search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விழாவில் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் வழங்கினர்
    X
    விழாவில் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் வழங்கினர்

    தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எங்கள் அணிக்கு வர தயாராக உள்ளனர்: முதலமைச்சர் பேச்சு

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எங்கள் அணிக்கு வர தயாராக உள்ளனர் என்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மாவட்ட நிர்வாகம் சார்பில் கொண்டாடப்பட்டது. சபாநாயகர் தனபால் தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழாவில் பங்கேற்று எம்.ஜி.ஆர். உருவப்படத்தை திறந்து வைத்தார்.

    ரூ.48 கோடியே 81 லட் சத்து 21 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 146 புதிய கட்டிடங்களை திறந்து வைத்த அவர் ரூ.13 கோடியே 38 லட்சம் மதிப்பில் 8 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

    பின்னர் 21 ஆயிரத்து 733 பேருக்கு ரூ.54 கோடியே 87 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கினார்.

    அதைத்தொடர்ந்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதில் பெருமை அடைகிறேன். ஆட்சியை கலைத்து விடுவோம், நாளை வீட்டுக்கு அனுப்பி விடுவோம், முடிந்தது அ.தி.மு.க. ஆட்சி என்று புலம்பி கொண்டிருப்பவர்கள் நமது வரலாறு தெரியாதவர்கள்.

    நீங்கள் கலைப்பதற்கும், வீட்டுக்கு அனுப்புவதற்கும் அ.தி.மு.க. நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல. புயலாலும் அசைக்க முடியாத ஆலமரம். இதனை தாங்கி பிடிக்க விழுதுகளாக 1½ கோடி தொண்டர்கள் உள்ளனர்.

    தமிழக அரசை பொத்தாம்பொதுவாக குறைகூறி தங்களுக்கு மக்கள் செல்வாக்கு உள்ளதாக காட்டிக்கொள்ள சிலர் முயற்சி செய்கிறார்கள். அவர்கள் குறைகூறுகிற அளவிற்கு நாங்கள் நடந்து கொள்ளவில்லை. மக்களுக்கு இன்று என்ன தேவையோ அதை நேற்றே செய்து முடிப்பவர்கள் நாங்கள்.

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் எங்கள் அணிக்கு வரதயாராக உள்ளனர். இதற்கு ஒரு கதையை உதாரணமாக கூற விரும்புகிறேன்.

    ஒரு ஆற்றில் நண்பர்கள் பலர் குளித்தபோது திடீரென வெள்ளம் வந்தது. அதில் சிலர் அடித்து செல்லப்பட்டனர். கரையோரம் இருந்த பொருட்களும் அடித்து செல்லப்பட்டன. சிலர் ஆற்றில் தத்தளித்தவர்களை காப்பாற்றினர்.

    ஆனால் பேராசை பிடித்த ஒருவன் தண்ணீரில் தத்தளித்தவர்களை காப்பாற்றாமல் ஆற்றில் மிதந்து வந்த பொருட்களை எடுக்க முயன்றான். கரையில் இருந்தவர்கள் அவனை உயிர் பிழைக்க கரைக்கு வாருங்கள் என அழைத்த போதும் அவன் கேட்கவில்லை.

    அந்த நேரத்தில் தண்ணீரில் கம்பளி மூட்டை மிதந்து வந்தது. அதனையும் பேராசை பிடித்தவன் எடுக்க முயன்றான். ஆனால் அவனால் மூட்டையை கரைக்கு கொண்டுவர முடியவில்லை. அப்போது அவனை மூட்டையை விட்டு விட்டு கரைக்கு வருமாறு நண்பர்கள் அழைத்தனர். அவனோ நான் மூட்டையை எப்போதோ விட்டு விட்டேன். ஆனால் அதில் இருக்கும் கரடி குட்டிதான் என்னை விடவில்லை என்றான்.

    இப்படித்தான் பலர் ஆசைப்பட்டு தவறான இடத்துக்கு சென்று விட்டு வரமுயன்றாலும் வரமுடியவில்லை. தவறானவர்கள் அவர்களை பிடித்துக்கொண்டு விட மறுக்கிறார்கள்.

    அரசியல் ரீதியாக அ.தி.மு.க.வை எதிர்க்க சக்தி இல்லாமல் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது டெங்கு காய்ச்சலை பிடித்துக்கொண்டு தொங்குகிறார். அதை அரசியல் ஆக்கப்பார்க்கிறார். அது ஒருகாலமும் நடக்காது. அ.தி.மு.க. ஆட்சி மக்கள் ஆட்சி. நீங்கள் எந்த சூழ்ச்சி செய்தாலும், எத்தகைய தில்லுமுல்லு செய்தாலும் அ.தி.மு.க. ஆட்சியை கலைத்துவிடலாம் என்று எண்ணி விடாதீர்கள்.

    பொதுமக்களும், தொண்டர்களும் எங்களுக்கு துணையாக நிற்கின்றனர். பொதுமக்கள்தான் எஜமானர்கள். அவர்கள்தான் நீதிபதிகள். எவ்வளவு பொய் மூட்டைகளை நீங்கள் அவிழ்த்துவிட்டாலும் இந்த ஆட்சியை தொட்டுக்கூட பார்க்கமுடியாது.

    விழாவில் பங்கேற்க நான் வந்தபோது எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டினர். அதன் அடிப்படையில் சிவகாசி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த அரசு பரிசீலிக்கும். சிவகாசி நகராட்சியுடன் திருத்தங்கல் நகராட்சி மற்றும் 9 ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக்க தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் வத்ராயிருப்பை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா அமைப்பது பற்றியும் பரிசீலிக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×