search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    கச்சத்தீவு பிரச்சனை தேர்தல் அரசியலா?
    X

    கச்சத்தீவு பிரச்சனை தேர்தல் அரசியலா?

    • கச்சத்தீவுக்கு இலங்கை உரிமை கொண்டாடியது.
    • தமிழ்நாடு சட்டமன்றத்தின் ஐந்தாவது கூட்டத் தொடர் 12 முதல் 28 ஆகஸ்ட் 1974 வரை நடந்தது.

    இந்தியா விடுதலை அடையும்போது சிலோன் பிரிட்டிஷ் வசம் இருந்தது. அவ்வளவு சிறிய நிலப்பரப்பை எப்படி "ரிமோட் நிர்வாகம்" செய்வது என்று கருதியது லண்டன். "நாளை முதல் நீங்க ப்ரீ!" என்று கூறி விட்டுப் பிரிட்டிஷார் டாட்டா காட்டினார்கள். இன்றைய ஸ்ரீலங்காவான அன்றைய சிலோன் சுதந்திரம் கேட்டுப் போராடவே இல்லை,

    உபகண்ட நிலப்பரப்பு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை என்று மூன்று நாடுகள் ஆனது. விடுதலைக்கு 10 ஆண்டுகள் முன்னதாகப் பர்மா உதயமாகி இருந்தது. 1971-ல் வங்க தேசம் பிறந்தது. இந்திய எல்லையில் மொத்தம் 7 நாடுகள்!

    ஆகையால் எல்லைப் பிரச்சினைகள் புதிது புதிதாக முளைத்துக் கொண்டே இருந்தன. ஊடுருவல் எக்கச்சக்கம். எனவே நமது எல்லைப் பகுதிகள் சர்வதேசக் கடத்தல்காரர்களின் சொர்க்கமாக மாறின. பிரச்சனைகளைத் தீர்க்க இந்திய அரசு பல முயற்சிகள் எடுத்தது.

    பிரிவினையின் போது எல்லைப் பகுதிகளை அளவிட ராட்கிளிப் என்ற பிரிட்டிஷ் சர்வேயர் நியமிக்கப்பட்டார். அப்போது மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் பெருபாரி இந்தியாவிற்கு வழங்கப்பட்டது. அங்கு இந்துக்கள் அதிகமாக வாழ்ந்து வந்தனர்.

    ஆவணங்களில் பெருபாரியைக் குறிப்பிட ராட்கிளிப் குழு மறந்து விட்டது. எனவே பாகிஸ்தான் தன் வரைபடத்தில் அதைச் சேர்த்துக் கொண்டது. இதனால் இரு நாட்டுக்கும் இடையே பிணக்கு ஏற்பட்டது.

    நேருவுக்கும், பாகிஸ்தான் பிரதமர் பெரோஸ்கான் நூனுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி பெருபாரி கிராமத்தை இரண்டு நாட்டு அரசுகளும் பிரித்துக் கொண்டன. தாவாவுக்குச் சர்வதேசத் தீர்வு எட்டப்பட்டது.

    ஆனால் மேற்கு வங்க அரசின் இசைவின்றி பெருபாரி கிராமத்தின் பகுதிகளைப் பாகிஸ்தானுக்கு வழங்கிய விதம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது.

    அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 3 (சி)-ன் கீழ் பாராளுமன்றத்திற்கு மாநிலத்தின் எல்லையை மாற்றியமைக்க மட்டுமே அதிகாரம் உண்டு என்றும் இந்திய நாட்டின் பரப்பைக் குறைக்க அதிகாரம் இல்லை என்றும் 14.3.1960-ல் இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    அதனால் அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 3 (சி)-ல் தேவையான திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. 1960-ல் பெரும் பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்ட 9-வது அரசியலமைப்புச் திருத்தம் பெருபாரி மற்றும் இந்திய மாநிலங்களின் இசைவுச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

    தராசு ஷ்யாம்

    கச்சத்தீவுக்கு இலங்கை உரிமை கொண்டாடியது. ஆனால் கச்சத்தீவு நீண்ட நெடுங்காலமாக ராமநாதபுரம் ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்தது. இது குறித்த ஆவணங்கள் இன்றும் ராமநாதபுரம் கலெக்டர் ஆபீசில் உள்ளன.

    இது மாதிரியே கன்னியாகுமரிக்கு 80 கி.மீ. தொலைவில் "வாட்ஜ் பேங்க்" என்ற 25 லட்சம் ஏக்கர் பரப்பளவுள்ள பிரம்மாண்ட கண்டத்திட்டிலும் இரு நாட்டு மீனவர்கள் தொழில் செய்து வந்தனர். ஏன் என்றால் 1947-க்கு முன் கிட்டத்தட்ட உபகண்டம் முழுவதும் ஒரே பிரிட்டிஷ் இந்தியா.

    இந்திரா காந்தி காலத்தில் 18.5.1974-ல் பொக்ரான்-1 (ராஜஸ்தான்) அணு வெடிப்புச் சோதனை நடத்தப்பட்டது. அதற்குப் பாகிஸ்தான் பலத்த கண்டனம் தெரிவித்தது. அது குறித்த ஐநா தீர்மானத்தில் இலங்கை நமக்கு ஆதரவு கொடுத்தது.

    அப்போதும் இலங்கையில் பொருளாதார நெருக்கடி. அன்றைய பிரதமர் ஸ்ரீமதி பண்டாரநாயகா இந்திரா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து உதவி கேட்டார். 1974 ஒப்பந்தப்படி (26-28.6.1974) கச்சத்தீவும் அதற்கடுத்த 1976 கடல் எல்லை ஒப்பந்தப்படி வாட்ஜ் பேங்க் பகுதியும் (23.3.1976) பரஸ்பர தாவா நீக்கம் செய்யப்பட்டன. தொகுதி மறுவரையறை போல இது எல்லைச் சீரமைப்பு.

    அன்றைய தமிழக முதல்வர் கலைஞரிடம் அன்றைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்வரண் சிங் மற்றும் செயலாளர் கேவல் சிங் ஆகியோர் இது பற்றிக் கூறினார்கள். தமிழ்நாடு பா.ஜ. தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ஆர்.டி.ஐ. ஆவணங்கள் மூலம் இது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இசைவின்மை இருப்பினும் இருநாட்டில் எல்லை சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்கள் என்பதால் மத்திய அரசின் முடிவு இறுதியானது.

    அப்போது தமிழ்நாடு சட்டமன்றத்தின் ஐந்தாவது கூட்டத் தொடர் 12 முதல் 28 ஆகஸ்ட் 1974 வரை நடந்தது. கச்சத்தீவை இலங்கைக்கு தந்தது தொடர்பான தீர்மானம் அதில் நிறைவேற்றப்பட்டது.

    கச்சத்தீவின் மீது இந்திய இறையாண் மையை தக்க வைத்துக் கொள்ளும் வகையில் ஒப்பந்தத்தைத் திருத்த வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டது. அது நிறைவேற்றப்பட்ட நாள் 21.8.1974. இவை எல்லாம் சட்டமன்ற அவைக் குறிப்புகளில் உள்ளது.

    கச்சத்தீவு குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டம் அன்றைய முதலமைச்சர் கலைஞர் தலைமையில் நடந்தது. அ.தி.மு.க. சார்பாக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் குழுவினர் கலந்து கொண்டனர். பல்வேறு அமைப்புகளும் கட்சிகளும் தமிழ்நாட்டில் கண்டனக் கூட்டங்களும் நடத்தின.

    இதே காலகட்டத்தில் வங்கதேச அரசுடன் எல்லைப் பிரச்சனை குறித்த தீர்வு ஏற்பாடு செய்யப்பட்டது. அதுவே 16.5.1974-ல் ஏற்பட்ட ஷேக் முஜிபுர் ரஹ்மான்-இந்திரா காந்தி ஒப்பந்தம். அதன்படி இந்திய வங்கதேசக் குடியிருப்புகளைப் பரஸ்பர பரிமாற்றம் செய்து கொள்ள முடிவு எட்டப்பட்டது.

    ஆனால் எல்லைகளை அளந்து 111 இந்தியக் குடியிருப்புப் பகுதிகளைப் பரிமாற்றம் செய்தது 7.5.2015 மோடி ஆட்சிக் காலத்தில். இது குறித்த தீர்மானம் இந்திய பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தின் வரைவு மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது.

    அதாவது மத்திய மாநில அரசுகளில் எந்தக் கட்சி வேண்டுமானாலும் ஆட்சியில் இருக்கலாம். ஆனால் சர்வதேச ஒப்பந்தங்களை யாராலும் மீற முடியாது. இந்திராவின் ஒப்பந்தம் தவறு என்று மோடி கருதி இருந்தால் வங்கதேசத்துக்கு இந்தியக் குடியிருப்புகளை விட்டுக் கொடுத்திருக்கக் கூடாது. ஆனால் சர்வதேச உறவுகளில் அது சாத்தியம் இல்லை.

    எல்லைப் பிரச்சனைகளைப் பேசித் தீர்ப்பது ஐ.நா. சபையின் விதிகளுக்கு உட்பட்டு நடக்கின்றன. இதை தேர்தல் பிரச்சனையாக்கிப் பொது மேடைகளில் சவால் விடுவது மிகவும் தவறு. ஏனென்றால் இதே போல் ஏராளமான ஒப்பந்தங்கள் நாம் அண்டை நாடுகளோடு செய்திருப்போம். இந்திய எல்லைப் பகுதியே 1947-ல் வரையறை செய்யப்பட்டது தான். இன்னமும் பிணக்குகள் உள்ளன.

    பஞ்சாப், அரியானா மாநிலங்களில் நான் பணியாற்றிக் கொண்டிருந்த போது கண்கூடாகப் பார்த்த விஷயம் இது! பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் 19.9.1960-ல் செய்யப்பட்ட நீர்ப் பங்கீடு ஒப்பந்தம் குறித்த கசப்புணர்வு பஞ்சாப் விவசாயிகள் மத்தியில் இருந்தது.

    பஞ்சாப் விவசாயிகளுக்கு டெல்லி துரோகம் இழைத்து விட்டது என்று அந்த மாநிலத் தேர்தலில் இப்போது பரப்புரை செய்தால் அது எவ்வளவு பெரிய தீங்கு தரும்?

    அண்ணாமலை போன்ற அரசியல்வாதி பேசுவது தேர்தல் அழுத்தம் என்று கொள்ளலாம். ஆனால் பிரதமர், உள்துறை அமைச்சர், நிதியமைச்சர் ஆகியோரே கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரசும் தி.மு.க.வும் தாரை வார்த்து விட்டன என்று கூறுகிறார்கள். அது நாட்டின் அரசியல் சாசனப் பதவிகளுக்கு அழகல்ல.

    இது குறித்த வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. மேலும் பாராளுமன்றத்தில் விவாதம் வரும்போதெல்லாம் நடப்பு பா.ஜனதா அரசு இந்திரா காந்தியின் நிலைப்பாட்டைத் தான் தொடர்ந்து ஆதரித்து வந்துள்ளது. 2015 தகவல் அறியும் உரிமைச் சட்டக் கேள்விகளின் போது கூட இதே பதில் தான் தரப்பட்டுள்ளது

    கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும் என்பது தமிழ்நாட்டின் விருப்பம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 15.8.1991 அன்று கோட்டையில் கொடியேற்றி வைக்கும் போது கூட இது பற்றி பேசியிருக்கிறார். சட்டமன்றத்தில் 2011-ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

    சமீபத்தில் கூட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கச்சத்தீவு மீட்பு பற்றிக் கூறப்பட்டுள்ளது. இலங்கை மீது படையெடுப்போம் என்று கூறுவதெல்லாம் காரிய சாத்தியமற்றது. கை தட்டலுக்கு வேண்டுமானால் உதவலாம். ஆனால் சர்வதேச சட்டப்படி அது சாத்தியம் இல்லை

    கச்சத்தீவு கடற் பகுதியில் நமது மீனவர்கள் தொழில் செய்யும் உரிமைக்கான குத்தகை பெற்றுத் தருவது சாத்தியமானது அதேபோன்ற ஒரு குத்தகை உரிமை குஜராத் மாநிலத்தின் பாகிஸ்தான் எல்லையோரக் கடல் பகுதியில் பெறப்பட்டுள்ளது.

    இருப்பினும எல்லை தாண்டுகிற இருநாட்டு மீனவர்களும் கைது செய்யப்படுவதும் நடந்து கொண்டுதானிருக்கிறது.

    இன்றைய குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியின் கடல் மற்றும் நில எல்லை பாகிஸ்தான் பார்டரில் வருகிறது. அது குறித்த தாவா சர்வ தேசத் தீர்ப்பாயத்தின் 19-2-1968 ஆணையின்படித் தீர்க்கப்பட்டுள்ளது.

    அதில் தங்கள் உரிமை பாதிக்கப்படுவதாக அப் பகுதி மீனவர்கள் இடையே மனவருத்தம் உண்டு. இப்போது இதை குஜராத் தேர்தலுக்குப் பயன்படுத்தினால் எவ்வளவு பெரிய அபத்தம்?

    இலங்கைக்கு நாம் ஏராளமான பொருள் உதவி செய்து வருகிறோம். கச்சத்தீவில் நமக்கு மீன்பிடி உரிமை வேண்டுமென்றால் குத்தகை பெற்றுத் தர மத்திய அரசுக்கு எத்தனையோ வழிகள் உள்ளன. 10 வருட ஆட்சியில் பாரதிய ஜனதா அரசு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போட்டதில்லை.

    இத்தனைக்கும் ஸ்ரீலங்கா சீனாவுக்குப் பல குத்தகை உரிமைகள் தந்திருக்கிறது. தமிழக மீனவர் நலனுக்கு முற்றிலும் விரோதமான இலங்கையின் திருத்தப்பட்ட "அந்நிய மீன்பிடி படகுகள் தடைச் சட்டத்தின்" விதிகள் கொடூரமானவை. அதன்படி கோடிக்கணக்கில் அபராதம் விதிக்க முடியும். அதைத் தளர்த்த நடப்பு பா.ஜனதா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    தமிழ்நாட்டு மீனவர்கள் மீது உண்மையில் டெல்லிக்கு அக்கறை இருந்தால் நேர்மறை நடவடிக்கைகளே பலன் தரும். மாறாகக் கச்சத்தீவு பிரச்சினையைத் தேர்தல் அரசியலுக்குப் பயன்படுத்தினால் ரிசல்ட் ஜீரோ தான்.

    Next Story
    ×