search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4 வழிச்சாலை திட்டத்தை மக்கள் கருத்தை கேட்காமல் செயல்படுத்தக் கூடாது- ஜிகே வாசன்
    X

    4 வழிச்சாலை திட்டத்தை மக்கள் கருத்தை கேட்காமல் செயல்படுத்தக் கூடாது- ஜிகே வாசன்

    மத்திய, மாநில அரசுகள் தஞ்சாவூர்-மதுரை இடையே 4 வழிச்சாலைத் திட்டத்தை மக்கள் கருத்தை கேட்காமல் செயல்படுத்தக்கூடாது என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். #TamilMaanilaCongress #GKVasan
    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய மாநில அரசுகள் தஞ்சாவூர் மதுரை இடையே 4 வழிச்சாலைத் திட்டத்திற்காக செய்து வரும் நிலம் அளவிடும் பணிகளை கைவிட்டு, அப்பகுதி விவசாயிகள், பொது மக்கள் ஆகியோரின் கருத்துக்களை கேட்டறிந்து அதற்கேற்ப அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு விவசாயிகள் நலன் காக்க வேண்டும்

    மத்திய மாநில அரசுகள் தஞ்சாவூர் மதுரை இடையே 4 வழிச்சாலை அமைப்பதற்காக நிலம் அளவிடும் பணிகளை கடந்த இரண்டு மாதங்களாக மேற்கொண்டு வருகிறது. இப்பணிகளுக்கு அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

    குறிப்பாக அரசு 4 வழிச்சாலை அமைக்க முடிவெடுத்தால் அந்த திட்டம் தொடர்பான பணிகளை ஆரம்பிக்கும் முன்பே 4 வழிச்சாலை அமைக்க இருக்கும் பகுதி வாழ் மக்கள் குறிப்பாக விவசாயிகளிடம் கருத்துக்கள் கேட்டறிய வேண்டும். அதன் பிறகே அத்திட்டம் தொடர்பான பணிகளை செய்யலாமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும்.

    ஆனால் 4 வழிச்சாலை தொடர்பாக அப்பகுதியில் உள்ள விவசாயிகளிடம் கருத்து ஏதும் கேட்காமல் கடந்த இரண்டு மாதங்களாக நிலம் அளவிடும் பணிகளை அரசு செய்து வருவது ஏற்புடையதல்ல.

    தற்போது சென்னை சேலம் இடையே 8 வழிச்சாலைத் திட்டத்தினால் விளைநிலங்களும், அதன் சார்ந்த நிலப்பகுதிகள், வனப்பகுதிகள் ஆகியவையும் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் மற்றும் பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த திட்டம் கேள்விக்குறியாகி உள்ளது.

    மத்திய அரசின் திட்டம் என்றாலும், மாநில அரசின் திட்டம் என்றாலும் அது விவசாயத்தை பாதிக்குமா, மக்களுக்கு பாதிப்பை தருமா என்ற சந்தேகத்திற்கு இடம் கொடுக்காத வகையில் திட்டத்தை கொண்டு வர முயற்சிக்கலாம்.

    எனவே மத்திய மாநில அரசுகள் தஞ்சாவூர் மதுரை இடையே 4 வழிச்சாலைத் திட்டத்திற்காக செய்து வரும் நிலம் அளவிடும் பணிகளை கைவிட்டு, அப்பகுதி விவசாயிகள், பொது மக்கள் ஆகியோரின் கருத்துக்களை கேட்டறிந்து அதற்கேற்ப அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு விவசாயிகள் நலன் காக்க வேண்டும் என்று த.மா.கா. சார்பில் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TamilMaanilaCongress #GKVasan  
    Next Story
    ×