search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    ரத்தத்தில் உள்ள கொழுப்பை கட்டுக்குள் வைப்பது எப்படி?
    X

    ரத்தத்தில் உள்ள கொழுப்பை கட்டுக்குள் வைப்பது எப்படி?

    • நம் இரத்தத்தில் கொழுப்பு பல்வேறு கூறுகளாகக் கணிக்கப்படுகிறது.
    • ஒரு முறை சூடு செய்து பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக்கூடாது.

    மனிதன் உயிர்வாழ உடலில் கொழுப்புச்சத்து மிகவும் அவசியமானது. மூளையின் செயல்பாட்டுக்கும், உடலில் நடைபெறும் வளர்சிதை மாற்றங்களுக்கும், ஹார்மோன்கள் மற்றும் வைட்டமின் "டி" உற்பத்திக்கும் இந்தக் கொழுப்புச் சத்துதான் ஆதாரம். ஆனால் அந்தக் கொழுப்பு உடலில் அளவாக இருக்க வேண்டும்.

    நம் இரத்தத்தில் கொழுப்பு பல்வேறு கூறுகளாகக் கணிக்கப்படுகிறது. உடலுக்குக் கொழுப்புச் சத்து எங்கிருந்து கிடைக்கிறது? என்று கேட்டால் "உணவில் இருந்துதான்" எனப் பட்டென்று பதில் கிடைக்கும். ஆனால் நம் உடலில் உள்ள 80% கொழுப்பை நம் கல்லீரல் தான் உற்பத்தி செய்கிறது. இதற்கான மூலப்பொருள்களை அது நம் உணவில் இருந்து தான் எடுத்துக்கொள்கிறது.

    கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவை அதிகமாக எடுத்துக் கொள்வதால் மட்டும் நமக்குக் கொழுப்புச் சத்து அதிகம் வரும் என்று கூறிவிட முடியாது. உடல் பருமனாக இருப்பவர்களுக்கு மட்டும்தான் இரத்தக் கொழுப்பு அதிகமாக இருக்கும், ஒல்லியாக இருப்பவர்களுக்குக் குறைவாக இருக்கும் என்பது முற்றிலும் உண்மை இல்லை.

    கொழுப்புச் சத்து உடலில் அதிகரிக்கக் காரணம்:

    கொழுப்பைச் செரிக்கும் நொதிகளில் குறைபாடு ஏற்படும் போதும், தேவைக்கு அதிகமான கலோரிகள் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளும்போதும், மற்ற உணவுக் கூறுகளான மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்) மற்றும் புரதங்கள் கொழுப்பாக மாறி உடலில் குறிப்பிட்ட பகுதிகளில் படியத் தொடங்குகிறது.

    அதிகப்படியான மதுப்பழக்கம் மற்றும் புகைபழக்கம் உள்ளவர்களுக்கு ட்ரைகிளிசரைடு எனப்படும் கொழுப்பு அதிகரிக்கிறது. துரித உணவுகளை அடிக்கடி எடுத்துக்கொள்வது, போதுமான உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது, ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது உள்ளிட்ட காரணங்களால் கொழுப்பு சத்து நம் உடலினுள் தேங்குகிறது.

    மீண்டும் மீண்டும் அதிக உணவை தொடர்ந்து எடுக்கும்போது கொழுப்பானது, உடலின் உறுப்புகளைச் சுற்றியும், தோலுக்கு அடியிலும் படிந்து, உடல் பருமன் ஏற்படுகிறது.

    இவ்வாறு படியும் கொழுப்பு பல நோய்களுக்குக் குறிப்பாக வளர்சிதை மாற்ற நோய்களுக்குக் (Metabolic Syndrome) காரணமாகிறது. இதில் அதிக இரத்தச் சர்க்கரையும், அதிக இரத்த அழுத்தமும் அடங்கும்.

    இதில் குறைந்த அடர்வுத் தன்மையுடைய கொழுப்பைக் கெட்ட கொழுப்பு என்றும், அதிக அடர்வுத் தன்மையுடைய கொழுப்பை நல்ல கொழுப்பு என்றும் கூறுகிறோம்.

    நல்ல கொழுப்பு மற்றும் கெட்ட கொழுப்பு என்றால் என்ன?

    Low Density Lipoprotein (LDL) என்பதைக் கெட்ட கொழுப்பு என்கிறோம், ஏனென்றால் இது கொழுப்புச் சத்து இரத்தக்குழாயில் படிவதற்குத் துணைபுரிந்து, அத்திரோஸ்கிளிரோசிஸ் எனப்படும் இரத்தக்குழாய் அடைப்பு நோயை அதிகப்படுத்துகிறது. இது நம் உடலில் 100 மிகி/டெசிலி-க்குக் குறைவாக இருக்க வேண்டும். நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் உள்ளவர்கள் இதை 70மிகி/டெசிலி-க்குக் குறைவாக வைத்திருப்பது நல்லது.

    மரு.அ.வேணி

    High Density Lipoprotein (HDL) இதை நல்ல கொழுப்பு என்று கூறுகிறோம். ஏனென்றால் இது கொழுப்பைச் சிறுகுடலில் இருந்து கல்லீரலுக்கு எடுத்துச் சென்று, அதனைச் செரிக்கச் செய்து உடலில் இருந்து வெளியேற்றுகிறது. இந்த நல்ல கொழுப்பு ஆண்களுக்கு 45மிகி/டெசிலி-க்கு அதிகமாகவும், பெண்களுக்கு 55மிகி/டெசிலிக்கு அதிகமாகவும் இருக்க வேண்டும். இது அதிகமாக இருந்தால் வாழ்வியல் மாற்றங்களினால் ஏற்படும் நோய்களில் இருந்து பாதுகாப்புத் தருகிறது.

    அதிகக் கொழுப்பினால் ஏற்படும் சிக்கல்கள்:

    உடலில் நல்ல கொழுப்பின் அளவு குறையும்போதும், கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிக்கும்போதும் இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு சிக்கல்கள் ஏற்படுகிறது. இதனுடன் மன அழுத்தம், போதுமான உடல் உழைப்பு இல்லாமை போன்றவைகள் சேரும்போது இளம் வயதிலேயே மாரடைப்பு, பக்கவாதம், மறதி போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகின்றன.

    அதிகக் கொழுப்பினால் ஏற்படும் அறிகுறிகள்:

    இதற்கென்று தனியான அறிகுறிகள் கிடையாது. யாருக்கெல்லாம் தொப்பை உள்ளதோ அவர்களுக்கெல்லாம் உடல் உறுப்புகளைச் சுற்றிக் கொழுப்புப் படிந்திருக்கும். ஒரு சிலருக்குக் கண் இமை மீது மஞ்சள் நிறப் படிவம் பார்க்க முடியும். இது அதிரோஸ்கிளிரோஸிஸ் எனப்படும் நோயின் வெளித்தோற்றமாகும். இவ்வாறு இருப்பவர்களுக்கு இரத்தக்குழாய்கள் தொடர்பான நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    நல்ல கொழுப்பு அதிகரிக்க என்ன செய்யவேண்டும்?

    1.பழங்கள், காய்கறிகள் அதிகம் உட்கொள்வது.

    2.தானியங்களை உணவில் சேர்த்துக்கொள்வது.

    3.மீன் உட்கொள்வது.

    4.உலர் கொட்டைகள் மற்றும் பழங்கள் சாப்பிடுவது

    5.உடற்பயிற்சி செய்வது.

    6.பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது.

    கெட்ட கொழுப்பைக் குறைக்க என்ன செய்யவேண்டும்?

    1.ஒரு முறை சூடு செய்து பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக்கூடாது.

    2.மதுப்பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.

    3.அதிக நார்ச்சத்து உள்ள உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    4.பாலின் மூலம் கிடைக்கும் புரத சத்துக்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    5.உணவில் பூண்டு அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    6.உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

    முன் கூறிய வழிமுறைகளை நமது வாழ்கையில் நடைமுறைப் படுத்தினால், நல்ல கொழுப்பை அதிகரித்து, கெட்ட கொழுப்பைக் குறைத்து நலத்துடன் வாழ முடியும். "அதிகக்கொழுப்பு ஆளைச் சாய்க்கும்" என்பதை நினைவில் கொண்டு அளவான கொழுப்புச் சத்துள்ள உணவை உண்டு நீடூழி வாழ்வோமாக.

    தொடர்புக்கு: 75980-01010, 80564-01010.

    Next Story
    ×