தேர்தல் வந்தாலும் அ.ம.மு.க தான் வெற்றி பெறும். அ.தி.மு.க டெபாசிட் இழக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து அவருக்கு கட்சி பொறுப்பாளர்கள் வெள்ளிவாள் பரிசாக வழங்கினார்கள். மாற்றுக்கட்சியினர் பலர் அவரது முன்னிலையில் தங்களை அ.ம.மு.கவில் இணைத்துக்கொண்டனர்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் தொடர்பான தொகுதி பங்கீட்டு குழுவை தேவை வரும்போது அறிவிப்போம்.

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக சில கட்சிகளுடன் பேசி வருகிறேன். முடிவு வந்தவுடன் நிச்சயமாக கூறுகிறேன். பாராளுமன்ற தேர்தலுடன் சட்ட பேரவைக்கும் தேர்தல் வந்தால் நல்லது.

    கூட்டத்திற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட செயலர் சாமிநாதன் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் சம்பத்குமார் வரவேற்றார். மேற்கு மாவட்ட அவைத் தலைவர் நல்லியப்பன், கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் நாச்சிமுத்து, கிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் திலகம், கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் திலகவதி, சந்திரன், பொருளாளர் அன்புச்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அவைத் தலைவர் அன்பழகன், பொருளாளர் ரெங்கசாமி, தலைமை நிலையச் செயலாளர் பழனியப்பன், கொள்கை பரப்புச்செயலாளர் தமிழ்செல்வன், தேர்தல் பிரிவு செயலாளர் செந்தமிழன், அமைப்புச் செயலாளர் ரவிக்குமார், நாமக்கல் சக்தி கல்வி கலாச்சார அறக்கட்டளை நிறுவனர் என்.கே.எஸ்.சக்திவேல், புதிய திராவிட கழக நிறுவனத் தலைவர் ராஜ்கவுண்டர், அம்மா பேரவை இணைச் செயலாளர் பழனிவேல், வர்த்தக அணி இணைச் செயலாளர் நல்லியப்பன், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் ராஜ்குமார், மாவட்ட துணைச்செயலாளர் சந்திரன், சேந்தமங்கலம் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், ராசிபுரம் அக்ரி நடராஜ் மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள், நாமக்கல் சக்தி கல்வி கலாச்சார அறக்கட்டளை உறுப்பினர்கள் சுமார் 5ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். #ttvdinakaran #admk #parliamentelection

    Next Story
    ×