என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆட்டத்தின் துவக்கம் முதலே அமெரிக்க வீரரை எதிர்கொள்ள முடியாமல் இந்திய வீரர் தீபக் புனியா திணறினார்.
    டோக்கியோ:

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது. இன்று ஆடவருக்கான மல்யுத்த போட்டிகள் நடைபெறுகின்றன. இதில், 86 கிலோ எடைப்பிரிவிருக்கான காலிறுதி போட்டியில் இந்திய வீரர் தீபக் புனியா,  6-3 என்ற கணக்கில் சீனாவின் லின் சூசனை வீழ்த்தினார்.

    அதன்பின்னர் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், அமெரிக்க வீரர் டேவிட் டெய்லரை எதிர்கொண்டார் தீபக் புனியா. ஆனால் அரையிறுதி ஆட்டம் அவருக்கு கடும் சவாலாக இருந்தது. ஆட்டத்தின் துவக்கம் முதலே அமெரிக்க வீரரை எதிர்கொள்ள முடியாமல் தீபக் புனியா திணறினார்.

    அவரை ஒரு புள்ளிகள் கூட எடுக்க விடாமல் அமெரிக்க வீரர் தாக்குதல் தொடுத்தார். இறுதியில், தீபக் புனியா 0-10 என்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்தார்.
    ஒலிம்பிக் போட்டியில் பி.வி.சிந்து, மீராபாய் சானு, லாவ்லினாவை தொடர்ந்து இந்தியாவுக்கு நான்காவது பதக்கத்தை உறுதி செய்துள்ளார் ரவிக்குமார் தாஹியா.
    32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன.

    இன்று நடைபெற்ற மல்யுத்தம் 57 கிலோ எடைப்பிரிவு அரையிறுதி போட்டியில் கஜகஸ்தான் வீரரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா.

    ரவிக்குமார் தாஹியா

    அரையிறுதியில் வென்றதன் மூலம் இந்திய வீரர் ரவிக்குமாருக்கு பதக்கம் உறுதியாகியுள்ளது.

    ஏற்கனவே பேட்மிண்டனில் பி.வி.சிந்து வெண்கலமும், பளு தூக்குதலில் மீராபாய் சானு வெள்ளியும், மகளிருக்கான குத்துச்சண்டையில்  லாவ்லினா வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் இன்று தொடங்குகிறது.
    நாட்டிங்காம்:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றுள்ளது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

    இந்தியா அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்:-

    1.ரோகித் சர்மா 2. கேஎல் ராகுல் 3. புஜாரா 4. விராட் கோலி 5. ரஹானே 6.ரிஷப் பண்ட் 7. தாகூர் 8. ஜடேஜா 9. பும்ரா 10. முமகது சிராஜ் 11. முகமது ஷமி

    இங்கிலாந்து அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்:-

    1.ரோரி பர்ன்ஸ் 2. டாம் சிப்லி 3.ஜாக் கிராவ்லி 4.ஜோ ரூட் (கேப்டன்) 5. பேர்ஸ்டோ 6. லாரன்ஸ் 7. ஜோஸ் பட்லர் 8. சாம் கர்ரன் 9.ஆலி ராபின்சன் 10. ஸ்டூவர்ட் பிராட் 11. ஜேம்ஸ் ஆண்டர்சன்.
    டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.
    சென்னை:

    5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் ( டி.என்.பி.எல். ) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சை தோற்கடித்தது. நெல்லை அணி பெற்ற 2-வது வெற்றியாகும். திண்டுக்கல் அணி 3- வது தோல்வியை தழுவியது.

    17-வது நாளான இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 2 வெற்றி , ஒரு தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 5 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.

    அந்த அணி திருப்பூர் தமிழன்சுடன் மோதிய முதல் ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 2-வது போட்டியில் நெல்லையிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. 3-வது ஆட்டத்தில் சேலம் அணியை 4 விக்கெட் வித்தியாசத்திலும், 4-வது போட்டியில் திண்டுக்கல் அணியை 24 ரன் வித்தியாசத்திலும் வீழ்த்தியது .

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இன்றைய ஆட்டத்தில் மதுரையை தோற்கடித்து “ஹாட்ரிக் “ வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    மதுரை அணி 2 வெற்றி 2 தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 5 புள்ளிகள் பெற்று 3 வது இடத்தில் இருக்கிறது.

    இந்திய அணி கால் இறுதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக அரை இறுதிக்கு நுழைந்து சாதனை படைத்தது.
    டோக்கியோ ஒலிம்பிக்கில் ராணி ராம்பால் தலைமையிலான இந்திய மகளிர் ஆக்கி அணி தான் மோதிய முதல் 3 ஆட்டங்களில் தோல்வியை தழுவியது.

    நெதர்லாந்திடம் 1-5 என்ற கோல் கணக்கிலும், ஜெர்மனியிடம் 0-2 என்ற கணக்கிலும், இங்கிலாந்திடம் 1-4 என்ற கணக்கிலும் தோற்றது.

    பின்னர் இந்திய மகளிர் ஆக்கி அணி சிறப்பாக ஆடி அயர்லாந்தை 1-0 என்ற கணக்கிலும், தென் ஆப்பிரிக்காவை 4-3 என்ற கணக்கிலும் வீழ்த்தியது. இதனால் லீக் முடிவில் 2 வெற்றி 3 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றது.

    இந்திய அணி கால் இறுதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக அரை இறுதிக்கு நுழைந்து சாதனை படைத்தது.

    9-வது இடத்தில் உள்ள இந்திய மகளிர் ஆக்கி அணி அரை இறுதியில் அர்ஜென்டினாவை இன்று எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது.

    உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அர்ஜென்டினாவை தோற்கடித்து இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா? என்று அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய ஆண்கள் ஆக்கி அணி அரைஇறுதியில் பெல்ஜியத்திடம் தோற்றது. அது மாதிரியான நிலைமை மகளிர் அணிக்கு ஏற்பட்டு விடக்கூடாது. இதனால் வீராங்கனைகள் மிகவும் கவனமுடன் விளையாட வேண்டும்.

    இந்திய மகளிர் அணி சிறப்பாக செயல்பட்டு பதக்கத்தை உறுதி செய்யுமா? என்பது ரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஆடவர் ஆக்கி அணி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஜெர்மனியுடன் நாளை மோதுகிறது. இந்த ஆட்டம் காலை 7 மணிக்கு நடக்கிறது.
    ஒலிம்பிக் போட்டியில் பி.வி.சிந்து, மீராபாய் சானுவை தொடர்ந்து இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கத்தைப் பெற்றுள்ளார் லாவ்லினா.
    32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன.

    இன்று நடைபெற்ற மகளிருக்கான 69 கிலோ குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் லாவ்லினா துருக்கி வீராங்கனை புசேனாஸ் சுர்மெனெலியிடம் 5-0 என்ற கணக்கில் லாவ்லினா தோல்வியைத் தழுவினார். இதன் மூலம் லாவ்லினா வெண்கலப் பதக்கம் பெற்றார்.

    ஏற்கனவே பேட்மிண்டனில் பி.வி.சிந்து வெண்கலமும், பளு தூக்குதலில் மீராபாய் சானு வெள்ளியும் வென்றுள்ளனர். மூன்றாவதாக லாவ்லினா பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    மல்யுத்தம் ஆடவர் 86 கிலோ எடைப்பிரிவு காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் தீபக் புனியா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
    டோக்கியோ:

    32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன.

    இன்று காலை நடைபெற்ற மல்யுத்தம் ஆடவர் 86 கிலோ எடைப்பிரிவு காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் தீபக் புனியா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    காலிறுதியில் தீபக் புனியா 6-3  என்ற கணக்கில் சீனாவின் லின் சூசனை வீழ்த்தினார்.

    57 கிலோ மல்யுத்த பிரிவில் ரவிக்குமார் தஹியாவும் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.

    காலிறுதியில் ரவிக்குமார் தஹியா 14-4 என்ற கணக்கில் பல்கேரிய வீரர் வான்க்ளோவை வீழ்த்தினார்.
    டோக்கியோ ஒலிம்பிக்கின் ஈட்டி எறிதல் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
    டோக்கியோ:

    32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன.

    இன்று காலை ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிச்சுற்று போட்டி நடைபெற்றது. இதில் குரூப் பி பிரிவில் இந்தியா சார்பில் ஷிவ்பால் சிங் கலந்து கொண்டார். 

    இவர் தனது முதல் வாய்ப்பில் 76.40 மீட்டரும், இரண்டாவது வாய்ப்பில் 74.80 மீட்டரும், மூன்றாவது வாய்ப்பில் 74.81 மீட்டரும் எறிந்தார். இதனால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார்.
    டோக்கியோ ஒலிம்பிக்கின் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பிலேயே அபாரமாக செயல்பட்டார்.
    டோக்கியோ:

    32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன.

    இன்று காலை ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிச்சுற்று போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார். 

    இவர் தனது முதல் வாய்ப்பில் 86.65 மீட்டர் தூரம் எறிந்து அசத்தினார். இதன்மூலம் இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெற்றார்.

    ஆகஸ்ட் 7-ம் தேதி ஈட்டி எறிதலுக்கான இறுதிச்சுற்று போட்டி நடைபெற உள்ளது.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட் கைப்பற்றிய வங்காளதேச வீரர் நசும் அகமது ஆட்ட நாயகன் விருது வென்றார்.
    டாக்கா:

    ஆஸ்திரேலிய அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த வங்காளதேசம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஷகிப் அல் ஹசன் 36 ரன்னும், மொகமது நயீம் 30 ரன்னும் எடுத்தனர்.

    36 ரன் எடுத்த ஷகிப் அல் ஹசன்

    ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டும், ஸ்டார்க் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ஆனால் வங்காளதேச அணியினரின் துல்லிய பந்துவீச்சில் ஆஸ்திரேலியா திணறியது. 

    11 ரன்னுக்குள் முன்னணி 3 வீரர்களை வெளியேற்றினர். தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

    இறுதியில், ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் மிட்செல் மார்ஷ் 45 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசம் அபார வெற்றி பெற்றது.

    வங்காளதேசம் சார்பில் நசும் அகமது 4 விக்கெட்டும், முஸ்தபிசுர் ரகுமான், ஷோரிபுல் இஸ்லாம் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்த வெற்றியின் மூலம் வங்காளதேசம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
    திண்டுக்கல் அணிக்கு எதிராக ஆடிய நெல்லை அணியின் சஞ்சய் யாதவ் அதிரடியாக ஆடி 15 பந்துகளில் 3 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 31 ரன்கள் எடுத்தார்.
    சென்னை:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 21வது ஆட்டம் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற நெல்லை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
     
    முதலில் பேட் செய்த திண்டுக்கல் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் சேர்த்தது.

    ராஜாமணி சீனிவாசன் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 60 ரன்னில் அவுட்டானார். விவேக் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    நெல்லை சார்பில் அதிசயராஜ் 2 விக்கெட்டும், ஹரிஷ், திரிலோக் நாக், சஞ்சய் யாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது.

    தொடக்க ஆட்டக்காரர் பாபா அபராஜித் சிறப்பான தொடக்கம் கொடுத்தார். அவர் 44 ரன்னில் ஆட்டமிழந்தார். சஞ்சய் யாதவ் 32 ரன்கள் சேர்த்தார்.

    இறுதியில், நெல்லை அணி 5 விக்கெட் இழப்புக்கு வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்தது. நெல்லை அணி பெற்ற இரண்டாவது வெற்றி இதுவாகும்.

    திண்டுக்கல் அணி சார்பில் ரங்கராஜ் சுதீஷ், விக்னேஷ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
    பெண்களுக்கான 200மீ ஓட்டப் பந்தயத்தில் நமிபியா வீராங்கனை வெள்ளிப் பதக்கமும், அமெரிக்காவின் கேப்ரியல் தாமஸ் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
    டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று பெண்களுக்கான 200மீ ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. இறுதிச்சுற்றில் 8 வீராங்கனைகள் பதக்கத்திற்காக ஓடினார்கள். இதில் ஜமைக்கா வீராங்கனை எலைன் தாம்சன்- ஹெரா பந்தய தூரத்தை 21.53 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். நமிபியா வீராங்கனை கிறிஸ்டைன் 21.81 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். அமெரிக்க வீராங்கனை கேப்ரியல் 21.87 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

    800மீ ஓட்டத்தில் வென்றவர்கள்

    பெண்களுக்கான 800மீ ஓட்டப் பந்தயத்தில் அமெரிக்க வீராங்கனை எதிங் மு பந்தய தூரத்தை 1:52.21 நேரத்தில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார். பிரிட்டன் வீராங்கனை கீலி ஹாட்கின்சன் 1:55.88 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். மற்றொரு அமெரிக்க வீராங்கனை ரயேவின் ரோஜர்ஸ் பந்தய தூரத்தை 1:56.81 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
    ×