என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

VIDEO: பாராட்டிய கோயங்கா.. பேச விரும்பாமல் நகர்ந்து சென்ற கே.எல். ராகுல்
- லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கே.எல். ராகுலுக்கு கைக்கொடுத்து பேச முயன்றார்.
- கோயங்காவிடம் பேச விரும்பாத ராகுல் அவருக்கு கைகொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் லக்னோ- டெல்லி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 17.5 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது. இதனால் டெல்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது.
இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய கே.எல். ராகுல் 42 பந்துகளில் 57 ரன்கள் அடித்து டெல்லி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
போட்டி முடிந்த பிறகு லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கே.எல். ராகுலுக்கு கைக்கொடுத்து பேச முயன்றார். ஆனால் அவரிடம் பேச விரும்பாத ராகுல் உடனடியாக அவருக்கு கைகொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
கடந்தாண்டு லக்னோ அணியின் கேப்டனாக கே.எல். ராகுல் இருந்தார். அப்போது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி படுமோசமான தோல்வியை தழுவியது.
இப்போட்டியின் முடிவுக்கு பின்னர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அணியின் கேப்டன் கேஎல் ராகுலிடம் மைதானத்தில் வைத்தே கடுமையாக பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனையடுத்து லக்னோ அணியில் இருந்து வெளியேறிய கே.எல். ராகுலை டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது. மைதானத்தில் வைத்தே தன்னை அவமானப்படுத்திய பழைய அணியின் உரிமையாளரிடம் பேச விரும்பாமல் தான் கே.எல். ராகுல் அவருக்கு உடனடியாக கைகொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றுள்ளார் என்று நெட்டிசன்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.






