search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    சிவபெருமானால் உருவான வேதாளம்
    X

    சிவபெருமானால் உருவான வேதாளம்

    • பல ஆண்டுகள் வேதாளம் சுடுகாட்டில் முருங்கை மரத்தில் தலைகீழாக தொங்கிய படி இருந்தது.
    • இசையால் ஈர்க்கப்பட்ட விக்கிரமாதித்தன் தேவதத்தை இருக்கும் இடத்திற்கு வந்தான்.

    நம் வீட்டில் பெரியவர்கள் அதிகமாக அடம் பிடிப்பவர்களைப் பார்த்து 'வேதாளம்' என்றும் 'வேதாளம் முருங்கை மரம் ஏறி விட்டது' என்றும் கூறுவார்கள். யார் அந்த வேதாளம்? எதற்கு அவர் முருங்கை மரத்தில் தொங்குகிறார்?

    புட்பதத்தன் என்பவரும் அவரது மனைவி தேவதத்தையும் தேவ லோகத்தில் தேவர்களுக்கு ஆடை தைத்துக் கொடுக்கும் பணியில் இருந்தனர். புட்பதத்தனுக்கு ஒரு ஆசை இருந்தது. ஒரு அழகான ஆடையினை சிவபிரானுக்கும் பார்வதி தேவிக்கும் தன் கையால் தைத்து கொடுக்க வேண்டும் என்று ஆசை பட்டான். புட்பதத்தன் அது போலவே ஒரு அழகிய ஆடையை தைத்து கைலாயம் சென்றான். அங்கு சென்றவுடன் ஈசனைப் பார்த்த மகிழ்ச்சி. அப்படியே பார்த்தபடி இருந்து விட்டு ஆடையை கொடுக்க மறந்து விட்டான். திரும்பி வரும் வழியில் ஆடையை கொடுக்க மறந்து விட்டோமே என்று சொல்லி திரும்பி கைலாயம் சென்றான். அதற்குள் மிகவும் இருட்டி விடவே கைலாய வாயிலேயே தூங்கி விட்டான்.

    அன்று இரவு சிவபிரான், பார்வதி தேவியிடம் ஒரு முக்கியமான தேவ ரகசியம் ஒன்றினைச் சொன்னார். அதனை வாயிலில் படுத்திருந்த புட்பதத்தன் கேட்டு விட்டான். மறுநாள் காலையில் ஆடையினை சிவபிரானிடம் கொடுத்துவிட்டு தான் தவறுதலாக அந்த ரகசியத்தை கேட்டதற்காக மன்னிப்பு கேட்டான். சிவபிரான் கோபப்பட்டார். இருப்பினும் புட்பதத்தன் உண்மையை கூறி விட்டான் என்பதற்காக அவனை மன்னித்து இந்த ரகசியத்தினை யாரிடமும் கூறக்கூடாது என்று கூறி அனுப்பி வைத்தார்.

    திரும்பி வந்த நாளில் இருந்து புட்பதத்தன் மன நிம்மதி இல்லாதது போல உணர்ந்தான். தவித்தான். கவலை கொண்ட அவனை மனைவி தேவதத்தை தன் கணவனிடம் அவனது மன அழுத்தத்திற்கு காரணம் என்ன என்று கேட்டாள். பல நாள் அவளது கேள்வியினை தவிர்த்த புட்பதத்தன் ஒருநாள் தான் கேட்ட தேவ ரகசியத்தினை கூறி விட்டான். இதனை உணர்ந்த சிவபிரான் புட்பதத்தனை வேதாளமாக மாறி முருங்கை மரத்தில் தொங்கி கேள்விகள் கேட்டபடி இருக்கவும் அவன் மனைவி தேவதத்தை இரவில் வனத்தில் வீணை வாசித்து பிறரை தொந்தரவு செய்தபடியும் இருக்க சபித்தார். பல ஆண்டுகள் வேதாளம் சுடுகாட்டில் முருங்கை மரத்தில் தலைகீழாக தொங்கிய படி இருந்தது. அங்கு ஒரு முனிவன் வந்தான். முனிவர் என்று கூறாமல் முனிவன் ஒருவன் என்று கூறுவதன் காரணம் அவர் தீய எண்ணம் கொண்டு தவம் புரிபவதால்தான். முனிவன் வேதாளத்தினை தன் அடிமையாக்கிக் கொள்ள நினைக்கிறான். அதன் மூலம் உலகை ஆள வேண்டும் என்று நினைக்கிறான்.

    வேதாளத்தின் சக்திகளை தான் பெற வேண்டும் என்ற தீய ஆசை முனிவனுக்கு எழுகின்றது. அதற்காக தவமும் செய்கிறான். 1000 தலைகளை காணிக்கையாக தனக்கு கொடுத்தால் வேண்டிய வரத்தினை அளிப்பதாக காளிதேவியும் கூறினாள். கேட்ட முனிவனும் 999 மன்னர்களை ஏமாற்றி காளிக்கு அவர்களது தலையை பலி கொடுத்தான்.


    விக்கிரமாதித்தன் என்ற அரசனின் தலையை ஆயிரமாவது எண்ணிக்கையாக பலி கொடுக்க எண்ணினான் முனிவன். விக்கிரமாதித்தனிடம் சென்று காட்டில் உள்ள காளி கோவிலை வணங்கினால் உன் நாடு வளம் பெறும் என்று கூறினான். விக்கிரமாதித்தனும் தன் நாடு வளம் பெறும் என நம்பி முனிவனுடன் சென்றான். இருட்டிவிடவே கோவில் மண்டபத்தில் ஓய்வெடுத்தான். முனிவனும் படுத்து உறங்கிவிட்டான். இரவில் புட்பதத்தனின் மனைவி வீணை வாசித்து கொண்டிருந்தாள். இசையால் ஈர்க்கப்பட்ட விக்கிரமாதித்தன் தேவதத்தை இருக்கும் இடத்திற்கு வந்தான். தேவதத்தையிடம் நீ யார் ஏன் இரவில் வீணை வாசிக்கிறாய் எனக் கேட்டான்.

    தேவதத்தையும் அனைத்தையும் விவரமாகக் கூறினாள். இதனை கேட்ட விக்கிரமாதித்தன் இதிலிருந்து நீங்கள் விடுபட பிராயசித்தம் என்ன? என்று கேட்டான். தேவதத்தை தானும் முருங்கை மரத்தில் தொங்கும் தன் வேதாள கணவனும் காளி கோவில் சென்று வழிபட்டால் இந்த சாபம் நீங்கும் என்றும் ஆனால் வேதாளத்தினை முருங்கை மரத்தில் இருந்து இறக்கி செல்வது கடினம் என்றும் கூறினாள். அவர்களுக்கு கண்டிப்பாய் உதவ விக்கிரமாதித்தன் முடிவு செய்தான். முருங்கை மரத்தில் உள்ள வேதாளத்தினை முதுகில் சுமந்து நடக்க ஆரம்பித்தான். ஆனால் வேதாளமோ விக்கிரமாதித்தனிடம் ஒரு கட்டளை வைத்தது. நான் உன்னை கேள்விகள் கேட்பேன். நீ சரியான பதில் சொன்னால் நான் மீண்டும் முருங்கை மரம் ஏறி விடுவேன். தெரிந்தும் நீ பதில் சொல்லாவிட்டால் உன் தலை வெடித்து விடும் என்றது. விக்கிரமாதித்தன் தலை வெடித்து விடுமோ என்ற பயத்தில் பதில் சொல்ல. வேதாளம் முருங்கை மரம் ஏறிவிடும். இப்படியே 24 முறை நடந்தது. கடைசியில் எப்படியோ விக்கிரமாதித்தன் சமாளித்து காளி கோவிலை அடைந்து விட்டான். ஆயிரமாவது தலையினை முனிவனால் கொண்டு வர முடியாததால் காளி முனிவனின் தலையை வெட்டினாள். புட்பதத்தனும், தேவதத்தையும் சாப விமோசனம் பெற்றனர். காளி தேவி விக்கிரமாதித்தனை பார்த்து உனக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்க விக்கிரமாதித்தன் முனிவரால் மரணமடைந்த 999 மன்னர்களும் மீண்டும் உயிர்பெற வேண்டும் என வேண்டினான். காளிதேவியும் அப்படியே அருள 999 மன்னர்களும் உயிர் பெற்றனர்.

    கேரள வழிபாட்டு முறையில் காளி வேதாளத்தின் மீது அமர்ந்து இருப்பது போல ரங்கோலி கோலங்கள் இருக்கும். பொதுவில் மோதிரம், மந்திரம் போன்ற பிரிவுகளின் தலைவர் கந்தர் எனப்படும் முருகர்தான். முருக ஜபம் செய்த ஒருவருக்கு தீய சக்திகளின் தாக்குதல் நீங்கும்.

    உங்களுடன் ஓர் அரிய கோவிலைப் பற்றி நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். சிலர் அறிந்து இருக்கும் தகவலாக கூட இருக்கலாம். இருப்பினும் விருப்பமுடைவோர் அனைவரும் அறிந்து கொள்வதற்காக எழுதப்படுகின்றது.

    கமலி ஸ்ரீபால்

    தமிழகத்தில் செய்யூர் கந்தசாமி கோவில் என்ற ஒரு கோவில் இருக்கிறது. சென்னையில் இருந்து சுமார் 82.85 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

    இங்கு பிரதான தெய்வம் முருகபிரான். இதன் வரலாறு என்று பார்க்கும்பொழுது சூரனை அழிக்க முருகபிரான் சிக்கல் ஊரில் பார்வதி தேவியிடம் வேல் பெறுகின்றார். திருச்செந்தூரில் சூரனை சம்காரம் செய்கின்றார். இதில் சிவபெருமானின் பூத கணங்கள் முருக பிரானுக்கு உதவியாய் இருந்தன. முருகபிரான் சூரனையும் அவனது மகன் ஹிரண்யனையும் அழித்த தோஷம் நீங்க சிவ பெருமானுக்கு பூஜை செய்யத் தொடங்கினார். சிவபிரானை போல சுந்தரர் ரூபத்தில் பூஜை செய்தார். மகனே தந்தைக்கு சேவை செய்ததால் இந்த இடம் செய்யூர் என்றாயிற்று.

    இக்கோவிலில் பிரம்மா சாஸ்தா, விஷ்ணு என பல சந்நதிகள் உள்ளன. இதுவே இந்த கோவிலின் சிறப்பினை கூட்டுவதாக அமைந்துள்ளது. இதனினும் கூடுதலாக பெருமை சேர்க்க இந்த கோவிலுக்கு ஒரு தனி சிறப்பு உள்ளது. இந்த சிறப்பு உலகில் வேறு எந்த கோவிலிலும் இல்லை எனலாம். இந்த கோவில் பிரகாரத்தில் 27 நட்சத்திரங்களுக்கான 27 வேதாளங்கள் உள்ளன. இந்த வேதாளங்கள் முருக பிரானுக்கு யுத்தத்தில் உதவியுள்ளது.

    இந்த கோவிலில் தேய்பிறை அஷ்டமி அன்று சிலர் 4 மணிக்கு மேல் வருவதனை விரும்புகின்றனர். சிவபிரான், மீனாட்சி அம்மனை வணங்கி, முருக பிரானை வணங்கி மேலும் அங்கு எழுந்தருளி உள்ள தெய்வங்களை வணங்கி, கால பைரவரை பூசித்து, பின் அவரவர் நட்சத்திரத்திற்குரிய வேதாளத்திற்கு பூ சாற்றி அர்ச்சனை செய்து, விளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். இவ்வாறு செய்யும் பொழுது அவரவரின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றுவதாக கூறப்படுகின்றது. தேய்பிறை அஷ்டமி அன்று கோவில் அர்ச்சகர், விநாயகர் பூஜையில் ஆராதித்துபின் வேதாளங்களுக்கு அர்ச்சனை செய்கின்றார். மற்ற நாட்களில் செல்பவர்கள், தானே தீபம் ஏற்றி வழிபடலாம். இந்த வேண்டுதலை முருக பிரான் நிறை வேற்றி வைக்கின்றார் என்பது ஐதீகம். நம்பிக்கை உடையவர்களுக்கான கட்டுரையாக இந்த செய்திகள் எழுதப்பட்டுள்ளது.

    ஒருவருடைய நேரத்தையும், சக்தியையும் டி.வி.யை அதிக நேரம் பார்ப்பதிலும், மிக அதிகமாக யோசிப்பதிலும், உபயோகமற்ற தவறான உறவுகளுடன் செலவழிக்காமலும் இருந்தாலே அவர்கள் முன்னேற்றம் அடைவர்.

    Next Story
    ×