என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    ஐபிஎல் 2025: டெல்லி கேப்பிட்டல்ஸ்க்கு எதிராக 25 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது சிஎஸ்கே
    X

    ஐபிஎல் 2025: டெல்லி கேப்பிட்டல்ஸ்க்கு எதிராக 25 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது சிஎஸ்கே

    • விஜய் சங்கர் 54 பந்தில் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • எம்.எஸ். தோனி 26 பந்தில் 30 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஐபிஎல் 2025 சீசனின் 17ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல் பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் களம் இறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் கே.எல். ராகுல் 51 பந்தில் 77 ரன்கள் விளாசினார். அபிஷேக் பொரேல் 33 ரன்களும், அக்சர் படேல் 21 ரன்களும், சமீர் ரிஸ்வி 20 ரன்களும், ஸ்டப்ஸ் ஆட்டமிழக்காமல் 24 ரன்களும் சேர்த்தனர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் கலீல் அகமது 4 ஓவரில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். முகேஷ் சவுத்ரி 4 ஓவரில் 50 ரன்கள் வாரி வழங்கினார்.

    பின்னர் 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் களம் இறங்கியது. ரச்சின் ரவீந்திரா, கான்வே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 2-வது ஓவரின் 5ஆவது பந்தில் ரச்சின் ரவீந்திரா 3 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த ருதுராஜ் கெய்க்வாட்டை 5 ரன்னில் வெளியேற்றினார் மிட்செல் ஸ்டார்க். 20 ரன்னுக்குள் சிஎஸ்கே முக்கிய இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் அந்த சரிவில் இருந்து சிஎஸ்கே அணியால் மீள முடியவில்லை. கான்வே 14 ரன்கள் எடுத்த நிலையிலும், ஷிவம் துபே 18 ரன்களும் எடுத்த நிலையிலும் விப்ராஜ் நிகம் பந்தில் ஆட்டமிழந்தார்.

    ஒரு பக்கம் விஜய் சங்கர் களத்தில் நின்றுகொண்டிருந்தார். ஆனால் இவரால் அதிரடியாக ரன்கள் குவிக்க இயலவில்லை. 6ஆவது விக்கெட்டுக்கு விஜய் சங்கர் உடன் எம்.எஸ். டோனி ஜோடி சேர்ந்தார்.

    விஜய் சங்கர் 43 பந்தில் அரைசதம் அடித்தார். கடைசி 3 ஓவரில் சென்னை அணிக்கு 67 ரன்கள் தேவைப்பட்டது. முகேஷ் குமார் வீசினார். இந்த ஓவரில் தோனி ஒரு சிக்ஸ் பறக்க விட்டார். இதனால் சிஎஸ்கே அணிக்க 13 ரன்கள் கிடைத்தன.

    கடைசி 2 ஓவரில் 54 ரன்கள் தேவைப்பட்டது. 19ஆவது ஓவரை ஸ்டார்க் வீசினார். இந்த ஓவரில் சென்னை அணியால் 13 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

    கடைசி ஓவரை முகேஷ் குமார் வீசினார். இந்த ஓவரில் விஜய் சங்கர் ஒரு சிக்ஸ் அடித்தார். தோனி ஒரு பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் 15 ரன்கள் கிடைத்தது. இதனால் சிஎஸ்கே-வால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் டெல்லி 25 ரன்னில் வெற்றி பெற்றது.

    விஜய் சங்கர் 54 பந்தில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். எம்.எஸ். தோனி 26 பந்தில் தலா ஒரு பவுண்டரி, சிக்சர் உடன் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கவில்லை

    Next Story
    ×