search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    வேண்டும் வரம் அருளும் தோரணமலை முருகன்
    X

    வேண்டும் வரம் அருளும் தோரணமலை முருகன்

    • மலைக்கோவிலுக்கு செல்வதற்கு அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
    • கொரோனா காலக்கட்டத்தில் கூட இந்த ஆலயத்தில் தடையில்லாமல் அன்னதானம் வழங்கப்பட்டது.

    தோரணமலை முருகன் கோவில் தென்றல் வீசும் தென்காசி மாவட்டத்தில் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.

    இது ஆதிமுனி அகத்தியரும் தேரையரும் தவமிருந்து மாந்தர்களின் நல்வாழ்வுக்காக சித்த மூலிகை ஆராய்ச்சி செய்த தெய்வீக மலை.

    காசிவர்மன் என்ற மன்னனின் தலைவலியைப் போக்க அகத்தியர் கபால அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அப்போது அவரது சீடர் ராமதேவர் கலசத்தில் தண்ணீரை வைத்து அலம்ப, தலையில் இருந்த தேரை துள்ளிக்குதித்து தண்ணீருக்குள் விழுந்தது. தக்க சமயத்தில் சமயோசிதமாக செயல்பட்டதால் ராம தேவருக்கு தேரையர் என்ற பெயர் ஏற்பட்டது. அவரது ஜீவசமாதி இத்தலத்தில் தான் உள்ளது. இதனால் மருத்துவ படிப்புக்கு முயற்சி செய்பவர்கள் இங்கு வந்து வழிப்பட்டு பயன்பெறுகிறார்கள்.

    இத்தகைய சிறப்புபெற்ற இம்மலையெங்கும் மூலிகைகள், ஆங்காங்கே நீர் சுரக்கும் சுனைகள்... இவற்றுக்கு மத்தியில் முருகப்பெருமான் இயற்கையாக அமைந்த குகைக்குள் கிழக்கு நோக்கி தோரணையோடு வீற்றிருக்கிறார்.

    இவ்வுலக வாழ்வில் நலமும் வளமும் தானே மனிதனுக்கு அடிப்படை தேவை. அதனை இத்தலத்து முருகன் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வள்ளல் போல் அள்ளி அள்ளி வழங்குகிறார். நினைத்த காரியத்தை நிறைவேற்றி வைக்கிறார்.

    சுமார் 800 அடி உயரம் கொண்ட தோரணமலை உச்சியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் முருகனை தரிசிக்க 1193 படிகள் ஏற வேண்டும். பக்தர்கள் இளைப்பாறி செல்வதற்காக மலைப்பாதையில் 6 இடங்களில் மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முருகன் சன்னிதிக்கு அருகில் அவன் கருணை போல் வற்றாத ஊற்றெடுக்கும் தீர்த்தம் உள்ளது. அதிலிருந்து நீர் கொண்டு வந்து தான் முருகனுக்கு தினமும் அபிஷேகம் செய்யப்படுகிறது.

    மகனுக்கு அருகில் அன்னை இருப்பது போல் இங்கு முருகன் சன்னதிக்கு எதிரே பத்திரகாளியம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள். மலையேறி வரும் பக்தர்கள் அன்னையை வழிபட்ட பின்னரே முருகனை தரிசிக்க வேண்டும். மலையடி வாரத்தில் வல்லப விநாயகர், பாலமுருகன் சன்னதிகள் உள்ளன. உற்சவ மூர்த்தியும் இங்கேதான் உள்ளது. மலையேற முடியாதவர்கள் உற்சவ மூர்த்தியை வழிபட்டு செல்வார்கள்.

    சிவன், கிருஷ்ணன், லட்சுமி, சரஸ்வதி மற்றும் நாகர், சப்த கன்னியர், கன்னிமாரம்மன், நவகிரக சன்னதிகளும் இங்கு உள்ளன.

    மலைக்கோவிலுக்கு செல்வதற்கு அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    இங்கு திருவண்ணாமலை போல் பவுர்ணமி தோறும் கிரிவலமும் நடைபெறுகிறது. கிரிவல பாதை 6 1/2 கி.மீட்டர் சுற்றளவு கொண்டது. கிரிவலத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த கோவிலில் நடக்கும் வருண கலச பூஜை சிறப்புடையது. தமிழ் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமைதோறும் இந்த கலச பூஜை வழிபாடு நடத்தப்படுகிறது. உலகுக்கே உணவூட்டும் விவசாயம் செழிக்கவும் உழவர்களின் வாழ்வு ஏற்றம் பெறவும் இந்த வருண கலச பூஜை நடத்தப்படுகிறது.

    அது சமயம் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த விவசாய பெருமக்கள் தாங்கள் சாகுபடி செய்ய வைத்திருக்கும் விதை, நாற்று உள்ளிட்ட இடுபொருள்களை கொண்டு வந்து பூஜையில் வைப்பர். மலையில் இருந்து 21 கலசங்களில் தீர்த்தம் எடுத்து வரப்படும். அதைக் கொண்டு உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம் செய்து பூஜை நடத்தப்படும்.

    தமிழ்ப்புத்தாண்டு அன்று இந்த வழிபாடு மிகவும் விசேஷமாக நடத்தப்படும். இதில் ஏராளமான விவசாய பெருமக்கள் கலந்து கொள்வார்கள். அன்றைய பூஜையில் விவசாய இடு பொருட்களுடன் ஏர்கலப்பை, பரம்பு அடிக்கும் மரம், நீர் இறைக்கும் கூனை உள்ளிட்ட பல்வேறு வேளாண்மை கருவிகளையும் வைத்து வழிபடுவார்கள்.

    இந்த நிகழ்வில் விவசாயிகள் கவுரவிக்கப்படுவார்கள். மேலும் அவர்கள் கையால் சமூக சேவையாளர்களுக்கு தோரணமலையான் விருதும் வழங்கப்படும். அன்று நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும். கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறும்.

    இதற்கு அடுத்து தைப்பூசத் திருவிழா இந்த ஆலயத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முருகனின் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து வழிபடுவார்கள். காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். காண்பதற்கு பக்தி பரவசமாக இருக்கும்.

    இதுவரை நாம் பார்த்தவையெல்லாம் பொதுவாக எல்லா கோவில்களிலும் நடைபெறுவது போன்ற பூஜை, வழிபாடு, திருவிழா பற்றிய செய்திகள் தான்..

    இனி சொல்லப் போகும் விசயங்கள் தான் புதுமையானது, தனித்துவமானது. "மக்கள் தொண்டே மகேசன் தொண்டு" என்பார்களே... அது போன்று இந்த ஆலய நிர்வாகம் சார்பில் பல்வேறு சமூக சேவைகள் அருள் பணியாக செய்யப்பட்டு வருகின்றன. இது குறித்து ஆலயத்தின் பரம்பரை அறங்காவலர் செண்பக ராமன் கூறுவதை பார்ப்போம்...

    தொடக்கத்தில் அறங்காவலராக இருந்த எனது தந்தையார் கே.ஆதிநாராயணன் அவர்கள் எடுத்த பல்வேறு முயற்சிகளால் இக்கோவில் புகழ்பெற தொடங்கியது. அவர் விட்டு சென்ற பணிகளை பக்தர்களின் உதவிகளோடு நான் செய்து வருகிறன்.

    இப்பகுதி இளைஞர்களின் நலனுக்காக கோவில் நிர்வாகம் சார்பில் மலையடிவாரத்தில் விளையாட்டுத் திடல் அமைக்கப்பட்டு உள்ளது. இளைஞர்கள் இந்த விளையாட்டுத் திடலை பயன்படுத்தி வருகிறார்கள். போலீஸ், ராணுவம் போன்ற சீருடை பணியாளர் தேர்வுக்கு ஆயத்தமாகும் இளைஞர்கள் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கயிறு ஏறுதல் போன்ற பயிற்சிகளை பெறுகிறார்கள்.

    இங்கு அவர்கள் குளிக்கவும் வசதி செய்யப்பட்டு உள்ளது. அவர்களுக்கு சாப்பாடும் வழங்கப்படுகிறது. சாப்பிட்ட பின்னர் அவர்கள் படிப்பதற்கு நூலக வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நூலகத்தில் சுமார் 2,500 புத்தகங்கள் உள்ளன. ஆன்மிகம், இலக்கியம், அறிவியல் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களும் உள்ளன. இதன் மூலம் சுற்று வட்டார கிராமப்புற மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள்.

    மாணவர்களின் வாசிப்பு மற்றும் மனப்பாடத்திறனை மேம்படுத்துவதற்காக ஞாயிறுதோறும் திருக்குறள், திருவாசகம், தேவாரம் மற்றும் பக்தி பாடல்களை ஒப்பிக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டுகிறோம்.

    கிராமப்புற மாணவர்களுக்கு பெரும் சவாலாக இருப்பது ஆங்கிலம் தான். எனவே ஆங்கிலத்தில் எழுத மற்றும் பேசுவதற்கும் பயிற்சி அளிக்கிறோம். இதற்காக நூலகத்துடன் அமைந்த டிஜிட்டல் படிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து சேவைகளும் முற்றிலும் இலவசமாகவே வழங்குகிறோம்.

    மேலும் பக்தர்கள் உதவியுடன் ஏழை பெண்களுக்கு சீர்கொடுத்து திருமணமும் நடத்தி வைக்கிறோம், அதுமட்டுமல்ல அவர்களுக்கு பேறுகால உதவியும் செய்யப்படுகிறது. பிறந்த குழந்தைக்கு பெட்டகம் வழங்குகிறோம்.

    அது மட்டுமல்ல முதியோர் காப்பகமும் இங்கு செயல்படுத்தப்படுகிறது. தற்போது ஆதரவற்ற ஐந்து தம்பதியர் வரை தங்கும் வசதி உள்ளது. அவர்களுக்கு வேண்டிய உணவு, உடை, மருத்துவம் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது.

    கொரோனா காலக்கட்டத்தில் கூட இந்த ஆலயத்தில் தடையில்லாமல் அன்னதானம் வழங்கப்பட்டது. பார்சல் செய்து ஆஸ்பத்திரி நோயாளிகளுக்கும் பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டது.

    தோரணமலை முருகன் வேண்டுபவர்களுக்கு வேண்டியதை அருளுகிறான். இதனால் பயனடைந்த பக்தர்கள் தங்களால் இயன்ற வகையில் மேற்கண்ட சமூக சேவைகளுக்கு உதவி செய்து வருகின்றனர். இதில் பங்குகொண்டு இறையருள் பெற விரும்புவோர் 9965762002 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    Next Story
    ×