என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
- சித்தர்களுக்கும், ஞானிகளுக்கும் இயற்கையிலேயே அவர்கள் உடலில் இருந்து நறு மணம் வீசியவாறே இருக்கும்.
- அதிக சர்க்கரையினை உணவில் சேர்த்துக் கொள்பவர்கள் சுறுசுறுப்பின்றி மந்தமாகி விடுவர்.
கோடை காலம் வந்து விட்டது. எத்தனை முறை குளித்தாலும் வியர்த்து கொட்டுகின்றது. இதோடு எங்கு சென்றாலும் மற்றவர்கள் முகம் சுளிக்கும் அளவு துர்நாற்றம் உடலில் இருந்து வீசுகின்றது.
சென்ட், பவுடர், ஜவ்வாது என நறுமண பூச்சுகளை பூசிக் கொள்கின்றோம். வாசனை நன்கு இருக்க வேண்டும் என்பதற்காக இவைகளை பூசிக் கொள்கின்றோம். பெண்கள் பொதுவிலேயே மஞ்சள் பூசுவார்கள். மணம்மிக்க பூக்களை வைத்து கொள்வார்கள். வீட்டில் பூஜை செய்யும் போது ஊதுவத்தி, சாம்பிராணி, தசாங்கம் என தூபம் போடுவார்கள்.
சரி இவற்றினை எல்லாம் எதற்காகச் செய்கின்றார்கள்? இந்த வாசனைகள் நம்முடன் சேர்ந்து நம்மிடமும் அதன் குணமாக நறுமணம் வெளிப்படும். இதனை 'வாசனை' என்போம். சிலர் நல்ல சென்ட் போட்டு வரும் போது என்ன வாசனை என்கின்றோம். ஒவ்வொரு உடலில் இருந்தும் அவரவர் குணம், உணவு முறை, உழைப்பு, சுற்றுப்புற சூழல் இவற்றுக்கேற்ப ஒருவித வாசனை வெளிப்படும். இதனை வைத்துதான் மோப்ப நாய்களை பழக்கி போலீசார் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கின்றனர்.
இந்த உடலுக்கு குளிர்ச்சியும், நன்மையும் வரும் விதமாகத்தான் 'வாசனை குளியல் பொடி' பயன்படுத்தப் படுகின்றது. அந்த பொடியில் உள்ள பல மூலிகைகளின் குணங்கள் நம்முடைய குணமாக மாறும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை. இதில் சுகாதாரம் கிடைக்கின்றது. மன அமைதி கிடைக்கின்றது. நம்மிடம் பேச வருபவர்களுக்கும் ஒர் மதிப்பினை நம் மீது உருவாக்குகின்றது.
சித்தர்களுக்கும், ஞானிகளுக்கும் இயற்கையிலேயே அவர்கள் உடலில் இருந்து நறு மணம் வீசியவாறே இருக்கும். அவர்கள் நிலை என்பது வேறு. சாதாரண மனிதர்களாகிய நாம் அன்றாடம் இருவேளை குளிக்க வேண்டும். செயற்கையான நறுமணங்களைத் தவிர்த்து இயற்கை நறுமணங்கள், குளியல் பொடிகளை உபயோகிக்கலாம்.
சாம்பிராணி, தசாங்கம், ஜவ்வாது, மருதாணி பூ, வசம்பு போன்றவற்றினைக் கலந்து தூபம் போடலாம். வீடு முழுக்க காண்பிக்கலாம். இதனுடன் வெண் கடுகினையும் சேர்த்துக் கொள்ள தீய சக்திகள், கண் திருஷ்டிகள் நீங்கும்.
இறைவனுக்கு நைவேத்தியம் செய்யும்போது வெற்றிலை, பாக்கு, பழம், 2 கிராம்பு, 2 ஏலக்காய் வைத்து நைவேத்தியம் செய்யலாம். இறைவன் பாடல்கள், நாமங்கள் சொல்லும் போது சில பக்தர்கள் வாயில் 2 ஏலக்காய் போட்டு மென்று விட்டுதான் சொல்வார்கள்.
பிறர் பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்று சொல்வதன் காரணம் அவரது மன எண்ண வாசனை நம்மையும் பற்றிக் கொள்ளக் கூடாது என்பதற்குத்தான். பிறருக்கு கொடுத்தாலும் அதனை தூய்மையாய் சுத்தம் செய்து விட்டு கொடுக்க வேண்டும்.
தண்ணீர் தீய சக்திகளை விரட்டும் என்பதால்தான் வாசல் தெளிப்பது, வீடு கழுவுவது, அன்றாடம் குளிப்பது என்பதனை நம் முன்னோர்கள் வழக்கப்படுத்தி உள்ளனர்.
அதே போல் நாம ஜெபத்திற்கும் அதிக பலன் உண்டு.
* 20 நிமிடம் நாம ஜெபம் செய்தால் அதாவது வேறு எந்த நினைப்பும் இல்லாமல் ஜெபம் செய்யும்போது அது தவம் ஆகின்றது.
* 20 நிமிடம் நம் கர்மாக்களை நீக்க, பாவங்களை நீக்க முயற்சி செய்ததாகின்றது.
* ஆன்மீக பாதையில் 20 நிமிடங்கள் பயணித்துள்ளீர்கள்.
* 20 நிமிடம் வேத பாராயணம் செய்துள்ளீர்கள்.
* 20 நிமிடங்கள் உண்மையாக தீயது எதுவும் நினைக்காது இருந்துள்ளீர்கள்.
* 20 நிமிடம் சத்தம் செய்யாது அமைதி காத்துள்ளீர்கள்.
* 20 நிமிடங்கள் உங்களை உங்கள் பலன்களை கட்டுப்படுத்தியவர் ஆவீர்கள்.

கமலி ஸ்ரீபால்
* புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும்.
* கலியுகத்தில் நாம தூபமே சிறந்த வழிபாடு
* இறைவனின் பிரபஞ்சத்தின் சக்தி உங்கள் மீது விழுகின்றது.
இன்றைய கால கட்டத்திற்கு உகந்த வழிபாடாக நாம ஜெபமே பரிந்துரைக்கப்படுகிறது. தினம் மற்ற வேலைகள் உள்ளவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் அவர்களுக்கு வசதியான நேரத்தில் குறைந்தது ஒரு மணி நேர நாம ஜெபம் செய்யலாம். காலை 6 மணி முதல் (அ) மாலை 6 மணி என ஆரம்பித்தால் தினமும் அதே நேரத்தில் ஜெபத்தினை ஆரம்பிப்பது நல்லது. ராம ஜெபம் என்பது அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது. அவரவர் குரு அருளிய (அ) வீட்டில் பெரியவர்கள் சொல்லிக் கொடுத்த நாம, ஜெபத்தினை பயிற்சி செய்யலாம். இது ஒருவகை தியான முறையாகும். இதனை மந்த்ரா தியான முறை என்பர்.
விஞ்ஞான ரீதியாக பார்த்தாலும், ஜெபம், தியானம் போன்றவை.
* மன உளைச்சலை நீக்கி மனதினை அமைதி படுத்துகின்றது
* கவனிக்கும் திறன், கூர்மையை அதிகரிக்கின்றது.
* அழிவுப் பூர்வமான சிந்தனைகள் வெகுவாய் குறைகின்றன.
* ஆக்கப்பூர்வ சிந்தனைகள் அதிகரிக்கின்றன.
* உடலின் சக்தி கூடுகின்றது என்று வெளிநாட்டின் யோகா மையங்களின் ஆய்வுகள் கூறுகின்றன.
திருவண்ணாமலையைச் சேர்ந்த மகான் பகவான் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் சிறு வயதில் இருந்தே எப்போதும் ஜெபம் செய்த
வாரே இருப்பார். யாரேனும் அவரை அணுகி, என்ன செய்கின்றீர்கள் எனக் கேட்டால் 'கர்மா ஒழிய வேண்டும்' அதற்காக மந்திர ஜெபம் செய்கிறேன் என்று சொல்வாராம்.
கேட்பவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். நாலு வார்த்தைகளை திரும்ப திரும்ப சொல்வதால் கர்மா ஓழிந்து விடுமா? என்ன என்று ஆச்சரியமாகக் கேட்பார்களாம்.
சேஷாத்திரி சுவாமிகள் அவை வெறும் வார்த்தைகள் அல்ல. கந்தகம் என்பது ஒரு வகை மண்தான். அது வெடி மருந்தாக மாறலயா. அது மாதிரி சில குறிப்பிட்ட வார்த்தைகள் உள்ளுக்குள் மாறுதல் நிகழ்த்தும். மந்திரம் சொல்ல சொல்ல மனசு ஒருமைப்படும். மனம் சுத்தமாகும். ஒரு முகப்பட்ட மனசுக்கு சக்தி அதிகம். சுத்தமான மனசு எது கேட்டாலும் கிடைக்கும். சந்தேகம் இல்லாமல் செய்யணும் நமக்கு கிடைச்ச இந்த காலத்திலேயே செய்யணும்.
செய்வேன் என்ற வைராக்கியம் வேண்டும் பின் அதுவே ஒரு மணி நேரத்தினை கூட்டிக் கொண்டே போகும்.
இதனால் மனம் அமைதிப்படும். கோபம் குறையும் காதுக்குள் இனிமையான சங்கீதம் கேட்கும். நாக்கு ருசி தேடி அலையாது. முகம், உடலில் புதுப்பொலிவு ஏற்படும். பசிக்காது. தூக்கம் வராது.
பகவானின் அருகில் போய் விடலாம். நீயே ஜெபமாகி விடுவாய். மனதில் இருந்து பீறிட்டு ஜெபம் வந்து கொண்டே இருக்க வேண்டும் என சேஷாத்திரி சுவாமிகள் மந்திர ஜப தியானத்தினைப் பற்றி கூறியுள்ளார்.
மேலும் ஜபம், மூச்சு விடுதல் போல் தானாக இயங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
"இந்த ஜப தியானமும் மூளையை சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும் என்பதும் சில ஆய்வுகளின் கருத்தாகும்."
பலர் ஆன்மீகத்திலும் இல்லாது, உலக இயல்பான வாழ்க்கையோடு ஒட்டியும் இல்லாது எப்போதும் கதவை மூடிக் கெண்டு இருட்டறையில் அமர்ந்தபடியே இருப்பர். இது இவர்க
ளது மூளையின் செயல்பாட்டுத் திறனையே வெகுவாய் குறைத்து விடும்.
* மிகவும் 'ஸ்கிரீன் டைம்' என போன், கம்ப்யூட்டர் முன் இருப்பவர்களின் புத்தி கூர்மை குறையும்.
* எப்போதும் எதிர்மறையான செய்திகள் கேட்பது. ஏதாவது எண்ணங்களில் மூழ்கியது போன்று இருப்பவர்கள் சோகமாகவே மாறி விடுவர்.
* அதிக சர்க்கரையினை உணவில் சேர்த்துக் கொள்பவர்கள் சுறுசுறுப்பின்றி மந்தமாகி விடுவர்.
ஆக மூளையை படிப்பு, வேலை, தியானம் என பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த மூளை, மனதினைக் கொண்டு உங்கள் எதிராளியுடன் சண்டை போடுவதிலேயே செலவழிக்கக் கூடாது. இதில் அதிக எதிர்மறை பதிவுகள் ஏற்படும். மேலும் எதிராளி உங்கள் திறமைகளை கற்றுக் கொள்கின்றான்.
அதற்கு பதிலாக அமைதியாக இருந்து விடலாம்.
இந்த அமைதி நீங்கள் இந்த சண்டையை தவிர்த்து வெளியறியது ஆகாது.
உங்கள் நேரம், வார்த்தைகளை சரியாக புரிந்து கொள்ளாதவர்களிடம் வீணடிக்க விரும்பவில்லை என்பதாகும்.
அந்த நேரத்தில் தியானம் செய்யலாமே.
- நான்கைந்து காஸ்ட்யூமில் அந்த பாடல் காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்தது.
- கருவேல மரக்கிளையை வெட்டி, கட்டாக கட்டி முந்தானை தலைப்பு சேலையை சுற்றி தலையில் வைத்து விறகு கட்டை சுமந்து செல்ல வேண்டும்.
உண்மையிலேயே என் மீது பிரியமானவர்.
தனது கேமரா கண்கள் மூலம் மீனாவை எவ்வளவு அழகாக காட்ட முடியுமோ அவ்வளவு அழகாக காட்ட முயற்சிக்கும் நல்ல மனசுக்காரர்.
நானும் முரளியும் ஜோடி சேரும் படத்தில் அவர் ஒளிப்பதிவாளராக வந்தால் மட்டும் ரொம்ப டென்சன் ஆகிவிடுவார்.
அப்போ, அவருக்கு முரளியை பிடிக்காதோ என்று நினைத்து விடாதீர்கள். என்னை தான் எதிர்பார்த்த அளவுக்கு பளிச்சென்று காட்ட முடியவில்லையே என்ற ஆதங்கம்தான். வேறு எதுவும் இல்லை.
ஏனெனில் நாங்கள் இருவரும் ஜோடியாக நடிக்கும் போது லைட் போட்டால் என் முகம் பளிச்சென்று தெரியும். முரளி முகம் கருப்பாகி விடும். லைட் போடாமல் எடுத்தால் என் முகம் டல்லாகிவிடும். இது தான் பிரச்சினை. இந்த ஜோடியை வைத்து எடுத்தால் எனது ஒளிப்பதிவு டல்லாகிவிடுமே என்று கிண்டல் செய்வார். இந்த கிண்டலை முரளி அவ்வளவு பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டார். ரொம்ப நல்ல மனிதர். அன்பாக பழகுவார்.
பொற்காலம் படத்தில் 'தஞ்சாவூரு மண்ணு எடுத்து பாடலுக்கு அவரது கேமரா கண்களை அற்புதமாக சுழலவிட்டிருப்பார்.
பொற்காலத்தின் வெளிப்புற படப் பிடிப்புகள் மைசூருவில் நடந்தது. பாவாடை, தாவணி கட்டி பொம்மை போல் ஆடும் காட்சிகள் அனைத்தும் அங்கு படமாக்கப் பட்டது. 'தஞ்சாவூரு மண்ணை எடுத்து, பாடல் காட்சியின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. முழு பாடலையும் ஒரே நாளில் எடுக்க வேண்டிய கட்டாய சூழல். எனக்கு மறுநாள் ஐதராபாத்தில் வேறு பட ஷூட்டிங் போக வேண்டும். எனவே காலை 9.30 மணிக்கெல்லாம் ஷூட்டிங் தொடங்கி விட்டது. நான்கைந்து காஸ்ட்யூமில் அந்த பாடல் காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்தது. எனவே ஓய்வே இல்லாமல் படப்பிடிப்பு தொடர்ந்தது. காலை 9.30 மணிக்கு தொடங்கிய ஷூட்டிங் மறுநாள் அதிகாலை 4 மணிக்குத்தான் முடிந்தது.
உடனே புறப்பட்டு நேராக விமான நிலையத்துக்கு சென்றேன். போகும்போதே காரில் இருந்தே மேக்-அப்புகளை கலைத்து தலையை வாரி விட்டு சென்றேன். அங்கிருந்து விமானத்தை பிடித்து ஐதராபாத் சென்று வேறு பட ஷூட்டிங்கில் கலந்து கொண்டேன். எவ்வளவு அழகான பாட்டு, சூப்பர் சீன்கள் ஒரே நாளில் அரங்கத்தில் வைத்து முடிக்க வேண்டியதாயிற்றே என்று வருத்தமாக இருந்தது. எல்லா காட்சிகளையும் உள்வாங்கி பொறுமையாக ரசித்து ரசித்து நடிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம்.
ஆனாலும் பாடல் காட்சிகள் அழகாக அமைந்ததை நினைத்து சந்தோஷமாக இருந்தது. வருத்தத்தை ஜீரணித்து கொண்டேன்.
'அந்த படத்தில் 'கருவேலங் காட்டுக்குள்ள, கானாங்குருவி ரெண்டு என்ன பேசுது' என்ற பாடல் முழுக்க கருவேலங் காட்டுக் குள்ளேயே படமாக்கப்பட்டது.

அய்யோ... முள்ளு முள்ளாக இருக்கும்... கீழேயும் முட்கள் நிறைய கிடக்கும். காலில் செருப்பு கூட போடாமல் அந்த காட்டுக்குள் பாடல் காட்சியில் நடிக்கணும். கிராமங்களில் கருவேல மரக்கிளைகளை வெட்டி எடுத்து அடுப்பு எரிக்க பயன்படுத்துவார்கள்.
அதைப்போலவே நான் கருவேல மரக்கிளையை வெட்டி, கட்டாக கட்டி முந்தானை தலைப்பு சேலையை சுற்றி தலையில் வைத்து விறகு கட்டை சுமந்து செல்ல வேண்டும். அப்பா... காட்சியில் நடிக்கவே இவ்வளவு கஷ்டமாக இருக்கே. நிஜமாகவே கிராமத்து பெண்கள் கை, கால்களில் முள் குத்துவதையும் தாங்கி கொண்டு விறகு வெட்டி வெயிலில் எப்படித்தான் சுமந்து செல்கிறார்களோ என்று ஆச்சரியப்பட்டேன். கிராமத்து பெண்களின் அன்றாட வேலையும், அவர்கள் படும் கஷ்டத்தையும் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த கஷ்டத்துக்கு இடையிலும் எனக்கு எதிர்பாராத ஒரு சந்தோஷத்தை சேரன் கொடுத்தார். அதை என்னால் மறக்க முடியாது. அதாவது கருவேலங் காட்டுக்குள் ஷூட்டிங் நடந்த போதுதான் எனது பிறந்தநாள் வந்தது.
வழக்கமாக பிறந்தநாள் என்றால் வீட்டிலோ, நண்பர்களுடன் ஓட்டலிலோ கொண்டாடுவோம். கேக் வெட்டி பிடித்தமான உணவு வகைகளை வாங்கி சாப்பிடுவோம். அந்த நாள் ரொம்ப ஜாலியாக இருக்கும். ஆனால் இப்போது காட்டுக்குள் ஷூட்டிங்... எங்கே பிறந்தநாளை கொண்டாடுவது என்று நான் கண்டு கொள்ளாமல் இருந்தேன்.
பிறந்தநாள் அன்று ஷூட்டிங் சென்றேன். அந்த கரு வேலங்காட்டுக்குள்ளேயே பிறந்தநாள் கொண்டாடத்துக்கு ஏற்பாடு செய்து இருந்தார். கேக் தயாராக இருந்தது. அதை பார்த்ததும் ஆச்சரியத்தில் 'என்ன சார்...' என்றேன்.
எல்லாம் உங்கள் பிறந்தநாளுக்குத்தான் என்றார்.
படக்கு ழுவினர் மத்தியில் கேக் வெட்டினேன். எல்லோரும் பிறந்தநாள் வாழ்த்து சொன்னார்கள். அப்போது வானத்தில் இருந்து பூமழை பொழிவது போல் ஏராளமான பூக்கள் மேலிருந்து கொட்டியது.
ஆச்சரியத்தில் அண்ணாந்து பார்த்தேன். பூ தூவுவதற்காக கிரேன் ஏற்பாடு செய்திருந்தார்கள். நான் ஏதோ ஷூட்டிங்குக்காக கிரேன் நிற்கிறது என்று தான் நினைத்து இருந்தேன். கருவேலங்காட்டுக்குள் கனவுலக நிகழ்ச்சி போல் அந்த பிறந்த நாளை அமர்க்களப்படுத்தி விட்டார்கள். மறக்க முடியாத கருவேலங்காடு... அது திருவண்ணாமலை அருகே உள்ள கிராமம். இன்னும் என் கண் முன்னால் அந்த காட்சிகள் தெரிகிறது. இந்த காலத்தை போல் செல்போன் வசதிகள் இருந்திருந்தால் எத்தனையோ புகைப்படங்கள் எடுத்திருக்கலாம். ஆனால் இதய கேமராவுக்குள் இதே போல் எத்தனையோ மறக்க முடியாத நினைவுகள் படமாக பதிந்து இருக்கி ன்றன. அடுத்த நினைவு களுடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன்.
பை... பை... (தொடரும்)
- குரு என்கின்ற வார்த்தைக்கான விளக்கத்தை நாம் நிறைய படித்திருக்கிறோம்.
- ஆன்ம பாடம் படிக்க ஆரம்பித்தவர் ஆத்ம வித்யா எனும் ஞானி.
அன்பார்ந்த வாசகர்களே, கடந்த பகுதியில் குருவை எப்படி பிடித்து கொண்டு கர்ம வினை பதிவுகளில் இருந்து எப்படி விடுபடுவது என்பதை பற்றிய நிலைகளை பார்த்தோம். குரு என்கின்ற வார்த்தைக்கான விளக்கத்தை நாம் நிறைய படித்திருக்கிறோம்.
"குரு பார்க்க கோடி நன்மை", "குருவின் அருள் இல்லையேல் திருவருள் இல்லை" என்று படித்திருக்கிறோம்.
பொதுவாக அத்வைத சாராம்ச தத்துவத்திலே, ஒரு குழந்தை வளர்ந்து அது கல்வி கற்க செல்லும் போது முதலில் அந்த குழந்தைக்கு நாம் சொல்லிக் கொடுக்கும் ஸ்லோகம்,
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மஹேச்வரஹா
குரு சாக்ஷாத் பரப்ரம்மா
தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ...!
அதாவது குருவே பிரம்மம், குருவே விஷ்ணு, குருவே ஈச்வரன், குருவே பரம் பொருள், எல்லாமே பிரம்மமே, குரு தான் அவர், எனவே அவரை நாம் வணங்க வேண்டும் என்று இந்த ஸ்லோகம் சொல்கிறது.
எப்படி நாம் குருவை வணங்குவது? எப்படி நாம் குருவை அறிவது? என்று பார்க்கும் போது, தமிழிலே மிக அழகாக திருமூலர் அவர்கள் சொன்ன பாடலிலே!
"தெளிவு குருவின் திருமேனி காணல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே"
என மிகவும் அழகாக அதே நான்கு வரிகளில், தமிழில் அற்புதமாக விளக்கம் தருகிறார்.
அதில் குருவை வணங்கனும் என்றால், எந்த ஒரு செயல் செய்தாலும், குருவை வணங்கி, அவரே பரம்பொருள், அவரே நமக்குள் இருந்து எல்லாம் செய்கிறார் என்ற நினைப்புடன் செயல்களை நாம் செய்ய வேண்டும். அப்படி செய்யும் போது, அவர் உருவத்தை நினைத்து கொண்டே இருக்க வேண்டும். இதனால் அவருக்கு என்ன எல்லாம் கிடைத்ததோ அதில் ஒரு துளியாவது நமக்கு கிடைக்கும். குருவின் ஆத்மா நம்மோடு இணையும் அற்புதங்கள் நடக்கும்.
குருவின் திருநாமம் செப்பல் என்பது, குரு சொல்லி கொடுத்த தாரக மந்திரங்களை ஜபித்து கொண்டே இருக்க வேண்டும். குருவின் திருவார்த்தை கேட்டல் என்பது, குரு கூறிய தத்துவங்கள், திரும்ப திரும்ப சலிப்பு இல்லாமல் கேட்டுகொண்டே இருக்க வேண்டும். குரு உரு சிந்தித்தல் என்பது குரு சொன்ன கொள்கையின் படி வாழ்ந்து காட்டுவது ஆகும்.
குரு என்கின்ற வார்த்தை பற்றி நாம் விளக்கும் போது, "கு" என்றால் இருள் என்று பொருள். "ரு" என்றால் போக்குபவர் என்று பொருள். அதாவது அஞ்ஞானம் என்னும் இருளை போக்குபவர். மேலும் கூற வேண்டும் என்றால் "குரு" என்னும் சொல், தலைமை, மேன்மை, சிறப்பு, ஒளி என்னும் பல பொருள்களை தரும்.
நமக்கு என்ன தேவை? நம்முடைய திறன் என்ன? நம்மால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை நம் அருகிலிருந்து கவனித்து, நம் வழியாகவே தீர்வு காண உதவுபவர் தான் குரு என்றும் ஒரு விளக்கம் இருக்கிறது.
ஒரு குருவுக்கும், மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், மற்றவர்கள் எல்லோரும் நம்மை வெளியில் பார்க்க சொல்கிறார்கள். ஏனென்றால் உலக விஷயங்களில் நாம் முன்னேறுவதற்காக, ஆனால் குரு நம்மை நமக்கு உள்ளேயே பார்க்க சொல்கிறார். நமக்குள் நம்மை பார்த்தபின் நாம் யார் என்பதை நம்மை அறிய செய்கிறார். மற்றவர்கள் எல்லாம் நம்மிடம் எதை பார்ப்பது இல்லையோ, அதை குரு பார்க்கிறார்.
அதாவது நாம் மற்றவர்களுக்கு உதவுவதில் எந்த அளவு நம் மனதை தயார் படுத்தி இருக்கிறோம். இறை சக்தியை எந்த அளவு உணர்ந்து இருக்கிறோம், இறை சக்திக்கு எவ்வளவு அருகில் இருக்கிறோம். இவற்றை எல்லாம் ஒரு குரு ஆனவர் பார்க்கிறார். அந்த தனிப்பட்ட ஒரு பார்வை உலகில் குருவுக்கு மட்டுமே உண்டு.
மனவளக்கலை பேராசிரியர்கள் கி. சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்
இதனால் தான் குருவை, மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் தெய்வத்திற்கு முந்தைய நிலையில் வைத்திருக்கிறார்கள். இதில் மாதாவும், பிதாவும் நம்மை உலகியலுக்குள் கட்டி போடுவார்கள். குருவும், தெய்வமும் நம்மை கட்டுக்களிலிருந்து பிரிப்பார்கள்.
இந்திய பண்பாட்டின்படி, வாழும் காலத்திலே குருவை அடையாத ஒருவரை அதிர்ஷ்டம் இல்லாதவர் என்று குறிப்பிடப்படுகிறது.
குருவை அடைய நான் முயன்று கொண்டே இருப்பேன் என்கின்ற எண்ணம் வேண்டும். இப்படி பலபேர் மூலமாக ஒரு சீடர் குருவை அனுகும் போது, திறந்த உள்ளம் இருக்க வேண்டும். அவர் சொன்னதை கேட்க வேண்டும். கேட்டு புரிந்துவிட்டால், கண்டிப்பாக வாழ்க்கையில் நடைமுறை படுத்த வேண்டும். நமக்கு தெரியவில்லை என்றால் கூச்சம் இல்லாமல் கேட்க வேண்டும். அவருக்கு தெரிகிறதா என்று பரிசோதனை செய்ய கூடாது. நாம் ஒரு கருவி தான் என்கின்ற எண்ணத்துடன் செயல்பட வேண்டும். இப்படி இருந்தால் தான் குரு சொன்ன உபதேசம் நமக்கு பயன்படும்.
முதலில் குரு என்பவர் ஒரு தனி மனிதர், ஒரு நபர் என்று தான் நாம்அனைவரும் நினைத்து கொண்டு இருக்கிறோம். நாம் சற்று ஆழமாக சிந்தித்தால் குரு என்பது ஒரு உன்னத நிலை மேலும் அது ஒரு தன்மை என்பது நமக்கு விளங்கும், அது ஒருவர் மூலமாக உங்களிடத்தில் சில மாறுதல் அமையும், மலர்ச்சியையும் ஏற்படுத்தி விட்டு போகும். அது ஒரு அற்புத நிகழ்வு ஆகும்.
நாம் பார்க்கும் போது கண்கள் மூலமாக அவர் ஒரு உருமாக நமக்கு காட்சி அளிக்கிறார். ஆனால் எல்லாம் வல்ல பரம்பொருளே அவர் மூலமாக நமக்கு கண் திறப்பை நடத்தி இருக்கிறது என்பது தான் உண்மையிலும் உண்மை. எப்படி ஒரு தோட்டத்தில் மலர்கள், மலர்வதற்க்கு தென்றல் காரணமாக இருக்கிறது.. மகரந்த சேர்க்கை நடப்பதற்க்கு வண்டு காரணமாக இருக்கிறது.. அதுபோன்று ஒரு ஜீவாத்மா, பரமாத்மாவோடு பொருந்துவதற்கு குரு தன்மை காரணமாக அமைகிறது.
எனவே குரு என்பவர், யாரும் பார்க்க முடியாத விஷயங்களை கூட பார்க்க கூடிய ஞானக்கண் கொண்டு பல கோணங்களில் பார்க்க கூடியவர்.
ஒரு மனிதரை, அவரது இயல்பில் இருந்தும், பழக்க வழக்கத்திலிருந்தும் அரை அங்குடம் கூட மற்றபவரால் நகர்த்த முடியாது. ஒரு மனிதருடைய நீண்ட கால பழக்க வழக்கம், அவருடைய குணாதியங்கள் ஒருவரால் மாற்றியமைக்க முடியும் என்றால் அது குரு ஒருவரால் மட்டுமே முடியும்.
எவர் ஒருவர், தான் என்கிற அகங்காரத்தை இழக்க தயாராக இருக்கிறாறோ, அந்த கணமே அவர்களுக்கு நல்ல குருவை இறைவன் அடையாளம் காட்டுவார். எனவே குரு என்பவர், நாம் இருட்டில் தவிக்கும் போது, மின்னல் மாதிரி தோன்றி பாதையை காண்பிப்பார். ஆனால் கர்ம வினை பதிவுகளின் காரணமாக, மாயையில் சிக்கி, குரு காட்டிய வழியை மறந்து விட்டு பிறகு தவிக்கிறோம்.
இது எப்படி இருக்கிறது என்றால், ஒரு குரு தன் ஆசிரமத்தில் ஒரு விழாவிற்காக லட்டு தயார் செய்ய சொன்னார். இரவு இந்த லட்டுகளை எறும்புகளிடம் இருந்து காப்பாற்ற அந்த லட்டு பாத்திரத்தை சுற்றி, சர்க்கரையால் வட்டம் போட சொன்னார். ஏன் என்று உடனே சிஷ்யர்கள் கேள்வி கேட்டார்கள். உடனே குரு, வருகின்ற எறும்பு சர்க்கரையை மட்டுமே உண்ணும். இதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. அதாவது இறைவன் என்பவர் லட்டு போல நடுவில் இருக்கிறார். அதை அடைவதை விட்டு விட்டு, எறும்புகளாகிய நாம் அனைவரும் எப்படி எறும்பு லட்டை விட்டு விட்டு, சர்க்கரையை மட்டும் எடுப்பது போல, மாயையில் சிக்கி இறைவனை அடைவதில் நமக்கு நாமே தடையை ஏற்படுத்தி கொள்கிறோம்.
இதிலிருந்து நம்மை விடுவிக்க தான் ஒரு குரு அனைவருக்கும் அவசியம் ஆகிறார், அந்த குரு ஆனவர் அஷ்டலட்சணம் பொருந்தியவராக இருக்க வேண்டும்.
1. ஆன்ம பாடம் படிக்க ஆரம்பித்தவர் ஆத்ம வித்யா எனும் ஞானி.
2. ஆன்ம பாடங்களில் லயம் பெற்று, பிரம்மத்தை உணரும் தகுதி உடைய பிரம்ம வித்யா எனும் மகான்.
3. பிரம்மத்தை உணரும் தகுதி பெற்று, பிரம்மத்தோடு கூடிய ஐக்கிய நிலை மற்றும் பிறருக்கு கற்பிக்கும் தகுதி பெறும் நிலை உபாத்தியாயா எனும் ரிஷி.
4. தன்னை பிரம்மமாவே உணர்ந்து, அதே பிரம்ம நிலையில் தன்னையே நிலை படுத்தும் பிரம்ம உபாத்தியாயா எனும் முனிவர்.
5. இரண்டு அற்ற பிரம்ம நிலையாகிய, வேறுபாடு அற்ற நிலை ஆச்சார்யா எனும் புங்கவர்.
6. காணும் பொருட்களில் எல்லாம் தன்னை உணர்ந்து, தான் உணர்ந்ததையே பிறருக்கு உணர்த்தும், உணர்ந்து ஓதும் பிரம்ம ஆச்சார்யார் எனும் சித்தர்.
7. இருந்த இடத்திலேயே எல்லா ஆத்மாக்களையும் ஈர்த்து ஆற்றும் தொடர்ச்சியான பரிபக்குவப்பட்ட தொண்டு புரியும் நிலை பிரம்ம சித்தர்.
8. தனக்கு சமமாக ஞான குருமார்களை உருவாக்கி தன் தொண்டு பல தலைமுறைகட்கும் தொடர செய்தல் எனும் பணியை ஏற்ற பிரம்ம சித்தர் என்ற மகா அவதார பரம ஞான குரு நிலை கண்டவர்.
இப்படி எட்டு விதமான லட்சணங்கள் பொருந்திய ஒரு குருவை பிடித்து அந்த குருவின் கொள்கைகள் மீது ஆழ்ந்த ஈடுபாடும், அசைக்கமுடியாத நம்பிக்கையும் வைத்து, இந்த உடல், மனம், உயிர் சார்ந்த யோகப் பயிற்சிகளையும் நாம் செய்து, பிறகு தன்னையே சுத்தப்படுத்தி, தன் குணத்தை மேம்படுத்தி வாழ்ந்தால் பிறவி தொடர் அறுக்கப்பட்டு வாழும் காலத்திலேயே "பிரம்ம பூதோ மஹா யோகி" யாக நாம் மாறலாம்.
அந்த பிரம்மத்தை உணர்ந்த மகா யோகியாக, குடும்ப வாழ்க்கையில்இருந்துகொண்டே எப்படி வாழ்வது என்பதை தொடர்ந்து ஆராய்வோம்.
போன்: 9444234348
- அச்சம் என்பது மனிதனின் உள்ளத்தில் தோன்றுகிற இயல்புணர்ச்சி.
- அச்சம் என்பது மூடநம்பிக்கையா? அல்லது அறிவியல் சார்ந்த உள்ள உணர்வா?.
அஞ்ச வேண்டியதற்கு அஞ்சியே ஆகவேண்டும் என வாழும் வாசகப் பெருமக்களே! வணக்கம்.
பிறந்த குழந்தை முதற்கொண்டு, முதிர்ந்த பெரியவர் வரை அவர்களோடு ஒட்டிக்கொண்டே இருக்கும் மனிதக்குணம் அச்சம் என்பது ஆகும். பிறந்த குழந்தையை மேல்நோக்கித் தூக்கிப்போட்டுப் பிடித்தால் அதற்கு உயிரே போய்வந்தது போன்ற பயம் பற்றிக்கொண்டு அலறத் தொடங்கும்; தாயின் கருவறையில் கதகதப்பாகப் பாதுகாப்பாக இருந்த குழந்தை வெளியே வந்து பிறந்தவுடன் அழத் தொடங்குவதே ஒருவித இனம்புரியாத அச்சத்தின் காரணமாகத் தான்.
'யானைக்குப் பயப்படுவியா? பூனைக்குப் பயப்படுவியா?' எனக்கேட்டு, கைகளை முகத்தருகே விரைவாகக் கொண்டுபோய் வீசிக், கண்களை இமைக்க வைத்து, 'பயந்துட்டே! பயந்துட்டே!' எனக் குழந்தைகளோடு விளையாடுவதே அவர்களுக்கிருக்கும் பய உணர்வை வெளிப்படுத்தத்தான். வயதான பெரியவர்கள் தங்களது செல்பேசிகளைக் கயிறுகட்டிக் கழுத்தில் தொங்கவிட்டுக் கொள்வதும், பணத்தை உடையில் ஐந்தாறு இடங்களில் பிரித்துப் பத்திரப்படுத்தி வைப்பதும் அவை தொலைந்து விடுமோ என்கிற அச்சத்தின் காரணமாகத்தான். சில வீடுகளில் சில பெரியவர்களும், சில சிறுவர்களும் போகும் வழியில் எங்கே தொலைந்துபோய் விடுவார்களோ என்கிற அச்சத்தின் முன்ஜாக்கிரதையோடு தான் வெளியே அழைத்துச் செல்லப்படுகிறார்கள்
அச்சம் அல்லது பயம் என்பது மனித மனத்திலே தோன்றுகிற ஓர் உணர்வு. மனிதர்களுக்கு மட்டுமில்லாது பிற ஐந்தறிவு உயிர்களுக்கும் இந்த அச்ச உணர்வு தோன்றுவதைக் காணலாம். அறிவின் துணைகொண்டு,முன் அனுபவ வழிநின்று, காரண காரிய இயல்புகளை வைத்து தர்க்கரீதியாக அச்சப் படுவதும் உண்டு. எந்தக் காரணங்களுமின்றி அச்சம் கொள்வதும் உண்டு. அழுவது, கோபம்கொள்வது, ஆச்சரியப்படுவது, மகிழ்வது, இரக்கப்படுவது, குழம்பி நிற்பது, பெருமிதப்படுவது, அமைதியாய் இருப்பது ஆகியவை போல அச்சமும் உயிரினங்களிடத்தில் தோன்றுகிற ஒரு மன உணர்வுதான்.
'அச்சமே கீழ்களது ஆசாரம்!' என்று குறிப்பிடும் திருவள்ளுவர், 'கீழ்மக்களே அச்சப்படுவதைக் குல வழக்கம்போலக் கொண்டிருப்பர்' என்கிறார்.ஆனால் அவரே மற்றொரு குறளில் ' அஞ்சுவது அஞ்சாமை பேதைமை' என்கிறார் 'அதாவது அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாமல் இருப்பது அறியாமை; அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச வேண்டியது அறிவுடையவர்கள் செய்யும் செயல்!' என உறுதிபட எடுத்துரைக்கிறார்.

அச்சம் என்பது மனிதனின் உள்ளத்தில் தோன்றுகிற இயல்புணர்ச்சி. ஆதி மனிதன் தனது உதவிக்காகப் படைக்கப்பட்டுள்ள இயற்கையைப் பார்த்தே முதலில் அச்சப்படத் தொடங்கினான். எது நமக்கு வியப்பைத் தருகிறதோ அது நாளடைவில் சரியாகப் புரிந்து கொள்ளப்பட வில்லையெனில் அதுவே நமக்கு அச்சமளிப்பதாக மாறிவிடுகிறது. உயர்ந்த மலைகளும், பள்ளத்தாக்குகளும், மரம் செடி கொடிகளும், ஆறும் அருவிகளும், காற்றும் மழையும், கடலும் நெருப்பும், இடி மின்னலும் அவனுக்கு முதலில் வியப்பைத் தந்திருக்கலாம்; பலநேரங்களில் இயற்கைப் பேரிடர்களாக அவை உருமாறி, அவனைத் துன்பப் படுத்தியபோது அவன் இயற்கையைப் பார்த்து அஞ்சத் தொடங்கியிருப்பான்.
அச்சப்படுத்திய இயற்கையை வழிபடுவதன் மூலம் தனக்கு உதவியாக வசப்படுத்திக் கொள்ளலாம் என நம்பினான். ஆதியில் வழிபாடு என்பது இயற்கை வழிபாடாகவே இருந்தது. எனினும் மிகுந்த கவனத்தோடு இயற்கையோடு அனுசரணையோடு வாழ்ந்தால் தனது வாழ்வியல் வசதிக்கான அனைத்தையும் இயற்கையிடமிருந்தே பெற்றுக் கொள்ளலாம் என்பதையும் உணர்ந்து கொண்டான். கண்மண் தெரியாத அச்சத்திலிருந்து கவனப்படும் அச்சத்திற்கு மனித குலம் மாறியிருப்பதே இந்த இருபத்தியோராம் நூற்றாண்டின் அறிவியல் சாதனை.
அச்சம் என்பது மூடநம்பிக்கையா? அல்லது அறிவியல் சார்ந்த உள்ள உணர்வா?. அறிவியல் வளராத அந்தக் காலத்தில் மனிதன் எதற்கெடுத் தாலும் பயப்படுவது; காரணம் தெரியாமல் பயப்படுவது என்று இருந்தது; அது மூடத்தனம். ஆனால் இன்று எல்லாச் செயல்களுக்கான காரண காரியங்களையும் அறிந்தே அவன் கவனத்துடன் செயல்படும்போது அது அறிவுசார் அச்சமாகவே கொள்ளப்பட வேண்டியதாகிறது.
பேய் பிசாசுகளுக்கும் இருட்டுக்கும் அஞ்சுவது மூடத்தனம். வீரன் போருக்கு அஞ்சுவது கோழைத்தனம்;மாணவர்கள் தேர்வெழுத அஞ்சுவதும் இந்த வகையைச் சேர்ந்ததே!. சமூக ஏற்றத்தாழ்வு காரணமாக சாதியில், அந்தஸ்தில், பணபலத்தில், அதிகாரத்தில் உயர்ந்தவர்களைப் பார்த்துத் தாழ்ந்தவர்கள் அஞ்சுவது தன்னம்பிக்கையின்மை; சுயமரியாதை உணராத தன்மை. அஞ்சக் கூடாததற்கு அஞ்சக் கூடாது! என்று வள்ளுவர் இவர்களுக்குத் தான் அறிவூட்டுகிறார். 'பெரியோரை வியத்தலும் இலமே!' என்பதன் மூலம் கணியன் பூங்குன்றனார் மற்றொரு கோணத்தில் மனிதர்களுக்கான சுய மரியாதையை எடுத்துரைக்கிறார்.
தவறுகளே நமது அச்சங்களுக்கு அச்சாரம். செய்தால் தவறு நிகழ்ந்து விடுமோ என்று அஞ்சிச், செய்யாமல் இருப்பது கோழைத்தனம்; செயல்களைச் செய்யாதவரை தவறுகள் நிகழ்வதில்லை; செய்தபின் தவறு நிகழ்ந்து விட்டாலும் அதே தவறு மீண்டும் நேர்ந்துவிடக் கூடாதே என்கிற அச்சத்துடன் செய்து வெற்றி காண்பதே விவேகமான செயல். இங்கே அச்சம் என்பது கவனத்துடன் செய்வது என்றே பொருள்படும்.
ஒரு தந்தை, வீட்டுக்கு வந்திருந்த தனது நண்பரை உபசரிப்பதற்காகத், தனது மகனின் கையில் கண்ணாடிக் குவளையில் தண்ணீரைக் கொடுத்தனுப்பினார். கொடுப்பதற்குமுன், "பத்திரம்! கண்ணாடிக் குவளை பத்திரம்! கீழே போட்டு உடைத்து விடாமல் கொண்டுபோக வேண்டும்!" என்று மூன்றுமுறை கூறி, மகனது தலையில் மூன்றுமுறை கொட்டினார். அவரது நண்பர் கேட்டார், "இன்னும் உன் மகன் கையில் நீ கண்ணாடிக் குவளையைக் கொடுக்கவே இல்லையே!; அவன் அதைக் கீழேபோட்டு உடைக்கவும் இல்லையே! அதற்குமுன் ஏன் அவனது தலையில் குட்டுவைத்து அழ வைக்கிறாய்?". தந்தை சொன்னார், "அவன் கீழே போட்டு உடைத்த பின்னால், அவனை அடித்து என்ன ஆகப்போகிறது?". ஆக நிகழ்வதற்கு முன்னரேயே நிகழ்ந்துவிடக் கூடாது என்பதற்கான அச்சத்தை ஊட்டுவதற் காகவே அந்தத் தந்தை அப்படி நடந்து கொண்டிருக்கிறார்.

அச்சம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இயற்கையாகவே அமைந்த குணம். தனக்குப் பழக்கமில்லாத ஒரு செயலில் இறங்கும்போதோ, அல்லது செய்வதற்குச் சவாலான காரியத்தைச் செய்யத் தொடங்கும்போதோ, ஏற்கனவே பலர் முயன்று தோற்றுப்போன செயலில் நாம் ஈடுபடும்போதோ மனத்தில் பயம்வந்து பற்றிக்கொள்வது இயல்புதான். 'பயப்படாமல் இரு!' என்று இப்படிப்பட்ட தருணங்களில் சொல்வதென்பது, நல்ல நகைச்சுவையைச் சொல்லிவிட்டுச் சிரிக்காமல் இரு! என்று கட்டுப்படுத்துவதற்கு இணையானது.
சிலருக்கு மேடைக்கூச்சம் இருக்கும்; பேசத் தொடங்கும்போது கைகால்கள் அச்சத்தில் உதறத் தொடங்கும்; பிறகு வார்த்தைகளும் கோர்வையாக வராமல் குழறத் தொடங்கும். இவர்கள் பலமுறை தொடர்ந்து மேற்கொள்ளும் பயிற்சிகள் மூலமும், முயற்சிகள் மூலமும் மேடைப் பயங்களிலிருந்து முற்றிலும் வெளியேறி, ஆகச் சிறந்த பேச்சாளராக உருமாறும் வெற்றிகளைப் பெற்றுவிடுவர். திரைத்துறையில் சிறந்துவிளங்கும் நடிகர்கள்கூட, 'ஓவ்வொரு முறை மேக் அப் போட்டுக் கொள்ளும்போதும் இந்தக் காட்சியில் நன்றாக நடிக்க வேண்டுமே! எனும் பயம் வந்து பற்றிக்கொள்ளும்' என்றே கூறி வருகின்றனர்.அது அவர்களை அந்தந்தத் தருணங்களில் சிறப்பாக நடிக்க வைக்கும்.
அரசியல்துறை தொடங்கி, கலைத்துறை, அறிவியல்துறை, கல்வித்துறை, வியாபாரத்துறை, காவல்துறை, நிருவாகத் துறை, இராணுவத்துறை, வேளாண்மைத் துறை என எல்லாத்துறைகளிலும், குடும்பம், சமூகம் என எல்லா நிலைகளிலும் நாம் காரியமாற்றத் தொடங்கும்போது நம்மைக் கவனப்படுத்துகிற அச்சத்தையும் கொஞ்சம் மனத்தில் தேக்கிவைத்திருப்பது மிகவும் நல்லது.
'எண்ணித் துணிக கருமம்' எனும் வள்ளுவக் கட்டளை மூன்று பகுதிகளைக் கொண்டது; கருமம் என்பது செயல்; நன்மை விளைக்கிற வாழ்வியற் செயல்பாடுகளில் மனிதர் ஈடுபட வேண்டும்!; அவற்றில் ஈடுபடும்போது அச்சமின்றித் துணிச்சலோடு இறங்கிச் செயல்படவேண்டும். துணிச்சலோடு இறங்குவதற்குமுன் தீர ஆலோசித்து, சாதக பாதகங்களை ஆராய்ந்து முடிவெடுத்து இறங்க வேண்டும். இங்கே சாதக பாதகங்களை ஆராயும்போதே கவனப்படும் அச்சத்துடன் செயல்படவேண்டும். இந்த மாதிரியான அச்சமே எல்லாச் செயல்களையும் கவனமாகச் செய்ய வைத்து நிச்சய வெற்றிக்கு இட்டுச் செல்லும்.
ஒரு கடற்கரை நகரம். அந்த நகரத்தில் உள்ள மக்கள் நாள்தோறும் தங்கள் உணவில் மீனைச் சேர்த்துக்கொள்ளத் தவறுவதில்லை. ஆனால் அந்த நகரத்தின் கடலில், கரையோரப் பகுதியில் மீன்கள் கிடைப்பதில்லை. கடலில் வெகுதூரம் சென்றே மீன்பிடித்து வரவேண்டிய கட்டாயம். பெரிய பெரிய படகுகளை ஏற்பாடு பண்ணி, கடலில் நெடுந்தூரம்வரை சென்று மீன்பிடித்துத் திரும்பினால், முக்கல்வாசி மீன்கள் இறந்துபோய் விடுகின்றன; கால்வாசி மீன்கள் சோர்ந்து விடுகின்றன. அவற்றைச் சந்தையில் வாங்கிச் சமைத்தால், அப்போதுதான் பிடித்து உயிர்ப்புடன் இருக்கும் மீனைச் சமைத்துச் சாப்பிடுவது போன்ற சுவை உண்டாவதில்லை; எனவே மக்கள் ஆதரவு இந்த மீன்களுக்குக் கிட்டவில்லை. ஐஸ் கட்டிகளில் போட்டுக் கொண்டு வந்தாலும் சுவைக்கவில்லை..
மீன்பிடி நிறுவனம், புதிதான ஒரு உத்தியைக் கையாளத் தொடங்கியது. பெரிய பெரிய படகுகளில் தண்ணீர்த் தொட்டிகளை ஏற்றிப், பிடிக்கும் மீன்களை அவற்றுள் போட்டு உயிருடன் கொண்டுவந்து விற்பனை செய்தது. மீன்கள் உயிருடன் இருந்தாலும் அவற்றிடம் சோர்வு இருந்ததால் அவை புத்தம்புது மீன்போலச் சுவையாக இல்லை என மக்கள் வெறுத்தனர்.

அடுத்து ஒரு சிறப்பான முயற்சியை மீன்பிடி நிறுவனம் அறிமுகப் படுத்தியது. இப்போது மீன்கள் உயிர்ப்புடனும் சமைத்தால் சுவையாகவும் இருப்பதாக நகர மக்கள் ஆர்வத்துடன் வாங்கத் தொடங்கி விட்டனர். அந்த மீன்பிடி நிறுவனம் கையாண்ட உத்தி இதுதான்; படகுகளில் கொண்டுசெல்லப்பட்ட தண்ணீர்த் தொட்டிகளில் பிடிக்கின்ற மீன்களைப் போட்டதோடு, ஒவ்வொரு தொட்டியிலும் ஒரு சிறு சுறா மீனையும் போட்டு விட்டனர்.
சுறா மீனிடமிருந்து தப்பித்து உயிர் வாழவேண்டுமே என்கிற அச்சத்தில், தண்ணீர்த் தொட்டிகளில் இருந்த மீன்கள், நொடிப்பொழுதும் அயராமலும் சோராமலும் சுற்றிக்கொண்டே இருந்ததனால் அவை பலமணி நேரங்கள் உயிப்புடன் புதுமீன்கள் போல இருந்தன.
மனிதனும் அப்படித்தான். அவனுக்கு அன்றாடம் ஏற்படுகிற இடைஞ்சல்களும். அவற்றிலிருந்து எப்படியாவது காயப்படாமல் வெளியேறிவிட வேண்டுமே என்கிற அச்சமுமே அவனை உயிர்ப்புடனும் புத்துணர்வுடனும் வைத்திருக்கின்றன.
எல்லாச் செயல்களையும் செய்வதற்குமுன் சிறிது நேரம் சிந்தித்துத் திட்டமிடுவதும், ஏற்படப்போகும் தடைகளுக்கு எப்படி விடைகாண்பது? என்கிற கவனத்துடன் கூடிய அச்சத்துடன் அணுகுவதும் நம்மைத் தோல்வியற்ற வெற்றிநிலைக்கு இட்டுச்செல்லும்.
பயப்படுங்கள்; துணிச்சலோடு செயல்படுவதற்குமுன் கொஞ்சம் பயப்படுங்கள். பயம் பலவேளைகளில் நல்லது!.
தொடர்புக்கு 9443190098
- கடவுள் வாழ்த்துக்கு அடுத்தபடியாக வான்சிறப்பில் மழைதான் கடவுள், மழையின்றி இவ்வுலகம் இல்லை எனும் உண்மையைக் கூறுகின்றார்.
- எமன் நமக்கு உடம்பா? உயிரா? உணர்ச்சியா? இயற்கையா? செயற்கையா? என்றால், இயற்கை ஓர் இயக்கத்தை உண்டாக்கியது.
உலகப்பொது மறையான திருக்குறளில் உள்ள 1330 குறள்களிலும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் சொல்லாத விசயங்களே இல்லை. திருக்குறளுக்கு புலவர்கள், கவிஞர்கள், அறிஞர்கள் பலர் விளக்கம் தந்திருந்தாலும், தன்னிலை கண்டு சிவ நிலைக்கு உயர்ந்த ஒப்பற்ற துறவிகள் விளக்கம் கொடுக்கவில்லையே என்ற குறையை போக்கும் விதமாக சிவநிலை கண்ட ஞானி ஓங்காரக்குடில் ஆசான் ஸ்ரீஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் தெளிவான் விளக்கங்கள் அளித்துள்ளார். அதன் விவரம்,
அதிகாரம்: வான் சிறப்பு
வான்நின்று உலகம் வழங்கி வருதலால் என தொடங்கும் குறளுடன் 10 குறட்பாக்கள் இந்த அதிகாரத்தில் உள்ளன.
நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களைப் பற்றி வள்ளுவர் ஆங்காங்கே கூறினாலும், வான் சிறப்பு என்று மழைநீருக்கு ஓர் அதிகாரத்தை ஒதுக்கி அதனின் உயர்வை விளக்குகின்றார். கடவுள் வாழ்த்துக்கு அடுத்தபடியாக வான்சிறப்பில் மழைதான் கடவுள், மழையின்றி இவ்வுலகம் இல்லை எனும் உண்மையைக் கூறுகின்றார்.
புல், செடி, கொடி, மரம் போன்ற நமக்கு உணவாகப் பயன்படுகின்ற தாவரங்கள் விளைவதற்கு மழை நீர் இன்றியமையாததாக உள்ளது. உணவுப் பொருள்களைச் சமைத்துச் சாப்பிடுவதற்கு நீர் தேவைப்படுகிறது. நீர் இல்லாமல் உயிர் வாழமுடியாது. நமக்கு நீர் இன்றியமையாததாக உள்ளது. எல்லா ஜீவராசிகளின் உயிரைக் காக்க மழை நீரே அவசியமாக உள்ளது.
உணவுப்பொருள் உருவாவதற்கும் அதனை உட்கொள்வதற்கும், மழைநீர் இன்றியமையாதது.

காய், கனி உணவுகளினால், உடம்பிற்குக் கிடைக்கக்கூடிய சத்து உதிரமாகவும், சுக்கில சுரோணிதமாகவும் இருக்கும். நீர்தான் பெண்களுக்கு கருமுட்டையாகவும், சுரோணிதமாகவும் இருக்கும். இதே நீர் காமத்திற்குக் காரணமாக உள்ளது.
மழைபொய்த்தால் கடல் சூழ்ந்த இவ்வுலகில் பசி என்னும் நோய் வருத்தி, இவ்வுலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் துன்பமுறும். மழைபொய்த்தால் உழவுத்தொழில் செய்ய முடியாது. விவசாயி வாழ முடியாது. சிலகாலங்களில் மழை பொய்த்து இவ்வுலக மக்களை வருத்தும். சிலகாலங்களில் மழை பெய்து இவ்வுலக மக்களை வாழவைக்கும்.
மக்களின் துன்பத்திற்கும், இன்பத்திற்கும் காரணமாக மழையே உள்ளது. மேகத்திலிருந்து மழை பெய்யாவிட்டால் புல் முளைக்காது. புல்லே முளைக்காத வறட்சியில் வேறெந்த உயிரினமும் வாழ முடியாது.
மேகம், கடலிலிருந்து நீரை மேல்கொணர்ந்து மழை உண்டாக்கும். அப்போது கடலில் முத்துப் போன்ற உயர்ந்த பொருள்களும் உண்டாகும். அவ்வாறு மழை பெய்யாமல் இருக்குமானால், கடலுக்கும் பெருமை இருக்காது.
மழை பெய்யாது இருந்தால் மக்களிடம் வறுமையும், பிணியும் உண்டாகும். அதனால் தேவதைகளுக்கும், தெய்வங்களுக்கும் செய்கின்ற விழாக்கள், பூஜைகள், வழிபாடுகள் தடைபட்டுப் போகும்.
மழை பொய்த்துப் போனால், நலிந்த மக்களுக்கும். ஏழைகளுக்கும் பசியாற்ற முடியாது. ஏனைய தர்மத்தையும் செய்ய முடியாது. தர்மம் தடைபட்டுப் போகும். தன்னை இறைநிலைக்கு உயர்த்திக்கொள்ளும் ஞானியர்கள், தவமும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.
மழைநீர் இல்லை என்றால், மக்களுக்கு முறையான வாழ்க்கை நிலையில்லாமல் போய்விடும். பண்புள்ள மக்களாக வாழமுடியாது. சமுதாயத்தில் ஒழுக்கம் மாறும், சத்தியம் இருக்காது. பொய் பேசுவார்கள். எல்லாவிதமான கேடுகளும் விளையும்.
அதிகாரம்: நீத்தார் பெருமை
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து என தொடங்கும் குறளுடன் 10 குறட்பாக்கள் இந்த அதிகாரத்தில் உள்ளன.
நீத்தார் பெருமை என்றால், எல்லாவற்றையும் துறந்த சித்தர்களின் சிறப்பைக் கூறுவதே ஆகும். நீத்தார் என்றால் எல்லாவற்றையும் துறப்பது. காமத்தை அறுத்து தேகத்தை மாற்றிக்கொள்வது. நெருப்பு நீத்துப் போனால் சாம்பல் மட்டுமே மிஞ்சும். நெருப்பு இருக்காது. அதுபோல் உண்மைப் பொருள் அறிந்து காமத்தை வெல்ல வேண்டுமெனில் தலைவனின் ஆசி இருக்க வேண்டும்.
தவம் என்பது வைராக்கியத்தின் அடிப்படையிலும் முன் செய்த நல்வினையாலும் வருவது. வைராக்கியம் திருவருள் துணை இல்லாமல் வராது.
எல்லாம் வல்ல இயற்கை வெவ்வேறு உருவங்களாக உள்ளன. ஒவ்வொரு ஜீவராசிக்கும் ஒவ்வொரு குணம் உண்டு. இயற்கையின் இயல்புகளைப் புரிந்திருக்க வேண்டும். மனிதனின் இயல்புகளைப் புரிந்திருக்க வேண்டும்.

அதாவது மனிதனின் இயல்பு என்ன? மும்மலம் வந்ததின் காரணம் என்ன? ஆணவம், காமம், மாயை ஏன் வந்தது? பரிணாம வளர்ச்சி என் வந்தது? ஏன் காமம் வந்தது? ஏன் பசி வந்தது? துறவு ஏன் மேற்கொள்ள வேண்டும்? இத்தகைய உண்மையை அறிந்தவனே துறவு மேற்கொள்ள முடியும்.மனிதனுக்கு குணக்கேடுகள் இருக்கும்வரை அவனால் துறவு மேற்கொள்ள முடியாது. மனிதனின் குணங்களை ஆராய்ந்து பார்த்து இந்த குணக்கேடுகள் எப்படி வந்தன ? இயற்கையாக வந்ததா? செயற்கையாக வந்ததா? இதுதான் பிறப்புக்கு காரணமாக உள்ளதா? இப்போது வந்ததா? அல்லது பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே வந்ததா?
இவ்வாறாக மனிதனின் இயல்பை ஆராய்ந்து பார்த்தால் எப்பொழுது மனிதன் தோன்றினானோ அப்பொழுதே, குணக்கேடுகள் இருந்துள்ளன. அப்பொழுதே குணப்பண்புகளும் இருந்துள்ளன.
ஞானிகள் தவமுயற்சியால், சான்றோர் தொடர்பால் குணக்கேட்டை நீக்கியுள்ளார்கள். காமம் நீங்காமல் குணக்கேடு நீங்காது.
தலைவன்மீது பக்தி செலுத்தி யோகாப்பியாசம் அறிந்து, மூச்சுக்காற்றின் இயல்பறிந்து, மூலாதாரக்கனலை எழுப்பினால் காமம் அற்றுப் போகும். அப்போது குணப்பண்பு உண்டாகும்.
காமம் அற்றுப்போனால் தேகம் நீத்துப் போகும். உணர்ச்சியற்றுப் போகும். பசியற்றுப் போகும். கபம் அற்றுப் போகும். நம் எதிரியான எமன் வீழ்ந்து போவான்.
அப்படியானால் எமன் நமக்கு உடம்பா? உயிரா? உணர்ச்சியா? இயற்கையா? செயற்கையா? என்றால், இயற்கை ஓர் இயக்கத்தை
உண்டாக்கியது. எல்லா ஜீவராசிகளும் தோன்றி வாழ்கின்றன. பின்பு அழிந்து போகின்றன.
ஞானிகள் தங்களுடைய அழிவை நிறுத்தி மரணத்தை வென்றார்கள். அத்தகையவர்களின் பெருமையே நீத்தார் பெருமை.
உண்மைப்பொருள் அறிந்து, கட்டுப்பாடுகளை உருவாக்கி உடல்கூறினை அறிந்து, இயல்பறிந்து அதன் வகை தொகை அறிந்து, துறவு மேற்கொள்ள வேண்டும். அவர்கள் கூறுகின்ற உண்மைப் பொருளை துணிவுடன் கூறுவதும், அவர்களின் பெருமையைப் புகழ்ந்து எழுதுவதுமே நூலிற்குப் பெருமை. அதுவே சிறந்த நூலாகும்.
சாகாத வரம் பெற்றவர்களின் பெருமையை அளக்க முடியாது. இவ்வுலகில் பிறந்து இறந்தவர்களின் தொகையை எவ்வாறு கணக்கெடுக்க முடியாதோ? அவ்வாறே துறந்தார் பெருமையைக் கூறுவதற்கும் இயலாது.
இயற்கையின் கூறுபாடுகளை அறிந்திருக்க வேண்டும். இயற்கையின் இயல்பே வினாடிக்கு வினாடி நம்மைக் காப்பதுபோல் காத்து நரை, திரை, மூப்பு உண்டாக்கிச் சாகடித்து விடும். இயற்கை என்பது பிறப்பு. வீடுபேறு என்பது மோட்சம். எல்லோரும் இறப்பார்கள். இறவாமல் இருப்பவர்களின் பெருமைக்கு எல்லையே இல்லை.
பூமியில் பிறந்தால் அவன் மீண்டும் பிறக்காமல் மோட்சகதி அடையவேண்டும். அத்தகையவர்களின் பெருமையே இவ்வுலகத்தில் உயர்ந்தது.
ஒருவன் இறந்து விட்டால் மீண்டும் கருப்பைக்குப் போவான். அதாவது, மீண்டும் விதையாவான்.
யானை போல் வலிமையுள்ள ஐம்புலன்களை, மனவலிமையுடன் அறிவு எனும் குத்துக் கோலால் அடக்கி ஆள வேண்டும். அத்தகையவர் மேலான நிலத்தின் விதைக்கு ஒப்பாவார்.
உண்மைப்பொருள் அறிந்து, பொறி புலனை வென்று, பெரும் சக்தியைப் பெற்றுவிட்டால் இந்திரன் நடுங்குவான். பொருள் அறிந்து புலனை அடக்கி துறவு மேற்கொண்டவரிடம் அரசர்களும், செல்வந்தர்களும் தாள்பணிந்து நிற்பர்.
தலைவன் ஆசிபெற்று வாசி வசப்பட்டு காயசித்தி அடைந்து, தன்னை வென்றவனுடைய ஆற்றலுக்கு ஈடு இணை இவ்வுலகில் எதுவுமில்லை.
மற்றவர்கள் செய்ய முடியாத ஒன்றைச் செய்தவர்கள் பெரியோர்கள். பெரியோர்களின் ஆசியையும், அருளையும் பெற்றவர்கள், மற்றவர்கள் செய்யமுடியாத ஒன்றைச் செய்வார்கள். எமனை வெல்லும் வல்லமை படைத்தவர்களே மீண்டும் பிறக்காத நிலை அடைந்தவர்கள், அவர்களின் செயல்கள் அரிய செயல்களாக மட்டுமே இருக்கும்.
சுவை- நாக்கு -தண்ணீரின் கூறு
ஒளி - கண் -சூரியனின் கூறு
ஊறு - தேகம் -மண்ணின் கூறு
ஓசை- செவி -காற்றின் கூறு
நாற்றம் - மூக்கு - கந்தத்தின் கூறு
இவ்வாறு ஐம்புலன்களின் இயல்பறிந்து பஞ்சபூத தத்துவங்களை எவன் தெரிந்து கொண்டானோ அவனே உலகத்தை பற்றிய உண்மை தெரிந்தவன்.
நிறை மொழி எது?
காம தேகத்தில் தடுமாற்றம் இருக்கும். காம தேகம் அற்றுவிட்டால் கசடு இருக்காது. மாசற்ற கொள்கை, மாசற்ற தேகம் இருந்தால் உடம்பினுக்குள் உத்தமனைக் காணலாம். அறம், பொருள், இன்பத்தைப் பற்றிக் கூறுகின்ற மொழியே உயர்ந்தது. அதுவே நிறைமொழி. எத்தனை யுகங்கள் மாறினாலும் அது மாறாது. மூட நம்பிக்கையைக் கூறாத மொழி, மனிதாபிமானத்துடன் நடக்க வழிசொல்லுகின்ற மொழி நிறை மொழி. அறியாமையை நீக்கக் கூடிய மொழி, அன்புமொழி, ஆக்கம் நிறைந்த மொழி, ஆற்றல் பெற்ற மொழி, ஈடு இணையில்லாத மொழி, அருள் மொழி தமிழ் மொழி இதுதான் என்றும் அழியாத வேதமாகவும் இருக்கும். உயர்ந்த குணப்பண்பு உள்ளவர்களிடம் சினம் இருக்காது. அவர்களுக்கு மன்னிக்கும் மனப்பான்மை உண்டு. அத்தகையவர்கள் இறைவனுக்கு ஒப்பாவார்கள். அத்தகையவர்களுக்குச் சினம் வந்தால் அதனைத் தாங்கும் சக்தி இவ்வுலகத்திற்குக் கிடையாது.
- கிராம வீதிகள் வழியாக 1-2 கிலோமீட்டர் ரோடுஷோ சென்று மந்தைத் திடலில் முடிப்போம்.
- இரண்டு பேர் சைக்கிளில் போவது அப்போது சட்ட விரோதம்
புதிய அறிமுகத்தின்போது நிறுவனங்கள் கடைப்பிடிக்கும் மார்க்கெட்டிங் உத்தி ரோடுஷோ. தனியார் நிறுவனத்தில் விவசாய அதிகாரியாகப் பணிபுரியும் போது 70களில் திண்டுக்கல் கிராமப் பகுதிகளில் இதைப் பயன்படுத்தி இருக்கிறேன்.
புது வரவான டி.ஏ.பி. உர மூட்டைகளை ஏற்றுக்கொண்டு ஒரு மாட்டு வண்டியில் ஊர்வலம் போல செல்வோம். ஒயிலாட்டம், கரகாட்டம் போன்ற ஆடல் கலைகளை நிகழ்த்திக்கொண்டு தொழில்முறைக் கலைஞர்கள் அணிவகுப்பார்கள். கொட்டு மேளம் கண்டிப்பாக உண்டு.
கிராம வீதிகள் வழியாக 1-2 கிலோமீட்டர் ரோடுஷோ சென்று மந்தைத் திடலில் முடிப்போம். நிறைவாக உள்ளூர் விவசாயிகளை வைத்துக் கூட்டம் போட்டு டி.ஏ.பி. உரத்தின் அருமை பெருமைகளை எடுத்துக் கூறுவோம்.
இறுதியில் 16 எம்.எம். புரஜெக்டர் வைத்து ஏதாவது எம்.ஜி.ஆர். படம் திரையிடுவோம். கூட்டம் அள்ளும்! பட், ரோடுஷோ அறிமுகத்துக்காக மட்டுமே உதவும்.
மார்க்கெட்டிங்குக்குச் சரி! பொலிடிக்கல் ரோடுஷோ என்ன பயன் தரும்? அறிமுகத்துக்கான உத்தி வாக்கரசியலுக்கு உதவுமா? சந்தேகம்தான். பிரதமர் மோடியின் சென்னை பனகல் பார்க் ரோடுஷோ படக்காட்சிகளை டிவிக்களில் பார்க்கும் போது என் மனதில் எழும்பிய கேள்வி இதுதான்.
திராவிட இயக்க சிந்தனைகளை எதிர்க்கும் பாரதிய ஜனதா ரோடுஷோவுக்குத் தேர்ந்தெடுத்த இடம் நீதிக்கட்சி மூத்த தலைவர்களின் நினைவைப் போற்ற உருவாக்கப்பட்ட பகுதி என்பதே ஒருவகை முரணோ?
பிரதமரின் 2 மணி நேர ரோடு ஷோவுக்கு செய்யப்பட்டிருந்த விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் அன்றைய நாள் முழுவதும் வியாபார கேந்திரமான தி.நகர் பகுதியைப் பாதித்தது என்பதே உண்மை.
அந்தக் காலத்தில் மதுரையில் இந்திராகாந்தி ரோடுஷோ, நெல்லையில் நாவலர் சாலைப் பேரணி.. இப்படிப் பல தலைவர்களின் ஊர்வலங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் சாலைப் பேரணிகள் முதல் பிரம்மாண்டப் பொதுக்கூட்டங்கள் வரை சாமானிய வாக்காளர்கள் கலந்து கொள்வது இல்லை. பனகல் பார்க் ஏரியாவில் 2 கி. மீ ரோடுஷோ நடத்தி சென்னை முழுவதும் வாக்கு வாங்குகிற வித்தை எப்படிச் சித்தியாகும்? தெரியல சாமீ!
மதுரை யானைமலை மலையாளத்தான்பட்டி கிராமத்தின் அருகில் அரசு விவசாயக் கல்லூரி துவக்கப்பட்ட 65 - 66 காலகட்டம். மேடைப் பேச்சுக் கேட்பதில் விருப்பம். தலைவர்கள் எங்கு பேசினாலும் வாடகை சைக்கிள் எடுத்துக் கொண்டு பல கிலோ மீட்டர் தூரம் "டபிள்ஸ்" செல்வோம்.
இரண்டு பேர் சைக்கிளில் போவது அப்போது சட்ட விரோதம். எனவே போலீஸ் தலைகளைக் கண்டால் கேரியரிலிருந்து இறங்கி சைக்கிளோடு ஓடிச் சென்று காவலர்கள் போனபிறகு மீண்டும் ஏறிக் கொள்வோம்
மேடைப் பேச்சு கேட்பதற்குக் கட்டணம் வசூலிக்கப்பட்ட காலம். ஒப்பந்த அடிப்படையில் 300 ரூபாய் தந்து ஆள் சேர்க்கும் அவலநிலை ஏற்படும் என்று கனவிலும் நினைத்ததில்லை. நுழைவுக் கட்டணம் எவ்வளவு வசூல் ஆனது என்பதை வைத்தே பேச்சாளர்களின் நட்சத்திரத்தனமை அளவிடப்பட்டது.
பார்வையாளர்கள் கேள்விகளுக்கும் சொற்பொழிவாளர்கள் பதில் சொல்வார்கள். அதற்காகச் சீட்டு விநியோகிக்கப்பட்டு வினாக்களை எழுதுவோம்.

ஒரு கூட்டத்தில் "முட்டாள்" என்று மட்டுமே எழுதி ஒரு சீட்டு வந்தது. அதைக் கூட்டத்தில் வாசித்த சிறப்புப் பேச்சாளர் "யாரோ ஒருவர் தன் பெயரை மட்டும் எழுதிவிட்டுக் கேள்வியை எழுத மறந்து விட்டார்!" என்று கிண்டல் செய்தார். இப்படி ஒரு செய்தி உண்டு.
தமிழின் முதல் ரோடுஷோ மற்றும் சொற்பொழிவு என்று கூறப்படுவது தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் போர்க்களம் காணுமுன் நிகழ்த்தியது என்பார்கள்.
இன்றைய திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம் சிமிழி ஊராட்சில் உள்ள ஒரு கிராமம் அன்றைய தலையாலங்கானம். படைபலம் கொண்ட ஏழு மன்னர்களுக்கும் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கும் இடையே பெரும் போர் மூண்டது.
பாண்டிய மன்னன் வயதில் இளையவன். படைபலமும் குறைவு. எனவே எதிரிகள் அவனை எள்ளிநகையாடினார்கள்.
அப்போது பாண்டியன் நிகழ்த்திய பேருரையே தமிழின் முதல் மேடைப்பேச்சு! அது வஞ்சினம் நிறைந்தது.
"இது செய்யாவிட்டால் எனக்கு இன்னது நேரட்டும்!" என்று பலர் முன் கூறுவது வஞ்சினம்.
தலையாலங்கானத்துப் போரைப் பற்றிப் பாடாத புலவர்களே இல்லை. வெற்றி நாயகனான பாண்டியன் மீது நெடுநல்வாடை, மதுரைக் காஞ்சி ஆகியவற்றில் நக்கீரரும், மாங்குடி மருதனாரும் பாடல் புனைந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் வண்ணார்பிள்ளை கோயிலில் ஆறுமுக நாவலர் நிகழ்த்திய ரோடுஷோ மற்றும் சமயப் பொதுச்சொற் பொழிவு 170 ஆண்டுகளுக்கு முன்னால் என்கிறார் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளர் மறைந்த பெர்னார்ட் பேட்.
பெர்னார்ட் பிறப்பால் அமெரிக்கர். ஆய்வுப்பணிக்காக 1982ல் மதுரை வந்தார். பின்னர் அங்கேயே தங்கி "தமிழின் மேடைப்பேச்சு மற்றும் திராவிட அரசியல்" பற்றி கள ஆய்வு நடத்தினார்.
யு.எஸ்.நாட்டின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகப் பணியைத் தொடங்கியவர் பேட். சுமார் 34 ஆண்டுகளாகத் தமிழகத் தொடர்புடன் இருந்தவர்.
இறுதியாக சிங்கப்பூர் யேல் தேசியப் பல்கலைக்கழகக் கல்லூரியில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி மறைந்தார். சுந்தர ராமசாமியின் கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார் பெர்னார்ட் பேட்.
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பேசப்படும் பேச்சுத் தமிழை ஊன்றிக் கவனித்தார் பெர்னார்ட் பேட். மூத்த தமிழறிஞர் தொ.பரமசிவன் அவருடைய ஆய்வு வழிகாட்டி மற்றும் பேராசிரியர்.
"உசிலம்பட்டிப் பேச்சுத் தமிழ், மதுரைப் பேச்சுத் தமிழ், திருநெல்வேலி பேச்சுத் தமிழ் ஆகியவற்றுக்கு இடையிலான உச்சரிப்பு வேறுபாட்டைத் துல்லியமாக உள்வாங்கிப் பேசும் ஆற்றல் பெர்னார்டிடம் இருந்தது!" என்று எழுதியுள்ளார்.
அரசியல் பேரணிப் பேச்சு (இன்றைய ரோடுஷோ) மேடைத் தமிழ் பற்றிய அவரது ஆய்வு "திராவிட அழகியலில் பேச்சுத் தமிழ்" என்ற பெயரில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பதிப்பாக வெளிவந்துள்ளது.
தமிழ்நாட்டில் பேச்சு மொழிக்கும் மேடைத் தமிழுக்கும் உள்ள இடைவெளியை பெர்னார்ட் பேட் தன் ஆய்வின் மூலம் எடுத்துக் கூறினார். சுதந்திரப் போராட்டகால மேடைத் தமிழ், அதன் வழியாகத் திராவிட இயக்கத்தின் வளர்ச்சி, மக்களின் வாழ்க்கையிலும், அரசியலிலும் சினிமா வசனங்கள் ஏற்படுத்திய பாதிப்பு எனப் பன்முகத்தன்மையுடன் ஆய்வு செய்து உள்ளார் பெர்னார்ட் பேட்.
தமிழகத்தின் மேடைப்பேச்சு திராவிட இயக்கத்தால் செந்தமிழில் வளர்க்கப்பட்டது. செவ்வியல் தமிழைப் பயன் படுத்தித் தங்களுக்கான தனி அடையாளத்தைப் பெறத் திராவிட இயக்கத்தினர் கனவு கண்டார்கள். "திராவிட செவ்வியல் வாதம்" என்று அதை நிறுவினார் பெர்னார்ட் பேட்.
பிரிட்டிஷ் காலத்தில் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சுதேசித் தலைவர்கள் மீண்டும் மேடைத் தமிழைக் கையிலெடுத்தார்கள். ஆனால் ஆட்சிக்கு எதிரான அவர்களது "பப்ளிக் ஸ்பீக்கிங்" வாய்ப்பூட்டுச் சட்டத்தால் தடை செய்யப்பட்டது.
அதன் பிறகு வரதராஜுலு நாயுடு, திரு.வி.க., பெரியார் ஈ.வே.ரா. ஆகியோர் மூலம் மீண்டும் மேடைப் பேச்சு புத்துணர்வு பெற்றது. இவர்களில் பெரியாரின் பேச்சு மட்டும் வழக்கு மொழியில் இருந்தது.
பிபன் சந்திர பால் சென்னை கடற்கரையில் நிகழ்த்திய ரோடுஷோ மற்றும் உரை மகாகவி பாரதியைக் கவர்ந்தது. மேடைப்பேச்சால் வ.உ.சி, சுப்ரமணிய சிவா போன்ற தலைவர்கள் விடுதலை உணர்வைப் பெருக்கினார்கள். மேடைத் தமிழை நோக்கி பலரை ஈர்த்தவர் திரு.வி.க., மேடைப்பேச்சில் திராவிட இயக்கம் செவ்வியல்வாதத்தை முன்வைத்தது. கிருபானந்த வாரியார், கீரன் முதலிய ஆன்மீகச் சொற்பொழிவாளர்கள் தமிழின் புராண இலக்கியங்களைப் பிரபலப்படுத்தினார்கள்.
"இதுவா, அதுவா?" என்ற வினாவை எழுப்பும் பட்டிமன்றங்களை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தார் தவத்திரு குன்றக்குடி அடிகளார். இன்று வரை தொலைக்காட்சிகள் அதை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. அது துவங்குவதற்கு முன் பேச்சாளர்களை சாலைப் பேரணியாக (ரோடுஷோ) அழைத்துச் செல்வதுண்டு.
"கல் தூக்கிய கரத்தோர் பின்னர் கனத்த மாலைகளைத் தூக்கி வரும் விசித்திரபுரி மேடை!" என்று பேச்சு மேடைகளை ஒரு முறை வர்ணித்திருக்கிறார் அறிஞர் அண்ணா.
சீர்காழியில் பெரியார் பேச வந்தார். அவரை நோக்கிக் கற்கள், வீசப்பட்டன. "கல்லடிக்கு அஞ்சுபவர்கள் எழுந்து போங்கள். மற்றவர்கள் தலையில் துண்டைக் கட்டிக் கொள்ளுங்கள்." என்றார் பெரியார். அவர் பேசப் பேச மக்கள் கூட்டம் பெருகியது. கூட்டம் முடிந்ததும் அந்நகரின் துணை நீதிபதி "உங்களை ஊர்வலமாக (ரோடுசோவாக)அனுப்பி வைக்கிறோம்" என்றபோது பெரியார் அதற்கு மறுத்தார்.
மாபெரும் இடதுசாரித் தலைவர் ஜீவாவின் செவித்திறன் போனதில் கத்திக் கத்திப் பேசவேண்டிய அன்றைய "மைக் இல்லாச் சூழலுக்கு" பெரும் பங்குண்டு.
தொழிநுட்ப வசதியான ஒலி பெருக்கி (மைக்) அண்ணாவுக்குக் கிடைத்தது. அடுக்குமொழியில் மேடையில் பேசும் புதிய பாணியைத் துவங்கி வைத்தார் அவர். ஸ்டாண்ட் மைக் மற்றும் கூம்புக் குழாய் ஒலிபெருக்கி தான் எங்கள் காலத்தில் மேடை அலங்காரத்தின் முதல் படி. முன்னதாக தலைவர்கள் அணிவகுத்துவரும் ரோடுஷோ ஒரு உற்சாக டானிக்.
கேரண்டி எப்போதும் உத்தரவாதம் மட்டுமே! விற்பனைப் பொருள் உத்தரவாதப் பணிகளை செய்து முடிக்கும் என்ற உறுதி கிடைப்பது "கேரண்டி"யில் தான்!
ரோடுஷோ அறிமுகத்துக்கு மட்டுமே! "வாரண்டி" இருந்தால் மட்டுமே "கேரண்டி"க்கு மரியாதை!
- நோய்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள உடற்பயிற்சி நாளும் செய்ய வேண்டும் என்ற உறுதிமொழியை அனைவரும் எடுக்க வேண்டும்.
- ஒவ்வொரு நிமிடமும் நம்முடைய மூச்சைக் கவனித்து, மனத்தளவில் ‘நான் நலமுடன் இருக்கிறேன்’ என்று எண்ணிக்கொண்டே நடப்பது இன்னும் சிறப்பு.
நம் உடல் 24 மணி நேரமும் நம்மைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. நம் இதயம் இடைவிடாமல் துடிக்கிறது. நம்முடைய மூளை அணுஅணுவாய் நம்மைக் கண்காணித்துக் கொண்டே இருக்கிறது. நம்மில் எத்தணைப் பேர் நம் உடலின் மீது கவனம் வைக்கின்றோம். நோய் வந்த பிறகு மருத்துவமனைக்கு நடையாய் நடக்கின்றோமே தவிர, அது வருவதற்கு முன்னர் நாம் என்ன செய்து கொள்ள வேண்டும் என்பதைச் சிந்திப்பதே இல்லை.
ஒருவரின் முழுமையான நலன், காலை முதல் இரவு வரை அவர் என்ன செய்கிறார்? எவ்வளவு நேரம் தூங்குகிறார்? தனது உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துகிறார்? உள்ளத்தை எப்படி வைத்துள்ளார்? என்ன வகையான உணவு எடுத்துக் கொள்கிறார்? எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்கிறார்? என்பதைப் பொறுத்துத்தான் உள்ளது. எனவே நோய்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள உடற்பயிற்சி நாளும் செய்ய வேண்டும் என்ற உறுதிமொழியை அனைவரும் எடுக்க வேண்டும்.

என்னிடம் வரும் அனைத்து நோயாளிகளுக்கும் அவர்களின் நோயின் தன்மைக்கு ஏற்றவாறு 15 நிமிட உடற்பயிற்சி சொல்லிக்கொடுப்பது, எனது மருத்துவத்தின் ஒரு பகுதியாகவே வைத்துள்ளேன். அவர்கள் அடுத்த முறை வரும்போது உடற்பயிற்சி செய்தீர்களா? மாத்திரைகளைச் சரியான படி எடுத்துக்கொண்டீர்களா? எனக் கேட்டால், மாத்திரை எடுத்துக்கிட்டேன், ஆனால் பயிற்சி செய்ய நேரம் இல்லை என்று கூறுவார்கள். அவர்களிடமே தொலைக்காட்சி எவ்வளவு நேரம் பார்ப்பீர்கள்? என்று கேட்டால் 2 மணிநேரம் பார்ப்பேன் என்று கூறுவார்கள். 10 சதவீதத்துக்கும் குறைவானவர்களே நாளும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ளனர்.
நடைப்பயிற்சி செய்யும்முறை
நடைப்பயிற்சி செய்வதற்கான நேரம், காலை 5 - மணியிலிருந்து 6 மணிக்குள் நடைப்பயிற்சி செய்வது நல்லது (இயன்றவரை). குளிர்காலங்களில் 6 மணிக்குப் பிறகு கூடச் செய்யலாம், சிலருக்குக் காலையில் குழந்தைகளைக் கிளப்புவது, அலுவலக வேலைகள் என்று இருந்தால், இரவு உணவுக்கு முன் ஒரு 6- மணியிலிருந்து 7- மணிக்குள் நடைப்பயிற்சியை முடித்துவிட்டு, வியர்வை அடங்கியவுடன் குளித்துவிட்டு இரவு உணவு அருந்துவது நல்லது. நமக்கு உகந்த நேரங்களில், நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இந்த நடைப்பயிற்சி செய்வதைப் பழக்கமாக்கிக் கொள்வது நல்லது.
நடைப்பயிற்சியின் கால அளவு, தினமும் குறைந்தது 40 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். நடைப்பயிற்சியோடு சேர்ந்து, யோகா, மூச்சுப் பயிற்சி, தியானம் ஆகியவற்றைச் செய்பவர்களுக்கு, 30 நிமிடங்களே போதுமானது. வாரத்தில் அனைத்து நாட்களும் உடற்பயிற்சி செய்வது நல்லது, இருப்பினும் 5 நாட்களாவது கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.

நடைப்பயிற்சியின் வேகம் 1 மணி நேரத்திற்குக் குறைந்தது 6 கிமீ வேகத்தில் இருப்பது நல்லது. வயதானவர்கள் தம் உடல் தகுதிக்கு ஏற்றவாறு வேகத்தைக் குறைத்துக் கொள்ளலாம். நடைப்பயிற்சிக்குத் தகுந்தபடி உடையணிய வேண்டும். அப்போதுதான் வேகமாக நடக்க முடியும். நல்ல காலணிகளை அணிய வேண்டும். தரமற்ற காலணிகள் அணிந்து நடக்கும்போது நடைப்பயிற்சியின் வேகம் குறையும்.
நடைப்பயிற்சியின் போது யாரிடமும் பேசாமல் நம் உடல் மீது கவனம் வைத்து நடப்பது நன்று. நண்பர்களுடன் நடப்பதற்குத் தனிநேரமும், தனியாக நடப்பதற்குக் குறைந்தது 15 நிமிடங்களும் ஒதுக்குவது நம் உடலுக்கு நன்மைப் பயக்கும். நேராகப்பார்த்து, கைகளை நன்றாக வீசி, ஒவ்வொரு நிமிடமும் நம்முடைய மூச்சைக் கவனித்து, மனத்தளவில் 'நான் நலமுடன் இருக்கிறேன்' என்று எண்ணிக்கொண்டே நடப்பது இன்னும் சிறப்பு.
நான் மகிழ்ச்சியுடன் இருக்க இந்த நடைப்பயிற்சியைச் செய்கிறேன், இதனால் என் உடலும் உள்ளமும் நலன் பெறுகின்றன என்பதை உணர்ந்து நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நடைப்பயிற்சிக்கு முன் நன்கு தண்ணீர் பருகிவிட்டுத் தொடங்க வேண்டும். நடைப்பயிற்சி செய்யும்போது 500மிலி வரை தண்ணீர் எடுத்து க்கொள்ளலாம். வியர்வையில் அதிகப்படியான தண்ணீர்ச் சத்து வெளியேறுவதால், நடைப்பயிற்சிக்கு முன் தண்ணீர் எடுத்து க்கொள்வது நல்லது. நடைப்பயிற்சி முடிந்தபின், வியர்வை அடங்கியவுடன் குளிக்க வேண்டும். வியர்வையுடன் குளிப்பது நல்லதல்ல. நடைப்பயிற்சியின் முடிவில் தேநீர் அல்லது மற்ற உணவுப் பண்டங்களை உண்ணுவதைத் தவிர்க்க வேண்டும்.
நடைப்பயிற்சியின் நன்மைகள்
உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கிறது. உடலின் இறுக்கத்தைக் குறைக்கிறது. எலும்பு மற்றும் மூட்டுகளின் வலிமையை அதிகரிக்கச்செய்கிறது. காலிலுள்ள தசைகளை வலுப்பெறச்செய்கிறது. ரத்தச் சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. ரத்த அழுத்தத்தைச் சரியான அளவில் வைக்க உதவுகிறது
பெண்களுக்கு வரும் மார்பகம் மற்றும் கருப்பைவாய்ப் புற்றுநோயைத் தடுக்கிறது. மாரடைப்பைத் தடுக்கிறது. பக்கவாத நோய் வராமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது. ஒருவரை மகிழ்ச்சியாக வைக்க உதவுகிறது.
ஒருவரின் தன்னம்பிக்கையை வளர்க்கிறது. மனச்சோர்வை விரட்டுகிறது. மூளையில் மகிழ்ச்சிக்கான வேதியியல் பொருளான செரடோனின், ஓபியாய்டு, எண்டார்பின் ஆகியவை சுரப்பதால், நாள் முழுவதும் நாம் மகிழ்ச்சியாக இருக்க உதவுகிறது. நாம் மகிழ்ச்சியாக இருக்கும்போது நம் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும்.

நடைப்பயிற்சி, நிணநீர் நாளங்களின் வழியாக உடலின் கழிவுகளை அகற்ற உதவுகின்றது. எனவே நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடும் ஆற்றல் நம்முடலுக்கு வருகிறது. இதனால் தொற்று நோய்களில் இருந்து பாதுகாப்புக் கிடைக்கிறது.
இப்படி நடைப்பயிற்சி மேற்கொள்வதால் வாழ்வியல் முறை மாற்றங்களால் ஏற்படும் நோய்கள் மட்டுமல்லாமல், தொற்று நோய்களும் வெகுவாகக் குறைகின்றன என்று ஆராய்ச்சிகளின் முடிவுகள் எடுத்துரைக்கின்றன. இன்றைய இயந்திரமயமாக்கபட்ட வாழ்வில், நடைப்பயிற்சி மிகவும் நன்று என்பதை உணர்ந்து 24 மணிநேரத்தில் நாளும் 1 மணி நேரமாவது நமக்காகப் பயன்படுத்தினோமேயானால் நம் உடலானது மீதமுள்ள 23 மணி நேரங்களும் நம்மைப் பாதுகாக்கும். எனவே நலமாக வாழ நடைப்பயிற்சி மேற்கொள்வோம்.
மரு.அ.வேணி MD., DM(Neuro) 75980-01010, 80564-01010.
- சோழர்களின் நிதி சேமிப்புக் கிடங்காக ஊர் திகழ்ந்தது.
- கருட பகவானால் இத்தலம் தோற்றுவிக்கப்பட்டு வழிபடப்பட்டது என்பது புராணத்தின் சாராம்சமாகும்.
கும்பகோணத்தில் இருந்து சுமார் 19 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது குடவாசல். கடந்த வாரம் இந்த ஊரில் அமைந்துள்ள சீனிவாச பெருமாள் ஆலயம் பற்றி பார்த்தோம். இந்த குடவாசலில் மற்றொரு பகுதியில் சிறப்பான சிவாலயம் ஒன்று அமைந்துள்ளது.
பல்வேறு தனித்துவமான சிறப்புகள் அந்த சிவாலயத்துக்கு உண்டு. இந்த சின்னஞ்சிறிய ஊரில் அந்த கோவில் அற்புதமான மாடக் கோவிலாக அமைந்துள்ளது. இங்கே உள்ள இறைவியின் பெயர் ஸ்ரீபெரிய நாயகி. சிவனாரின் பெயர் ஸ்ரீகோணேஸ்வரர்.
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சங்க காலச் சோழ மன்னர்களின் மனம் கவர்ந்த இடமாக குடவாசல் விளங்கியது. குறிப்பாக சோழர்களின் நிதி சேமிப்புக் கிடங்காக ஊர் திகழ்ந்தது. குடவாயிற் கீர்த்தனார் என்ற சங்கப்புலவர் இவ்வூரின் சிறப்புகள் பற்றி நற்றிணை, அகநானூறு போன்ற சங்கப் பாடல்களில் சிறப்பித்துக் கூறியுள்ளார்.
பழம் பெருமை பல பெற்ற இவ்வூரின் நான்கு ராஜ வீதிகளின் நடுவே அமுத தீர்த்தம் என்ற குளக்கரையின் கீழ்பகுதியில் மேற்கு நோக்கிய ஆலயமாகக் கோணேச்சரம் என்ற சிவாலயம் காட்சி தருகின்றது.
இந்த ஆலயத்துக் கோபுரவாயில் கடந்து உள்ளே நுழையும்போது கொடி மரம் பலிபீடம், இடபம் ஆகியவற்றைக் கடக்கும் போது நம் முன் காட்சி அளிப்பது பெரியநாயகி என்னும் அம்பிகையின் அருள் காட்சி ஆகும். இந்த ஆலயத்தில் தனித்த துர்க்கை வடிவம் இடம் பெறவில்லை.
பெரிய நாயகியே இங்கு துர்க்கையாகவும் அருள்பாலிக்கின்றாள். இரண்டாம் கோபுரம் கடந்து உள்திருச்சுற்றில் வலம் வரும்போது ஆலயத்துக் கணபதியார், தேவாரமூவர், லட்சுமி, கந்தவேள், சண்டீசர், நவ கிரகங்கள், அட்ட மாதர்கள், தட்சிணா மூர்த்தி என்று அந்தந்த தெய்வங்களின் சிலைகளை அவரவருக்குரிய சிற்றாலயங்களில் தரிசிக்கலாம்.
முன்பு மலைக்கோவிலில் மேலே இருந்த நடராசர், சிவகாமி அம்மை சிலைகள் கட்டுமலையின் அடிவாரத்தில் தற்போது காசி விஸ்வநாதரோடு தனிச்சந்நதியில் காட்சி தருகின்றனர்.
கட்டுமலை மீது முதலாம் திருச்சுற்று விளங்குகின்றது. அங்கு கோணேசபெருமானின் பெரிய லிங்க உருவம் மூலவராக இடம் பெற்றுள்ளது. சதுர பீடத்தின் நடுவில் கோணேசலிங்கம் கம்பீரமாகக் காட்சி தருகின்றது.
கருட பகவானால் இத்தலம் தோற்றுவிக்கப்பட்டு வழிபடப்பட்டது என்பது புராணத்தின் சாராம்சமாகும்.
காச்யப முனிவரின் மனைவிகளாக விநதை, கத்ருதேவி இருந்தனர். இந்த இரு பெண்களுக்கு முறையே கருடனும், கார்க்கோடகன் என்ற பாம்பும் மகன்களாகப் பிறந்தனர். இளைய மனைவி சூழ்ச்சியால் விநதை பல துன்பங்களுக்கு ஆளானாள். விநதையின் துன்பத்தைப் போக்க, முன்பு பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட அமிர்தம் இருந்த கலசத்தை தேவர் உலகம் சென்று முயன்று பெற்று வந்தான் கருடன்.
பூலோகத்தில் அமிர்த கலசத்துடன் குடவாயில் அருகே பறந்து வந்தபோது மகாபயங்கரன் எனும் அசுரன் கருடனுடன் போரிட அழைத்தான். அவனுடன் போரிட முடிவு செய்த கருடபகவான் தான் எடுத்து வந்த அமிர்த கலசத்தை தரையில் தர்பையின் மீது வைத்தான். பிறகு அசுரனுடன் போர் புரிந்தான்.

அசுரனை வென்ற கருடன் தான் தர்ப்பையின் மீது வைத்த அமுத கலசத்தை மீண்டும் எடுக்க முயன்ற போது அது அங்கிருந்த புற்றினுள்ளே அழுந்தி புதைந்து கொண்டிருந்தது. கோபமுற்ற கருடன் தன் அலகினாலும் கால்களாலும் புற்றினைப் பிளக்க முற்பட்ட போது உள்ளிருந்து அமிர்த கலசத்துடன் சிவன் வெளிப்பட்டார்.
கருடனைப் பார்த்து 'உன் மூலம் இத்தலத்தில் நான் வெளிப்பட விரும்பியதால் இவ்வாறு செய்தேன்' என்று கூறி அருள்பாலித்தார். இறைவனின் ஆணைப்படி கருடன் அந்த இடத்திலேயே திருக்கோவில் எடுத்து வழிபட்டான். அவ்வாலயமே குடவாயில் திருக்கோவிலாகும்.
இங்குள்ள தலதீர்த்தத்தின் சிறப்பாக தலபுராணத்தில் கூறும்பொழுது, அமிர்த தீர்த்தத்தைத் தொட்டவருக்கு முற்பிறவியில் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும். இத்தீர்த்தத்தை அருந்தியவர்கள் புன்ணியவான் ஆகிறார்கள்.
இதில் நீராடல் செய்ய விரும்பி இது இருக்கும் திசையில் ஓரடி எடுத்து வைத்தாலே கங்கா நீராடல் செய்த பலனும், சிவலோக வாழ்வும் பெற்றவர்கள் ஆகிறார்கள். சிவராத்திரியில் பக்தியுடன் இத்தீர்த்தத்தில் மூழ்கினால், பதினாயிரம் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில் மூழ்கி ஈசனை தரிசிப்பவர் தேவர் ஆகிறார்கள். இதில் நீராடல் செய்பவர் அனைவரும் அமிர்தமயமான சரீரம் உடையவர்கள் ஆகிறார்கள்.
ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது கோவிலின் இடது புறத்தில் அனுமதி விநாயகர் சன்னதி உள்ளது. அடுத்து கொடி மரம், பலி பீடம், நந்தி ஆகியவை உள்ளன. வலது புறம் அம்மன் சன்னதி உள்ளது.
அம்மன் சன்னதியின் திருச்சுற்றில் சண்டிகேஸ்வரி சன்னதி உள்ளது. திருச்சுற்றில் இடும்பன், தண்டபாணி, கலைமகள், கஜலட்சுமி, குடவாயிற்குமரன், பைரவர், சந்திரன், சூரியன், நவக்கிரகங்கள், சூத முனிவர், சனி பகவான் சப்தமாதர், ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், பரவை நாச்சியார் ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. இடது புறம் நடராஜர் சன்னதி உள்ளது.
மூலவர் கருவறை கோஷ்டத்தில் தட்சிணா மூர்த்தி, உள்ளார். மாடக்கோவில் அமைப்பில் உள்ள இக்கோவிலின் மேல் தளத்தில் மூலவர் சன்னதிக்கு முன்பாக பலி பீடம், நந்தி ஆகியவை உள்ளன. மூலவருக்கு முன்பாக இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர்.
மூலவர் லிங்கத் திருமேனியாக உள்ளார். மூலவர் சன்னதியில் இடது புறம் தான்தோன்றி நாதர் உள்ளார். கோவிலின் முன்பு குளம் உள்ளது.
கருடன், சூரியன், தாலப்பிய முனிவர், பிருகு முனிவர் ஆகியோர் இத்தலத்தை வழிபட்டவர்கள் ஆவர்.
இத்தலத்து சிவபெருமானை தரிசிக்க 24 படிகள் ஏறி மேலே செல்ல வேண்டும்.
இங்கே முருகப்பெருமானை அருணகிரிநாதர் உருகி உருகி திருப்புகழ் பாடியிருக்கிறார் எனும் பெருமை கொண்ட தலம். அம்பாளே துர்கையாக, சக்தியாக, எதிரிகளை அழிப்பவளாகத் திகழும் அற்புதத் தலம் என்று தல புராணம் விவரிக்கிறது.
இங்கே நடராஜர் சபை அற்புதமாக அமைந்து உள்ளது. நடராஜர் அழகு ததும்பக் காட்சி தருகிறார். மேற்கு நோக்கிய சிவாலயம் அரிது. குடவாசல் கோவில், மேற்கு பார்த்த சிவன் கோவிலாக அமைந்து உள்ளது. அதே போல், கோவிலில் காசி விஸ்வநாதருக்கு தனி சந்நிதி அமைந்திருக்கிறது. அவரும் மேற்கு பார்த்து அருள்பாலிக்கிறார்.
கோவிலின் தென்மேற்குப் பிரகாரத்தில், மாலை வழிபாட்டு விநாயகர் சந்நிதி அமைந்துள்ளது. இவர் சக்தி வாய்ந்த விநாயகர் என்கிறார்கள் பக்தர்கள். இவரை வணங்கிவிட்டு, கோணேஸ்வரரையும் அம்பாள் பெரியநாயகியையும் வழிபட்டால், தடைப்பட்ட திருமணங்கள் நடந்தேறும். மாங்கல்ய பலம் பெருகும் என்கிறார்கள். இந்த விநாயகருக்கு முன்னதாக, மூஷிக வாகனம் இருக்கிறது. இதற்குக் கீழேயும் சின்னஞ்சிறு விநாயகப் பெருமானை தரிசிக்கமுடிகிறது.
கோச்செங்கட் சோழன் எழுப்பிய இந்த மாடக்கோவிலில். 24 படிகள் இருக்கின்றன. இந்தப் படிகளைக் கடந்து சென்றால், நம் வாழ்க்கையை உயர்த்தக் காத்திருக்கும் கோணேஸ்வரரை தரிசிக்கலாம்.
குடந்தையின் மகாமக விழாவுடன் தொடர்பு கொண்டது இந்த குடவாசல் என்கிறது தல புராணம்.
பிரளயகாலம் வந்து உயிர்கள் அழிவுறும்போது, பிரம்மதேவர் படைப்புக்கு உரிய உயிர்கலன்களை ஒரு அமுதக் குடத்தில் இட்டார். அந்தக் குடம் வெள்ளப்பிரளயத்தில் அடித்துச் செல்லப்பட்டு தென்திசையில் மிதந்து வந்தது. அப்போது, சிவபெருமான் வேடுவ வடிவில் வந்தார். குடத்தின் மீது அம்பெய்தினார். அந்த அமிர்தக் குடம் உடைந்தது.
அமிர்தக் குடத்தின் அடிபாகம் விழுந்த இடம் குடமூக்கு என அழைக்கப்பட்டது. பின்னர் இது கும்பகோணம் என்றானது. அமிர்தக் குடத்தின் நடுப்பாகம் விழுந்த இடம், கலயநல்லூர் எனும் சாக்கோட்டை என்றானது. மேல்பாகம் விழுந்த இடம் அதாவது குடத்தின் வாசல் பகுதி விழுந்த இடம் குடவாயில் என்றும் குடவாசல் என்றும் அழைக்கப்படுகிறது.
தலம், தீர்த்தம், மூர்த்தம் மூன்றுமே போற்றப்படுகிற அற்புதத் தலம் இது. இந்தக் கோவிலின் தீர்த்தம் அமிர்த தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது.
எந்தக் கோவிலிலும் இல்லாத ஆச்சரியம்... கோவிலின் பிரமாண்டமான மதிலில் நந்தியுடன் கருடாழ்வாரும் தரிசனம் தருகிறார். கருடன் , சூரியன், சூத முனிவர், தாலப்பிய முனிவர் முதலானோர் வணங்கி வழிபட்டு, வரம் பெற்றுள்ளனர். திருஞான சம்பந்தர் பாடிப் பரவசம் அடைந்த திருத்தலம் இது.
திருணபிந்து எனும் முனிவர் கோவிலின் அமிர்தக் குளத்தில் நீராடி, சிவபெருமானை நோக்கி தவமிருந்தார். அதில் மகிழ்ந்த சிவபெருமான், முனிவருக்கு அருட்காட்சி தந்தார். இதனால், முனிவர், குஷ்ட நோய் நீங்கப் பெற்றார்.
எனவே, சருமத்தில் ஏதேனும் நோய் இருப்பவர்கள், குடவாசல் கோணேஸ்வரரை மனதார வேண்டிக் கொண்டு, ஒவ்வொரு சோமவாரத்திலும் (திங்கட்கிழமை), பிரதோஷ நாளிலும் வீட்டிலிருந்தே வேண்டிக் கொள்ளுங்கள். விரைவில் நோய் நீங்கப்பெறு வீர்கள். பின்னர், இங்கு வந்து, சிவனாரை தரிசியுங்கள்.
கோணேஸ்வரர் பதிகம் பாடினால், கோளாறுகள் அனைத்தும் நீங்கும் என்பது சுற்றுவட்டார மக்களின் நம்பிக்கை.
ஞானசம்பந்தர் இந்த தலத்தில் பாடி அருளிய இரண்டு பதிகத்தைப் பாடி, வீட்டில் விளக்கேற்றி, குடவாசல் கோணேஸ்வரரை மனதார வழிபடுங்கள். 5 பேருக்கு தயிர்சாதம் தானம் வழங்குங்கள். எவ்வளவு பெரிய தீராத நோயையும் தீர்த்தருள்வார் கோணேஸ்வரர் என்பது ஐதீகம். எனவே கும்பகோணம் யாத்திரையில் இங்கு செல்லும் போது நோய் தீர வேண்டிக்கொள்ளுங்கள்.
- மகான்களை தியானிப்பதன் மூலம் நம் சித்தம் சுத்தமாகிறது.
- ஜீவ சமாதி என்பது உயிரை உடலுக்குள்ளேயே நிலைபெறச் செய்து அதன் இயக்கத்தை நிறுத்தி விடுவது.
சித்த புருஷர்களாகிய மகான்கள் சித்தி அடையும் விதங்கள் பலவகைப்பட்டவை. அவர்கள் உடலை விட்டு மறைந்தாலும் உலகை விட்டு மறைவதில்லை. தங்களை வழிபடும் அடியவர்களுக்கு அருளை வாரி வழங்குகிறார்கள் அவர்கள்.
மகான்களை தியானிப்பதன் மூலம் நம் சித்தம் சுத்தமாகிறது. மனத்துக்கண் மாசில்லாத நிலை தோன்றுகிறது. அதனால் மனத்தில் சாந்தியும் வாழ்வில் நிம்மதியும் ஏற்படுகின்றன.
கடவுளை வழிபடுவதை விட கடவுளின் அடியவர்களை வழிபடுவதன் மூலம் கூடுதலாகவும் விரைவாகவும் அருளைப் பெறமுடியும் என்கிறார் கிருபானந்த வாரியார் சுவாமிகள்.
நேரடியாக சூரிய ஒளி தலையைத் தாக்குகிறது. ஆனால் தலைக்கு அதிகப் பாதுகாப்பு தேவைப்படுவதில்லை. நாம் பொறுத்துக் கொண்டு வெயிலில் நடக்கிறோம்.
ஆனால் சாலையில் சூரிய ஒளி பட்டுச் சாலை சூடாகி அந்த வெயிலைப் பிரதிபலிக்கிறது. தலையில் தொப்பி இல்லாமலே நடக்க முடிந்த நாம் காலில் செருப்பில்லாமல் நடக்க முடியாது தடுமாறுகிறோம்.
நேரடி சூரிய ஒளி கடவுளைப் போல. சாலையில் பட்டு வெளிப்படும் சூரிய ஒளி அடியவர்களைப் போல. எனவே அடியவர்களால் வெளிப்படும் அருளுக்கு வலிமை அதிகம் என்பது வாரியார் சுவாமிகளின் விளக்கம்.
அருளை வாரி வழங்கும் மகான்கள் பல விதங்களில் உடலை உகுத்துப் பரிபூரணம் அடைகிறார்கள். அவர்களின் சமாதிகள் பாரத தேசமெங்கும் பல இடங்களில் இருக்கின்றன.
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான நந்தனார், தில்லைக்குச் சென்றார். தில்லை மூவாயிரவரான அந்தணர் கனவிலும் நந்தனார் கனவிலும் சிவபெருமான் தோன்றினார். நந்தனார் அக்கினிப் பிரவேசம் செய்துவிட்டுத் தன்னை தரிசிக்க வேண்டும் எனக் கட்டளையிட்டார் சிவபெருமான்.
அவ்விதமே தில்லை மூவாயிரவரைத் தீ மூட்டச் சொல்லி நந்தனார் அந்தத் தீயில் மூழ்கி எழுந்தார். பின் கடவுள் இட்ட கட்டளைப்படி நடராஜர் சன்னதிக்குச் சென்று அவரைத் தரிசித்துப் பரவச நிலையில் மூழ்கி நடராஜருடனேயே ஐக்கியமாகி விட்டார் என்ற செய்தியைச் சொல்கிறது சேக்கிழார் எழுதிய பெரிய புராணம்.
திருப்பாவை என்ற உன்னதமான பக்திப் பாசுரத்தை எழுதிய ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் ரங்கநாதரையே மணப்பேன் என உறுதி பூண்டிருந்தாள். அவள் திருவரங்கத்திற்கு அழைத்துவரப்பட்டாள். பக்தியின் உச்ச நிலையில் இருந்த அவள், ரங்கநாத விக்கிரகத்துடன் கலந்து மறைந்தாள் என்கிறது புனிதமே வடிவான ஆண்டாளின் தூய திருச்சரிதம்.
இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காகப் பாடுபட்ட மகான் கபீர்தாசர் சித்தி அடைந்தபோது, அவரின் இந்து அடியவர்களும் முகம்மதிய அடியவர்களும் அவர் உடலை வைத்துக்கொண்டு சண்டையிட்டுக் கொண்டார்கள். அவர் உடலை இந்து முறைப்படி எரிப்பதா, முகமதிய முறைப்படி மண்ணில் புதைப்பதா என்பதே சண்டைக்கான காரணம்.
இதைச் சற்றுநேரம் பார்த்துக் கொண்டிருந்த அந்தச் சடலம் திடீரென எழுந்து நின்றதாம். உங்கள் ஒற்றுமைக்காகத் தானே பாடுபட்டேன்? என் உடலை வைத்துக்கொண்டு சண்டை போடுகிறீர்களே? வெட்கமாக இல்லையா? எனக் கேட்டுவிட்டு அந்தச் சடலம் மீண்டும் போர்வையைப் போர்த்திக்கொண்டு படுத்துவிட்டதாம்.
சற்றுநேரம் காத்திருந்த அடியவர்கள் பின்னர் போர்வையைத் திறந்து பார்த்தார்கள். அங்கே சடலமெதுவும் இல்லை. பதிலாக ரோஜாக் குவியல்தான் இருந்ததாம்.
அந்த ரோஜாக் குவியலில் பாதி எரிக்கப்பட்டதாகவும் பாதி புதைக்கப்பட்டதாகவும் சொல்கிறது கபீர்தாசரின் கதை!
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் தொண்டையில் புற்றுநோய் ஏற்பட்டுப் பின்னர் சித்தி அடைந்தார். அவர் சித்தி அடைந்த நேரத்தில் அவர் மனைவியான தூய அன்னை சாரதா தேவி அவர் அருகில் இல்லை.
பரமஹம்சர் சித்தி அடைந்த விவரம், சாரதா தேவியிடம் உடனே தெரிவிக்கப்பட்டது. ஓடோடி வந்தார் சாரதா தேவி. பரமஹம்சரின் உடலைப் பார்த்து காளீ இனி நீ எங்கு போவாய் எனக் கதறினார் என்கிறது பரமஹம்சரின் திருச்சரிதம்.
பரமஹம்சரின் உடலையே கோவிலாகக் கொண்டு காளியின் அருட்சக்தி அதில் குடியிருந்தது என்ற உண்மையை சாரதாதேவி உணர்ந்திருந்தார் என்பதே இதன் விளக்கம்.
ஜீவ சமாதி என்பது உயிரை உடலுக்குள்ளேயே நிலைபெறச் செய்து அதன் இயக்கத்தை நிறுத்தி விடுவது. ஜீவ சமாதி அடையும் சித்தர்கள் தாமே விரும்பித் தம் செயல்பாடுகளை நிறுத்திக் கொள்வார்கள்.
மகான் ராகவேந்திரர் குழிக்குள் இறங்கி தியானத்தில் அமர்ந்து தம்மை சமாதி செய்விக்கச் சொல்லி விட்டார். இன்றும் மந்திராலயத்தில் உள்ள சமாதியில் அவர் உயிரோடும் உணர்வோடும் இருப்பதாக ராகவேந்திரர் அடியவர்கள் நம்புகிறார்கள்.
சுதந்திரப் போராட்ட காலத்தில் வரிவசூல் செய்யும் அதிகாரியாக இயங்கிய தாமஸ் மன்றோவுக்கு ராகவேந்திரர் நேரில் தோன்றிக் காட்சி தந்தார் என்ற செய்தியை மன்றோ பதிவு செய்திருக்கிறார்.
திருச்சி கரூர் அருகே நெரூரில் காவிரிக் கரையில் அமைந்துள்ள சதாசிவப் பிரம்மேந்திரர் சமாதி ஜீவ சமாதிதான். தமிழகத்திலும் பாரதத்தின் பல இடங்களிலும் இப்படிப்பட்ட ஜீவசமாதிகள் பல உள்ளன.
ஒரு யோகியின் சுயசரிதை என்ற புகழ்பெற்ற தன்வரலாற்றுப் புத்தகத்தை எழுதிய பரமஹம்ச யோகானந்தர், தான் உடலை உகுப்பதாகச் சொல்லிவிட்டே ஏராளமான அடியவர்கள் முன்னிலையில் அமர்ந்த நிலையில் அமரராகி விட்டார்.
அவர் தன் உடலை விட்டு விலகும்போது அவர் முன்னிலையில் சுமார் எழுநூறு பேர் அமர்ந்திருந்தார்கள். அமெரிக்காவில் போஸ்டன் நகரில்தான் அவர் மகாசமாதி அடைந்தார்.
தான் உடலை விட்டுவிடப் போவதாக அவர் அறிவித்திருந்ததால் விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் அந்த அதிசயத்தைக் காண அங்கே வந்து கூடியிருந்தார்கள். வந்தவர்களிடம் சிறிதுநேரம் உரையாடினார் யோகானந்தர். பின்னர் இப்போது என் உடலை விடப் போகிறேன் என அறிவித்தார். பத்மாசனத்தில் அமர்ந்து தியானம் செய்தவாறே உடலை நீத்தார். இந்த நிகழ்வைக் கண்டு மருத்துவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார்கள்.
பரமஹம்ச யோகானந்தரின் குருவான மகான் யுக்தேஸ்வர கிரியும் தான் உடலைத் துறக்கப் போவதை முன்கூட்டியே அறிவித்து அதன் பின்னரே உடலைத் துறந்தார். அதுமட்டுமல்ல, தாம் உடலைத் துறந்த மறுநாளே தன் சீடரான பரமஹம்ச யோகானந்தருக்கு தன் உடலோடு காட்சி கொடுத்தார்.

பாண்டிச்சேரியில் மகான் ஸ்ரீஅரவிந்தர் சித்தி அடைந்தபோது அவர் உடலைச் சுற்றி ஒரு பொன்னொளி பரவியிருந்தது. ஏராளமான அடியவர்கள் அந்தப் பொன்னொளியை தரிசிக்கும் பேறு பெற்றார்கள். நூற்றுப் பதினோரு மணிநேரம் அந்தப் பொன்னொளி அவர் உடலைச் சூழ்ந்திருந்தது.
அவர் இதயத்துடிப்பு நின்று அவர் சித்தி அடைந்து விட்டாலும் அவர் உடலில் காலமானதற்கான வேறு எந்தப்புற அறிகுறியும் தென்படவில்லை. இந்த அதிசயத்தை வியந்து மருத்துவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.
பாண்டிச்சேரி ஸ்ரீஅன்னை ஸ்ரீஅரவிந்தர் உடலின் அருகே அமர்ந்து அரவிந்தரின் உடலை சமாதி செய்விப்பதற்கான உத்தரவை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.
அந்தப் பொன்னொளி மெல்ல மெல்ல விலகி, அரவிந்தர் ஸ்ரீஅன்னையின் மனத்தில் தோன்றி தன் உடலை சமாதி செய்விக்கலாம் என உத்தரவளித்த பின்னரே அவர் உடல் சமாதி செய்விக்கப்பட்டது.

ரமண மகரிஷியும் ராமகிருஷ்ண பரமஹம்சரைப் போலவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டுத்தான் சித்தி அடைந்தார். அவர் உயிரை உகுத்த அதே கணத்தில் ஒரு வால் நட்சத்திரம் விண்ணில் தோன்றி மேலே சென்று மறைந்தது.
இந்த சம்பவத்தை கல்கி கிருஷ்ணமூர்த்தி ஒரு கட்டுரையில் பதிவு செய்துள்ளார். பிரபல நடனமணி பத்மா சுப்பிரமணியம் தான் சிறுமியாக இருந்தபோது அந்த வால் நட்சத்திரம் தோன்றி விண்ணில் சென்றதைப் பார்த்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
சென்னை அருகே திருவொற்றியூரில் பட்டினத்தார் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். சிறுவர்கள் அவரைக் கூடையால் மூடுவார்கள். அவர் சிரித்துக்கொண்டே வேறோர் இடத்தில் இருந்து வெளிப்படுவார்.
வியப்படைந்த சிறுவர்கள் மறுபடி அவரைக் கூடையால் மூடுவார்கள். மீண்டும் அவர் வேறோர் இடத்தில் இருந்து தோன்றுவார். இந்த விந்தையான விளையாட்டு கொஞ்ச நேரம் நடந்தது. இறுதியில் ஒருமுறை சிறுவர்கள் அவரைக் கூடையால் மூடியபோது அவர் எங்கிருந்தும் வெளிப்படவில்லை. காத்திருந்த சிறுவர்கள் பிறகு மெல்லக் கூடையைத் திறந்து பார்த்தார்கள்.
அங்கும் அவர் இல்லை. ஆனால் உள்ளே புதிதாய் ஒரு சிவலிங்கம் முளைத்திருந்தது. அவர் சித்தி அடைந்து சிவலிங்கமாக மாறியிருந்தார். திருவொற்றியூரில் உள்ள பட்டினத்தார் சமாதிக் கோயில் அப்படி அமைந்ததுதான்.
மகான் ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் சித்தி அடைந்த விதம் ஆச்சரியகரமானது. பூட்டிய அறையின் உள்ளே தியானத்தில் அமர்ந்து, பஞ்ச பூதங்களால் ஆன தன் உடலைப் பஞ்ச பூதங்களிலேயே பிரித்துக் கரைத்து ஜோதியில் கலந்துவிட்டார் அவர். பின்னர் அறையைத் திறந்து பார்த்தபோது அவர் இருந்ததற்கான எந்தச் சுவடுமே அந்த அறையில் காணப்படவில்லை.

மகான்கள் பல விதங்களில் சித்தி அடைகிறார்கள். அவர்களின் பொன்னுடல் மறைந்தாலும் அருளுடல் மறைவதில்லை. அடியவர்கள் வேண்டும் போதெல்லாம் அருளை வாரி வாரி வழங்குகிறார்கள் அவர்கள்.
மகான்களைப் பிரார்த்திப்பதன் மூலமும் மகான்கள் காட்டிய வழியில் நடப்பதன் மூலமும் நாம் நம் வாழ்வில் மேலான நிலையை அடைய முடியும். சாந்தியும் நிம்மதியும் கொண்ட மனநிலையை அடைவதற்கு மகான்களைப் பிரார்த்திப்பதே சிறந்த வழி.
தொடர்புக்கு,
thiruppurkrishnan@gmail.com
- முதுமையின் உடலில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சிதை மாற்றங்கள் அதற்கு முக்கிய காரணமாக உள்ளன.
- பித்தம் தணிக்கும் உணவும், மருந்தும் முதுமையில் சிறுநீரகக் கற்களை உண்டாக்காமல் தடுக்க உதவும்.
முதுமையில் 7 ஆண்களில் ஒருவருக்கும், 13 பெண்களில் ஒருவருக்கும் சிறுநீரகக் கல்லடைப்பு நோய் தோன்றுவதாக உள்ளது. சிறுநீரகக் கல்லடைப்புக்கு எளிமையான பல மருத்துவ முறைகள் சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டு இருப்பினும், முதுமையில் பலருக்கு இது சவாலாக உள்ளது.
சிறுநீரகத்தில் உருவாகும் கற்கள் பல்வேறு வகையாக உள்ளன. கற்கள் உருவாக பல்வேறு காரணங்களும் உள்ளன. அதில் கால்சியம் ஆக்சலேட் கற்களும், யூரிக் அமில கற்களும், கிருமித் தொற்றால் உருவாகும் கற்களும் முக்கிய இடம் பிடிக்கின்றன. குறிப்பாக யூரிக் அமில கற்களே முதுமையில் அதிகம் பேருக்கு உண்டாவதாக ஆய்வுத்தகவல்கள் கூறுகின்றன. முதுமையின் உடலில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சிதை மாற்றங்கள் அதற்கு முக்கிய காரணமாக உள்ளன.
கால்சியம் வகை சிறுநீரகக் கற்கள் பொதுவாக 20-30 வயதுகளில் உண்டாகக்கூடும். சிறுநீரில் உள்ள கால்சியம் (சுண்ணாம்பு) படிமங்கள், பாஸ்பேட், கார்பனேட் அல்லது ஆக்சாலேட் ஆகியவற்றுடன் ஒன்றுகூடி கற்களை உண்டாக்குவதாக உள்ளது. யூரிக் அமில வகை கற்கள் பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு அதிகம் உண்டாவதாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. கூடுதலாக சில வகை மருந்துகளும் சீறுநீரகக் கற்களை உண்டாக்க காரணமாக உள்ளன.
மாபெரும் பாரம்பரிய அறிவை மையமாகக் கொண்ட சித்த மருத்துவம் சிறுநீரகக் கல் உண்டாவதற்கு, உடலில் அதிகமாகும் பித்தமே முக்கிய காரணமாகின்றது. எனவே பித்தம் தணிக்கும் உணவும், மருந்தும் முதுமையில் சிறுநீரகக் கற்களை உண்டாக்காமல் தடுக்க உதவும்.
சிறுநீரகக் கற்கள் என்றாலே சித்த மருத்துவத்தை நாட வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு இயற்கையிலே உண்டு. ஏனெனில் சித்த மருந்துகள் சிறுநீரகக் கற்களை கரைத்து வெளியேற்றும் என்பது தான். உண்மையில் சிறுநீரகக் கற்களை உடைத்து வெளியேற்றும் தன்மையுள்ள பல மூலிகைகளும், பற்ப செந்தூர மருந்துகளும் சித்த மருத்துவத்தில் உள்ளன என்பது சிறப்புமிக்கது.

சித்த மருத்துவ மூலிகைகளில் மூக்கிரட்டை, நெருஞ்சில், யானை நெருஞ்சில், நன்னாரி, மாவிலங்கப்பட்டை, சிறுகண்பீளை, வாழைத்தண்டு, அருகம்புல், கொள்ளு, நாயுருவி ஆகியன சிறுநீரகக் கற்களை கரைத்து வெளியேற்ற பலன் தருவதாக உள்ளன. அஞ்சறைப்பெட்டி சரக்குகளில் புளி, வெந்தயம், சீரகம், சோம்பு ஆகியனவும் சிறுநீரகக் கற்களை கரைக்கும் தன்மை உடையன.
மேலும் சிறப்பாக தாதுக் கலப்புள்ள மருந்துகளான சிலாசத்து பற்பம், நண்டுக்கல் பற்பம், வெங்கார பற்பம் ஆகிய பல மருந்துகள் கற்களை உடைத்து, சிறுநீரைப் பெருக்கி வெளியேற்றுவதாக உள்ளன. கீழாநெல்லி, நெல்லி ஆகிய மூலிகைகள் கற்கள் உருவாவதை தடுப்பதாகவும் உள்ளன.
பல்வேறு நாடுகளின் பாரம்பரிய மருத்துவ முறைகளிலும் சிறுநீரக கற்களைக் கரைக்க பயன்படுத்தப்படும் மூலிகையாக உள்ளது சிறுகண்பீளை தான். இதில் உள்ள முக்கிய தாவர வேதிப்பொருட்களான 'குர்செடின்' மற்றும் 'பெட்யூலின்' ஆகியவை அதன் சிறுநீர்பெருக்கி செய்கைக்கும், சிறுநீரகத்தில் உள்ள கற்களின் அளவைக் குறைக்கும் செய்கைக்கும் காரணமாக உள்ளன.
மேலும் சிறுகண்பீளை சிறுநீரில் உள்ள கால்சியம், பாஸ்பேட், ஆக்சலேட் ஆகிய படிமங்களின் வெளியேற்றத்தை அதிகரிப்பதன் மூலமும், மெக்னீசியத்தின் அளவைப் பராமரிப்பதன் மூலமும் சிறுநீரகக் கல் உருவாவதைத் தடுப்பதாக உள்ளதை ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
சிறுபீளையை தனி கசாயமிட்டு குடித்து வந்தாலும் அல்லது சிறுபீளையுடன் கற்களை கரைக்கும் பிற மூலிகைகளான நெருஞ்சில்முள், மூக்கிரட்டை, மாவிலங்கப்பட்டை ஆகியவற்றை யும் சேர்த்து கசாயமிட்டு குடித்து வந்தாலும் சிறுநீரகக் கற்களை கரைத்து வெளியேற்றும். மேலும் சிறுநீரகத்தின் செயல்பாட்டை அதிகரிக்கவும் உதவும். 'சிறுபீளைக் குடிநீர்' எனும் சித்த மருந்தும் நல்ல பலன் தரும்.
அதே போல் சிறுநீரகக் கற்களை கரைக்க பயன்படும் எளிய மூலிகை கீழாநெல்லி. இதன் இலைப்பகுதியில் உள்ள 'பில்லாந்தின்' எனும் வேதிப்பொருள் சிறுநீரகக்கல் உருவாக்கத்தின் பல நிலைகளில் தலையிட்டு கற்கள் உருவாவதைத் தடுப்பதோடு, கற்களை கரைக்கவும் உதவுவதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து 45 நாட்கள் வரை கீழாநெல்லியை எடுத்துக்கொள்ள சிறுநீரகக் கற்கள் கரைவதுடன் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவும். சிறுநீரகக் கல் நோய்நிலையில் உள்ள முக்கிய பிரச்சனை என்னவெனில் 50% பேருக்கு மீண்டும் கல் உருவாக வாய்ப்புள்ளதாக பல்வேறு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய நிலையில் கீழாநெல்லி மீண்டும் கல் உருவாவதை தடுக்க உதவும்.
எளிமையாகக் கிடைக்கும் சித்த மருத்துவ மூலிகையான நெருஞ்சில் முள்ளினை கசாயமாக வைத்துக் குடித்து வருவதும் சிறுநீரகக் கற்களை கரைக்க உதவும். இதன் சிறப்பு என்னவெனில் சிறுநீரகக் கற்களை கரைப்பதோடு மட்டுமின்றி, இரத்தத்தில் அதிகமாகும் யூரியா, கிரியாட்டினின், யூரிக் அமிலம் இவற்றையும் குறைத்து சிறுநீரகத்தை காக்க உதவுவதாக எலிகளில் நடத்திய சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. சிறுநீரைப் பெருக்கும் தன்மையும் இதற்குண்டு
வளர்ச்சிதை மாற்றக் கோளாறால் உண்டாகும் மற்றொரு வகையான கற்கள் ஆக்சலேட் வகை கற்கள் தான். அத்தகைய கற்களைக் கரைக்க உதவும் எளிய மூலிகையாக மூக்கிரட்டை கீரை உள்ளது. இதனை அவ்வப்போது சூப் அல்லது கசாயம் வைத்து குடித்து வருவது ஆக்சலேட் கற்களைக் கரைக்க உதவுவதோடு சிறுநீரக செயல்திறனை அதிகரிக்க உதவும்.
அதேபோல் மீண்டும் மீண்டும் சிறுநீரகக் கற்கள் உருவாக்கத்தைத் தடுக்க வெந்தயம் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வெந்தயம் உட்கொள்வதால் கால்சியம் ஆக்சலேட் வகை கற்கள் மீண்டும் உருவாகாமல் தடுக்கப்படும் என்கின்றன மொரோக்கோ நாட்டில் நடைபெற்ற ஆய்வின் முடிவுகள்.
சீரகம் மற்றும் கருஞ்சீரகம் இரண்டுமே சிறுநீரகக் கல் உற்பத்தியைத் தடுத்து சிறுநீரக செல்களை காக்க உதவுவதாக பல்வேறு ஆய்வுமுடிகள் தெரிவிக்கின்றன. ஆகவே முதுமையில் சீரகம், கருஞ்சீரகம் ஆகிய அஞ்சறைப்பெட்டி சரக்குகளை அவ்வப்போது கசாயமிட்டு குடித்து வருவதும் நல்லது. அஞ்சறைப்பெட்டி சரக்கான சோம்பு கசாயமும் சிறுநீரகக் கற்களை கரைக்கும் இயற்கை பானமாக உள்ளது.
சீரகத்தில் உள்ள 'குமினால்டிஹைடு' மற்றும் கருஞ்சீரகத்தில் உள்ள 'தைமோகுயினோன்' வேதிப்பொருட்கள் அதன் மருத்துவ தன்மைக்கு காரணமாகின்றன. உடலில் உண்டாகும் பல்வேறு படிமங்களை சிறுநீரகத்தில் படியாமல் தடுத்து சிறுநீரில் வெளியேற்றுவதாக வாழைத்தண்டு உள்ளது. அவ்வப்போது அருகம்புல் கசாயமாக்கி குடித்து வருவதும் நன்மை பயக்கும்.
சிறுநீரகக்கற்கள் உருவாக்கத்திற்கு உணவு முறையும், குடிதண்ணீரும் முக்கிய பங்காற்றுகின்றன. பதப்படுத்தப்பட்ட உணவுகளும், காற்றேட்டப்பட்ட பானங்களும் கல் உருவாவதில் கூடுதல் பங்களிப்பை அளிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே இயற்கையான பானங்களை நாடுவதும், இயற்கையான உணவை உண்பதும் கற்கள் உருவாக்கத்தை தடுக்க உதவும்.
நாட்பட்டு சிறுநீரகத்தில் இருக்கும் சிறுநீரகக்கல் முதுமையில் நாட்பட்ட சிறுநீரக நோய் உண்டாவதற்கு வழிவகுக்கும் என்பதால் மிகுந்த எச்சரிக்கையோடு மருத்துவ ஆலோசனைப்படி மருத்துவம் மேற்கொள்ளுதல் அவசியம்.
முதுமையில் சர்க்கரை நோயுள்ள பலருக்கு சிறுநீரகக்கல் உண்டாக வாய்ப்புள்ளதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடல் பருமன் உள்ள நபர்களுக்கும் யூரிக் அமில கற்கள் உண்டாக வாய்ப்பு அதிகம் உள்ளது. சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமனுக்கு காரணமாகும் இன்சுலின் தடையே யூரிக் அமில கற்களை உண்டாக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. ஆகவே சரியான உணவு முறையை பின்பற்றுவது அவசியமாகிறது.
டேஷ் உணவு முறையானது (Dash Diet) சிறுநீரகக்கல் உருவாவதை தடுக்கும் வல்லமை படைத்தது. இது அதிகரித்த இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுவதோடு, சிறுநீரகக்கல் உருவாகும் வாய்ப்பினையும் தடுக்க உதவும் என்கின்றன ஆய்வு முடிவுகள். உணவில் அதிக அளவு பழங்களும், காய்கறிகளும் சேர்த்துக்கொள்வதும், கொழுப்புச் சத்துள்ள உணவுகள் மற்றும் அசைவ உணவுகளை குறைந்த அளவு உண்பதும் டேஷ் உணவுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாகவே புளிப்பான பழங்களை எடுத்துக்கொள்வது சிறுநீரகக்கற்களை கரைக்க உதவும். இருப்பினும் முதுமையில் வயிற்றில் அமில சுரப்பு அதிகம் உள்ளவர்கள் மற்றும் வாதம் அதிகரித்த நிலையில் உள்ளவர்கள் அவற்றை குறைவாக எடுப்பது நல்லது. ஏனெனில் "புளி துவர் விஞ்சு கறியால் வாதம் பூரிக்கும்" என்கிறது சித்த மருத்துவம்.
சிறுநீரகக்கல் நோய்நிலையில் முள்ளங்கி, புடலங்காய், வெண்பூசணிக்காய், வெள்ளரிக்காய் ஆகிய நீர்ச்சத்துள்ள காய்கறிகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. தேநீர், காபி குடிப்பதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. கேரட், பப்பாளி ஆகியவற்றை அடிக்கடி சாறாக எடுத்துக்கொள்வது சிறுநீரகக்கல் நோயில் நல்ல பலன் அளிக்கும். இதில் உள்ள வைட்டமின்-ஏ சத்து கல் உருவாவதை தடுக்கும் தன்மையை பெற்றுள்ளது.
சாதாரணமாக 5 மில்லிமீட்டர் அளவுள்ள கற்கள் வரை போதுமான தண்ணீர் குடித்தாலே வெளியே வந்துவிடக்கூடும். கற்கள் அளவு அதை விட கூடுதலாக இருப்பின் முறையான மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது அவசியமாகின்றது.
முதுமை என்பதே பல்வேறு நோய்களுக்கு ஆதாரமான நிலை தான். மருந்து சீட்டு பரிந்துரைப்படி எத்தனை எத்தனை மருந்துகள் எடுத்துக்கொள்வது என்பது முதுமையின் மனதை உடைக்கும். இருப்பினும் முதுமைக்கு தேவை அறம் சார்ந்த மருத்துவமும், கூடவே கொஞ்சம் அக்கறையும் தான். இவ்விரண்டால் ஆயுள் நீளும், ஆரோக்கியமும் செழிக்கும்.
தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com
- மலைக்கோவிலுக்கு செல்வதற்கு அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
- கொரோனா காலக்கட்டத்தில் கூட இந்த ஆலயத்தில் தடையில்லாமல் அன்னதானம் வழங்கப்பட்டது.
தோரணமலை முருகன் கோவில் தென்றல் வீசும் தென்காசி மாவட்டத்தில் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.
இது ஆதிமுனி அகத்தியரும் தேரையரும் தவமிருந்து மாந்தர்களின் நல்வாழ்வுக்காக சித்த மூலிகை ஆராய்ச்சி செய்த தெய்வீக மலை.
காசிவர்மன் என்ற மன்னனின் தலைவலியைப் போக்க அகத்தியர் கபால அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அப்போது அவரது சீடர் ராமதேவர் கலசத்தில் தண்ணீரை வைத்து அலம்ப, தலையில் இருந்த தேரை துள்ளிக்குதித்து தண்ணீருக்குள் விழுந்தது. தக்க சமயத்தில் சமயோசிதமாக செயல்பட்டதால் ராம தேவருக்கு தேரையர் என்ற பெயர் ஏற்பட்டது. அவரது ஜீவசமாதி இத்தலத்தில் தான் உள்ளது. இதனால் மருத்துவ படிப்புக்கு முயற்சி செய்பவர்கள் இங்கு வந்து வழிப்பட்டு பயன்பெறுகிறார்கள்.
இத்தகைய சிறப்புபெற்ற இம்மலையெங்கும் மூலிகைகள், ஆங்காங்கே நீர் சுரக்கும் சுனைகள்... இவற்றுக்கு மத்தியில் முருகப்பெருமான் இயற்கையாக அமைந்த குகைக்குள் கிழக்கு நோக்கி தோரணையோடு வீற்றிருக்கிறார்.
இவ்வுலக வாழ்வில் நலமும் வளமும் தானே மனிதனுக்கு அடிப்படை தேவை. அதனை இத்தலத்து முருகன் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வள்ளல் போல் அள்ளி அள்ளி வழங்குகிறார். நினைத்த காரியத்தை நிறைவேற்றி வைக்கிறார்.
சுமார் 800 அடி உயரம் கொண்ட தோரணமலை உச்சியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் முருகனை தரிசிக்க 1193 படிகள் ஏற வேண்டும். பக்தர்கள் இளைப்பாறி செல்வதற்காக மலைப்பாதையில் 6 இடங்களில் மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முருகன் சன்னிதிக்கு அருகில் அவன் கருணை போல் வற்றாத ஊற்றெடுக்கும் தீர்த்தம் உள்ளது. அதிலிருந்து நீர் கொண்டு வந்து தான் முருகனுக்கு தினமும் அபிஷேகம் செய்யப்படுகிறது.
மகனுக்கு அருகில் அன்னை இருப்பது போல் இங்கு முருகன் சன்னதிக்கு எதிரே பத்திரகாளியம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள். மலையேறி வரும் பக்தர்கள் அன்னையை வழிபட்ட பின்னரே முருகனை தரிசிக்க வேண்டும். மலையடி வாரத்தில் வல்லப விநாயகர், பாலமுருகன் சன்னதிகள் உள்ளன. உற்சவ மூர்த்தியும் இங்கேதான் உள்ளது. மலையேற முடியாதவர்கள் உற்சவ மூர்த்தியை வழிபட்டு செல்வார்கள்.
சிவன், கிருஷ்ணன், லட்சுமி, சரஸ்வதி மற்றும் நாகர், சப்த கன்னியர், கன்னிமாரம்மன், நவகிரக சன்னதிகளும் இங்கு உள்ளன.
மலைக்கோவிலுக்கு செல்வதற்கு அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
இங்கு திருவண்ணாமலை போல் பவுர்ணமி தோறும் கிரிவலமும் நடைபெறுகிறது. கிரிவல பாதை 6 1/2 கி.மீட்டர் சுற்றளவு கொண்டது. கிரிவலத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த கோவிலில் நடக்கும் வருண கலச பூஜை சிறப்புடையது. தமிழ் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமைதோறும் இந்த கலச பூஜை வழிபாடு நடத்தப்படுகிறது. உலகுக்கே உணவூட்டும் விவசாயம் செழிக்கவும் உழவர்களின் வாழ்வு ஏற்றம் பெறவும் இந்த வருண கலச பூஜை நடத்தப்படுகிறது.
அது சமயம் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த விவசாய பெருமக்கள் தாங்கள் சாகுபடி செய்ய வைத்திருக்கும் விதை, நாற்று உள்ளிட்ட இடுபொருள்களை கொண்டு வந்து பூஜையில் வைப்பர். மலையில் இருந்து 21 கலசங்களில் தீர்த்தம் எடுத்து வரப்படும். அதைக் கொண்டு உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம் செய்து பூஜை நடத்தப்படும்.
தமிழ்ப்புத்தாண்டு அன்று இந்த வழிபாடு மிகவும் விசேஷமாக நடத்தப்படும். இதில் ஏராளமான விவசாய பெருமக்கள் கலந்து கொள்வார்கள். அன்றைய பூஜையில் விவசாய இடு பொருட்களுடன் ஏர்கலப்பை, பரம்பு அடிக்கும் மரம், நீர் இறைக்கும் கூனை உள்ளிட்ட பல்வேறு வேளாண்மை கருவிகளையும் வைத்து வழிபடுவார்கள்.
இந்த நிகழ்வில் விவசாயிகள் கவுரவிக்கப்படுவார்கள். மேலும் அவர்கள் கையால் சமூக சேவையாளர்களுக்கு தோரணமலையான் விருதும் வழங்கப்படும். அன்று நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும். கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறும்.

இதற்கு அடுத்து தைப்பூசத் திருவிழா இந்த ஆலயத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முருகனின் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து வழிபடுவார்கள். காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். காண்பதற்கு பக்தி பரவசமாக இருக்கும்.
இதுவரை நாம் பார்த்தவையெல்லாம் பொதுவாக எல்லா கோவில்களிலும் நடைபெறுவது போன்ற பூஜை, வழிபாடு, திருவிழா பற்றிய செய்திகள் தான்..
இனி சொல்லப் போகும் விசயங்கள் தான் புதுமையானது, தனித்துவமானது. "மக்கள் தொண்டே மகேசன் தொண்டு" என்பார்களே... அது போன்று இந்த ஆலய நிர்வாகம் சார்பில் பல்வேறு சமூக சேவைகள் அருள் பணியாக செய்யப்பட்டு வருகின்றன. இது குறித்து ஆலயத்தின் பரம்பரை அறங்காவலர் செண்பக ராமன் கூறுவதை பார்ப்போம்...

தொடக்கத்தில் அறங்காவலராக இருந்த எனது தந்தையார் கே.ஆதிநாராயணன் அவர்கள் எடுத்த பல்வேறு முயற்சிகளால் இக்கோவில் புகழ்பெற தொடங்கியது. அவர் விட்டு சென்ற பணிகளை பக்தர்களின் உதவிகளோடு நான் செய்து வருகிறன்.
இப்பகுதி இளைஞர்களின் நலனுக்காக கோவில் நிர்வாகம் சார்பில் மலையடிவாரத்தில் விளையாட்டுத் திடல் அமைக்கப்பட்டு உள்ளது. இளைஞர்கள் இந்த விளையாட்டுத் திடலை பயன்படுத்தி வருகிறார்கள். போலீஸ், ராணுவம் போன்ற சீருடை பணியாளர் தேர்வுக்கு ஆயத்தமாகும் இளைஞர்கள் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கயிறு ஏறுதல் போன்ற பயிற்சிகளை பெறுகிறார்கள்.

இங்கு அவர்கள் குளிக்கவும் வசதி செய்யப்பட்டு உள்ளது. அவர்களுக்கு சாப்பாடும் வழங்கப்படுகிறது. சாப்பிட்ட பின்னர் அவர்கள் படிப்பதற்கு நூலக வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நூலகத்தில் சுமார் 2,500 புத்தகங்கள் உள்ளன. ஆன்மிகம், இலக்கியம், அறிவியல் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களும் உள்ளன. இதன் மூலம் சுற்று வட்டார கிராமப்புற மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள்.
மாணவர்களின் வாசிப்பு மற்றும் மனப்பாடத்திறனை மேம்படுத்துவதற்காக ஞாயிறுதோறும் திருக்குறள், திருவாசகம், தேவாரம் மற்றும் பக்தி பாடல்களை ஒப்பிக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டுகிறோம்.

கிராமப்புற மாணவர்களுக்கு பெரும் சவாலாக இருப்பது ஆங்கிலம் தான். எனவே ஆங்கிலத்தில் எழுத மற்றும் பேசுவதற்கும் பயிற்சி அளிக்கிறோம். இதற்காக நூலகத்துடன் அமைந்த டிஜிட்டல் படிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து சேவைகளும் முற்றிலும் இலவசமாகவே வழங்குகிறோம்.
மேலும் பக்தர்கள் உதவியுடன் ஏழை பெண்களுக்கு சீர்கொடுத்து திருமணமும் நடத்தி வைக்கிறோம், அதுமட்டுமல்ல அவர்களுக்கு பேறுகால உதவியும் செய்யப்படுகிறது. பிறந்த குழந்தைக்கு பெட்டகம் வழங்குகிறோம்.
அது மட்டுமல்ல முதியோர் காப்பகமும் இங்கு செயல்படுத்தப்படுகிறது. தற்போது ஆதரவற்ற ஐந்து தம்பதியர் வரை தங்கும் வசதி உள்ளது. அவர்களுக்கு வேண்டிய உணவு, உடை, மருத்துவம் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது.
கொரோனா காலக்கட்டத்தில் கூட இந்த ஆலயத்தில் தடையில்லாமல் அன்னதானம் வழங்கப்பட்டது. பார்சல் செய்து ஆஸ்பத்திரி நோயாளிகளுக்கும் பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டது.
தோரணமலை முருகன் வேண்டுபவர்களுக்கு வேண்டியதை அருளுகிறான். இதனால் பயனடைந்த பக்தர்கள் தங்களால் இயன்ற வகையில் மேற்கண்ட சமூக சேவைகளுக்கு உதவி செய்து வருகின்றனர். இதில் பங்குகொண்டு இறையருள் பெற விரும்புவோர் 9965762002 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
- சுக்கிரனுக்கு உரிய திசை என்று கிழக்கு திசையை சொல்வார்கள்.
- ஒவ்வொருவர் ஜாதக அமைப்பிலும் சுக்கிரனின் தன்மை மாறுபடும்.
ஒருவர் செல்வ செழிப்புடனும், மகிழ்ச்சியுடனும் ஆடம்பரமாக சொகுசாக வாழ்கிறார் என்றால் அவரது ஜாதகத்தில் சுக்கிர பகவான் மிக மிக நல்ல இடத்தில் அனுகூலமான அம்சங்களுடன் இருக்கிறார் என்று அர்த்தம். அதனால்தான் புதிய வசதி வாய்ப்புகளுடன் வாழ்பவர்களை பார்த்ததும் சிலர், "உனக்கென்னப்பா.... சுக்கிர திசை...." என்று சொல்வதை பார்த்து இருக்கலாம்.
சுக்கிர பகவான் பெரும்பாலும் கெடுதல் செய்யவே மாட்டார். 64 கலைகளுக்கும் அதிபதியான இவர் ஒவ்வொருவர் வாழ்விலும் நல்ல விசயங்களை செய்யக்கூடியவர். இதனால் இவரை களத்திரகாரகன் என்றும் சொல்வார்கள்.
அசுர குருவாக இருந்தாலும் உலக இன்பங்களுக்கும் வசதியான வாழ்க்கைக்கும் அடிப்படை அமைத்து கொடுப்பது சுக்கிரன்தான். பொதுவாக ஒருவரது இல்வாழ்க்கை, வாகன வசதி, உடல் அமைப்பு, கல்வி, அழகு, வியாபாரம் போன்றவற்றுக்கு சிறப்பு சேர்ப்பது சுக்கிர பகவான்தான்.
சுக்கிரனுக்கு உரிய திசை என்று கிழக்கு திசையை சொல்வார்கள். இந்திராணியை இவரது அதிதேவதை என்று குறிப்பிடுவார்கள். அதுபோல சுக்கிரனுக்குரிய ரத்தினமாக வைரத்தை சொல்கிறார்கள். அதனால்தான் சுக்கிர பகவான் நன்றாக இருந்தால் விரும்பினாலும், விரும்பா விட்டாலும் நகைகள் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பார்கள்.
ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் சரியான இடத்தில் வலிமையாக இருந்தால் அவரது இல்வாழ்க்கை நினைத்தபடி அமையும். குறிப்பாக காதலிப்பவர்கள் சுக்கிரன் உதவியுடன் தாங்கள் நினைத்தவர்களையே திருமணம் செய்து கொள்ள முடியும்.
மொத்தத்தில் சுக்கிரன் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் அவரது வாழ்க்கையில் செல்வ செழிப்புகளுக்கும், சுகபோகங்களுக்கும் எந்த குறையும் வரவே வராது. அதே சமயத்தில் சுக்கிரன் ஜாதகத்தில் தோஷமான நிலையில் இருந்தால் சில பாதிப்புகளை நிச்சயம் ஏற்படுத்துவார்.

முதல் பாதிப்பு செல்வசெழிப்பில் சற்று சறுக்கல் உண்டாகும். 2-வது முயற்சிகளில் வெற்றி கிடைக்க காலதாமதம் ஏற்படும். 3-வது திருமண பேச்சுவார்த்தைகள் சிறப்பாக நடந்தாலும் ஏதாவது ஒரு காரணத்தால் தள்ளி போய்க் கொண்டே இருக்கும். சுக்கிரன் சரியில்லை என்றால் இந்த மூன்றும் ஏதாவது ஒரு ரூபத்தில் தோஷமாக இருப்பதை காண்பித்து விடும்.
சிலருக்கு தொழில் ரீதியாகவும் தடை ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பொதுவாக சுக்கிரன் தோஷத்துடன் அமர்ந்து இருந்தாலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த மாட்டார். ஆனால் சிறிய பாதிப்பாக இருந்தாலும் அது ஒருவரது வாழ்வின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்து விடும்.
எனவே சுக்கிர தோஷம் இருக்கிறதா? என்பதை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அந்த சுக்கிர தோஷம் பலமாக உள்ளதா? பலவீனமாக உள்ளதா? என்பதையும் தெரிந்துக் கொள்ளுங்கள். அதற்கேற்ப பரிகாரம் செய்தால் போதுமானது.
ஒருவரின் ஜாதகத்தில் கன்னி வீட்டில் சுக்கிரன் தனித்து அமர்ந்து இருந்தால் அது சுக்கிர தோஷமாக கருதப்படும். கன்னி வீட்டில் சுக்கிரன் நீச்சம் அடைந்து செவ்வாயுடன் சேர்ந்து இருந்தாலும் அது தோஷம்தான். லக்னத்துக்கு 8-ம் வீட்டில் சுக்கிரன் இருந்தாலும் தோஷம் என்று குறிப்பிடுவார்கள்.
லக்னத்தில் இருந்து 3 மற்றும் 12-ம் இடத்தில் சுக்கிரன் மறைந்திருந்தால் அதையும் சுக்கிர தோஷம் என்று அழைப்பார்கள். ஒவ்வொருவர் ஜாதக அமைப்பிலும் சுக்கிரனின் தன்மை மாறுபடும். ஏதாவது ஒரு கெடுதலான கிரகத்துடன் சுக்கிரன் சேர்ந்து இருந்தால் அது சுக்கிர தோஷத்துக்கு வழி வகுத்து விடும்.
ஜோதிடர்களை பொறுத்தவரை சுக்கிர தோஷத்தை அதற்குரிய சரியான தசாபுத்தி வரும்வரை காத்திருந்து பிறகு பரிகாரம் செய்வது நல்லது என்று சொல்வார்கள். இல்லையெனில் அது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் பயம் காட்டுவார்கள். ஆனால் சுக்கிர தோஷத்துக்காக யாரும் பயப்பட வேண்டிய அவசியமே கிடையாது.
மிக மிக எளிய, நம்மால் செய்ய முடிந்த சாதாரண பரிகாரம் மூலமாகவே சுக்கிர பகவானை திருப்திப்படுத்தி விட முடியும். சிவாலயங்களுக்கு செல்லும்போது நவக்கிரக சன்னதிகளை பார்த்து இருப்பீர்கள். அங்கு இருக்கும் சுக்கிர பகவானை மனமுருகி வழிபட்டு வந்தாலே போதும்.

சில ஆலயங்களில் சுக்கிர பகவான் தனித்து இருப்பார். அத்தகைய ஆலயங்கள் மிக மிக சிறப்பு வாய்ந்தவை. தனித்து சுக்கிர பகவானை வழிபட்டால் சுக்கிர தோஷத்தின் மிகப்பெரிய கெடுதல்களை கணிசமான அளவுக்கு குறைக்க முடியும்.
வீட்டில் இருந்தபடியே பரிகாரம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு கைபிடி அளவு வெள்ளை மொச்சையை எடுத்து வெள்ளை துணியில் முடிச்சாக போட்டு கட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இரவில் தூங்கும்போது அதை தலையணைக்கு அடியில் வைத்து தூங்க வேண்டும்.
மறுநாள் அதை எடுத்து பத்திரமாக பாதுகாப்பான ஒரு இடத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். மறுநாள் இரவும் தூங்க செல்லும் போது அதை எடுத்து மீண்டும் தலையணைக்கு அடியில் வைத்து தூங்க வேண்டும். இப்படி அதை 9 நாட்கள் தலையணைக்கு அடியில் வைத்து தூங்க வேண்டும்.
10-வது நாள் அதை எடுத்து நன்றாக வேக வைத்து காக்கைக்கு உணவாக வைத்து விடவேண்டும். சுக்கிரனுக்கு உரிய பரிகாரங்களில் இந்த பரிகாரத்தை பெரும்பாலான ஜோதிடர்கள் பரிந்துரை செய்வது உண்டு.
வைணவர்கள் சுக்கிர தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது. வசதி வாய்ப்பு இருப்பவர்கள் பெருமாளுக்கு அனைத்து விதமான வஸ்திரங்கள், நைவேத்தியங்கள் கொடுத்து அர்ச்சனை செய்து வழிபடலாம். இதற்கு வாய்ப்பே இல்லை என்ற நிலையில் இருப்பவர்கள் வீட்டில் இருக்கும் பெருமாள் படத்துக்கு முன்பு விளக்கேற்றி வைத்து வழிபட்டாலே போதுமானவை.
தானம் செய்வதன் மூலமாகவும் சுக்கிரனை மகிழ்ச்சிப்படுத்த முடியும். ஏழை எளியவர்களுக்கு தயிர் சாதம் கொடுக்கலாம். உடை இல்லாமல் தவிப்பவர்களுக்கு வெள்ளை நிறம் கலந்த உடைகளை வாங்கி கொடுத்து மகிழ்ச்சிப்படுத்தலாம். வெள்ளை நிறத்தை தொடர்பு படுத்தி என்ன தானம் செய்தாலும் அது சுக்கிர தோஷத்தை உடனடியாக கட்டுப்படுத்தும் என்பார்கள்.
நவக்கிரக தலங்களில் சுக்கிரனுக்குரிய தலத்துக்கு சென்று வழிபடுவது மிகப்பெரிய பரிகாரம் ஆகும். தஞ்சை மாவட்டம் கஞ்சனூரில் உள்ள அக்னீஸ்வரர் ஆலயம் சுக்கிர தோஷத்தை நிவர்த்தி செய்வதற்கு தமிழகத்தில் உள்ள ஆலயங்களில் முதன்மையான ஆலயம் ஆகும். கும்பகோணத்தில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த ஆலயத்துக்கு தமிழகம் முழுவதும் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சுக்கிர தோஷ நிவர்த்திக்காக வந்து செல்கிறார்கள்.
இந்த ஆலயத்தில் மூலவராக சிவபெருமான் இருந்தாலும் அவரது வயிற்று பகுதியில் சுக்கிரன் இருப்பதாக ஐதீகம். இதன் காரணமாகவே இந்த ஆலயம் நவக்கிரக தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. சோழ மன்னர்கள் ஆட்சி காலத்தில் இந்த ஆலயத்தை சுக்கிரனின் பிரதான ஆலயமாக கருதி மக்கள் வழிபட்டனர்.
மற்ற நவக்கிரக தலங்களில் அந்தந்த கிரகங்களுக்கு உரிய தனி சன்னதி இருக்கும். ஆனால் கஞ்சனூரில் சிவ பெருமானே சுக்கிரனுக்காகவும் அருள் பாலிக்கிறார். எனவே இந்த ஆலயத்தில் சுக்கிரனுக்கு என்று தனி வழிபாடு எதுவும் கிடையாது. சிவபெருமானை வழிபட்டாலே சுக்கிரனையும் சேர்த்து வழி பட்டதாக கருதப்படும்.
ஒரு தடவை சுக்கிராச்சாரி யாரால் மகாவிஷ்ணுவுக்கு பாதிப்பு ஏற்பட்ட போது விஷ்ணுவை சுக்கிர தோஷம் பிடித்துக் கொண்டது. அந்த தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்ள அவர் இந்த தலத்துக்கு வந்துதான் வழிபட்டார். எனவே சுக்கிர தோஷம் உள்ளவர்கள் இந்த தலத்துக்கு வந்து சென்றாலே தோஷம் நீங்கி விடுவதாக நம்பிக்கை உள்ளது.
மிக நல்ல நிலையில் இருந்து சுக்கிரனால் செல்வத்தை இழந்தவர்கள் இந்த ஆலயத்துக்கு வந்து அக்னீஸ்வரருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்தாலே போது மானது. இந்த செல்வங்களை மீண்டும் பெற முடியும். பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் கஞ்சனூரில் வழிபடுவது உடனடியாக பலன் பெற வழிவகுக்கும்.
அதுபோல ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி ஆலயமும் சுக்கிரனின் பலத்தை கணிசமான அளவுக்கு ஆற்றலை அதிகரிக்க செய்யும் சிறப்பு கொண்டது. வெள்ளிக்கிழமை இந்த ஆலயத்துக்கு சென்று வழிபடலாம். வெண் தாமரை மலர் கொடுத்து வழிபடுவதும் மிகவும் நல்லது.
வெள்ளிக்கிழமை வீட்டில் மகாலட்சுமி படத்தை அலங்கரித்து நெய் தீபம் ஏற்றி பால் பாயாசம் நைவேத்தியம் படைத்து மகாலட்சுமியை போற்றி பாடி வந்தால் சுக்கிர தோஷம் விலகுவதை அனுபவப்பூர்வமாக உணரலாம்.
ஹோமம் செய்வதில் நம்பிக்கை உள்ளவர்கள் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 1 மணி முதல் 3 மணி வரை சுக்கிர ஓரை நேரத்தில் சுக்கிர பரிகார மகாஹோமம் நடத்தலாம். அப்போது உரிய முறையில் சங்கல்பம் செய்து கொண்டால் சுக்கிரன் மூலம் எப்போதும் நல்ல பலன்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும்.






