என் மலர்
கால்பந்து

உயிருக்கே ஆபத்து.. ஈரான் மகளிர் கால்பந்து அணியினருக்கு அமெரிக்கா புகலிடம் கொடுக்கும் - டிரம்ப் | #donaldtrump
- ஈரான் வீராங்கனைகள் தங்கள் நாட்டின் தேசிய கீதத்தைப் பாட மறுத்தனர்.
- அமெரிக்கா அவர்களை ஏற்றுக்கொள்ளும்.
ஆசியக் கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்க ஈரான் மகளிர் கால்பந்து அணியினர் ஆஸ்திரேலியா சென்றனர்.
கடந்த வாரம் தென் கொரியாவுக்கு எதிரான போட்டியின் போது, ஈரான் வீராங்கனைகள் தங்கள் நாட்டின் தேசிய கீதத்தைப் பாட மறுத்தனர்.
ஈரானில் நிலவும் அரசியல் சூழலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அவர்கள் இவ்வாறு செய்ததாகக் கருதப்படுகிறது.
இந்தச் செயலால் ஈரானிய அரசு ஊடகங்கள், வீராங்கனைகளை "யுத்த காலத் துரோகிகள்" என்று விமர்சித்தன. அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அரசு ஆதரவு நிலைப்பாடு கொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தென் கொரியாவுடன் நடந்த போட்டிக்கு பிறகு நடந்த அடுத்த இரண்டு போட்டிகளில் வீராங்கனைகள் ஈரான் தேசிய கீதத்தைப் பாடினர்.
இந்நிலையில் ஈரான் மகளிர் கால்பந்து அணியினர் தொடரிலிருந்து வெளியேறிய நிலையில் ஈரானுக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளனர்.
ஆனால் வீராங்கனைகள் ஈரான் திரும்பினால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் உலகளவில் எழுந்துள்ளது. மேலும் ஈரான் மீதான இஸ்ரேல் - அமெரிக்க தாக்குதல்களுக்கும் நிலைமையை மோசமாக்கியுள்ளன.
இந்நிலையில் ஈரான் மகளிர் கால்பந்து அணியினர், மீண்டும் ஈரான் திரும்புவது அவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என அதிபர் டிரம்ப் கவலை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ட்ரூத் சோஷியல் பதவில், ஈரான் தேசிய மகளிர் கால்பந்து அணியை ஈரானுக்குத் திருப்பி அனுப்ப அனுமதிப்பதன் மூலம் ஆஸ்திரேலியா ஒரு பயங்கரமான மனிதாபிமானத் தவறைச் செய்கிறது. அங்கு அவர்கள் கொல்லப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அதைச் செய்யாதீர்கள், மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் (ஆண்டனி அல்பானீஸ்), அவர்களுக்கு அடைக்கலம் கொடுங்கள். நீங்கள் ஒப்புக்கொள்ளாவிட்டால் அமெரிக்கா அவர்களை ஏற்றுக்கொள்ளும்" என்று தெரிவித்துள்ளார்.
தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பாதுகாப்பான இடத்தில் வீராங்கனைகள் தங்கியுள்ளனர். அவர்கள் ஈரான் அரசுக்கு எதிராக தேசிய கீதம் பாட மறுத்ததால் அவர்களுக்கு டிரம்ப் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.






