என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • ராகு, கேதுவின் நல்லாசி பெற்றவர்கள். எதிரிகளை வெல்லும் வலிமை பெற்றவர்கள்.
    • குரு பகவானின் 5, 9 எனும் சிறப்புப் பார்வை பெறும் போது மட்டும் ராகு கேதுக்கள் சுபத்தன்மை பெற முடியும்.

    சாயா கிரகங்களான ராகு கேதுக்களே சர்ப்பம் என்று அழைக்கப்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் ராகு கேதுக்கள் அமர்ந்த இடமே ஜாதகரின் யோகம் மற்றும் அவயோகத்தை நிர்ணயிக்கின்றன. ஏனெனில் ஒருவரின் ஜாதகத்தில் உள்ள கர்ம வினைப் பதிவை சுய ஜாதகத்தில் உள்ள ராகு கேதுக்களே வெளிப்படுத்துகின்றன. அதனால் தான் மீள முடியாத வினைப்பதிவில் இருந்து விடுபட சர்ப்ப வழிபாட்டை ஜோதிட முன்னோடிகள் வலியுறுத்தி வந்தனர்.

    யார் இந்த ராகு/கேதுக்கள்?

    விஞ்ஞான ரீதியான விளக்கம்

    பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு குரியனையும் சுற்றுகிறது. ஏனைய கிரகங்களும் அவ்வாறே சூரியனை சுற்றி வருகிறது. பூமியின் துணைகிரகமான சந்திரன் பூமியைச் சுற்றிக் கொண்டே சூரியனையும் சுற்றுகிறது. அவ்வாறு சுற்றி வரும் போது பூமியும் சந்திரனும் ஓரே நேர்கோட்டில் வரும் போது ஓன்றையொன்று இரண்டு இடங்களில் வெட்டிக் கொள்ளும் வெட்டுப்புள்ளியானது ஒன்றுக்கொன்று நேர் எதிரே அமைந்து இருக்கும். அந்த வெட்டுப்புள்ளியே ராகு, கேதுக்கள்.

    சந்திரனின் வடக்கு நோக்கிய பயணத்தின் போது ஏற்படும் வெட்டுப்புள்ளி ராகுவாகவும் தெற்கு நோக்கிய பயணத்தின் போது ஏற்படும் வெட்டுப்புள்ளி கேதுவாகும். இந்த இரு புள்ளிகளாகிய ராகுவும் கேதுவும் ஒளியில் ஏற்படும் நிழல் கிரகம் என்பதால் இவற்றை சாயா கிரகங்கள் என்கிறோம். நிழல் எவ்வாறு எதிர் திசையில் நகர்கிறதோ அவ்வாறே ராகு கேதுக்கள் மற்ற கிரகங்கள் சுற்றும் திசைக்கு எதிரில் சுற்றுகிது. சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றின் ஈர்ப்பு சக்தி ஒருங்கிணைப்பால் பிறக்கின்ற விசை சக்தியான ராகு, கேதுக்கள் மனிதர்களின் வாழ்க்கை ஓட்டத்தை மாற்றும் அளவிற்கு பூமியின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

    புராண விளக்கம்

    தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து திருப்பாற்கடலை கடைந்து பெற்ற அதத்தை மகாவிஷ்ணு மோகினி வடிவில் வந்து தேவர்களுக்கு மட்டுமே அதிகமாக பரிமாறிக் கொண்டு இருந்ததை கண்ட "ஸ்வர்பானு" எனும் அசுரன் தன் உருவத்தை தேவர் போல் மாற்றிக் கொண்டு தேவர்களுடன் அமர்ந்து அமுதத்தை உண்டார். இதனை பார்த்த சூரியனும், சந்திரனும் மோகினி வடிவில் இருந்த மகாவிஷ்ணு விடம் கூற தன்னிடம் இருந்த சட்டுவத்தால் தலையை துண்டித்தார். தலையும் உடலும் பிரிந்தாலும் அமுதம் உண்ட காரணத்தால் அவன் இறக்கவில்லை. பின்பு மனம் இரங்கிய மகாவிஷ்ணு உடலை ஒருங்கிணைத்த போது அவசரத்தால் மனித தலை பாம்பு உடல், பாம்பு தலை மனித உடல் என்று இணைத்து விட்டார். மனித தலை, பாம்பு உடல் ராகு என்ற தன்மையும், பாம்பு தலை, மனித உடல் கேது என்ற தன்மையும் பெற்று அழியா தன்மை அடைந்தனர். பூஜை பலத்தால் நிழல் கிரகங்களாக நவகிரக அந்தஸ்து பெற்றனர்.

    சர்ப்ப தோஷத்தை கண்டறியும் எளிய வழி முறைகள்

    சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு சந்தேக புத்தி இருக்கும். எதையும் திருட்டுத்தனமாக செய்வார்கள். அதீத தாம்பத்ய உணர்வு, ரகசிய உறவு, நாக்கை நீட்டிக் கொண்டே இருப்பவர், நாக்கை நீட்டி உண்பவர் , வஞ்சம் தீர்ப்பவர்களாக இருப்பார்கள். மிகச் சுருக்கமாக பிள்ளைகளால் பிரச்சினைகளை, மன உளைச்சலை அனுபவிப்பவர்களுக்கு சூட்சம முறையான சர்ப்ப தோஷம் நிச்சயம் இருக்கும்.


    சர்ப்பங்களால் ஏற்படக்கூடிய தோஷங்கள்

    ஒருவரின் ஜாதகத்தில் லக்னம் ஏழாமிடம், இரண்டு எட்டா மிடம் ஆகிய இடங்களில் அமர்வதால் ஏற்படும் தோஷம் சர்ப்ப தோஷம் அல்லது நாக தோஷம் அல்லது ராகு கேது தோஷம்.

    3-ல் இருந்தால் சகோதர வழி தோஷம்

    4-ல் இருப்பதால் ஏற்படுவது மாதூர் தோஷம், சொத்து பிரச்சினை

    5-ல் இருப்பதால் ஏற்படுவது புத்திர தோஷம்

    9-ல் இருந்தால் பிதுர் தோஷம்

    ராகு கேது தங்களுடன் சேர்ந்த கிரகங்களின் காரகத்துவங்களையும், அதன் ஆதி பத்திய காரகத்துவங்களையும் பாதிப்படைய செய்வதனால் ஏற்படுத்தும் சர்ப்ப தோஷங்கள். ராகு கேது தங்களின் நட்சத்திரங்களை மற்ற கிரகங்களுக்கு கொடுப்பதன் மூலம் ஏற்படும் தோஷங்கள். ராகு கேதுக்கள் அசுப கிரகங்களின் ராசி யில் உள்ள போது ஏற்படுத்தும் தோஷங்கள்.

    ராகு கேது உச்சம் பெற்று அதன்மூலம் ஏற்படும் தோஷங்கள். இங்கே கூறப்படாத இடங்களான 6, 10, 11, 12 ஆகிய இடங்களில் இருந்தால் தோஷங் களை ஏற்படுத்துவதில்லை. என்றாலும் அவர்களின் காரகத்துவம் சார்ந்த அவர் பெற்ற சுப அசுப தன்மையின் அடிப்படையில் அந்த பாவக காரகத்துவங்கள் பாதிப்படையும். ராகு, கேதுக்கள் சுபத் தன்மை அல்லது பலம் இழக்கும் அமைப்புகள் ராகு, கேது பகை நீசமாக இருந்தால் மட்டுமே உடன் இணையும் கிரகங்கள் பாதிப்படையாது. ஆனாலும் நீசமான சர்ப்ப கிரகங்கள் ஏதாவது நீசபங்க விதிகளின் படி நீசபங்கம் ஆனால் ராகு கேதுக்கள் பலம்பெற்று விடும்.

    குரு பகவானின் 5, 9 எனும் சிறப்புப் பார்வை பெறும் போது மட்டும் ராகு கேதுக்கள் சுபத்தன்மை பெற முடியும். அதாவது குருவோடு ராகு/கேதுக்கள் இணையும் போது அவர்கள் குரு சண்டாள யோகம் ஏற்படுத்தி குருவைப் பார்க்கிறார்கள்.

    குரு ராகுவையோ கேதுவையோ சமசப்த மமாக பார்த்தால் குருவின் பாதி பலத்தை ராகு-கேதுக்கள் எடுத்துக்கொண்டு குருவை பலமிழக்கச் செய்து விடுகிறார்கள். ஆக குரு பகவானின் ஐந்து, ஒன்பதாம் பார்வைகள் ராகு கேதுக்களுக்கு கிடைக்கும் போது மட்டுமே ராகு/கேதுக்கள் சுபத்தன்மை பெறுகிறார்கள்.

    ராகு கேதுகள் எந்த கிரகத்துடனும் சேராத போதும், ராகு கேதுவின் நட்சத்திரத்தில் வேறு கிரகங்கள் இல்லாதபோதும் பலம் இழக்கிறார்கள்.

    லக்ன சுபர்களின் சாரம் பெரும் போதும் சுபர்களால் பார்க்கப்படும் போதும் சுபர்கள் உடன் இணையும் போதும் திதி சூனியம் அடைந்த கிரகத்தின் சாரம் பெறும்போதும் தோஷமுள்ள இடத்தில் இருந்து தோஷ மில்லாத இடத்திற்கு பாவகமாற்றம் அடையும் போது பலம் இழக்கும்.

    6 12-ல் உச்சம் பெறாமல் அமரும்போதும் 5, 9-ல் பலம் இன்றி அமரும்போதும் 10, 11 பாவகத்தில் அமரும் போதும் முழு தீய பலன்களையும் தருவதில்லை.

    நன்மை மட்டுமே செய்யும் ராகு-கேது அமைப்புகள்.

    ராசி அதிபதியோடு சேர்ந்தாலும் பார்த்தாலும், ஆட்சி உச்சம் பெற்றாலும் ராகு, கேது நின்ற நட்சத்திர அதிபதிகள் ஆட்சி ,உச்சம் பெற்றாலோ லக்னத்திற்கு திரிகோண, கேந்திரத்தில் அமைந்தாலோ ராகு/கேதுக்கள் சுப பலனை அதிகமாகவும், அசுப பலன்களை குறைவாகவும் செய்கிறது.


    ராகு, கேதுவின் நல்லாசி பெற்றவர்கள். எதிரிகளை வெல்லும் வலிமை பெற்றவர்கள்.சர்ப்ப தோஷத்தை 4 வகையாக பிரிக்கலாம்

    உத்தம சர்ப்ப தோஷம்

    இந்த அமைப்பு உள்ள ஜாதகருக்கு வெளிப்பார்வையில் தோஷம் உள்ள ஜாதகம் போல் இருந்தாலும் எந்த தீங்கும் செய்யாது. இவர்களின் வம்சாவளியினர் சர்ப்பங்களை ஆராதனை செய்பவர்கள். இவர்களின் குல தெய்வம் கூட புற்றுடன் கூடிய அம்மனாக இருக்கும்.

    அதம சர்ப்ப தோஷம்

    இந்த வகை சர்ப்ப தோஷம் குழந்தை பிறப்பிற்கு முன்பும் பின்பும் சொல்ல முடியாத வகையில் பிரச்சினை தரும். இவை முழுக்க முழுக்க முன் ஜென்மத்தின் கரும வினைப் பதிவே.

    கால சர்ப்ப யோகம்:

    கால சர்ப்ப யோகம் என்பது லக்னம் உட்பட அனைத்து கிரகங்களும் ராகு, கேதுவின் பிடியில் அமைந்து இருக்கும். எல்லா கிரகங்களும் ராகுவை நோக்கியே செல்லும். தனித்த ராகு, கேதுவாகவோ, வேறு கிரகங்கள் ராகு, கேதுவின் நட்சத்திரத்தில் இல்லாத போதும் சுப பலனை நடத்திக் கொண்டே இருக்கும் இதை விபரீத ராஜ யோகம் என்றும் கூறலாம்.

    இவர்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் பிரம்மாண்டத்தை ஏற்படுத்தும். அதி நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சம்பாதிப்பவர்கள். இந்த அமைப்பு பெற்ற ஜாதகத்தில் ராகு, கேதுவிற்கு லக்ன சுபர்களின் தொடர்பு இருக்கும். ராகு, கேதுவின் தசை புத்தி காலத்தில் மிகவும் சிறப்பான பலனை அடைகிறார்கள். உரிய வயதில் கல்வி, திருமணம், குழந்தை பேறு, தொழில் வாய்ப்பு அமையும். இவர்கள் ராகு, கேதுவின் நல்லாசி பெற்ற வர்கள். எதிரிகளை வெல்லும் வலிமை பெற்றவர்கள்.

    காலசர்ப்ப தோஷம்:

    லக்னம் உட்பட அனைத்து கிரகங்களும் ராகு, கேதுவின் பிடியில் இருக்கும். அனைத்து கிரகங்களும் கேதுவை நோக்கி செல்லும். தோஷம் 33 வயது வரை மட்டுமே அதன் பிறகே திருமணம், குழந்தை பாக்கியம், தொழில் போன்ற அனைத்து சுப நிகழ்வும் ஏற்படும். நாள்பட்ட திருமணம் அமைந்த போதும் வாழ்க்கை நிம்மதிக் குறைவாகவே உள்ளது. இவர்கள் 4 அடி ஏறினால் 10 அடி சறுக்கும்.

    பரிகாரம் சர்ப்ப கிரகங்களால் சுப பலன்களை அனுப விப்பவர்கள் மேலும் சுபத்தை அதிகரிக்க துன்பங்களை அனுபவிப்பவர்கள் இன்னல்களில் இருந்து விடுபட புற்று வழிபாடே சிறப்பானது. ஒவ்வொரு புற்றில் இருக்கும் சர்ப்பத்திற்கும் ஒவ்வொரு வித சக்தி உண்டு. 10 ஆண்டுகளைக் கடந்த சர்பங்கள் தெய்வத்தன்மை பெறுகின்றன. அந்த சர்பங்களின் உடலில் சித்தர்கள் வாசம் செய்கிறார்கள். அந்த புற்றுக்களில் செய்யும் வழிபாடுகள் காரியசித்தி தரும். மேலும் புற்றுக்குள் பால் ஊற்றாமல் மண் பாத்திரத்தில் ஊற்றுங்கள். புற்றுக்குள் இருக்கும் சர்பத்திற்கு எந்த இடையூறும் இல்லா வகையில் வழிபாடு செய்ய வேண்டும்.முறையான புற்று வழிபாடுக்கு பல தலைமுறை சர்ப்ப தோஷத்தை நிவர்த்தி செய்யும் வலிமை உண்டு.

    • பல ஆண்டுகள் வேதாளம் சுடுகாட்டில் முருங்கை மரத்தில் தலைகீழாக தொங்கிய படி இருந்தது.
    • இசையால் ஈர்க்கப்பட்ட விக்கிரமாதித்தன் தேவதத்தை இருக்கும் இடத்திற்கு வந்தான்.

    நம் வீட்டில் பெரியவர்கள் அதிகமாக அடம் பிடிப்பவர்களைப் பார்த்து 'வேதாளம்' என்றும் 'வேதாளம் முருங்கை மரம் ஏறி விட்டது' என்றும் கூறுவார்கள். யார் அந்த வேதாளம்? எதற்கு அவர் முருங்கை மரத்தில் தொங்குகிறார்?

    புட்பதத்தன் என்பவரும் அவரது மனைவி தேவதத்தையும் தேவ லோகத்தில் தேவர்களுக்கு ஆடை தைத்துக் கொடுக்கும் பணியில் இருந்தனர். புட்பதத்தனுக்கு ஒரு ஆசை இருந்தது. ஒரு அழகான ஆடையினை சிவபிரானுக்கும் பார்வதி தேவிக்கும் தன் கையால் தைத்து கொடுக்க வேண்டும் என்று ஆசை பட்டான். புட்பதத்தன் அது போலவே ஒரு அழகிய ஆடையை தைத்து கைலாயம் சென்றான். அங்கு சென்றவுடன் ஈசனைப் பார்த்த மகிழ்ச்சி. அப்படியே பார்த்தபடி இருந்து விட்டு ஆடையை கொடுக்க மறந்து விட்டான். திரும்பி வரும் வழியில் ஆடையை கொடுக்க மறந்து விட்டோமே என்று சொல்லி திரும்பி கைலாயம் சென்றான். அதற்குள் மிகவும் இருட்டி விடவே கைலாய வாயிலேயே தூங்கி விட்டான்.

    அன்று இரவு சிவபிரான், பார்வதி தேவியிடம் ஒரு முக்கியமான தேவ ரகசியம் ஒன்றினைச் சொன்னார். அதனை வாயிலில் படுத்திருந்த புட்பதத்தன் கேட்டு விட்டான். மறுநாள் காலையில் ஆடையினை சிவபிரானிடம் கொடுத்துவிட்டு தான் தவறுதலாக அந்த ரகசியத்தை கேட்டதற்காக மன்னிப்பு கேட்டான். சிவபிரான் கோபப்பட்டார். இருப்பினும் புட்பதத்தன் உண்மையை கூறி விட்டான் என்பதற்காக அவனை மன்னித்து இந்த ரகசியத்தினை யாரிடமும் கூறக்கூடாது என்று கூறி அனுப்பி வைத்தார்.

    திரும்பி வந்த நாளில் இருந்து புட்பதத்தன் மன நிம்மதி இல்லாதது போல உணர்ந்தான். தவித்தான். கவலை கொண்ட அவனை மனைவி தேவதத்தை தன் கணவனிடம் அவனது மன அழுத்தத்திற்கு காரணம் என்ன என்று கேட்டாள். பல நாள் அவளது கேள்வியினை தவிர்த்த புட்பதத்தன் ஒருநாள் தான் கேட்ட தேவ ரகசியத்தினை கூறி விட்டான். இதனை உணர்ந்த சிவபிரான் புட்பதத்தனை வேதாளமாக மாறி முருங்கை மரத்தில் தொங்கி கேள்விகள் கேட்டபடி இருக்கவும் அவன் மனைவி தேவதத்தை இரவில் வனத்தில் வீணை வாசித்து பிறரை தொந்தரவு செய்தபடியும் இருக்க சபித்தார். பல ஆண்டுகள் வேதாளம் சுடுகாட்டில் முருங்கை மரத்தில் தலைகீழாக தொங்கிய படி இருந்தது. அங்கு ஒரு முனிவன் வந்தான். முனிவர் என்று கூறாமல் முனிவன் ஒருவன் என்று கூறுவதன் காரணம் அவர் தீய எண்ணம் கொண்டு தவம் புரிபவதால்தான். முனிவன் வேதாளத்தினை தன் அடிமையாக்கிக் கொள்ள நினைக்கிறான். அதன் மூலம் உலகை ஆள வேண்டும் என்று நினைக்கிறான்.

    வேதாளத்தின் சக்திகளை தான் பெற வேண்டும் என்ற தீய ஆசை முனிவனுக்கு எழுகின்றது. அதற்காக தவமும் செய்கிறான். 1000 தலைகளை காணிக்கையாக தனக்கு கொடுத்தால் வேண்டிய வரத்தினை அளிப்பதாக காளிதேவியும் கூறினாள். கேட்ட முனிவனும் 999 மன்னர்களை ஏமாற்றி காளிக்கு அவர்களது தலையை பலி கொடுத்தான்.


    விக்கிரமாதித்தன் என்ற அரசனின் தலையை ஆயிரமாவது எண்ணிக்கையாக பலி கொடுக்க எண்ணினான் முனிவன். விக்கிரமாதித்தனிடம் சென்று காட்டில் உள்ள காளி கோவிலை வணங்கினால் உன் நாடு வளம் பெறும் என்று கூறினான். விக்கிரமாதித்தனும் தன் நாடு வளம் பெறும் என நம்பி முனிவனுடன் சென்றான். இருட்டிவிடவே கோவில் மண்டபத்தில் ஓய்வெடுத்தான். முனிவனும் படுத்து உறங்கிவிட்டான். இரவில் புட்பதத்தனின் மனைவி வீணை வாசித்து கொண்டிருந்தாள். இசையால் ஈர்க்கப்பட்ட விக்கிரமாதித்தன் தேவதத்தை இருக்கும் இடத்திற்கு வந்தான். தேவதத்தையிடம் நீ யார் ஏன் இரவில் வீணை வாசிக்கிறாய் எனக் கேட்டான்.

    தேவதத்தையும் அனைத்தையும் விவரமாகக் கூறினாள். இதனை கேட்ட விக்கிரமாதித்தன் இதிலிருந்து நீங்கள் விடுபட பிராயசித்தம் என்ன? என்று கேட்டான். தேவதத்தை தானும் முருங்கை மரத்தில் தொங்கும் தன் வேதாள கணவனும் காளி கோவில் சென்று வழிபட்டால் இந்த சாபம் நீங்கும் என்றும் ஆனால் வேதாளத்தினை முருங்கை மரத்தில் இருந்து இறக்கி செல்வது கடினம் என்றும் கூறினாள். அவர்களுக்கு கண்டிப்பாய் உதவ விக்கிரமாதித்தன் முடிவு செய்தான். முருங்கை மரத்தில் உள்ள வேதாளத்தினை முதுகில் சுமந்து நடக்க ஆரம்பித்தான். ஆனால் வேதாளமோ விக்கிரமாதித்தனிடம் ஒரு கட்டளை வைத்தது. நான் உன்னை கேள்விகள் கேட்பேன். நீ சரியான பதில் சொன்னால் நான் மீண்டும் முருங்கை மரம் ஏறி விடுவேன். தெரிந்தும் நீ பதில் சொல்லாவிட்டால் உன் தலை வெடித்து விடும் என்றது. விக்கிரமாதித்தன் தலை வெடித்து விடுமோ என்ற பயத்தில் பதில் சொல்ல. வேதாளம் முருங்கை மரம் ஏறிவிடும். இப்படியே 24 முறை நடந்தது. கடைசியில் எப்படியோ விக்கிரமாதித்தன் சமாளித்து காளி கோவிலை அடைந்து விட்டான். ஆயிரமாவது தலையினை முனிவனால் கொண்டு வர முடியாததால் காளி முனிவனின் தலையை வெட்டினாள். புட்பதத்தனும், தேவதத்தையும் சாப விமோசனம் பெற்றனர். காளி தேவி விக்கிரமாதித்தனை பார்த்து உனக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்க விக்கிரமாதித்தன் முனிவரால் மரணமடைந்த 999 மன்னர்களும் மீண்டும் உயிர்பெற வேண்டும் என வேண்டினான். காளிதேவியும் அப்படியே அருள 999 மன்னர்களும் உயிர் பெற்றனர்.

    கேரள வழிபாட்டு முறையில் காளி வேதாளத்தின் மீது அமர்ந்து இருப்பது போல ரங்கோலி கோலங்கள் இருக்கும். பொதுவில் மோதிரம், மந்திரம் போன்ற பிரிவுகளின் தலைவர் கந்தர் எனப்படும் முருகர்தான். முருக ஜபம் செய்த ஒருவருக்கு தீய சக்திகளின் தாக்குதல் நீங்கும்.

    உங்களுடன் ஓர் அரிய கோவிலைப் பற்றி நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். சிலர் அறிந்து இருக்கும் தகவலாக கூட இருக்கலாம். இருப்பினும் விருப்பமுடைவோர் அனைவரும் அறிந்து கொள்வதற்காக எழுதப்படுகின்றது.

    கமலி ஸ்ரீபால்

    கமலி ஸ்ரீபால்

    தமிழகத்தில் செய்யூர் கந்தசாமி கோவில் என்ற ஒரு கோவில் இருக்கிறது. சென்னையில் இருந்து சுமார் 82.85 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

    இங்கு பிரதான தெய்வம் முருகபிரான். இதன் வரலாறு என்று பார்க்கும்பொழுது சூரனை அழிக்க முருகபிரான் சிக்கல் ஊரில் பார்வதி தேவியிடம் வேல் பெறுகின்றார். திருச்செந்தூரில் சூரனை சம்காரம் செய்கின்றார். இதில் சிவபெருமானின் பூத கணங்கள் முருக பிரானுக்கு உதவியாய் இருந்தன. முருகபிரான் சூரனையும் அவனது மகன் ஹிரண்யனையும் அழித்த தோஷம் நீங்க சிவ பெருமானுக்கு பூஜை செய்யத் தொடங்கினார். சிவபிரானை போல சுந்தரர் ரூபத்தில் பூஜை செய்தார். மகனே தந்தைக்கு சேவை செய்ததால் இந்த இடம் செய்யூர் என்றாயிற்று.

    இக்கோவிலில் பிரம்மா சாஸ்தா, விஷ்ணு என பல சந்நதிகள் உள்ளன. இதுவே இந்த கோவிலின் சிறப்பினை கூட்டுவதாக அமைந்துள்ளது. இதனினும் கூடுதலாக பெருமை சேர்க்க இந்த கோவிலுக்கு ஒரு தனி சிறப்பு உள்ளது. இந்த சிறப்பு உலகில் வேறு எந்த கோவிலிலும் இல்லை எனலாம். இந்த கோவில் பிரகாரத்தில் 27 நட்சத்திரங்களுக்கான 27 வேதாளங்கள் உள்ளன. இந்த வேதாளங்கள் முருக பிரானுக்கு யுத்தத்தில் உதவியுள்ளது.

    இந்த கோவிலில் தேய்பிறை அஷ்டமி அன்று சிலர் 4 மணிக்கு மேல் வருவதனை விரும்புகின்றனர். சிவபிரான், மீனாட்சி அம்மனை வணங்கி, முருக பிரானை வணங்கி மேலும் அங்கு எழுந்தருளி உள்ள தெய்வங்களை வணங்கி, கால பைரவரை பூசித்து, பின் அவரவர் நட்சத்திரத்திற்குரிய வேதாளத்திற்கு பூ சாற்றி அர்ச்சனை செய்து, விளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். இவ்வாறு செய்யும் பொழுது அவரவரின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றுவதாக கூறப்படுகின்றது. தேய்பிறை அஷ்டமி அன்று கோவில் அர்ச்சகர், விநாயகர் பூஜையில் ஆராதித்துபின் வேதாளங்களுக்கு அர்ச்சனை செய்கின்றார். மற்ற நாட்களில் செல்பவர்கள், தானே தீபம் ஏற்றி வழிபடலாம். இந்த வேண்டுதலை முருக பிரான் நிறை வேற்றி வைக்கின்றார் என்பது ஐதீகம். நம்பிக்கை உடையவர்களுக்கான கட்டுரையாக இந்த செய்திகள் எழுதப்பட்டுள்ளது.

    ஒருவருடைய நேரத்தையும், சக்தியையும் டி.வி.யை அதிக நேரம் பார்ப்பதிலும், மிக அதிகமாக யோசிப்பதிலும், உபயோகமற்ற தவறான உறவுகளுடன் செலவழிக்காமலும் இருந்தாலே அவர்கள் முன்னேற்றம் அடைவர்.

    • சினிமா படப்பிடிப்பு என்றதால் அந்த கிராமத்து ஜனங்களும் எங்களை பார்க்க வருவார்கள்.
    • கோபுரத்தின் உச்சியில்தான் காட்சிகளை படமாக்கப் போகிறோம் என்றார்கள். கோபுரத்தை அண்ணாந்து பார்த்தேன். தலை சுற்றாத குறை தான்.

    தஞ்சாவூரு மண்ணு எடுத்து

    தாமிரபரணி தண்ணிய விட்டு

    சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்மை

    எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா

    அடி அத்தனையும் உன்னைப் போல மின்னுமா?

    தந்தானே தந்தானே

    தந்தானக்குயிலே....

    -இந்த பாடலை இன்று கேட்டாலும் கைகள் தாளம் போடும். இது வெறும் பாடல் அல்ல. இந்த மண்ணின்-பெண்ணின் மகத்துவத்தை வைரமுத்து சார் வார்த்தைகளால் பொம்மை போல் வடித்து கேட்பவர் கண்களின் முன்பு ஆடவும் விட்டிருப்பார்.

    தஞ்சாவூர் பொம்மை தலையாட்டும்தான். அதற்காக என்னையும் ஒரு பொம்மையாக்கி தரையில் நின்று ஆட சொன்னால் பரவாயில்லை. கோபுரத்தின் உச்சி மீது ஏற்றி விட்டு ஆடும்மா என்றால் எப்படி ஆடுவது...?

    அப்படியும் ஆடினேன்... ஆட வைத்துவிட்டார் சேரன். பாரதி கண்ணம்மாவுக்கு பிறகு மீண்டும் சேரனின் 'பொற்காலம்' படத்தில் ஹீரோயினாக நடித்தேன்.

    படத்தில் 'மரகதம்' என்பது என் பெயர் படப்பிடிப்புக்காக மைசூரில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் ஒரு சிறு கிராமத்தை தேர்வு செய்திருந்தார்கள். மொத்தமே சுமார் 50 வீடுகள்தான் அந்த கிராமத்தில் இருந்தது.

    அங்கேயே செட் போட்டு படப்பிடிப்பு நடந்தது. சினிமா படப்பிடிப்பு என்றதால் அந்த கிராமத்து ஜனங்களும் எங்களை பார்க்க வருவார்கள்.

    அந்த கிராமத்தில் பழமையான கோவிலும், அதன் பிரமாண்ட கோபுரமும் அழகாக இருந்தது. அதை பார்த்தால் படமாக்காமல் இருப்பாரா சேரன்...?

    'சிங்குச்சா சிங்குச்சா…

    செகப்பு கலரு சிங்குச்சா…

    பச்சை கலரு சிங்குச்சா…

    மஞ்சள் கலரு சிங்குச்சா… இந்த பாடல் பட்டி தொட்டியெல்லாம் ஆட வைத்த பாடல். ஆனால் அந்த பாடலுக்கு ஆடுவதற்கு நான் பட்டபாடு இருக்கிறதே.. அப்பப்பா..,

    அந்த கோவில் கோபுரத்தில் படமாக்க முடிவு செய்துவிட்டார். படக்குழுவினருடன் கோவில் கோபுரம் அருகே சென்றேன்.


    இந்த கோபுரத்தின் உச்சியில்தான் காட்சிகளை படமாக்கப் போகிறோம் என்றார்கள். கோபுரத்தை அண்ணாந்து பார்த்தேன். தலை சுற்றாத குறை தான்.

    பொதுவாக காட்சி களில் பின்னணியில் தான் கோபுரங்களை காட்டுவார்கள். சேரன் இப்படி கோபு ரத்தின் மீது நின்று ஆட வைத்து காட்சியாக்க நினைக்கிறாரே என்று மனதுக்குள் நினைத்து கொண்டேன். எனது தயக்கத்தை புரிந்து கொண்டு 'இதுவரை யாரும் இப்படி காட்சி வைத்ததில்லை. நன்றாக இருக்கும் பாருங்கள்' என்று என்னையும் உசுப்பேற்றினார். சரி. இந்த ரிஸ்க்கையும் எடுப்போமே என்று நானும் தயாரானேன்.

    கோபுரத்தின் மீது ஏறணுமே..? எப்படி ஏறுவது...? கோபு ரத்தின் சிற்பங்களை பிடித்து பிடித்து ஏற முடியாது. கடை சியில் கிரேன் கொண்டு வந்தார்கள். அதன் தொட் டிக்குள் ஏறிக்கொண்டேன்.

    கோபுர உச்சியை நோக்கி கிரேன் உயர் ந்தது. அந்த ரத்தில் நான் தனியாக நின்றது போல் இருந்தது. கோபுரத்தில் ஏறியதும் கீழே பார்த்தால் பயம்... ஆட வேண்டிய இடமோ ஒரு அடி அகலம் தான் இருக் கும்.... லேசாககால் தவறினால் அவ்வளவுதான்! தவறி விழுந்தால் பாதுகாக்க எந்த ஏற்பாடும் கூட கிடையாது.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில் சிங்குச்சா சிங்குச்சா என்று ஆட வேண்டுமென்றால் எப்படி இருக்கும்? அவருக்கும் ஆர்வ கோளாறு. எனக்கும் அந்த வயதில் ஆர்வக் கோளாறு. மனதில் தைரியத்தை வரவழைத்து கொண்டு ஆடினேன்.

    படம் வெளி வந்த போது சேரன் சொன்னது போலவே அந்த காட்சி நன்றாக இருந்தது. எல்லோராலும் பாராட்டப்பட்டது. காட்சி மட்டுமல்ல இந்த படத்தின் பல காட்சிகள் எனக்கு புதுப் புது அனுபவத்தை கொடுத்தன. படத்தில் நான் தறி நெசவு செய்பவள்.

    நகர வாசியான எனக்கு இந்த தொழில்கள் தெரியாது. பெண்கள் தறி நெய்வதை பார்க்கும் போதே ஆச்சரியமாக இருந்தது. அந்த காட்சியில் நடிக்க வேண்டு மென்றால் நெசவு பற்றி தெரிந்து கொள்ள வேண் டும் என்ப தற்காக அந்த கிரா மத்து பெண்க ளிடம் சென்று தறி நெய்யும் இடத்தில் அமர்ந்து பார்த்தேன். அவர்களின் கையும், காலும் ஒரே நேரத்தில் மின்னல் வேகத்தில் செயல் பட்டதை பார்த்து ஆச்சரியப்பட்டேன். தறி குழிக்குள் என்னை நிற்க வைத்து கற்று தந்தார்கள். காரின் ஆக்சி லேட்டர் போல் இரண்டு மிதி கட்டைகள்... ஒரே நேரத்தில் அபாய சங்கிலியை பிடித்து இழுப்பது போல் மேல் பகுதியில் உள்ள இழுவையை வலது கையால் இழுத்த படியே மிதிக்கும் கட்டையையும் மிதிக்க வேண்டும்.


    ஒவ்வொரு பக்கம் மிதிக்கும் போதும் நூலுடன் ஓடம் அங்கும் இங்கும் ஓடும். அதில் இருந்து வெளிவரும் நூல் தறியில் துணியாகி கொண்டிருக்கும். ஓடம் ஒவ்வொரு பக்கம் செல்லும் போது விழுதை பிடித்து முன்பக்கம் இழுத்து அடிக்க வேண்டும். அப்போதுதான் நூல் நன்றாக நெருங்கும், துணி நன்றாக இருக்கும். மிகவும் வித்தியாசமான தொழில். உடலின் அனைத்து பாகங்களுக்கும் பயிற்சியும் கிடைக்கும்.

    நான் அந்த காட்சியில் நடித்ததை பார்த்து உண்மையாகவே நெசவு தொழிலில் ஈடுபடும் பெ ண்களை போலவே இருந்ததாக எனக்கு கற்றுத் தந்த பெண்கள் பாராட்டி னார்கள். இந்த படத்தில் ஹீரோவாக வரும் முரளி மண் பாண்டம் செய்யக் கூடியவர்.

    அவர் என்னை நினைத்தபடி ஒரு பானையை செய்வார். அது கோணல் மாணலாக இருக்கும். ரொம்பவே வெயிட்டாகவும் இருந்தது. மண் பானையை இடுப்பில் வைத்து நடந்து செல்வதே கஷ்டம். அதிலும் இந்த மாதிரி குடத்தை தண்ணீருடன் இடுப்பில் எடுத்து செல்ல வேண்டும். கோணல் மாணலாக அந்த குடம் இடுப்பில் நிற்கவில்லை. இடுப்பில் வைத்திருக்கும் தண்ணீர் பானை நழுவி விழுந்து விட கூடாது. நடக்கும் போது நளினமும் இருக்க வேண்டும். அதற்கேற்ற முக பாவனையும் இருக்க வேண்டும்.

    மொத்தத்தில் இடுப்பில் தண்ணீர் பானையும் இருக்க வேண்டும். அதைப் பற்றிய சிந்தனை இல்லாமல் நடிப்பில் கவனம் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட சவால்களை சந்தித்ததால் தான் சாதிக்க முடிந்தது. மீனா சூப்பரா நடித்து இருக்கிறாள் என்ற பாராட்டையும் பெற முடிந்தது. (உங்கள் மீனாவின் அடுத்த அனுபவம் என்ன....? காத்திருங்கள் அடுத்த வாரம் வரை... பை... பை...) -தொட ரும்.

    • விட்டுக்கொடுப்பது என்பது வீட்டில் தொடங்க வேண்டும்.
    • உறங்கும்போதுகூட விழிப்புணர்வோடு வாழவேண்டும்தான்; அதற்காக எப்போதும் நாம் மட்டுமே வாழவேண்டும்; மற்றவர்கள் எக்கேடோ கெட்டுப்போகட்டும் என வாழக்கூடாது.

    விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை எனும் பழமொழிப்படி வாழ விரும்பும் பண்பாளர்களே! வணக்கம்!

    நம்மில் பலர் நினைத்துக்கொண்டிருக்கிறோம், விட்டுக்கொடுப்பது என்பது இயலாதவர்களின் கோழைக்குணம் என்று. ஆனால் விட்டுக் கொடுப்பது என்பது வெற்றியாளர்களின் தயாள குணம் என்பதை நாம் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும்.

    புதுச்சேரியை ஒட்டிய ஒரு தமிழக கிராமத்தில் ('நல்லூர்-1' என வைத்துக் கொள்வோம்) ஓர் அரசுப்பள்ளி; அதே பகுதியில் மற்றுமொரு கிராமத்தில் ('நல்லூர்-2' என வைத்துக் கொள்வோம்) மற்றோர் அரசுப்பள்ளி. இரண்டு பள்ளிகளுக்கும் எப்போதும் போட்டி மனப்பான்மை தான்; கட்டுரை, கவிதை, பேச்சு எனும் இலக்கியப் போட்டிகளா? கபடி, கால்பந்து, கைப்பந்து, மட்டைப்பந்து எனும் விளையாட்டுப் போட்டிகளா? அனைத்துப் பள்ளிகளுக்கு இடையில் எப்போது நடந்தாலும் இந்த இரண்டு பள்ளிகளுக்கிடையில்தான் யார் முதல்? யார் இரண்டாவது? எனும் போட்டி.

    முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த ஓர் நிகழ்வு; பசுமை மாறாமல் விவரித்தார் பசுமை சுந்தரம். அன்று ஆரோவில்லில் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி. அது சுழற்கோப்பைக்கான போட்டி; அந்தப் பேச்சுப் போட்டியில் எந்தப் பள்ளி மூன்றுமுறை தொடர்ந்து வெற்றி வாகை சூடுகிறதோ அந்தப்பள்ளிக்கு அந்தக்கோப்பை நிரந்தரமாகச் சென்றுவிடும்.

    குறிப்பிட்ட அந்தச் சுழற்கோப்பைக்கான போட்டியில் ஏற்கனவே நல்லூர்1 பள்ளி இரண்டுமுறை தொடர்ந்து வென்றிருக்கிறது; அந்த வெற்றியைத் தற்போது போட்டியில் பங்கெடுக்கப் போகும் பத்தாம் வகுப்பு மாணவனே இரண்டு முறையும் பெற்றுத் தந்திருக்கிறான்; இம்முறையும் அவனே முதலில் வந்துவிட்டால் நல்லூர்1 பள்ளிக்குச் சுழற் கோப்பை நிரந்தரமாகச் சென்றுவிடும். அப்படிச் சென்றுவிட்டால் அந்த இடத்தில் பெரும் கைகலப்பை ஏற்படுத்த நல்லூர் 2 பள்ளி மாணவர்கள் ஆயத்தமாக இருந்தனர். அதனை உரியவாறு எதிர் கொள்ள நல்லூர்1 பள்ளி மாணவர்களும் தயாராகவே இருந்தனர்.

    போட்டிகள் நிறைவு பெற்றன. முடிவுகள், பரிசளிக்கும் சமயத்தில் அறிவிக்கப்படும். பரிசளிப்புக்குச் சிறப்பு விருந்தினராக அந்தப் பகுதியில் பெரும் வள்ளலாகத் திகழும் ஒரு பெருமகனார் அழைக்கப்பட்டிருந்தார். மேடையில் வள்ளலோடு விழாக் குழுவினர். கீழே பரிசுகள் பெறும் ஆவலோடு பல பள்ளி மாணவர்கள். ஆயினும் நல்லூர்2 பள்ளி மாணவர்களுக்கும், நல்லூர்1 பள்ளி மாணவர்களுக்கும் எதிர்பார்ப்பெல்லாம் அந்தப் பேச்சுப் போட்டிக்கான சுழற்கோப்பை க்கான அறிவிப்பை நோக்கியே இருந்தது.

    நல்லூர்1 பள்ளி சார்பில் கலந்துகொண்டு பேசிய மாணவன் மனத்தில் இப்போது ஒரு வித்தியாச எண்ணம் ஓடத் தொடங்கியிருந்தது. தன்னுடைய கட்டுரை நோட்டிலிருந்து ஒரு தாளைக்கிழித்து, மள மளவென்று நாலைந்து வரிகள் எழுதத் தொடங்கினான்; எழுதியவுடன் அந்தத் தாளை மடித்துச் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருந்த வள்ளலிடம் பணிவோடு தந்துவிட்டு வந்தமர்ந்து கொண்டான்.

    முடிவுகளைச் சிறப்பு விருந்தினரே அறிவிக்கத் தொடங்கினார்; சுழற்கோப்பைக்கான பேச்சுப்போட்டி முடிவு என்று சொல்லிவிட்டு நல்லூர்1 பள்ளி மாணவனை அழைத்து அருகில் நிற்கச் சொன்னார்; நமக்குப் பரிசில்லையோ? என நல்லூர்2 பள்ளி மாணவர்கள் அதிர்ந்தனர். சிறப்பு விருந்தினர் பேசத் தொடங்கினார், "மாணவக் கண்மணிகளே இந்தச் சுழற்கோப்பைக்கான பரிசை அறிவிப்பதற்கு முன், நல்லூர்1 பள்ளி மாணவன் எனக்குத் தனிப்படத் தந்த கடிதத்தை நீங்கள் எல்லோரும் கேட்கும்படி வாசிக்கிறேன்" என வாசித்தார்.

    ஐயா வணக்கம்! நான் மாணவன் யுவராசன். இந்தப் பேச்சுப் போட்டியிலும் நான் தான் வெல்வேன், சுழற்கோப்பை நிச்சயம் எங்கள் பள்ளிக்குத்தான் என்பதில் எனக்கு முழு நம்பிக்கையுண்டு. ஆயினும் இந்த நாட்டின் எதிர்காலத் தலைமுறையாகிய மாணவர்கள் நாங்கள் தற்போது இரு பிரிவுகளாக நிற்கிறோம். முடிவு எனக்குச் சார்பாக வந்தால், ஒருபிரிவு மாணவர்கள் ஏற்றுக்கொள்ள இயலாமல் மனம் கோண நேரிடும். எனவே அருள்கூர்ந்து முடிவை நல்லூர்2 பள்ளியின் மாணவனாகிய எனது நண்பனுக்கு அறிவிக்கவும்.

    மாணவர்களின் எதிர்கால ஒற்றுமையை மனத்தில் கொண்டு, இப்போட்டியிலிருந்து நான் விட்டுக்கொடுத்து விலகிக் கொள்கிறேன்!". மாணவனின் கடிதத்தை வாசித்தவுடன் வள்ளல், "எனவே பரிசும் சுழற்கோப்பையும் யுவராசன் வேண்டுகோள்படி நல்லூர்2 பள்ளிக்குச் செல்கிறது. அந்த மாணவனின் விட்டுக் கொடுத்தலுக்காக ஒரு பரிசு கொடுக்க வேண்டுமென்றால், அதற்கான பரிசு இன்னும் இந்த உலகத்தில் உருவாகவில்லை !" என்று அறிவித்தார். அங்கிருந்த மாணவர்கள் எல்லாருமே மனமகிழ்ச்சியோடு கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

    இந்த நிகழ்வில் அந்த மாணவன் யுவராசன் செய்த விட்டுக்கொடுத்தல் என்பது, கலந்துகொள்ளாமலேயே பயந்து விலகிக் கொள்வதல்ல; போட்டியிலும் கலந்து கொண்டு, தனது திறமையையும் நிரூபித்து விட்டு, பிறகு ஒரு துறவியைப் போல வேண்டாமென்று விலகி நிற்பது சமூக அக்கறை சார்ந்த வெற்றிச் செயல்.

    வாழ்க்கையே போட்டிமயம்தான். எந்நேரமும் போட்டிகள்தாம். ஆயினும் விட்டுக்கொடுக்காமல் போட்டியிட்டுக்கொண்டே இருப்பதன்மூலம் என்னத்தைக் கட்டிக்கொண்டு எடுத்துச் செல்லப்போகிறோம்?.

    பேருந்துக்கும் ரேசனுக்கும் சினிமாவுக்கும் வரிசையில் நிற்பது தொடங்கி, பேருந்து ரயில்களில் இருக்கை பிடிப்பது, திருமண விருந்துகளில் உணவிருக்கை தேடுவது என எங்கெங்கு பார்த்தாலும் கண்களுக்குத் தெரியாத போட்டிமயம்தான். இதில் யாருக்கும் விட்டுத்தர யாருக்கும் மனம் கிடையாது. பேருந்துகளில், பெண்கள், மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள், கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தை வைத்திருப்போர் என எவர் வந்தாலும் எழமறுக்கிற குணமுடையவர்தாம் உண்டு. கேட்டால், இப்படி ஒவ்வொருவருக்காக நான் என் இடத்தை விட்டுத்தர வேண்டுமென்றால் எனக்கான இருக்கையை நான் எப்போது அனுபவிப்பது? என்று கேட்கிறார்கள்.

    எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் இருக்கிறார். அவர் ரயில் பயணத்திற்கான படுக்கை வசதிப் பயணச்சீட்டைப் பதிவு செய்யும்போது, கீழ்ப் படுக்கை வந்தால் சலித்துக்கொள்வார். ஏனென்று கேட்டால், "ஏறியவுடனேயே என்னுடைய கீழ்ப்படுக்கையைக் கேட்டு யாராவது ஒருகிழமோ அல்லது கர்ப்பிணியோ வந்து விடுவர். அவர்களுக்கு அதை வழங்கிவிட்டு, வழக்கம் போல நான் மேல்படுக்கையில்தான் பயணிக்க வேண்டும்; என் ராசி அப்படி!" என்பார். இந்தப் பயணத்தின்மூலம் முடியாத ஒருவருக்காக நமது வசதியை விட்டுக் கொடுத்திருக்கிறோமே என்று பெருமைப்பட்டுக் கொள்ளாமல் நொந்துகொள்வது எந்த வகையில் நியாயம்?.

    சாலைகளில் வாகனம் ஓட்டிக்கொண்டு பயணிக்கும்போது, யார் யாருடன் போட்டிபோடுவது என்கிற தராதரமின்றி, ஒரு சைக்கிள்காரர் ஒரு பேருந்தோடு போட்டிபோட்டுக்கொண்டு வழிதராமல் செல்வதைப் பார்க்கலாம். சாலை என்பது பயணிக்கிற ஒவ்வொருவருக்கும் உரிமையுடையது என்றாலும் அதைத் தமக்கே தமக்கான சொந்தப் பாதைபோல விட்டுக் கொடுக்காமல் வழியடைத்துச் சென்றால் பாதை எங்கே வசப்படும்? பயணம் எங்கே ருசிப்படும்?.

    விட்டுக்கொடுப்பது என்பது வீட்டில் தொடங்க வேண்டும். முன்பெல்லாம் வீட்டுக்கு ஐந்தாறு குழந்தைகள் இருந்தனர். அண்ணன் தம்பி அக்கா தங்கைகளுக்கிடையே அன்பையும் பொருள்களையும் பகிர்தலும், விட்டுக்கொடுக்கும் பெருந்தன்மையும் அவர்களுடனேயே வளரும் குணங்களாக இருந்தன. இப்போது ஒருகுழந்தை உலகமாகிப்போன சமூகத்தில், உறவுகள் சுருங்கிப்போனதால், எல்லாரும் எல்லாருக்கும் போட்டியாளர்கள் எனும் நிலையே மிதமிஞ்சிக் காணப்படுகிறது. விட்டுக்கொடுக்காமல் வென்றெடுப்பதே வாழ்நிலைப் போக்காகவும் ஆகிப்போனது.

    ஆணும் பெண்ணுமாகத் தனித்தனியே இருக்கும் இருபால் மனிதர்களைத் திருமணத்தில் இணைத்து, கணவன் மனைவி எனவாக்கி, அவர்களைக் குடும்ப அமைப்புக்குள் கொண்டு வருவதே மனிதர்கள் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் எனும் மாபெரும் தத்துவத்தை உணர்த்துவதற்கே ஆகும். கணவன்-மனைவி என்போர் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வது என்பதையும் தாண்டி இருவருக்கும் அப்பால் சமூக நலத்திலும் அக்கறை செலுத்த வேண்டும்.அதற்காக தத்தமது சொந்த சுக துக்கங்களை விட்டுக கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும்.

    ரயில் தண்டவாளங்களைப் பாருங்கள் எங்கும் இணைபிரியாமல், இணைந்தும் விடாமல் சமமான இடைவெளியோடு நீண்டு இருப்பதா லேயே அவை பயணத்திற்குப் பயன்படுபவையாக இருக்கின்றன. அவற்றின்மேல் பெட்டிகளும் அவற்றை இழுத்துச் செல்லும் எஞ்சினும் பயணிப்பதால் மக்கள் ஊர்விட்டு ஊர்செல்லும் பயணம் எளிதாக நடைபெறுகிறது. இம்முறை மாறுபட்டால் என்ன ஆகும்?

    நானும் பயணம் போவேன் எனத் தண்டவாளங்கள் புறப்பட்டால் பெட்டிகள் எப்படி ஊர்போய்ச் சேரும்? பெட்டிகளின்றி நான் மட்டுமே செல்வேன் என்று எஞ்சின் அடம்பிடித்தால் மக்கள் எப்படிப் பயணிக்க முடியும். வாழ்க்கையும் அப்படித்தான். மக்கள் ஒவ்வொருவரும் அவரவரின் தகுதிக் குணங்களுக்கேற்ப விட்டுக்கொடுத்து வாழக் கற்றுக்கொண்டால்தான் உலகம் சரியான திசையில் சுழலும்.

    போட்டி உலகம்தான்; உறங்கும்போதுகூட விழிப்புணர்வோடு வாழவேண்டும்தான்; அதற்காக எப்போதும் நாம் மட்டுமே வாழவேண்டும்; மற்றவர்கள் எக்கேடோ கெட்டுப்போகட்டும் என வாழக்கூடாது. அப்படி வாழ்வது தன்னல வாழ்வு. தானும் வாழ்ந்து மற்றவர்களும் வாழவேண்டும் எனக் கருதுவதே சமூக நலம்கருதும் பொதுநலவாழ்வு. அதற்கு முக்கியமாக விட்டுக்கொடுத்துப் பழகவேண்டும்.

    ஆக்குகின்ற எல்லாவற்றையும் அனுபவித்து விடுவோம் என்று நினைப்பது அறியாமை; அடுத்தவருக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பது கோழைத்தனமோ அஞ்சும் தன்மையோ கிடையாது. சமூகத்தில் நம்மைப்போலப் பிறரும் வரவேண்டும் என்று நினைப்பது வெற்றிமேல் வெற்றி தரும்.

    திருக்கோயிலூரில், மழைபெய்து கொண்டிரு க்கும் போது ஓர் குடிசையில் ஒருவர் படுத்திரு க்கிறார்; அப்போது மற்றொருவர் அங்கு வந்து மழைக்கு ஒதுங்க இடமுண்டா? எனக் கேட்க, படுத்திருந்தவர் எழுந்து இடம்தர இருவர் அமர்ந்து கொள்கின்றனர். மேலும் மூன்றாவதாக ஒருவர் வந்து மழைக்கொதுங்க இடமுண்டா? என் வினவ, அமர்ந்திருந்த இருவரும் எழுந்து நிற்க மூன்றாவது நபரும் உள்ளே அவர்களோடு நின்று கொள்கிறார்.

    ஒருவர் கிடக்கலாம்; இருவர் இருக்கலாம்; மூவர் நிற்கலாம் எனும்படியான நெருக்கடி மிகுந்த இடத்தில், முதலாவது நபராகிய பொய்கையாழ்வார், தான் படுத்திருந்த இடத்தைப் பூதத்தாழ்வாருக்கு விட்டுக் கொடுத்ததால் இருவர் அமர்ந்து கொள்கின்றனர். பிறகு பேயாழ்வாருக்காக இருவரும் எழுந்து நின்று மேலும் இடத்தை விட்டுக்கொடுத்ததால் மூவர் நின்று கொள்கின்றனர். அந்த முதல் ஆழ்வார்கள் மூவருக்குமிடைடையே விட்டு க்கொடுக்கும் மனப்பான்மை செழித்திருந்ததால், இப்போது அவர்களோடு நெருக்கமாக நாலாவது நபர் ஒருவரும் வந்து நின்றுகொண்டு ஆசி வழங்கினாராம். அந்த நாலாது நபர் அவர்கள் வணங்கும் அந்தப் பெருமாளைத் தவிர வேறு யார்?.

    விட்டுக்கொடுத்தலே தெய்வீகம்! விட்டுக்கொடுத்தலே ஆனந்தம்!

    தொடர்புக்கு 9443190098

    • நம் இரத்தத்தில் கொழுப்பு பல்வேறு கூறுகளாகக் கணிக்கப்படுகிறது.
    • ஒரு முறை சூடு செய்து பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக்கூடாது.

    மனிதன் உயிர்வாழ உடலில் கொழுப்புச்சத்து மிகவும் அவசியமானது. மூளையின் செயல்பாட்டுக்கும், உடலில் நடைபெறும் வளர்சிதை மாற்றங்களுக்கும், ஹார்மோன்கள் மற்றும் வைட்டமின் "டி" உற்பத்திக்கும் இந்தக் கொழுப்புச் சத்துதான் ஆதாரம். ஆனால் அந்தக் கொழுப்பு உடலில் அளவாக இருக்க வேண்டும்.

    நம் இரத்தத்தில் கொழுப்பு பல்வேறு கூறுகளாகக் கணிக்கப்படுகிறது. உடலுக்குக் கொழுப்புச் சத்து எங்கிருந்து கிடைக்கிறது? என்று கேட்டால் "உணவில் இருந்துதான்" எனப் பட்டென்று பதில் கிடைக்கும். ஆனால் நம் உடலில் உள்ள 80% கொழுப்பை நம் கல்லீரல் தான் உற்பத்தி செய்கிறது. இதற்கான மூலப்பொருள்களை அது நம் உணவில் இருந்து தான் எடுத்துக்கொள்கிறது.

    கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவை அதிகமாக எடுத்துக் கொள்வதால் மட்டும் நமக்குக் கொழுப்புச் சத்து அதிகம் வரும் என்று கூறிவிட முடியாது. உடல் பருமனாக இருப்பவர்களுக்கு மட்டும்தான் இரத்தக் கொழுப்பு அதிகமாக இருக்கும், ஒல்லியாக இருப்பவர்களுக்குக் குறைவாக இருக்கும் என்பது முற்றிலும் உண்மை இல்லை.

    கொழுப்புச் சத்து உடலில் அதிகரிக்கக் காரணம்:

    கொழுப்பைச் செரிக்கும் நொதிகளில் குறைபாடு ஏற்படும் போதும், தேவைக்கு அதிகமான கலோரிகள் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளும்போதும், மற்ற உணவுக் கூறுகளான மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்) மற்றும் புரதங்கள் கொழுப்பாக மாறி உடலில் குறிப்பிட்ட பகுதிகளில் படியத் தொடங்குகிறது.

    அதிகப்படியான மதுப்பழக்கம் மற்றும் புகைபழக்கம் உள்ளவர்களுக்கு ட்ரைகிளிசரைடு எனப்படும் கொழுப்பு அதிகரிக்கிறது. துரித உணவுகளை அடிக்கடி எடுத்துக்கொள்வது, போதுமான உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது, ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது உள்ளிட்ட காரணங்களால் கொழுப்பு சத்து நம் உடலினுள் தேங்குகிறது.

    மீண்டும் மீண்டும் அதிக உணவை தொடர்ந்து எடுக்கும்போது கொழுப்பானது, உடலின் உறுப்புகளைச் சுற்றியும், தோலுக்கு அடியிலும் படிந்து, உடல் பருமன் ஏற்படுகிறது.

    இவ்வாறு படியும் கொழுப்பு பல நோய்களுக்குக் குறிப்பாக வளர்சிதை மாற்ற நோய்களுக்குக் (Metabolic Syndrome) காரணமாகிறது. இதில் அதிக இரத்தச் சர்க்கரையும், அதிக இரத்த அழுத்தமும் அடங்கும்.

    இதில் குறைந்த அடர்வுத் தன்மையுடைய கொழுப்பைக் கெட்ட கொழுப்பு என்றும், அதிக அடர்வுத் தன்மையுடைய கொழுப்பை நல்ல கொழுப்பு என்றும் கூறுகிறோம்.

    நல்ல கொழுப்பு மற்றும் கெட்ட கொழுப்பு என்றால் என்ன?

    Low Density Lipoprotein (LDL) என்பதைக் கெட்ட கொழுப்பு என்கிறோம், ஏனென்றால் இது கொழுப்புச் சத்து இரத்தக்குழாயில் படிவதற்குத் துணைபுரிந்து, அத்திரோஸ்கிளிரோசிஸ் எனப்படும் இரத்தக்குழாய் அடைப்பு நோயை அதிகப்படுத்துகிறது. இது நம் உடலில் 100 மிகி/டெசிலி-க்குக் குறைவாக இருக்க வேண்டும். நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் உள்ளவர்கள் இதை 70மிகி/டெசிலி-க்குக் குறைவாக வைத்திருப்பது நல்லது.

    மரு.அ.வேணி

    மரு.அ.வேணி

    High Density Lipoprotein (HDL) இதை நல்ல கொழுப்பு என்று கூறுகிறோம். ஏனென்றால் இது கொழுப்பைச் சிறுகுடலில் இருந்து கல்லீரலுக்கு எடுத்துச் சென்று, அதனைச் செரிக்கச் செய்து உடலில் இருந்து வெளியேற்றுகிறது. இந்த நல்ல கொழுப்பு ஆண்களுக்கு 45மிகி/டெசிலி-க்கு அதிகமாகவும், பெண்களுக்கு 55மிகி/டெசிலிக்கு அதிகமாகவும் இருக்க வேண்டும். இது அதிகமாக இருந்தால் வாழ்வியல் மாற்றங்களினால் ஏற்படும் நோய்களில் இருந்து பாதுகாப்புத் தருகிறது.

    அதிகக் கொழுப்பினால் ஏற்படும் சிக்கல்கள்:

    உடலில் நல்ல கொழுப்பின் அளவு குறையும்போதும், கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிக்கும்போதும் இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு சிக்கல்கள் ஏற்படுகிறது. இதனுடன் மன அழுத்தம், போதுமான உடல் உழைப்பு இல்லாமை போன்றவைகள் சேரும்போது இளம் வயதிலேயே மாரடைப்பு, பக்கவாதம், மறதி போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகின்றன.

    அதிகக் கொழுப்பினால் ஏற்படும் அறிகுறிகள்:

    இதற்கென்று தனியான அறிகுறிகள் கிடையாது. யாருக்கெல்லாம் தொப்பை உள்ளதோ அவர்களுக்கெல்லாம் உடல் உறுப்புகளைச் சுற்றிக் கொழுப்புப் படிந்திருக்கும். ஒரு சிலருக்குக் கண் இமை மீது மஞ்சள் நிறப் படிவம் பார்க்க முடியும். இது அதிரோஸ்கிளிரோஸிஸ் எனப்படும் நோயின் வெளித்தோற்றமாகும். இவ்வாறு இருப்பவர்களுக்கு இரத்தக்குழாய்கள் தொடர்பான நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    நல்ல கொழுப்பு அதிகரிக்க என்ன செய்யவேண்டும்?

    1.பழங்கள், காய்கறிகள் அதிகம் உட்கொள்வது.

    2.தானியங்களை உணவில் சேர்த்துக்கொள்வது.

    3.மீன் உட்கொள்வது.

    4.உலர் கொட்டைகள் மற்றும் பழங்கள் சாப்பிடுவது

    5.உடற்பயிற்சி செய்வது.

    6.பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது.

    கெட்ட கொழுப்பைக் குறைக்க என்ன செய்யவேண்டும்?

    1.ஒரு முறை சூடு செய்து பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக்கூடாது.

    2.மதுப்பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.

    3.அதிக நார்ச்சத்து உள்ள உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    4.பாலின் மூலம் கிடைக்கும் புரத சத்துக்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    5.உணவில் பூண்டு அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    6.உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

    முன் கூறிய வழிமுறைகளை நமது வாழ்கையில் நடைமுறைப் படுத்தினால், நல்ல கொழுப்பை அதிகரித்து, கெட்ட கொழுப்பைக் குறைத்து நலத்துடன் வாழ முடியும். "அதிகக்கொழுப்பு ஆளைச் சாய்க்கும்" என்பதை நினைவில் கொண்டு அளவான கொழுப்புச் சத்துள்ள உணவை உண்டு நீடூழி வாழ்வோமாக.

    தொடர்புக்கு: 75980-01010, 80564-01010.

    • மனம் இதமாக இருக்க உடல் மனதை கடக்க வேண்டும். இதற்கு உடல் தகுதி மிகவும் அவசியம்.
    • மர்க்கட நீதி, மார்ஜார நீதி என்று இரண்டு வழிகள் உள்ளது. இதில் ஏதாவது ஒன்றை நாம் பிடித்து கொள்ள வேண்டும்.

    மனவளக்கலை பேராசிரியர்கள் சி.சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்அன்பார்ந்த வாசகர்களே, கடந்த வாரம், கர்மாவை பற்றி பார்த்தோம். இந்த கர்மா என்பது இரண்டு வகைகளாக கூறப்படுகிறது. ஒன்று கர்ம பரிபாலனம் மற்றொன்று கர்ம பரிவர்தனம் ஆகும். கர்ம பரிபாலனம் என்பது என் விதிப்படி வருகின்ற விளைவுகளை நானே அனுபவிப்பது ஆகும். ஏனென்றால் நானே அனுபவித்து விட்டால் அதன் தாக்குதல்கள் குறைந்து தான் இருக்கும். கர்ம பரிவர்தனம் என்பது, என் கர்மாவை நான் அனுபவிப்பதற்கு விருப்பம் இல்லாமல், இறைவனிடம் வாக்குவாதம் செய்வது. அல்லது கர்மாவை அனுபவிக்கும் முன்பாகவே நமது ஆயுள் முடிந்துவிட்டால் அந்த கர்மாவை நம் அடுத்த தலைமுறைகளுக்கு பரிவர்தனம் என்கின்ற மாற்றம் செய்வது ஆகும்.

    இதை தான், இன்றைய விஞ்ஞானம் செய்கிறது. நேற்று வரை ஒருவர் நன்றாக இருக்கிறார். திடீரென்று உடல் நலம் சரியில்லாமல் மயக்கம் போட்டு விழுகிறார். உடனே மருத்துவமனைக்கு சென்று அவரை பரிசோதனை செய்யும்போது உடலில் நோய் இருப்பது கண்டு பிடிக்கப்படுகிறது. நேற்று வரை நன்றாக, ஆரோக்கியமாக இருந்த உடல் செல்கள், திடீரென்று மாறி எப்படி நோய் ஏற்படுத்துகிறது. இந்த உடல் செல்களுக்கு இப்படி மாற சொல்லி எங்கிருந்து உத்தரவு வருகிறது என்பதை விஞ்ஞானம் ஆராய்ச்சி செய்கிறது. இதை தான் யோகத்திலே கர்மா என்று சொல்கிறோம். இந்த கர்மாவை 3 பிரிவுகளாக பிரிக்கலாம்.

    1. சஞ்சித கர்மா - என்பது முன்னோர்கள் மூலமாக தலைமுறை பதிவுகளாக வருவது ஆகும். இது ஒரு தலைமுறையை விட்டு பிறகு அடுத்த தலைமுறையை கூட தாக்கும். இதை தான் இன்றைய விஞ்ஞானம் அழுத்தம் பெற்ற ஜீன்கள் என்று கூறுகிறது. பொதுவாக மருத்துவர்கள், நமக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால், குடும்பத்தில் வேறு யாருக்காவது இருக்கிறதா என்று கேட்கிறார்கள்.

    2. பிராப்த கர்மா - என்பது நமது நினைவு தெரிந்த நாளில் இருந்து (நமது 3 வயது முதல்) இந்த நிமிடம் வரை, நம் வாழ்வில், நாம் சொல்கின்ற செய்கின்ற செயல்கள் மூலமாக பதிவுகளை சேர்த்துகொண்டு அதன்மூலமாக வரும் விளைவுகளை அனுபவிப்பது ஆகும். இதை தான் இன்றைய விஞ்ஞானம் எழுச்சி பெற்ற ஜீன்கள் என்று கூறுகிறது. உதாரணத்திற்கு ஒரு உணவே என் செயல் மூலமாக அதிகமாக உட்கொள்ளும்போது, அதன் விளைவாக உடனே ஒரு உபாதை உடலுக்கு ஏற்பதுவது ஆகும்.

    3. ஆகாமிய கர்மா - என்பது முன்னோர்கள் நல்வினை + தீவினை, நம் வாழ்நாளில் நாம் செய்த நல்வினை + தீவினை இரண்டையும் கூட்டி வரும் விளைவு தான் இன்று நாம் வாழ்கின்ற வாழ்க்கை ஆகும். எனவே தான் நம் முன்னோர்கள் செய்த கர்ம வினை பதிவுகளை கழித்து, நாம் தினமும் செய்கின்ற செயல்களிலே தவறு எதுவும் செய்யாமல், விழிப்பு நிலையில் இருந்தால், நாம், புதியதாக எந்த பதிவுகளையும் சேர்த்துக்கொள்ள மாட்டோம். இந்த நிலையிலே, நாம் இருக்கின்ற பதிவுகளை கழித்து, வாழும் காலத்திலேயே முக்தி நிலை வாழ்க்கை வாழ்தலே சாகாகலை ஆகும்.

    மனம் என்றால் இதம் என்று பொருள். மனம் இதமாக இருப்பவரே மனிதர் என்கிறோம், ஆனால் நாம் இதமாக இல்லை. இதற்கு காரணம் நம்முடைய வினை பதிவுகளே. எனவே மனதை அறிய முற்பட வேண்டும். இதற்கு நாடி சுத்தி பிராணாயாமமும், தியானமும் உதவி செய்யும்.

    மனதின் சுபாவம் எப்போதும் சுகத்தை நாடும். அப்படி சுகமாக இருக்கும்போது மனம் ஆனது அதன் எஜமானராகிய ஆத்மாவோடு தொடர்பில் இருக்கும். ஆனால் புலன்கள் புற உலகோடு தொடர்பு கொள்ள நம்மை வெளியே இழுக்கும். அதற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மனம் ஒன்றாக இருந்தாலும் அது மூன்று நிலைகளில் நம்மை இயக்கும்.

    முதலாவது சவுக்கிய சுகம். இது உடல் சார்ந்தது. இன்று நன்றாக இருக்கும், நாளை நன்றாக இருக்காது. நம் உடலிலே ஒவ்வொறு நொடியும் இரசாயனம் மாற்றம் ஏற்பட்டு கொண்டு இருக்குகிறது. எனவே சவுக்கிய சுகம் என்பது மாறிக்கொண்டே இருக்கும், இது நிரந்தரமான சுகம் இல்லை.

    இரண்டாவதாக சந்தோஷ சுகம் ஆகும். இது இந்த நிமிடம் மனம் சந்தோசமாக இருக்கும். அடுத்த நிமிடமே கவலையாக மாறி விடுகிறது. இதுவும் நிரந்தரம் அல்ல.

    மூன்றவதுவாக ஆனந்த சுகம். இது ஆத்மா சார்ந்தது. இது அழிவு இல்லாதது. நிரந்தரம் ஆனது. இதற்கு எதன் மீதும் பற்று இல்லை. என்றும் ஆனந்தமாக இருக்கும். இதனை அடைய நம் மனமானது, உடல் சுகம், மனம் சுகம் கடந்து ஆனந்த சுகத்தை பிடிக்க வேண்டும். இதற்கு மூச்சினுடைய எண்ணிக்கையை குறைக்க வேண்டும். அதற்கு சாதாரணமாகவே, நாம் மூச்சை உள் இழுக்கும் போதும் சரி, வெளியிடும் போதும் சரி நம் உடல் தகுதிக்கு முடிந்த அளவில் அதிக நேரம் எடுத்து கொள்ள வேண்டும்.

    இந்த நிலையில் மனம் இருக்கும்போது நாம் எல்லோரிடமும் அன்பாக இருப்போம். இதை தான் வேதத்திலே "மனம் பிரீதிகரம் சொர்க்கம்" என்று குறிப்பிட்டுள்ளது. அதாவது எப்போதும் உன் மனம் இதமாக இருக்கும் நிலை தான் சொர்கம். மனம் துன்பப்படும்போது அது நரகம் ஆகும்.

    எனவே மனம் இதமாக இருக்க உடல் மனதை கடக்க வேண்டும். இதற்கு உடல் தகுதி மிகவும் அவசியம். உடல் தகுதி இல்லை என்றால், தியானதில் மனதிற்கு உடல் ஒத்துழைப்பு கொடுக்காது. எனவே முதலில் உடல் தகுதியை வளர்த்து கொள்ள நமக்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம் ஆகிறது.

    எப்போது உடல் பலம் மேம்படுகிறதோ, மனதின் இருப்பிடத்திற்கு செல்லும் தகுதி நமக்கு கிடைக்கும். இதற்கு வேதாத்திரி மகரிஷி அவர்களின் எளியமுறை குண்டலினி யோக உடற்பயிற்சி நமக்கு மிகவும் உதவி புரியும். ஏனென்றால் மகரிஷி அவர்களால் உருவாக்கப்பட்ட உடற்பயிற்சியே ஒரு தவம் ஆகும். 

    மனவளக்கலை பேராசிரியர்கள் சி.சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன், போன்: 9444234348

    மனவளக்கலை பேராசிரியர்கள் சி.சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன், போன்: 9444234348

    இந்த மனம் ஆனது உதிக்கின்ற இடத்திலே நிற்கும் போது பிராண ஓட்டம் ஒழுங்கு பெறுகிறது. ஏனெனில் சித்தர்கள் சொல்வது என்னவென்றால், மனம் உதிக்கின்ற இடமும், பிராணன் பிறக்கின்ற இடமும் ஒன்றே ஆகும். எனவே எண்ணங்கள் உதிக்கின்ற இடத்திலே நிற்கும் போது, பிராணன் சீரடைந்து, மூச்சினுடைய எண்ணிக்கை முறைபடுத்தபடுகிறது. இந்த நிலையில் நம்முடைய, ஒரு நிமிடத்துக்கு 15 மூச்சு என்கின்ற கணக்கு மாறுபட்டு, எண்ணிக்கை குறைகிறது. எப்போது எண்ணிக்கை குறைகிறதோ ஆயுள் அதிகரிக்கிறது. இதன் மூலம், மனதில் இருந்து உதிக்கின்ற எண்ணங்களின் எண்ணிக்கையும் குறைகிறது. இதனால் நமக்கு அமைதி நிலை ஏற்படுகிறது. எந்த செயலையும் விளைவு அறிந்து விழிப்பு நிலையோடு, நிதானமாக எதிர்கொண்டு, அதன் விளைவுகளை ஆராய்ந்து பார்க்கும் தன்மை நமக்கு ஏற்படும். இதன் மூலமாக நம் வாழ்க்கை புனிதம் அடைகிறது. இந்த நிலையில் வாழும் மனிதர்கள் / மகான்களை தான் "பிரம்ம பூதோ மஹாயோகி" என்கிறோம். அதாவது சர்வத்திலும் இருப்பது இறைவனே என்கின்ற தத்துவதை உணர்ந்துக்கொண்டு வாழ்பவர்கள் ஆவார்கள்.

    இந்த நிலைக்கு நம் எல்லோராலும் வர முடியும். அதற்கு பூர்வ ஜென்ம புண்ணியம் அமைய வேண்டும். அதே நேரம், குருவின் உடைய உதவி இல்லாமல் இதை நம்மால் செய்ய முடியாது. எனவே குருவை நாம் கெட்டியாக பிடித்து கொள்ள வேண்டும். குருவை பிடிப்பதற்கு இரண்டு வழிகள் உள்ளது. மர்க்கட நீதி, மார்ஜார நீதி என்று இரண்டு வழிகள் உள்ளது. இதில் ஏதாவது ஒன்றை நாம் பிடித்து கொள்ள வேண்டும்.

    மர்க்கட நீதி குரு தத்துவம் என்பது உதாரணத்திற்கு தாய் குரங்கு, குட்டி குரங்கை பிடித்து கொள்ளாது. குட்டி தான் தாயின் வயிற்று பகுதியில் அமர்ந்து தாயை பிடித்து கொண்டு இருக்கும். இதனை கண்டு கொள்ளாமல், அது கிளைக்கு கிளை தாவி கொண்டு இருக்கும். ஒரு சில நேரம் அந்த கிளையில் அடிபட்டு குட்டி குரங்கு தாய் குரங்கோடு பிடித்து இருக்கின்ற பிடியை விட்டு விடும். உடனே கீழே விழும். தாய் குரங்கு இதை கொஞ்சம் கூட கண்டு கொள்ளாது. ஆனால் குட்டி குரங்கு உடனே ஓடி சென்று மறுபடியும் தாயை கட்டிப் பிடித்து கொள்ளும்.

    குட்டி குரங்கை ஒரு கிளை தடுத்து எப்படி தாயிடம் இருந்து விலக்கியதோ, அதுபோல நம்மையும் நம் கர்ம வினை பதிவாகிய கிளைகள் போல, ஒரு குருவை பிடித்தும் கூட தொடர்பை துண்டிக்க வைக்கும். நாம் விழிப்பு நிலையோடு இருந்து எத்தனை தடைகள் வந்தாலும் குருவை குரங்கு பிடி போல பிடித்து கொள்ள வேண்டும்.

    மார்ஜார நீதி குரு தத்துவம் என்பது, உதாரணத்திற்க்கு பூனையானது, குட்டி போட்டவுடன் அந்த குட்டி பூனைகளை விட்டுவிட்டு தாய் பூனை சென்றுவிடும். இந்த குட்டி பூனைகள் உடனே தாயை நினைத்து அழுது கொண்டே சப்தம் போட்டு கொண்டு இருக்கும். ஒரு நிலையில் இந்த புலம்பலை தாய் பூனை பொறுத்து கொள்ளாமல், குட்டிகளை தன் வாயால் லாவகமாக பற்றி தூக்கிச் செல்லும். இது போல நாமும், வாழ்வில் எத்தனை துன்பங்கள் வந்தாலும், குருவின் கொள்கைகள் மீது ஆழ்ந்த ஈடுபாடும், குருவின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையும் வைத்து நம் செயல்களை தொடர்ந்து செய்ய வேண்டும். அப்போது நமக்கு எந்த துன்பங்கள் வந்தாலும் குரு நம்மை காப்பாற்றுவார்.

    எனவே ஒரு குருவை பிடித்து அதன்படி பயிற்சிகள் மேற்கொண்டால் என்ன நிகழும் என்கின்ற ஆராய்ச்சியை தொடர்வோம். 

    • கச்சத்தீவுக்கு இலங்கை உரிமை கொண்டாடியது.
    • தமிழ்நாடு சட்டமன்றத்தின் ஐந்தாவது கூட்டத் தொடர் 12 முதல் 28 ஆகஸ்ட் 1974 வரை நடந்தது.

    இந்தியா விடுதலை அடையும்போது சிலோன் பிரிட்டிஷ் வசம் இருந்தது. அவ்வளவு சிறிய நிலப்பரப்பை எப்படி "ரிமோட் நிர்வாகம்" செய்வது என்று கருதியது லண்டன். "நாளை முதல் நீங்க ப்ரீ!" என்று கூறி விட்டுப் பிரிட்டிஷார் டாட்டா காட்டினார்கள். இன்றைய ஸ்ரீலங்காவான அன்றைய சிலோன் சுதந்திரம் கேட்டுப் போராடவே இல்லை,

    உபகண்ட நிலப்பரப்பு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை என்று மூன்று நாடுகள் ஆனது. விடுதலைக்கு 10 ஆண்டுகள் முன்னதாகப் பர்மா உதயமாகி இருந்தது. 1971-ல் வங்க தேசம் பிறந்தது. இந்திய எல்லையில் மொத்தம் 7 நாடுகள்!

    ஆகையால் எல்லைப் பிரச்சினைகள் புதிது புதிதாக முளைத்துக் கொண்டே இருந்தன. ஊடுருவல் எக்கச்சக்கம். எனவே நமது எல்லைப் பகுதிகள் சர்வதேசக் கடத்தல்காரர்களின் சொர்க்கமாக மாறின. பிரச்சனைகளைத் தீர்க்க இந்திய அரசு பல முயற்சிகள் எடுத்தது.

    பிரிவினையின் போது எல்லைப் பகுதிகளை அளவிட ராட்கிளிப் என்ற பிரிட்டிஷ் சர்வேயர் நியமிக்கப்பட்டார். அப்போது மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் பெருபாரி இந்தியாவிற்கு வழங்கப்பட்டது. அங்கு இந்துக்கள் அதிகமாக வாழ்ந்து வந்தனர்.

    ஆவணங்களில் பெருபாரியைக் குறிப்பிட ராட்கிளிப் குழு மறந்து விட்டது. எனவே பாகிஸ்தான் தன் வரைபடத்தில் அதைச் சேர்த்துக் கொண்டது. இதனால் இரு நாட்டுக்கும் இடையே பிணக்கு ஏற்பட்டது.

    நேருவுக்கும், பாகிஸ்தான் பிரதமர் பெரோஸ்கான் நூனுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி பெருபாரி கிராமத்தை இரண்டு நாட்டு அரசுகளும் பிரித்துக் கொண்டன. தாவாவுக்குச் சர்வதேசத் தீர்வு எட்டப்பட்டது.

    ஆனால் மேற்கு வங்க அரசின் இசைவின்றி பெருபாரி கிராமத்தின் பகுதிகளைப் பாகிஸ்தானுக்கு வழங்கிய விதம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது.

    அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 3 (சி)-ன் கீழ் பாராளுமன்றத்திற்கு மாநிலத்தின் எல்லையை மாற்றியமைக்க மட்டுமே அதிகாரம் உண்டு என்றும் இந்திய நாட்டின் பரப்பைக் குறைக்க அதிகாரம் இல்லை என்றும் 14.3.1960-ல் இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    அதனால் அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 3 (சி)-ல் தேவையான திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. 1960-ல் பெரும் பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்ட 9-வது அரசியலமைப்புச் திருத்தம் பெருபாரி மற்றும் இந்திய மாநிலங்களின் இசைவுச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

    தராசு ஷ்யாம்

    தராசு ஷ்யாம்

    கச்சத்தீவுக்கு இலங்கை உரிமை கொண்டாடியது. ஆனால் கச்சத்தீவு நீண்ட நெடுங்காலமாக ராமநாதபுரம் ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்தது. இது குறித்த ஆவணங்கள் இன்றும் ராமநாதபுரம் கலெக்டர் ஆபீசில் உள்ளன.

    இது மாதிரியே கன்னியாகுமரிக்கு 80 கி.மீ. தொலைவில் "வாட்ஜ் பேங்க்" என்ற 25 லட்சம் ஏக்கர் பரப்பளவுள்ள பிரம்மாண்ட கண்டத்திட்டிலும் இரு நாட்டு மீனவர்கள் தொழில் செய்து வந்தனர். ஏன் என்றால் 1947-க்கு முன் கிட்டத்தட்ட உபகண்டம் முழுவதும் ஒரே பிரிட்டிஷ் இந்தியா.

    இந்திரா காந்தி காலத்தில் 18.5.1974-ல் பொக்ரான்-1 (ராஜஸ்தான்) அணு வெடிப்புச் சோதனை நடத்தப்பட்டது. அதற்குப் பாகிஸ்தான் பலத்த கண்டனம் தெரிவித்தது. அது குறித்த ஐநா தீர்மானத்தில் இலங்கை நமக்கு ஆதரவு கொடுத்தது.

    அப்போதும் இலங்கையில் பொருளாதார நெருக்கடி. அன்றைய பிரதமர் ஸ்ரீமதி பண்டாரநாயகா இந்திரா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து உதவி கேட்டார். 1974 ஒப்பந்தப்படி (26-28.6.1974) கச்சத்தீவும் அதற்கடுத்த 1976 கடல் எல்லை ஒப்பந்தப்படி வாட்ஜ் பேங்க் பகுதியும் (23.3.1976) பரஸ்பர தாவா நீக்கம் செய்யப்பட்டன. தொகுதி மறுவரையறை போல இது எல்லைச் சீரமைப்பு.

    அன்றைய தமிழக முதல்வர் கலைஞரிடம் அன்றைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்வரண் சிங் மற்றும் செயலாளர் கேவல் சிங் ஆகியோர் இது பற்றிக் கூறினார்கள். தமிழ்நாடு பா.ஜ. தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ஆர்.டி.ஐ. ஆவணங்கள் மூலம் இது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இசைவின்மை இருப்பினும் இருநாட்டில் எல்லை சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்கள் என்பதால் மத்திய அரசின் முடிவு இறுதியானது.

    அப்போது தமிழ்நாடு சட்டமன்றத்தின் ஐந்தாவது கூட்டத் தொடர் 12 முதல் 28 ஆகஸ்ட் 1974 வரை நடந்தது. கச்சத்தீவை இலங்கைக்கு தந்தது தொடர்பான தீர்மானம் அதில் நிறைவேற்றப்பட்டது.

    கச்சத்தீவின் மீது இந்திய இறையாண் மையை தக்க வைத்துக் கொள்ளும் வகையில் ஒப்பந்தத்தைத் திருத்த வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டது. அது நிறைவேற்றப்பட்ட நாள் 21.8.1974. இவை எல்லாம் சட்டமன்ற அவைக் குறிப்புகளில் உள்ளது.

    கச்சத்தீவு குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டம் அன்றைய முதலமைச்சர் கலைஞர் தலைமையில் நடந்தது. அ.தி.மு.க. சார்பாக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் குழுவினர் கலந்து கொண்டனர். பல்வேறு அமைப்புகளும் கட்சிகளும் தமிழ்நாட்டில் கண்டனக் கூட்டங்களும் நடத்தின.

    இதே காலகட்டத்தில் வங்கதேச அரசுடன் எல்லைப் பிரச்சனை குறித்த தீர்வு ஏற்பாடு செய்யப்பட்டது. அதுவே 16.5.1974-ல் ஏற்பட்ட ஷேக் முஜிபுர் ரஹ்மான்-இந்திரா காந்தி ஒப்பந்தம். அதன்படி இந்திய வங்கதேசக் குடியிருப்புகளைப் பரஸ்பர பரிமாற்றம் செய்து கொள்ள முடிவு எட்டப்பட்டது.

    ஆனால் எல்லைகளை அளந்து 111 இந்தியக் குடியிருப்புப் பகுதிகளைப் பரிமாற்றம் செய்தது 7.5.2015 மோடி ஆட்சிக் காலத்தில். இது குறித்த தீர்மானம் இந்திய பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தின் வரைவு மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது.

    அதாவது மத்திய மாநில அரசுகளில் எந்தக் கட்சி வேண்டுமானாலும் ஆட்சியில் இருக்கலாம். ஆனால் சர்வதேச ஒப்பந்தங்களை யாராலும் மீற முடியாது. இந்திராவின் ஒப்பந்தம் தவறு என்று மோடி கருதி இருந்தால் வங்கதேசத்துக்கு இந்தியக் குடியிருப்புகளை விட்டுக் கொடுத்திருக்கக் கூடாது. ஆனால் சர்வதேச உறவுகளில் அது சாத்தியம் இல்லை.

    எல்லைப் பிரச்சனைகளைப் பேசித் தீர்ப்பது ஐ.நா. சபையின் விதிகளுக்கு உட்பட்டு நடக்கின்றன. இதை தேர்தல் பிரச்சனையாக்கிப் பொது மேடைகளில் சவால் விடுவது மிகவும் தவறு. ஏனென்றால் இதே போல் ஏராளமான ஒப்பந்தங்கள் நாம் அண்டை நாடுகளோடு செய்திருப்போம். இந்திய எல்லைப் பகுதியே 1947-ல் வரையறை செய்யப்பட்டது தான். இன்னமும் பிணக்குகள் உள்ளன.

    பஞ்சாப், அரியானா மாநிலங்களில் நான் பணியாற்றிக் கொண்டிருந்த போது கண்கூடாகப் பார்த்த விஷயம் இது! பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் 19.9.1960-ல் செய்யப்பட்ட நீர்ப் பங்கீடு ஒப்பந்தம் குறித்த கசப்புணர்வு பஞ்சாப் விவசாயிகள் மத்தியில் இருந்தது.

    பஞ்சாப் விவசாயிகளுக்கு டெல்லி துரோகம் இழைத்து விட்டது என்று அந்த மாநிலத் தேர்தலில் இப்போது பரப்புரை செய்தால் அது எவ்வளவு பெரிய தீங்கு தரும்?

    அண்ணாமலை போன்ற அரசியல்வாதி பேசுவது தேர்தல் அழுத்தம் என்று கொள்ளலாம். ஆனால் பிரதமர், உள்துறை அமைச்சர், நிதியமைச்சர் ஆகியோரே கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரசும் தி.மு.க.வும் தாரை வார்த்து விட்டன என்று கூறுகிறார்கள். அது நாட்டின் அரசியல் சாசனப் பதவிகளுக்கு அழகல்ல.

    இது குறித்த வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. மேலும் பாராளுமன்றத்தில் விவாதம் வரும்போதெல்லாம் நடப்பு பா.ஜனதா அரசு இந்திரா காந்தியின் நிலைப்பாட்டைத் தான் தொடர்ந்து ஆதரித்து வந்துள்ளது. 2015 தகவல் அறியும் உரிமைச் சட்டக் கேள்விகளின் போது கூட இதே பதில் தான் தரப்பட்டுள்ளது

    கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும் என்பது தமிழ்நாட்டின் விருப்பம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 15.8.1991 அன்று கோட்டையில் கொடியேற்றி வைக்கும் போது கூட இது பற்றி பேசியிருக்கிறார். சட்டமன்றத்தில் 2011-ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

    சமீபத்தில் கூட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கச்சத்தீவு மீட்பு பற்றிக் கூறப்பட்டுள்ளது. இலங்கை மீது படையெடுப்போம் என்று கூறுவதெல்லாம் காரிய சாத்தியமற்றது. கை தட்டலுக்கு வேண்டுமானால் உதவலாம். ஆனால் சர்வதேச சட்டப்படி அது சாத்தியம் இல்லை

    கச்சத்தீவு கடற் பகுதியில் நமது மீனவர்கள் தொழில் செய்யும் உரிமைக்கான குத்தகை பெற்றுத் தருவது சாத்தியமானது அதேபோன்ற ஒரு குத்தகை உரிமை குஜராத் மாநிலத்தின் பாகிஸ்தான் எல்லையோரக் கடல் பகுதியில் பெறப்பட்டுள்ளது.

    இருப்பினும எல்லை தாண்டுகிற இருநாட்டு மீனவர்களும் கைது செய்யப்படுவதும் நடந்து கொண்டுதானிருக்கிறது.

    இன்றைய குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியின் கடல் மற்றும் நில எல்லை பாகிஸ்தான் பார்டரில் வருகிறது. அது குறித்த தாவா சர்வ தேசத் தீர்ப்பாயத்தின் 19-2-1968 ஆணையின்படித் தீர்க்கப்பட்டுள்ளது.

    அதில் தங்கள் உரிமை பாதிக்கப்படுவதாக அப் பகுதி மீனவர்கள் இடையே மனவருத்தம் உண்டு. இப்போது இதை குஜராத் தேர்தலுக்குப் பயன்படுத்தினால் எவ்வளவு பெரிய அபத்தம்?

    இலங்கைக்கு நாம் ஏராளமான பொருள் உதவி செய்து வருகிறோம். கச்சத்தீவில் நமக்கு மீன்பிடி உரிமை வேண்டுமென்றால் குத்தகை பெற்றுத் தர மத்திய அரசுக்கு எத்தனையோ வழிகள் உள்ளன. 10 வருட ஆட்சியில் பாரதிய ஜனதா அரசு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போட்டதில்லை.

    இத்தனைக்கும் ஸ்ரீலங்கா சீனாவுக்குப் பல குத்தகை உரிமைகள் தந்திருக்கிறது. தமிழக மீனவர் நலனுக்கு முற்றிலும் விரோதமான இலங்கையின் திருத்தப்பட்ட "அந்நிய மீன்பிடி படகுகள் தடைச் சட்டத்தின்" விதிகள் கொடூரமானவை. அதன்படி கோடிக்கணக்கில் அபராதம் விதிக்க முடியும். அதைத் தளர்த்த நடப்பு பா.ஜனதா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    தமிழ்நாட்டு மீனவர்கள் மீது உண்மையில் டெல்லிக்கு அக்கறை இருந்தால் நேர்மறை நடவடிக்கைகளே பலன் தரும். மாறாகக் கச்சத்தீவு பிரச்சினையைத் தேர்தல் அரசியலுக்குப் பயன்படுத்தினால் ரிசல்ட் ஜீரோ தான்.

    • ஆதி என்பதற்கு அடிப்படை என்ற ஒரு பொருள் உண்டு.
    • ஆன்மாவை வெற்றிகண்டவன் நிச்சயமாக உடம்பையும் வெற்றி காண்பான்.

    உலகப்பொது மறையான திருக்குறளில் உள்ள 1330 குறள்களிலும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் சொல்லாத விசயங்களே இல்லை. திருக்குறளுக்கு புலவர்கள், கவிஞர்கள், அறிஞர்கள் பலர் விளக்கம் தந்திருந்தாலும், தன்னிலை கண்டு சிவ நிலைக்கு உயர்ந்த ஒப்பற்ற துறவிகள் விளக்கம் கொடுக்கவில்லையே என்ற குறையை போக்கும் விதமாக சிவநிலை கண்ட ஞானி ஓங்காரக்குடில் ஆசான் ஸ்ரீஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் தெளிவான் விளக்கங்கள் அளித்துள்ளார்.

    அதிகாரம்: கடவுள் வாழ்த்து

    அகர முதல எழுத்தெல்லாம் என தொடங்கும் குறளுடன் 10 குறட்பாக்கள் இந்த அதிகாரத்தில் உள்ளன. இதில் கடவுள் ஒருவன் இருக்கின்றான் என்பதை அய்யன் திருவள்ளுவர் குறிப்பிடுகின்றார். அவனின்றி நாம் எதுவும் செய்யமுடியாது என்பதை விளக்குகின்றார். எழுத்தெல்லாம் எவ்வாறு அகரத்தை அடிப்படையாக கொண்டுள்ளதோ, அதுபோல் கடவுள் என்பவன் எல்லாவற்றிற்கும் அடிப்படையாக இருக்கின்றான்.

    ஆதி என்பதற்கு அடிப்படை என்ற ஒரு பொருள் உண்டு. ஆதி என்பது பெண்மையையும், பகவான் என்பது ஆண்மையையும் குறிக்கக்கூடியதாகவும் பொருள் கொள்ளலாம். ஆதிபகவன் என்று கூறும்போது பெண்-ஆண், இரவு-பகல், இடங்கலை-பிங்கலை, தூல-சூட்சுமம், உடல்-உயிர் என இரண்டு இரண்டாக இருக்கும்.

    எனவே இங்கே அய்யன் திருவள்ளுவர் கூறுவது உலக நடைக்கு ஆதி என்பது அடிப்படை என பொருளாகிறது.

    ஒன்றில்லாமல் ஒன்றிருக்க முடியாது. ஒரு பிள்ளை என்றிருந்தால் எப்படி தாய், தந்தை இருக்கின்றார்களோ அதுபோல இந்த உலகம் இருக்கின்றது என்றால் அதற்கு தலைவன் என்பவன் ஒருவன் இருக்கவேண்டும்.

    கடவுள் முதன்மையான பொருளாக இருப்பவன் என்பதை கூறுகின்ற வள்ளுவன் அவனை அறிவதற்கு உபாயத்தையும் விளக்குகின்றார். இலக்கண இலக்கியங்களை கற்று புலமை பெற்றவர்களாக இருந்தாலும் நாம் ஏன் பிறந்தோம் என்ற அறிவையும் பெற்றிருக்கவேண்டும். சாகாமல் இருப்பதற்கான கல்வியை அறிந்திருக்கவேண்டும். அத்தகைய கல்வியை அறிந்த அறிவைத்தான் தூய்மையான அறிவு என்று சொல்லலாம்.

    சாகாத கல்வி என்றால் ஆன்மாவை அறிந்துகொள்ளுதல் வேண்டும். ஒன்றே சிவம் என்று அறிதல் வேண்டும். ஆன்மா தோன்றி பல லட்சம் கோடி வருடங்கள் ஆகின்றது. ஆன்மா அழியாதது. ஆன்மா பல உயிரினங்களாக, மனிதனாக பல பிறவிகளை எடுத்து அழியாமல் இருக்கும். ஆனால் உடல் அழிந்துபோகும். ஆன்மாவுக்கு பரிணாம வளர்ச்சி கிடையாது. நரை, திரை, மூப்பு, முதுமை கிடையாது. அழிவு கிடையாது. உடம்புக்கு எல்லாமே உண்டு. உடம்பு சக்தியை இழந்தால் உயிர் பிரிந்துவிடும். அத்தகைய உயிரைபற்றி அறிந்துகொள்வதுதான் சாகாக்கல்வி.

    ஒரு நாளைக்கு மனிதனுக்கு 21,600 முறை மூச்சுக்காற்று வந்து போகின்றது. இது இயற்கை. வெளியே போன காற்று, திரும்பி வரவில்லை என்றால் பிணம். இந்த உண்மையை அறிதிருக்கவேண்டும். இதனை அறிந்த அறிவை பெற்றவனை நாம் புரிந்து கொள்ளவேண்டும். அவனே ஆன்மாவை பற்றி அறிந்தவன். ஆன்ம ஜெயம் பெற்றவன். ஆன்ம ஜெயம் என்றால் ஆன்மாவை வெற்றி கண்டவன். ஆன்மாவை வெற்றிகண்டவன் நிச்சயமாக உடம்பையும் வெற்றி காண்பான். உடம்பும் உயிரும் நம் பிடிக்கு அகப்படாது.

    இடப்பக்கம் வருகின்ற காற்றையும், வலப்பக்கம் வருகின்ற காற்ரையும் ரேசித்து, பூரித்து, கும்பித்து புருவ மத்தியில் செலுத்திவிட்டால் ஆன்மா அந்த புருவ மத்தியில் ஒடுங்கிவிடும். ஆன்மா புருவ மத்தியில் ஒடுங்கிவிட்டால் அது திரும்பி வராது. அவ்வாறு வராமல் புருவ மத்தியில் ஒடுக்கியவன் எவனோ அவனே கற்றவன். இப்பயிற்சியை தொடர்ந்து செய்தால் வெற்றிபெறலாம்.

    வீரன், கல்வியாளன், எழுத்தாளன், கவிஞன், மருத்துவன் போன்ற எத்தனை பட்டங்களை பெற்றிருந்தாலும், எல்லோரும் இறுதியில் மரணத்தை தழுவுவார்கள். எவன் மரணத்தை வென்றவனோ அவனே கற்றவன். அவனே அறிந்தவன், புரிந்தவன், உண்ர்ந்தவன் ஆவான். அவன் திருவடியை பற்றி கொண்டாலொழிய மரணத்தை வெல்லும் மார்க்கத்தை காண முடியாது. அவன் காமத்தை வென்றவன்.

    தேக பந்தத்தை வென்றவன், மும்மலத்தை வென்றவன், பசியை வென்றவன், நரை, திரை, மூப்பை வென்றவன், அவனே கூர்மையான அறிவு உடையவன், மூலாதாரக் கனலை எழுப்பியவன். அந்தக் கனல் உடம்பிலுள்ள கசடை நீக்கும் தன்மையுள்ளது.

    ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்

    ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்

    அசுத்தமாகிய தேகத்தின் கழிவை ஆசான் துணை கொண்டு நீக்கினோம் என்றால் எண்ணம் தூய்மையானதாகி விடும். அத்தகையவர் திருவடியைப் பற்றிக் கொண்டால், நம் ஊழ்வினையை உடைத்து, பிறவிப்பிணியை அறுத்து, மீண்டும் நாம் கருப்பையுள் சேராமல் நம்மைக் காப்பார்கள்.

    அத்தகையவர்களின் திருவடி, காலனை வென்றது; அஞ்சா நெஞ்சம் கொண்டது. இதயத்தில் பக்தி செலுத்தி அவரது திருவடியைச் சரணாகதி அடைதல் வேண்டும். முதல் குறளில் கடவுள் ஒருவன் இருக்கின்றான் என்பதை எடுத்துரைத்த வள்ளுவர், அடுத்த குறளில் கடவுள் எத்தகையவன் என்பதை விளக்கினார். இங்கு, கடவுள் மென்மையானவர் என்பதை விளக்குகின்றார்.

    கடவுள் மென்மையானவன், கடந்தவன் கடவுள், பூவில் நறுமணம் உள்ளது போல் கடவுள் உள்ளான், அடியார் உள்ளத் தாமரை மலரில் வீற்றிருக்கக் கூடியவன் கடவுள் என்று எடுத்துக்காட்டு கூறுகின்றார்.

    அவ்வாறெனில், கடவுள் எத்தகைய தன்மையானவன் என்பதை உணர வேண்டும். அன்புடையவன்; மலர் போன்ற இதயத்தில் அவன் வீற்றிருப்பான். அவனை அறிய, மலர் எவ்வாறு மென்மையானதாக உள்ளதோ அவ்வாறு சிந்தை மென்மையானதாக இருக்க வேண்டும். புண்ணியம் செய்தாலன்றி, மனதிற்கு மென்மை வராது. பக்தி செலுத்தினாலன்றி, மென்மை வராது. பஞ்சு போன்ற மனமாக இருக்க வேண்டும். இதயத்தில் கனிவு இருக்க வேண்டும்.

    ஜீவகாருண்யம் உள்ள மனம், புலால் விரும்பாத மனம், வஞ்சனை இல்லாத மனம், பொய் பேசாத மனம் இத்தகைய மனம்தான் மலர் போன்ற மனம். அங்குதான் இறைவன் தங்குவான். மாட்சிமை பொருந்தியவனின் திருவடிகளைப் பற்றியவர்கள் நீடூழி வாழ்வார்கள். எப்போதும் நினைப்பவரது உள்ளத்தில் தங்கியிருப்பவன் தலைவன். அத்தகைய தலைவர்கள் முற்றுபெற்ற ஞானிகளே, கடவுள் தன்மை உடையவர்கள் ஞானிகள். அவர்கள் திருவடிகளைப் பற்றுபவர்கள் நீடூழி வாழ்வார்கள். மரணமில்லாப் பெருவாழ்வைப் பெறுவார்கள்.

    கடவுள் ஒன்றை விரும்பவும் மாட்டான். வெறுக்கவும் மாட்டான். கடுகடுப்பாக பேசினால் பகை வரும். பற்று வைத்தால் பாசம் வரும். இரண்டும் இல்லாமல் நடுநிலை வகித்தால் துன்பமில்லாமல் வாழலாம்.

    அறியாமையே பிறவிக்குக் காரணம், தெளிவு உள்ளவன் நிச்சயமாக பிறக்கமாட்டான். காமதேகத்தில் நிச்சயமாக சிறப்பறிவு இருக்க முடியாது. காமதேகம் என்பது இருட்டு. இருளில் இருப்பவனுக்கு, வெளிச்சத்தைப் பற்றித் தெரியாது. இருள் என்பது அறியாமை. நல்வினை, தீவினை இருந்தால் நிச்சயம் பிறவி வந்து விடும். அறியாமையிலிருந்து விடுபட வைராக்கியம் இருக்க வேண்டும். இல்லையென்றால் இருளை வெல்ல முடியாது.

    பக்தி செலுத்தினால் பசியை அறுக்க முடியும். பசியை அறுத்தால் சுக்கிலம் ஊறாது, காமம் அற்றுப் போகும். அதற்கு ஒரே உபாயம், திருவருள் துணை வேண்டும். திருவடியை உருகித் தியானிக்க பரிபக்குவம் வேண்டும்.

    அப்போது இருள் என்னும் அறியாமை நீங்கும். இருள் என்பது பசியா? காமமா? பெண்ஆசையா? உயிரா? உடம்பா? இயற்கையா? செயற்கையா? சூரியனா? சந்திரனா? இவ்வாறு புரியாத புதிர் இருள். உள்ளத்தில் எப்போது ஒளி வருகிறதோ அப்போது இருள் நீங்கும்.

    ஒளி என்பது என்னவென்றால், சிறப்பறிவு, சிறப்பறிவு பெற சித்தர்கள் திருவடியைப் பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. எங்கே மனம் ஓடுங்குகின்றதோ அங்கு இருள் இல்லை. தலைவனை அறிந்து திருவடியைப் பூஜை செய்தால் இருவினையும் அற்று அறியாமை நீங்கும். பிறவிக்குக் காரணமாக இருப்பவை ஐம்புலன்கள். இந்த உடம்பை வஞ்சிப்பவை இவைகளே, இந்த உடம்பு மெய்யா? பொய்யா? என்பது தெரிய வேண்டும். எழுகின்ற காம உணர்வைப் பொடியாக்க வேண்டும்.

    ஐம்புலன்களால் உண்டாகும் வேட்கைகளைக் குறைத்து, ஒழுக்கநெறி நின்று, கட்டுப்பாட்டுடன் இருந்து, உறுதியாக நின்றவர்கள் அழியாமல் இருப்பார்கள். ஐம்புலன்களை அடக்கினால் மட்டும் போதாது. பொய் எது? மெய் எது? என்று தெரிந்து பொய்யை நீக்க வேண்டும். அவர்களே இறைத் தன்மையில் நிலைத்து நிற்பார்கள். நம்மைவிட ஆயிரம் மடங்கு உயர்ந்த நிலையில் உள்ள ஞானியர்களின் திருவடியைப் பற்றிப் பூஜை செய்தால் மனக்கவலை தீரும்.

    கருணையே வடிவானவன், அறக்கடலாக விளங்குபவன், உயர் நிலையில் உள்ளவன்; அத்தகையவனின் திருவடியை வணங்காமல், ஒருவன் பொருள் இன்பத்தையும் பிறவிக்கடலையும் கடக்க முடியாது.

    உலகம் பற்றிய சிந்தனைகளே இல்லாதவர்கள், பொறி புலன்களுக்குக் கட்டுப்படாதவர்கள்; பரப்பிரம்மத்தில் ஐக்கியமாகி இருப்பார்கள்; பரப்பிரம்மமாகவும் இருப்பார்கள்; மூச்சுக்காற்று அசைவற்றவர்கள்; மூச்சுக்காற்றுத் தோன்றுகின்ற இடத்தில் ஒடுங்கியவராக இருப்பார்கள்.

    எங்கே மனம் தோன்றியதோ, அங்கே மனம் ஒடுங்கிற்று. மூச்சுக்காற்று அசைவால் மனம் அசையும். மூச்சுக்காற்று அசைவு நின்றுவிட்டால் மனம் அசைவது நின்றுவிடும். அவர்கள் பரப்பிரம்மத்தில் இருப்பார்கள். எப்போதும் பரமானந்தத்தில் இருப்பார்கள். உயர்ந்த குணத்தை உடையவர்களாக இருப்பார்கள். அத்தகைய உயர்ந்தவர்களின் திருவடியை வணங்காவிட்டால் நம் சிரசிற்குப் பயன் இல்லை.

    நாம் பல லட்சம் பிறவி எடுத்திருப்போம். போன ஜென்மத்தில் செய்த பாவம் கோபமாகவும், காமமாகவும், சாதி வெறியாகவும், மதவெறியாகவும், பொருள் வெறியாகவும், நோயாகவும் இருக்கும். எனவே, பிறவிப் பெருங்கடலை நீந்த முடியாது. நீந்துவதற்கு ஒரே உபாயம், எவன் பிறவிப் பெருங்கடலை வென்றவனோ அவன் திருவடியைப் பற்றி அவன் அருளை அடைய வேண்டும். திருவருள் துணை இல்லாதவன் பிறவிப் பெருங்கடலை நீந்த முடியாது.

    • தலத்தில் தினம் தினம் ஏதாவது ஒரு சிறப்பு பூஜைகள் நடந்து கொண்டே இருக்கிறது.
    • கும்பகோணத்தில் இருந்து குடவாசல் வரும் வழியில் குடவாசலுக்கு 1 கி.மீ முன் குடமுருட்டி ஆறு உள்ளது.

    கும்பகோணம் பகுதியில் எத்தனையோ வைணவ தலங்கள் இருந்தாலும் குடவாசலில் உள்ள சீனிவாச பெருமாள் ஆலயம் தனித்துவம் கொண்டது. ஏனெனில் இந்த தலம் பெருமாள் தாமாகவே விரும்பி அமர்ந்த தலமாகும். எனவே இந்த தலத்தில் பெருமாளின் அருள் அலைகள் மிகவும் நிரம்பி இருப்பதாக வைணவ பக்தர்கள் நம்புகிறார்கள்.

    புரட்டாசி மாதம் பெருமாள் கோவில்களில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடப்பது போல இந்த தலத்தில் புரட்டாசி திருவோண நட்சத்திர நாளில் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன. கடன் தொல்லைகள் நீங்கவும், தொழில் விருத்தி பெறவும், செல்வம் அதிகரிக்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும் இந்த ஆலயத்தில் வழிபடுகிறார்கள்.

    திருமணம் கைகூட வேண்டும் என்று விரும்புபவர்கள் தங்கள் ஜாதகத்தை பெருமாள் காலடியில் 12 வாரங்கள் சனிக்கிழமைகளில் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் கைகூடும் என்ற நம்பிக்கையும் உள்ளது. இதனால் இந்த தலத்தில் தினம் தினம் ஏதாவது ஒரு சிறப்பு பூஜைகள் நடந்து கொண்டே இருக்கிறது.

    கும்பகோணம் யாத்திரை மேற்கொள்பவர்கள் தங்கள் பயண திட்டத்திற்கு ஏற்ப இந்த ஆலயத்துக்கு செல்வதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த ஆலயம் கும்பகோணம்-திருவாரூர் வழித்தடத்தில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து 19 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. காரில் சென்றால் 30 அல்லது 35 நிமிடங்களில் சென்று விடலாம்.

    அதற்கு முன் இந்த ஆலயத்தை பற்றிய வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

    பூமியில் மிகப்பெரிய பிரளயம் ஏற்படும் சூழல் தோன்றியது. இதைக் கண்டு அச்சமடைந்த பிரம்மா மகா விஷ்ணுவிடம் சென்று 4 வேதத்தையும் மற்றும் உலக உயிரினங்களை மீண்டும் தோற்றுவிற்பதற்குமான வித்துகளையும் பாதுகாத்து தரச்சொன்னார்.

    இதையடுத்து அமிர்தம் மற்றும் மண் கலந்து செய்த குடம் ஒன்றில் உயிரினங்களை உண்டாக்குவதற்கான வித்துக்களை நடுவிலும், அதைச் சுற்றி நான்கு வேதங்களை யும் வைத்து, அமிர்தத்தையும் அதனுடன் சேகரித்து அதன் மேல் மாவிலை, தேங்காய் வைத்து மேருமலையில் உச்சியில் வைத்து ஆராதித்து வருமாறு மகாவிஷ்ணு யோசனை கூறினார்.

    பூலோகத்தில் பிரளயம் ஏற்பட்டு கடல்நீரால் சூழப்படும் போது அந்தக் குடமானது தென்திசை நோக்கி மிதந்து சென்று ஓரிடத்தில் நிலைபெறும். அமிர்த குடம் நிலை பெற்ற இடத்திற்குச் சென்று உமது படைத்தல் வேலையைத் தொடங்கலாம் என்றார் மகாவிஷ்ணு. அதன்படியே பிரம்மாவும் செய்ய அந்த அமிர்தக்குடம் சென்றடைந்த தலம்தான் குடவாசல்.

    அந்த குடத்தை உருட்டி வந்த நதியின் பெயர் குடமுருட்டி நதி என்றானது. மகாவிஷ்ணு உத்தரவுப்படி தனது படைப்பு தொழிலை பிரம்மா மீண்டும் தொடங்கிய இடம்தான் குடவாயில். அதுவே மருவி குடவாசல் என்றானது.

    கும்பகோணத்தில் இருந்து குடவாசல் வரும் வழியில் குடவாசலுக்கு 1 கி.மீ முன் குடமுருட்டி ஆறு உள்ளது. இங்கு தாயாருக்கு தனி சன்னதி இல்லாமல் எப்போதும் சீனிவாச பெருமாளுடன் இணைந்து திருமணக்கோலத் தில் காட்சி தருகிறார்.

    இந்த சீனிவாச பெருமாள் தன்னை தானே வெளிப்படுத்திக் கொண்டு இந்த தலத்தில் அமர்ந்த சிறப்பை பெற்றவர். அதிலும் ஒரு பின்னணி வரலாறு இருக்கிறது.

    இந்து மதம் எங்கும் பரவ வேண்டும் என்று விரும்பிய ஸ்ரீ கிருஷ்ண தேவராயர் இந்தக் குட வாசலைக் கடந்து சென்றார். இந்த இடத்தை மிகவும் அழகாகக் கண்ட அவர், பெருமாளுக்கு கோவில் எழுப்பினால் நன்றாக இருக்கும் என்று எண்ணினார். அவர் பல்வேறு வேத பண்டிதர்களுடன் கலந்துரை யாடினார் அவர்கள் பரிந்துரைத்தபடி முதலில் அவர் ஆலய திருக்குளத்தை கட்டத் தொடங்கினார்.

    அப்போது திருப்பதி -திருமலை ஸ்ரீ பெருமாள் ஒரு வைஷ்ணவர் கனவில் வந்து சில உத்தரவுகளைப் பிறப்பித்தார். ஆலயக் கட்டுமானப் பணி தொடங்கும் நாளுக்கு முன் ஈசான்ய மூலையில் (கட்டுமான நிலத்தின் ஒரு பகுதி) பெருமாள் சிலை இருப்பதாகக் கூறினார்.

    சிலையை சேதமடையாமல் எடுக்க வேண்டும். மணலை மென்மையாக்க, பால் ஊற்றலாம். பெருமாள் வடக்கு திசை நோக்கி இருக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் அவர் திருமலையின் சகோதரர் (இளையவர்) சீனிவாசர் மற்றும் ஸ்ரீ ஒப்பிலியப்பனின் மூத்த சகோதரர் என்றும் பெரிய பிரார்த்தனை தலமாக இந்த தலம் மாறும் என்றும் கூறினார்.

    கனவில் இருந்து வெளியே வந்த வைஷ்ணவர் மன்னனிடம் இதுபற்றித் தெரிவித்தார். இதையடுத்து கனவில் பெருமாள் சொன்னபடியே ஈசான்ய மூலையில் தோண்டத் தொடங்க உத்தரவிட்டார். அதன்படி நிலத்தில் நிறைய பாலை ஊற்றி மென்மை உண்டாக்கி, கடைசியில் சீனிவாசப் பெருமாளின் சிலை இருப்பதை கண்டுபிடித்து வெளியில் கொண்டு வந்தனர். அந்த சிலையை கருவறையில் வைத்து அவருக்கு கோவில் எழுப்பினார்கள். சீனிவாசர் மூலவருக்கு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை திருமஞ்சனம் செய்யப்படுகிறது. திருமலை திருப்பதியில் வெள்ளிக்கிழமை செய்யப்படும் திருமஞ்சன சேவையைப் பெற முடியாத பக்தர்கள், திருமலை சீனிவாசரின் சகோதரராகக் கருதப்படும் குடவாசல் சீனிவாசரின் திருமஞ்சன சேவையைப் பெறலாம். மூலவர் சீனிவாசப் பெருமாள் வடக்கு நோக்கிய படி காட்சி தருகிறார். வடக்கு திசைக்கு அதிபதி குபேரன். இங்கே பரம்பொருளை வடக்கில் இருந்தபடி குபேரன் வணங்கி வழிபடுவ தாகவும் அந்த குபேரனுக்கு சகல செல்வங்களையும் வாரி வழங்குவதற்காக சீனிவாசப்பெருமாள் வடக்கு பார்த்தபடி எழுந்தருள்வதாகவும் சொல்கிறார்கள்.


    பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி அன்று வடக்கு நோக்கிய சொர்க்க வாசல் திறக்கப்படும். அன்று பெருமாளை வழிபடுவதால் கிடைக்கும் பலனை வடக்கு நோக்கிய இத்தலத்தில் தினமும் பெறலாம்.

    இந்த ஆலயத்தில் நடைபெறும் எல்லா வழி பாடுகளும் வைபவங்களும் திருப்பதி - திருமலையில் நடப்பது போன்றே நடத்தப்படு கின்றன. திருப்பதியில் வெள்ளிக்கிழமை நடை பெறும் திருமஞ்சன தரிசனம் காண முடியாதவர்கள் இத்தலத்துக்கு வந்து கண்டு மகிழலாம். இதனால் இல்லங்களில் மகாலட்சுமியின் அருளுடன் ஐஸ்வர்யம் பெருகும். பெருமாளுக்கு சனிக்கிழமை உகந்த தினமாகும் அந்த நாளில் விரதம் இருந்து இவரை வணங்கினால் பெருமாள் குபேர சம்பத்தைத் தந்தருள்வார் என்பதில் ஐயமில்லை.

    திருமலை பெருமாளைப்போலவே இந்த தலத்துப் பெருமாளும் சர்வ அலங்காரத்துடன் காட்சி தருகிறார். இங்கு நடைபெறும் ஏகாந்த சேவை (அர்த்த சாம பூஜை) சிறப்பு வாய்ந்தது. இந்த பூஜையில் கலந்து கொண்டு பக்தர்கள் தரிசித்து பிரார்த்தனை செய்து கொள்ளலாம்.

    வியாழக் கிழமைகளில் நேத்ர தரிசனம் கண்டு மகிழலாம். ஒவ்வொரு மாதமும் பெருமாளின் திருநட்சத்திரமான திருவோணத்தில் சன்னதியில் நெய் தீபம் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் லட்சுமியுடன் கூடிய சீனிவாசர் தீப வடிவமாக பக்தர்களுக்கு அருள்புரிகிறார். அட்சய திருதியை அன்று இங்கு கருட சேவை நடைபெறுகிறது.

    இங்கே கோவில் கொண்டிருக்கும் யோக நரசிம்மருக்கும் (மூலவர்) லட்சுமி நரசிம்மருக்கும் (உற்சவர்) பிரதோஷ காலத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லைகள் நீங்கும். தொழில் விருத்தியும், பொருள் சேர்க்கையும் உண்டாகும்.

    கல்விக் கடவுளான ஹயக்ரீவருக்கும் இங்கு சன்னதி உண்டு. மாணவ-மாணவிகள் வியாழக் கிழமைகளில் இவரை வலம் வந்து ஏலக்காய் மாலை சாற்றி அர்ச்சனை செய்தால் கல்வியில் சிறக்கலாம். இங்குள்ள ஆஞ்சநேயர் காரிய சித்திக்காக நூதன முறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். ஐந்து வெற்றிலை, ஐந்து பாக்கு ஐந்து பழங்களை வியாழன் அல்லது சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு சமர்ப்பித்து தொடர்ந்து 5 வாரங்களும் அமாவாசை நாட்களில் தொடர்ந்து 5 மாதங்களும் வழிபடுபவர்க ளுக்கு எண்ணிய காரியங்கள் கைகூடுகின்றன.

    வெண்ணை காப்பு, வடைமாலை சாற்றி வேண்டுதலை நிறைவு செய்யலாம். ஞாயிற்றுக் கிழமை காலையில் நீராடி வெறும் வயிற்றுடன் இங்குள்ள கருட பகவானுக்கு தீபமேற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால், குழந்தை பேறு இல்லாதவர்க ளுக்கு குழந்தைப் பேறு கிட்டும் என்பது ஐதீகம்.

    சீனிவாசரின் திருநட்சத்திரம் திருவோணமாகும். இந்த நாளில் சன்னதியில் சிரவண தீபம் (தெய் தீபம்) ஏற்றப்படுகிறது. ஸ்ரீ யோக நரசிம்மர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், ஸ்ரீ ஹயக்ரீவர், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீ கருடன் பெரிய ஆழ்வார்களும் இக்கோவிலில் உள்ளனர்.

    நல்ல குழந்தைகளை நாடும் பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு தீபம் ஏற்றி நல்ல குழந்தை பாக்கியம் பெறுவார்கள் என்பது ஐதீகம். தொடர்ந்து 9 வெள்ளிக்கிழமைகளில் திருமஞ்சன தரிசனம் செய்து ஸ்ரீநிவாச பெருமாளை வணங்கினால் நினைத்த காரியங்கள் யாவும் கைகூடும் என்பது ஐதீகம்!

    'பெருமாளே... கண் திறந்து கருணை பார்வை காட்டப்பா என்று மனம் உருகி வழிபடு வார்கள் அல்லவா, பக்தர்கள்... இங்கே வியாழக்கிழமைகளில் நேத்ர தரிசனம் சிறப்புற நடைபெறுகிறது. இங்கு வந்து நேத்ர தரிசனம் செய்து வணங்கினால், வீட்டில் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    வடகலை சம்பிரதாயத்துக்கு உட்பட்ட இந்தத் தலத்தில், தாயாருக்கு தனிச் சந்நிதி இல்லை. சதாசர்வ காலமும் பெருமாளுடனேயே இருப்பதால், திருமண வரம் அருளும் திருத்தலம் இது. மாதந்தோறும் திருவோண நட்சத்திர நாளில் இங்கு வந்து பெருமா ளுக்கு திருமஞ்சனம் செய்து, அவரின் திருவடியில் ஜாதகத்தை வைத்து அர்ச்சனை செய்து, 9 முறை பிராகார வலம் வந்து பிரார்த்தித்தால், திருமண பாக்கியம் கைகூடும்.

    அதேபோல், பெருமாளுக்கு குங்குமப் பூ மற்றும் ஏலக்காய் அர்ச்சனை செய்து, அதையே பிரசாதமாகப் பெற்றுக்கொண்டு தினமும் சாப்பிட்டால், பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெறுவர் என்று போற்றுகின்றனர் பெண்கள்.

    ஆழ்வார்கள், ஸ்ரீஹயக்ரீவர், ஸ்ரீயோக நரசிம்மர், ஸ்ரீலட்சுமி நரசிம்மர், ஸ்ரீஆண்டாள் மற்றும் ஸ்ரீவேதாந்த தேசிகருக்கும் இங்கு சந்நிதிகள் உள்ளன. உற்சவத்தின்போது. பெருமாளுடன் ஸ்ரீவேதாந்த தேசிகரும் தனி வாகனத்தில் வீதியுலா வருவது வேறெங்கும் காண்பதற்கு அரிய ஒன்று! புரட்டாசி திருவோண நட்சத்திர நாளில், இவருக்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன.

    இங்கேயுள்ள ஸ்ரீயோக நரசிம்மர் மிகவும் விசேஷம்! புதன்கிழமை, சனிக்கிழமைகளில் ஸ்ரீயோக நரசிம்மருக்கு பானக நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்து, 9 முறை பிராகார வலம் வந்தால், எதிரிகள் தொல்லை ஒழியும்; உத்தியோகத்தில் பதவி உயர்வு கைகூடும் என்கின்றனர்.

    இந்தத் தலத்தின் இன்னொரு சிறப்பு, மூலவர் சீனிவாச பெருமாள் வடக்கு நோக்கியபடி காட்சி தருகிறார். வடக்குத் திசைக்கு அதிபதி குபேரன். இங்கே, பரம்பொருளை வடக்கில் இருந்தபடி குபேரன் வணங்கி வழிபடுவதாகவும், அந்தக் குபேரனுக்கு சகல செல்வங்களையும் வாரி வழங்குவதற்காக ஸ்ரீசீனிவாச பெருமாள் வடக்குப் பார்த்தபடி எழுந்தருள்வ தாகவும் சொல்வர். எனவே, சீனிவாச பெருமாளை 9 திருமஞ்சனம் செய்து வணங்கித் தொழுதால்... சகல ஐஸ்வரியங்களும் குபேர சம்பத்துகளும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்!

    குடவாசல் தலத்துக்கு வந்து, சீனிவாச பெருமாளுக்கு 9 முறை திருமஞ்சனம் செய்து, 9 முறை பிராகார வலம் வந்து வணங்குங்கள். ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம் கை கூடும் என்பது நம்பிக்கை.

    • ஒரு நாளைக்கு 1 பெண் 1200 மி.கி. கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
    • மனஅழுத்தம் மற்றும் எரிச்சலைப் போக்க வாரத்திற்கு இருமுறை எண்ணைய் குளியல் செய்யவும்.

    பொதுவாக பெண்கள் அனைவரும் மாதவிடாய் சுழற்சியின் முதல் 5 நாட்கள் கருப்பு எள்ளு சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த நாட்களில் எள்ளு உருண்டை, எள்ளுப்பொடி போன்றவற்றை சேர்த்துக்கொள்ள மாதவிடாய் காலத்தில் உதிரபோக்கை சீர்செய்து மாதவிடாய் கால வயிற்று வலியை குறைக்கும். இதிலுள்ள பைட்டோஸ்ரோஜன், ஆண்டியோக்சிடன்ட், ஆக்ஸிஜனேற்றம் மற்றும் வைட்டமின் இ கருப்பை மற்றும் அதன் சுவரை உறுதிப்படுத்துகிறது. 

    அடுத்து 6 முதல் 14 நாட்கள் வரை உளுந்து சேர்த்துக்கொள்ள வேண்டும். உளுந்து களி, கஞ்சி போன்றவற்றை இந்த நாட்களில் சேர்த்துக்கொள்ள, இதிலுள்ள அதிகப்படியான ஈஸ்ட்ரோஜன் மாதவிடாய் சுழற்சியில் 14வது நாள் கருமுட்டை வெளிப்பட பெரிதும் துணை செய்கிறது. மேலும் இடுப்பிற்கு பலத்தையும் தருகிறது.

    மாதவிடாய் சுழற்சியின் கடைசி 14 நாட்கள், அதாவது 15 முதல் 28 நாட்கள் வரை வெந்தயம் பொடி செய்து அரை முதல் ஒரு ஸ்பூன் சேர்த்துக்கொள்ளலாம். ஹார்மோன்ஸ் சமநிலை இல்லாமையை சரிசெய்து மாதவிடாய் முன் குறிகுணங்களான குமட்டல், வாந்தி, தலைவலி, உடல் சோர்வு போன்றவற்றை குறைக்கிறது. மேலும் இது சினைப்பை கட்டிகளை குறைப்பதாகவும் ஆய்வு முடிவுகள் மூலம் தெரியவருகிறது.

    பூப்பு தொடங்கியது முதல் முடிவுறும் வரை பெண்கள் இதை தொடர்ந்து பின்பற்றி வர ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரான் அளவு சீர்செய்யப்பட்டு மாதவிடாய் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைகிறது.

    மேலும் போதுமான புரதச்சத்து, இரும்புச்சத்து சேர்ந்த உணவுகளையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சி தினமும் செய்து ஹார்மோன் சமநிலையற்ற தன்மையை சரிசெய்து மாதவிடாய் கோளாறுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம்.

    மாதவிடாய் நிறுத்தம்: மாதவிடாய் நிறுத்தம் என்பது பெண்களின் மாதவிடாய் சுழற்சியின் முடிவு நிலையாகும். ஒரு பெண்ணுக்குத் தொடர்ச்சியாக 12 மாதங்களுக்கும் அதற்கு பின்னரும் மாதவிடாய் வராமல் முற்றிலும் நின்றால் மாதவிடாய் நிறுத்தம் என கணிக்கலாம். மாதவிடாய் நிறுத்தம் பொதுவாக 45-50 வயதில் பெண்களுக்கு ஏற்படுகின்றது. சில பெண்களுக்கு 35 முதல் 40 வயதில் பூப்பு முடிவு ஏற்படுகிறது. சிலருக்கு 50 முதல் 55 வயதில் மாதவிடாய் நிறுத்தம் ஏற்படலாம். பெண்களின் மாதவிடாய் நிறுத்தத்திற்கு சராசரி வயது 50. மாதவிடாய் நிறுத்தம் பெண்களின் ஆரோக்கியம் மற்றும் ஹார்மோன்களை பொறுத்தே ஏற்படுகிறது. மாதவிடாய் நிறுத்தத்தின் வயது ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடும்.

    இறுதி மாதவிடாய் ஒரு சிலருக்கு இயற்கையாகவே எந்த தொந்தரவும், உடல் உபாதைகளும் இல்லாமல் நடந்து விட்டாலும், இன்றைய பெரும்பாலான பெண்களுக்கு பல பிரச்சனைகளோடு கடக்கும் சூழல் ஏற்படுகிறது. மாதவிடாய் நிறுத்தத்தின்போது அதிக உதிரப்போக்கு, உதிரப்போக்கு கட்டி கட்டியாக வெளிப்படுதல். தூக்கமின்மை, பிறப்புறுப்புகளில் வறட்சி, தலைவலி, சோம்பல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், திடீர் உடற்சூடு, மனஅழுத்தம் அல்லது எரிச்சல், உணர்வு, இரவில் திடீரென வியர்த்தல், முடி கொட்டுதல், செயல்பாடுகளில் தடுமாற்றம், தோலில் மாற்றங்கள், மலச்சிக்கல், எலும்பு பலவீனம், உடல் பருமன் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

    மெனோபாஸ் இயற்கையான உடலியல் மாற்றம் தான் என்றாலும், அது நிகழும்போது உடலில் ஏற்படும் அதிகப்படியான வெப்பம், தொடர்ந்து தூக்கமின்மை, மூளைச் செயல்களில் தடுமாற்றம் ஆகியவை ஏற்படும். இவற்றுக்கு முறையான சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால், பின்னாளில் பல நோய்கள் உருவாகலாம்.

    மெனோபாஸ் சிகிச்சை மேற்கொள்வது என்பது உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகப்படுத்தி உடலே அதைக் குணப்படுத்தும் அளவுக்கு தயார்படுத்துவதாகும்.

    மாதவிடாய் நிறுத்தத்திற்கு பிறகு உடலில் ஏற்படும் இடர்பாடுகளை தடுக்க முதலில் நம் உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும். எனவே இறுதி மாதவிடாயை நெருங்கி கொண்டிருப்பவர்கள் கீழ்காணும் உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    1. கால்சியம் நிறைந்த உணவுகள்:

    ஒரு நாளைக்கு 1 பெண் 1200 மி.கி. கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். கருப்பு உளுந்து, கொத்தமல்லி, முடக்கற்றான், பிரண்டை, பால், பசலைக்கீரை போன்றவற்றில் கால்சியம் அதிகமாக உள்ளது.

     2. இரும்புசத்து நிறைந்துள்ள உணவுகள்:

    உடலில் ரத்தப்போக்கு அதிகம் ஏற்படும்போது ஹீமோகுளோபின் அளவு குறையாமல் பாதுகாத்து கொள்ள உதவும். பேரீச்சம் பழம் கொட்டை வகைகள் (பாதாம், அக்ரோட்டு), இறைச்சி, தேன், ஆளிவிதைகள்.

    3. நார்ச்சத்து நிறைந்துள்ள உணவுகள்:

    பெண்கள் தினந்தோறும் 21 கிராம் நார்ச்சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். நார்ச்சத்து நிறைந்துள்ள உணவுகள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை வெளியேற்றும். மாதவிடாய் நிறுத்தத்தின்போது வயிற்றில் ஏற்படும் உபாதைகளை தடுக்க உதவும். வாழைத்தண்டு, முளைக்கட்டிய பயறு வகைகள், புதினா, கொத்தவரங்காய், பீன்ஸ்.

    4. வைட்டமின் டி:

    உடலில் கால்சியம் சேர வைட்டமின் சத்து மிகவும் முக்கிய பங்கை வகிக்கின்றது. எனினும், இது அதிக அளவு சூரியக் கதிர்களில் மட்டுமே உள்ளது. இதனால் தினமும் இளம் கதிர் விழும் நேரத்தில் சூரிய ஒளியில் சில நிமிடங்களாவது இருக்க வேண்டும்.

    5. தண்ணீர்:

    முடிந்த வரை 2-3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும், மேலும் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    6. நல்ல கொழுப்பு

    உடல் சீராக வேலை செய்யவும், எலும்புகள் தேய்மானம் ஏற்படுவதை தடுக்கவும் உதவுகிறது. கொழுப்பு சத்து தேவை எனினும் அது நல்ல கொழுப்பாக இருக்க வேண்டும். அந்த வகையில் தேங்காய், கொட்டை வகைகள் போன்ற பாதுகாப்பான கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    மாதவிடாய் நிறுத்தத்திற்கு பிறகு பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்:

    மெனோபாஸ் காலச் சுழற்சிக்குப் பிறகு உடலில் உள்ள ஹார்மோன்கள் பழையபடி இயங்க இயற்கை மூலிகைகளான தண்ணீர்விட்டான், அதிமதுரம் ஆகியவற்றின் வேர்களிலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளை பயன்படுத்த வேண்டும். இந்த தாவரங்களில் ஈஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோன் சுரப்புக்கு உதவும் மருத்துவக் குணங்கள் உள்ளன. 

    இயற்கை மருத்துவர் நந்தினி, 95006 76684

    இயற்கை மருத்துவர் நந்தினி, 95006 76684

    மனஅழுத்தம் மற்றும் எரிச்சலைப் போக்க வாரத்திற்கு இருமுறை எண்ணைய் குளியல் செய்யவும்.

    உடலின் வெப்பத்தை குறைக்க தினமும் அதிக தண்ணீர், மோர் போன்ற பானங்களை எடுத்துக் கொள்ளவும்.

    நாட்டுக்கோழி, நாட்டுக்கோழி முட்டை போன்ற இறைச்சி வகைகளையும் உணவில் சேர்க்கவும். வருடத்திற்கு ஒரு முறையாவது முழு உடல் பரிசோதனை செய்வது அவசியம்.

    ஆஸ்டியோபோரோசிஸ் எனும் எலும்பு பலவீனமாவதை தடுக்க உணவில் கருப்பு உளுந்து, பால் போன்றவற்றை உடலில் அடிக்கடி சேர்க்க வேண்டும்.

    ஹார்மோன்களை சீராக வைத்திருக்க உணவுக்கட்டுப்பாடு மிக முக்கியம் குறிப்பாக காய்கறிகள், பழங்கள், பால், நெய், சோயா பால், கீரை, கொண்டைக்கடலை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். ஏனெனில், இவற்றில் (பைடோஸ்ரோஜன்) என்னும் சத்துக்கள் உள்ளன.

    சூடான உணவு, மூலிகை டீ நேரத்திற்கு சாப்பிடுவது போன்ற பழக்கவழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். காபி, குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

    தினமும் குறைந்தது 40 நிமிடம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

    • உலகமெங்கும் பிரசித்தமான மாடல் டி கார் உருவாகவே அவர் பெயர் பிரபலமானது.
    • மேதைத் தனம் என்பது அனுபவம். சிலர் அதை ஒரு பரிசு என்றோ அல்லது ஒரு திறமை என்றோ நினைக்கின்றனர்.

    கடிகாரத்தை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மீண்டும் அதை அசெம்பிள் செய்து வேடிக்கை பார்த்த ஒரு சிறுவன், உலகின் ஆகப் பெரிய கார் அசெம்பிளி லைனை – 24 விநாடிகளில் கார் பாகங்களை ஒன்று சேர்த்து ஒரு காராக உருவாக்கும் நுட்பத்தைச் செய்து காட்டினான் என்றால் பிரமிப்பாக இல்லை?

    அமெரிக்கர்களையும் பிரிட்டிஷாரையும் வெறுக்கும் ஹிட்லர் தன் வாழ்நாளில் அனைவரும் அறியும்படி "உத்வேகம் ஊட்டுபவர்" என்று கூறிப் புகழ்ந்த ஒரே ஒரு அமெரிக்கர் இவர் தான் என்றால் ஆச்சரியமாக இல்லை?

    யார் இவர்?

    அவர் தான் ஹென்றி போர்டு.

    பிறப்பும் இளமையும்: அமெரிக்காவில் மிச்சிகன் மாகாணத்தில் வில்லியம் என்பவருக்கும் மேரி போர்டுக்கும் 1863-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ம் தேதி பிறந்தார் ஹென்றி போர்டு. தாயின் விருப்பத்திற்கிணங்க பண்ணையில் வேலை பார்த்த அவர் 1876-ல் தாயார் மறையவே பண்ணையில் இருந்து வெளியே வந்தார்.

    தந்தையார் அவருக்கு ஒரு பாக்கெட் கடிகாரத்தைப் பரிசாகத் தந்தார். அடுத்த கணமே அதை அக்கக்காகப் பிரித்த போர்டு, மீண்டும் அதை கடிகாரமாக அசெம்பிள் செய்து அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கினார்.

    இதிலிருந்து அனைவரது கடிகாரங்களையும் வாங்குவது, பிரிப்பது மீண்டும் அதை பழையபடி ஒன்று சேர்த்து ஓட வைப்பது அவரது பொழுதுபோக்கானது. ரிப்பேர் செய்வதற்கென்றே கடிகாரங்களை அனைவரும் அவரிடம் தர ஆரம்பித்தனர். அசெம்பிள் செய்வது என்பது அவரது மனதில் ஆழப் பதிந்து விட்டது.

    15 வயதில் முதல் என்ஜின்: 1878-ல் தனது 15-ம் வயதில் தனது முதல் நீராவி என்ஜினை அவர் உருவாக்கினார். எடிசனின் நிறுவனமான எடிசன் இல்லுமினேடிங் கம்பெனியில் சேர்ந்த அவர் தனது திறமையால் 1893-ல் தலைமைப் பொறியாளராக ஆனார்.

    கையில் சிறிது பணம் சேரவே சொந்தமாக தனது கேசொலைன் என்ஜினை தயாரிக்க ஆரம்பித்தார்.

    "குதிரை இல்லாமல் ஓடும் வண்டியான", தனது காரை 1896-ல் – 33-ம் வயதில் உருவாக்கினார்; அனைவரும் பிரமித்தனர். ''க்வாட்ரி சைக்கிள்' என்று அவர் அதற்குப் பெயர் சூட்டினார்.

    எடிசன் மீது அளவில்லாத பக்தி அவருக்கு ஏற்பட்டது. எடிசன் அவரைக் கார் தயாரிக்குமாறு ஊக்குவித்தார்.

    போர்டு மோட்டார் கம்பெனி: 1903-ம் ஆண்டு போர்டு மோட்டார் கம்பெனியை 28000 டாலர் முதலீட்டுடன் அவர் தொடங்கினார். ஆனால் உரிய லைசென்ஸ் இல்லாத காரணத்தால் அது மூடப்பட்டது. நீதிமன்றம் சென்ற போர்டு முதலில் தோற்றாலும்

    1911-ல் வெற்றி பெற்றார். மீண்டும் தொழிற்சாலை தொடங்கியது.

    600 டாலர் விலையில் 'மாடல் என்' என்ற ஒரு காரை அவர் அறிமுகப்படுத்தினார். அதன் விலை கூடுதல் என்பதை அவர் உணர்ந்தார். ஆகவே அனைவரும் வாங்கும் விலையில் ஏராளமான கார்களை உற்பத்தி செய்வதற்கான வழியைக் கண்டுபிடிக்க அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.

    முதலில் 950 டாலருக்கு விற்பனையான அவரது 'மாடல் டி' கார், 1927-ல் கடுமையான உழைப்பு, ஆர்வம் ஆகியவற்றின் விளைவாக 290 டாலராகக் குறைக்கப்பட்டது.

    தனது புதிய செயல் முறையான அசெம்பிளி லைனை அவர் 1913-ல் ஆரம்பித்தார். கார் பாகங்கள் வரிசையாக வைக்கப்பட்டு இருக்க 723 நிமிடங்களில் அதை ஒரு காராக ஆக்கிய அசெம்பிளி லைனை முதலில் அவர் உருவாக்கினார். பின்னர் தனது கடும் உழைப்பால் 93 நிமிடங்களில் ஒரு காரை உருவாக்க முடியும் என்பதை நிரூபித்தார். இன்னும் அதிக ஆராய்ச்சியும் , அதிக உழைப்பும் சேர அனைவரும் பிரமிக்கும் வண்ணம் 24 விநாடிகளில் அசெம்பிளி லைனிலிருந்து காரை வெளியே கொண்டு வந்தார்.

    உலகமெங்கும் பிரசித்தமான மாடல் டி கார் உருவாகவே அவர் பெயர் பிரபலமானது. அமெரிக்க சந்தையில் புகுந்த அவர் மக்களிடம் காரை விற்கத் தொடங்கினார். அமெரிக்காவில் பாதி கார்கள் அவர் தயாரித்த கார்களாகவே இருந்தன.

    உலகமே அதிசயித்த அந்த கால கட்டத்தில் ஹிட்லரே அவரை "ஊக்கமூட்டும் ஒருவர்" என்று புகழ்ந்தார்.

    மாடல் டி காரின் விற்பனை: மாடல் டி கார் மக்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. 165 லட்சம் கார்கள் விற்கப்பட்டன. 1908-ல் இருந்து 1927 முடிய தயாரிக்கப்பட்ட இந்தக் கார்கள் 2012-ம் ஆண்டிலும் கூட அமெரிக்காவின் டாப்-டென் கார்களில் ஒன்றாகத் திகழ்ந்தது.

    குடும்பம்: கிளாரா ஜேன் பைரண்ட் என்பவரை அவர் 1888-ம் ஆண்டு மணந்தார். அவருக்கு எட்சல் போர்டு என்று ஒரு மகன் உண்டு. வாழ்நாளில் அவரைத் தேடி ஏராளமான விருதுகள் வந்து குவிந்தன.

    அமெரிக்காவை உருவாக்கிய முக்கியமான ஒருவராக அவர் கருதப்பட்டார். 1999-ல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், மார்டின் லூதர் கிங், மதர் தெரசா ஆகியோர் அடங்கிய 18 பேர் பட்டியலில் அவரும் ஒருவராக அமெரிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    மனிதப் பண்புகள்: தனது நிறுவனத்தில் 20 சதவீதம் பணியை மாற்றுத்திறன் கொண்ட ஊனமுற்றோருக்காக அவர் தந்தார். அந்தக் காலத்தில் மற்றவர்கள் தரும் சம்பளத்தை விட இரு மடங்கு ஊதியத்தை அவர் தனது தொழிலாளர்களுக்கு வழங்கியதோடு, நிறுவனத்தில் தனக்குக் கிடைத்த லாபத்தை ஆறுமாதத்திற்கும் மேலாகப் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் அவர் பிரித்துக் கொடுத்தார்.

    எடிசனின் கடைசி மூச்சு: எடிசன் மீதான அவரது பக்தி அளப்பரியது. ஒரே ஒரு அதிசயமான எடுத்துக்காட்டைக் கூறலாம்.

    எடிசன் மரணப்படுக்கையில் இருக்கிறார், இறக்கப்போகிறார் என்பதை அறிந்தவுடன் போர்டு அவரது மகனிடம் ஓடோடிச் சென்று ஒரு சின்ன டெஸ்ட் டியூப் குழாயைக் கொடுத்தார். "எடிசனின் கடைசி மூச்சை இதில் எனக்குப் பிடித்துக் கொடுங்கள்" என்று வேண்டினார்.

    விசித்திரமான இந்த வேண்டுகோளை எடிசனின் மகனும் ஏற்றார். அவரது கடைசி மூச்சு அந்த டெஸ்ட் டியூப் குழாயில் பிடிக்கப்பட்டது. எடிசனின் மகன் உடனடியாக ஒரு கார்க்கை மேலே வைத்து அதை சீலிட்டார்.

    போர்டு அதை தான் அமைத்த 'தி ஹென்றிபோர்டு" என்ற மியூசியத்தில் பாதுகாப்பாக வைத்தார். அதை இன்றும் அந்த மியூசியத்தில் காணலாம்.

    சோயா பீன்ஸ் தகடினால் ஆன கார்!

    போர்டுக்கு அரசியலிலும் ஆர்வம் உண்டு. அமெரிக்க ஜனாதிபதியான உட்ரோ வில்சன் அவரை செனட்டுக்கு நிற்குமாறு வற்புறுத்த அவரும் போட்டியிட்டார். ஆனால் 4500 ஓட்டு வித்தியாசத்தில் தோற்றார்.

    இறக்கும் போது அவர் தன் பெயரில் 161 பேடண்ட் காப்புரிமைகளைக் கொண்டிருந்தார்.

    சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பில் பெரும் அக்கறை கொண்டவர் அவர். காரின் வெளிப்புறத் தகடுகளை சோயா பீன்சினால் செய்து காரின் எடையை வெகுவாகக் குறைக்க வேண்டும் என்பது அவரது ஆசை.

    ச.நாகராஜன்

    ச.நாகராஜன்

    இரண்டாம் உலகப் போர் குறுக்கிடவே அவரால் தனது சோயாபீன்சினால் ஆன தகடுகள் கொண்ட காரை உற்பத்தி செய்ய முடியவில்லை.

    மறுபிறப்பில் நம்பிக்கை: தான் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்று தீவிரமாக நம்பினார் போர்டு. இதற்குக் காரணம் மறுபிறப்பில் அவருக்கு இருந்த நம்பிக்கை. ஆர்வமும் உழைப்பும் வெற்றி தரும். இருக்கவே இருக்கிறது புனர்ஜென்மம். பொறுமையுடன் இருந்தால் அடுத்த ஜென்மத்திலாவது வெற்றி வராமலா போய்விடும் என்பது அவரது எண்ணம்.

    தன் வெற்றிக்குக் காரணம் ஏதோ ஒரு மகத்தான சக்தி தான் என்று அவர் கூறினார். "மகத்தான சக்தி ஒன்று தனது அலைகளை என் மீது வீசிக் கொண்டிருக்கிறது. சொந்தமாக நான் ஒன்றுமே செய்யவில்லை. மறைந்திருக்கும் ஆற்றல் சக்திகளே என்னை முன்னுக்குத் தள்ளி வழி நடத்துகின்றன" என்றார் அவர்.

    தனது 26-ம் வயது முதலே மறுபிறப்பில் நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதை அவரே சான்பிரான்சிஸ்கோ எக்சாமினர் என்ற பத்திரிகைக்கு 1928-ம் ஆண்டு ஆகஸ்ட்

    28-ம் தேதி அளித்த பேட்டியில் குறிப்பிடுகிறார் இப்படி:

    26-ம் வயதில் மறுபிறப்பு பற்றிய நம்பிக்கையைக் கொள்ள ஆரம்பித்தேன். மதம் ஒன்றும் தர முன்வரவில்லை. வேலை கூட பூரண திருப்தியைத் தரவில்லை.

    ஒரு பிறப்பில் நாம் பெற்ற அனுபவத்தை இன்னொரு பிறவியில் நாம் பயன்படுத்த முடியவில்லை எனில் அது மிக மோசம். மறுபிறப்பு பற்றி நான் கண்டுபிடித்த போது ஒரு பிரபஞ்ச திட்டத்தை கண்டு கொண்டது போல இருந்தது. எனது கருத்துக்களை நிறைவேற்ற ஒரு வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்தேன். காலம் என்பது இனி ஒரு எல்லைக்குட்பட்டதாக இல்லை. கடிகாரத்தின் முள்களுக்கு நான் இனி அடிமை இல்லை.

    மேதைத் தனம் என்பது அனுபவம். சிலர் அதை ஒரு பரிசு என்றோ அல்லது ஒரு திறமை என்றோ நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் அது பல ஜென்மங்களில் ஏற்பட்ட அனுபவங்களின் விளைவே. சிலர் மற்ற ஆன்மாக்களை விட முதியவர்கள். ஆகவே அவர்களுக்கு அதிகம் தெரியும். மறுபிறப்பைக் கண்டுபிடித்ததிலிருந்து எனது மனம் தெளிவாக இருக்கிறது.

    இந்த உரையாடலை நீங்கள் பாதுகாத்தீர்கள் என்றால் இது மனித மனங்களை தெளிவாக இருக்கச் செய்கிறது என்று எழுதுங்கள். நான் மற்றவர்களுக்குச் சொல்ல விரும்புவது வாழ்க்கை பற்றிய நீண்ட நோக்கு நமக்குத் தரும் அமைதியைப் பற்றியே"

    போர்டு கூறியதில் ஒரு சிறிய பகுதியையே மேலே நாம் படித்தோம். இன்னும் ஏராளமாக அவர் மறுபிறப்பு பற்றிக் கூறியிருக்கிறார்.

    மனித வாழ்வில் ஒரு ஆறுதலையும் அர்த்தத்தையும் தரும் மறுபிறப்பு நம்பிக்கையே தன் வெற்றிக்குக் காரணம் என்று அவர் கூறியிருப்பது பொருள் பொதிந்த ஒன்று.

    மறைவு: பெருமூளையில் ஏற்பட்ட ரத்த ஒழுக்கினால் 1947-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ம் தேதி அவர் தனது 83-ம் வயதில் மரணமடைந்தார்.

    வரலாறு கண்ட மாமனிதர்: சாதாரண கடிகார ரிப்பேர் செய்து கடிகார பாகங்களைக் கழட்டி அதை மறுபடியும் பூட்டி தனது வாழ்க்கைப் பாதையை ஆரம்பித்த போர்டு 200 பில்லியன் டாலருக்குச் சொந்தக்காரராக ஆனது எதைக் குறிக்கிறது? அவரது ஆர்வம், உழைப்பு, பொறுமை ஆகியவற்றையே குறிக்கிறது.

    வரலாற்றில் நாம் காணும் அதிசய மனிதராகத் திகழும் இவரது பொன்மொழி:

    செய்யும் ஒரு வேலையில் வெற்றி காணவேண்டுமெனில், எந்த ஒரு அமைப்பையும், வழிமுறையையும் எப்போதும் சீர்திருத்தவோ, அல்லது அடியோடு நீக்கவோ, ஒழிக்கவோ தயாராக இருங்கள்,

    எல்லாமே உங்களுக்கு எதிராகத் திரும்பி விட்டது எனில், ஆகாய விமானம் காற்றுக்கு எதிராகவே தனது பறக்கும் வேலையைத் தொடங்குகிறது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

    தொடர்புக்கு:- snagarajans@yahoo.com

    • மன அழுத்தத்தைப் போக்கும் அமுக்கரா கிழங்கு தைராய்டு சுரப்பியின் செயல்திறனை அதிகரிப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
    • ‘குங்கிலியம்’ எனும் மற்றொரு மூலிகைப்பிசின் தைராய்டு கோளாறுக்கு நல்ல பலன் தருவதாக உள்ளது.

    முதுமையில் ஏற்படும் உடல் உறுப்புக்களின் தேய்மானம் எந்த உறுப்புக்களையும் விட்டு வைப்பதில்லை. அவ்வாறு இருக்கையில் தைராய்டு சுரப்பியும் முதுமையில் எடை குறைந்து, திசு வடுவாக மாறுகிறது. இதனால் அதில் சுரக்கும் ஹார்மோன் அளவும் படிப்படியாக குறைகிறது. மேலும் முதுமையில் உண்டாகும் மன அழுத்தத்தினாலும், சில வகை மருந்துகளாலும் தைராய்டு சுரப்பி தொந்தரவுகள் உண்டாவதாக உள்ளன.

    தைராய்டு எனும் நமது உடலின் கழுத்துப் பகுதியில் உள்ள ஒற்றைச் சுரப்பி ஒட்டுமொத்த உடலின் செயல்பாட்டையும் கட்டுக்குள் வைத்துள்ளது. இதுவே இன்ன பிற சுரப்பிகளில் உற்பத்தியாகும் ஹார்மோன் சுரப்பிகளுக்கும் நெருங்கிய தொடர்புடையது.

    பொதுவாகவே 60 வயதைக் கடக்கும் 20 சதவீதம் பெண்களுக்கும், 8 சதவீதம் ஆண்களுக்கும் 'சப்கிளினிக்கல் ஹைப்போ தைராய்டு' (குறை வீதனம்) எனும் தைராய்டு சுரப்பு குறைவு ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சிகிச்சை அளிக்க தவறினால் ரத்தத்தில் கொழுப்பு அதிகரிப்பதுடன், ரத்த குழாய் அடைப்பு, இதயத்தின் செயல்பாடு குறைதல், ரத்த அழுத்தம் அதிகரித்தல் ஆகிய பல்வேறு தொந்தரவுகள் உண்டாகும் அபாயம் உள்ளது.

    சித்த மருத்துவ நோய்க்காரணிகளான வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றில் 'கபவாதம்' கூட்டணியே ஹைப்போதைராய்டு பிரச்சனைக்கு முதற்காரணமாக உள்ளது. அதாவது தைராய்டு சுரப்பியை கபமும், வாதமும் தாக்குவதால் அதன் செயல்தன்மை குறைந்து உடல் பருமன், தலை முடி உதிரல், உடல் அசதி, சோம்பல், மலச்சிக்கல், குளிர்ச்சி தாங்க முடியாமை, இன்னும் பல்வேறு குறிகுணங்களை உண்டாக்கி முதுமையில் உபாதைகளைத் தரும்.

    அதே போல் உடலில் அதிகரிக்கும் பித்தத்தால் பித்தமும், வாதமும் கூடி தைராய்டு சுரப்பியை பாதிக்குமானால் தைராய்டு செயல்திறன் அதிகரித்து ஹைப்பர்தைராய்டு (அதிவீதன நோய்) எனும் நோய்நிலைக்கு வித்திடும். இதனால் உடல் எடை குறைதல், உடல் அதிக சூடாக இருத்தல், நடுக்கம், மார்பு படபடப்பு, நரம்பு தளர்ச்சி, வெப்பம் தாங்க முடியாமை ஆகிய குறிகுணங்களை உண்டாக்கி முதுமையை மேலும் வருத்தும். ஆகவே முதுமையில் தைராய்டு சுரப்பி எந்த நிலையில் உள்ளது என்பதை மருத்துவர் ஆலோசனைப்படி அவ்வப்போது பரிசோதனை செய்து தெரிந்துகொள்வது நல்லது.

    முதுமையில் 'சப் கிளினிக்கல் ஹைப்போ தைராய்டு' என்று கூறப்படும் ஆரம்ப கட்ட குறை வீதன நோய்நிலையில் கபவாதம் போக்கும் சித்த மருத்துவ மூலிகைகளான அமுக்கரா கிழங்கு, குங்கிலியம், மந்தாரைப் பட்டை, மாவிலங்கப்பட்டை, இஞ்சி, தசமூலம், கருஞ்சீரகம், சுக்கு, மிளகு, திப்பிலி சேர்ந்த திரிகடுகு, ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மையுள்ள கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்ந்த திரிபலை சூரணம் ஆகிய மூலிகை மருந்துகள் நற்பலன் தருவதாக உள்ளன. 

    அமுக்கரா கிழங்கு

    அமுக்கரா கிழங்கு

    மன அழுத்தத்தைப் போக்கும் அமுக்கரா கிழங்கு தைராய்டு சுரப்பியின் செயல்திறனை அதிகரிப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தினசரி அமுக்கரா சூரணம் என்ற சித்த மருந்தை ஒரு தேக்கரண்டி அளவு தேனில் கலந்து எடுத்துக்கொள்ள கபவாதம் போக்கி தைராய்டு சுரப்பி கோளாறு மட்டுமின்றி, பல்வேறு ஹார்மோன் சுரப்பிகளை சீராக்கும் தன்மை உடையது.

    அமுக்கரா கிழங்கில் உள்ள 'வித்தா பெரின்-எ' என்ற வேதிப்பொருள் தைராய்டு சுரப்பியை தூண்டி இயற்கையாக செயல்பட வைக்கும் தன்மையும் உடையது. அதே போல் மன அழுத்தம் போக்கும் பிரமி கீரை தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சீராக்க உதவும். இதனை நெய் விட்டு வதக்கி ஒரு மண்டலம் எடுத்துக்கொள்ள நோயின் ஆரம்ப கட்ட நிலையில் நற்பலன் தரும்.

    அடுத்து அதிக பலனைத் தருவது மந்தாரை பட்டை. "மன்னவனும் தன்வழிப் படுவான்" என்று இதனைப் பற்றி அகத்தியர் குணவாகடம் சிறப்பாக கூறுகின்றது. அதாவது தைராய்டு சுரப்பியில் பாதிப்பை உண்டாக்கும் கபவாதக் குற்றத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர உதவும்.

    மந்தாரை மரத்தின் பட்டையானது தைராய்டு சுரப்பியின் வீக்கத்தை குறைப்பதோடு, தைராய்டு சுரப்பியைத் தூண்டி இயற்கையாக செயல்பட வைக்கும் தன்மை உடையது என்று எலிகளில் ஆய்வு செய்யப்பட்டு உறுதியும் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இதில் உள்ள மூன்று முக்கிய பிளவனாய்டு வேதிப்பொருட்கள் மருத்துவ தன்மைக்கு காரணமாகின்றன.

    'குங்கிலியம்' எனும் மற்றொரு மூலிகைப்பிசின் தைராய்டு கோளாறுக்கு நல்ல பலன் தருவதாக உள்ளது. இது தைராய்டு சுரப்பியை இயற்கையாக தூண்டி செயல்பட வைக்கும் என்பதோடு குறை தைராய்டால் அதிகரித்த உடல் பருமனைக் குறைக்கவும் உதவும். இதில் உள்ள 'குகுலுஸ்டீரோன்' எனும் வேதிப்பொருள் அதன் மருத்துவ தன்மைக்கு முக்கிய காரணம் என்கிறது நவீன அறிவியல்.

    அமுக்கரா கிழங்கினைப் போல் முதுமையின் சிறந்த தோழனாக திரிபலா சூரண மருந்தைக் குறிப்பிடலாம். முதுமையில் ஏற்படும் அநேக நோய்நிலைகளில் இது நற்பலன் தருவதாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை இரவு வேளைகளில் ஒரு தேக்கரண்டி அளவுக்கு வெந்நீரில் கலந்து எடுத்துக்கொள்ளலாம். அதே போல் திரிகடுகு சூரணத்தை தேனில் கலந்து எடுத்துக்கொள்ள நோய்க்கு காரணமாகும் மூன்று குற்றங்களும் சமநிலைப்பட்டு நோயின் ஆதாரத்தை அடியோடு நீக்கி நோயில்லா வாழ்விற்கு அடித்தளமிடும்.

    பத்து வேர்களை உள்ளடக்கிய தசமூலம் சேர்ந்த மருந்தும் கபவாதத்தை சீராக்கி நோயினை நீக்க உதவும். மூலிகை மருந்துகள் மட்டுமின்றி சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள அய செந்தூரம், அன்ன பவள செந்தூரம், சிலாசத்து பற்பம், குங்கிலிய பற்பம், பாஷாண மருந்துகள் பல தைராய்டு சுரப்பியை இயற்கையாக தூண்டி செயல்பட வைப்பதாக உள்ளன.

    பித்தம் அதிகரித்து வாதம் மற்றும் பித்தம் ஒன்று கூடுவதால் உண்டாகும் ஹைப்பர்தைராய்டு நோய்நிலையில் பித்தம் தணிக்கும். சித்த மருத்துவ மூலிகைகளான நெல்லிக்காய், சீந்தில், திராட்சை, மஞ்சிட்டி, மஞ்சள் ஆகிய மூலிகைகள் பலன் தருவதாக உள்ளன. இவை பித்தத்தைக் குறைத்து தைராய்டு சுரப்பியின் அதிக செயல்பாட்டை தடுத்து, இயல்பு நிலைக்கு கொண்டு வர உதவும்.

    மேற்கூறிய மூலிகைகள் சேர்ந்த நெல்லிக்காய் நெய், நெல்லிக்காய் லேகியம், சீந்தில் குடிநீர், திராட்சை குடிநீர், மஞ்சிட்டி குடிநீர் ஆகிய சித்த மருந்துகள் ஹைப்பர் தைராய்டு நிலையில் பெரும்பலனைத் தரும். மேலும் சங்கு பற்பம், பவள பற்பம், முத்து பற்பம் ஆகிய மருந்துகளும் அதிக மான தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வர உதவும்.

    ஹைப்பர்தைராய்டின் ஆரம்ப கட்ட நிலையில் சித்த மருத்துவ மூலிகையான மஞ்சள் பலன் தருவதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன. இது சித்த மருத்துவத்தில் எளிமையே வலிமை என்பதற்கு சிறந்த உதாரணம். 

    சோ.தில்லைவாணன்

    சோ.தில்லைவாணன்

    உடலில் தானியங்கு நோய்தடுப்பாற்றல் (Auto-immunity) நோய்நிலையிலும் தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகள் மாறுவதாக உள்ளன. 'ஹாஷிமோட்டோ (Hashimoto) தைராய்டு வீக்கம்' என்னும் நோய்நிலையில் அதிகம் பேருக்கு ஹைபோதைராய்டு உண்டாவதாக உள்ளது. இந்நிலையில் கருஞ்சீரகம் 8 வாரங்களிலே நல்ல பலன் தருவதாக ஈரான் நாட்டில் நடந்த ஆய்வு முடிவுகள் தெரிவிப்பது சிறப்பு. இதில் உள்ள தைமோகுயினோன் (TQ) எனும் வேதிப்பொருள் அதற்கு முக்கிய காரணம் என்கிறது நவீன அறிவியல்.

    சித்த மருந்துகளை கடந்து எண்ணெய் குளியலும் குறிகுணம் குறைக்க உதவும். ஹைப்போதைராய்டு நிலையில் சுக்கு தைலம் தேய்த்து எண்ணெய் முழுக்கு எடுப்பதும், ஹைப்பர் தைராய்டு நிலையில் குமரி தைலம் தேய்த்து எண்ணெய் முழுக்கு எடுப்பதும் கூட நோய்நிலையில் பலன் தரக்கூடும்.

    பித்தம் அதிகரிக்கும் அசைவ உணவுகள், எண்ணெய் தோய்ந்த பதார்த்தங்கள் ஆகியவற்றை ஹைப்பர் தைராய்டு நிலையில் தவிர்ப்பதும், கபம் அதிகரிக்கும் நீர்ச்சத்துள்ள காய்கறிகள், இனிப்புகள் ஆகிய உணவுகளை ஹைப்போ தைராய்டு நிலையில் தவிர்ப்பதும் நல்லது என்கிறது சித்த மருத்துவம்.

    குறை வீதன (ஹைப்போதைராய்டு) நோய்நிலையில் சர்வாங்காசனம் செய்து வருவது நல்ல பலன் அளிப்பதாக உள்ளதை ஆய்வு முடிவுகள் சுட்டிக் காட்டுவதால் அத்தகைய பயிற்சியினை மேற்கொள்வது நல்லது. கூடவே மன அழுத்தம் போக்கும் பயிற்சிகளும், தியான முறைகளும் பழகி வருவது நன்மை பயக்கும்.

    முதுமையில் இதய ரத்தக் குழாய்களில் பாதிப்புள்ளவர்களும், இதய ரத்த குழாய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளவர்களும் தைராய்டு மாத்திரைகளை எச்சரிக்கையுடன் எடுத்துக்கொள்வது நல்லது என்று நவீன அறிவியல் வலியுறுத்துகிறது. ஆகவே இந்நிலைகளில் மூலிகை மருத்துவத்தை நாடுவது சிறந்தது.

    சித்த மருத்துவத்தில் தைராய்டு தொந்தரவுகளுக்கு மருந்துகள் இருக்கிறதா? என்ற ஐயப்பாடு பலருக்கு எழும். ஏனெனில் குறைவீதனம் எனும் ஹைபோ தைராய்டு நோயின் ஆரம்ப கட்ட நிலையிலேயே தைராய்டு ஹார்மோன் மாத்திரைகளை மாற்றாக (Hormone Replacement) எடுத்துக்கொள்வது என்பது தற்காலத்தில் வாடிக்கையாகிவிட்டது.

    உண்மையில் சித்த மருத்துவ மூலிகைகள் தைராய்டு சுரப்பியை தூண்டி, அதன் சுரப்பை இயல்பாக்கி, நிரந்தர தீர்வளிப்பதாக உள்ளன. இது சித்த மருத்துவத்தின் மாபெரும் தனிச்சிறப்பு. அதனை புரிந்து கொண்டு முதுமையில் பாரம்பரிய மருத்துவ முறைகளை நாடுவது நலமான, தரமான வாழ்க்கைக்கு வழிகோலும்.

    தொடர்புக்கு:

    drthillai.mdsiddha@gmail.com

    8056040768

    ×