search icon
என் மலர்tooltip icon

  சிறப்புக் கட்டுரைகள்

  ஹென்றி போர்டின் வெற்றி ரகசியம்!
  X

  ஹென்றி போர்டின் வெற்றி ரகசியம்!

  • உலகமெங்கும் பிரசித்தமான மாடல் டி கார் உருவாகவே அவர் பெயர் பிரபலமானது.
  • மேதைத் தனம் என்பது அனுபவம். சிலர் அதை ஒரு பரிசு என்றோ அல்லது ஒரு திறமை என்றோ நினைக்கின்றனர்.

  கடிகாரத்தை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மீண்டும் அதை அசெம்பிள் செய்து வேடிக்கை பார்த்த ஒரு சிறுவன், உலகின் ஆகப் பெரிய கார் அசெம்பிளி லைனை – 24 விநாடிகளில் கார் பாகங்களை ஒன்று சேர்த்து ஒரு காராக உருவாக்கும் நுட்பத்தைச் செய்து காட்டினான் என்றால் பிரமிப்பாக இல்லை?

  அமெரிக்கர்களையும் பிரிட்டிஷாரையும் வெறுக்கும் ஹிட்லர் தன் வாழ்நாளில் அனைவரும் அறியும்படி "உத்வேகம் ஊட்டுபவர்" என்று கூறிப் புகழ்ந்த ஒரே ஒரு அமெரிக்கர் இவர் தான் என்றால் ஆச்சரியமாக இல்லை?

  யார் இவர்?

  அவர் தான் ஹென்றி போர்டு.

  பிறப்பும் இளமையும்: அமெரிக்காவில் மிச்சிகன் மாகாணத்தில் வில்லியம் என்பவருக்கும் மேரி போர்டுக்கும் 1863-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ம் தேதி பிறந்தார் ஹென்றி போர்டு. தாயின் விருப்பத்திற்கிணங்க பண்ணையில் வேலை பார்த்த அவர் 1876-ல் தாயார் மறையவே பண்ணையில் இருந்து வெளியே வந்தார்.

  தந்தையார் அவருக்கு ஒரு பாக்கெட் கடிகாரத்தைப் பரிசாகத் தந்தார். அடுத்த கணமே அதை அக்கக்காகப் பிரித்த போர்டு, மீண்டும் அதை கடிகாரமாக அசெம்பிள் செய்து அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கினார்.

  இதிலிருந்து அனைவரது கடிகாரங்களையும் வாங்குவது, பிரிப்பது மீண்டும் அதை பழையபடி ஒன்று சேர்த்து ஓட வைப்பது அவரது பொழுதுபோக்கானது. ரிப்பேர் செய்வதற்கென்றே கடிகாரங்களை அனைவரும் அவரிடம் தர ஆரம்பித்தனர். அசெம்பிள் செய்வது என்பது அவரது மனதில் ஆழப் பதிந்து விட்டது.

  15 வயதில் முதல் என்ஜின்: 1878-ல் தனது 15-ம் வயதில் தனது முதல் நீராவி என்ஜினை அவர் உருவாக்கினார். எடிசனின் நிறுவனமான எடிசன் இல்லுமினேடிங் கம்பெனியில் சேர்ந்த அவர் தனது திறமையால் 1893-ல் தலைமைப் பொறியாளராக ஆனார்.

  கையில் சிறிது பணம் சேரவே சொந்தமாக தனது கேசொலைன் என்ஜினை தயாரிக்க ஆரம்பித்தார்.

  "குதிரை இல்லாமல் ஓடும் வண்டியான", தனது காரை 1896-ல் – 33-ம் வயதில் உருவாக்கினார்; அனைவரும் பிரமித்தனர். ''க்வாட்ரி சைக்கிள்' என்று அவர் அதற்குப் பெயர் சூட்டினார்.

  எடிசன் மீது அளவில்லாத பக்தி அவருக்கு ஏற்பட்டது. எடிசன் அவரைக் கார் தயாரிக்குமாறு ஊக்குவித்தார்.

  போர்டு மோட்டார் கம்பெனி: 1903-ம் ஆண்டு போர்டு மோட்டார் கம்பெனியை 28000 டாலர் முதலீட்டுடன் அவர் தொடங்கினார். ஆனால் உரிய லைசென்ஸ் இல்லாத காரணத்தால் அது மூடப்பட்டது. நீதிமன்றம் சென்ற போர்டு முதலில் தோற்றாலும்

  1911-ல் வெற்றி பெற்றார். மீண்டும் தொழிற்சாலை தொடங்கியது.

  600 டாலர் விலையில் 'மாடல் என்' என்ற ஒரு காரை அவர் அறிமுகப்படுத்தினார். அதன் விலை கூடுதல் என்பதை அவர் உணர்ந்தார். ஆகவே அனைவரும் வாங்கும் விலையில் ஏராளமான கார்களை உற்பத்தி செய்வதற்கான வழியைக் கண்டுபிடிக்க அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.

  முதலில் 950 டாலருக்கு விற்பனையான அவரது 'மாடல் டி' கார், 1927-ல் கடுமையான உழைப்பு, ஆர்வம் ஆகியவற்றின் விளைவாக 290 டாலராகக் குறைக்கப்பட்டது.

  தனது புதிய செயல் முறையான அசெம்பிளி லைனை அவர் 1913-ல் ஆரம்பித்தார். கார் பாகங்கள் வரிசையாக வைக்கப்பட்டு இருக்க 723 நிமிடங்களில் அதை ஒரு காராக ஆக்கிய அசெம்பிளி லைனை முதலில் அவர் உருவாக்கினார். பின்னர் தனது கடும் உழைப்பால் 93 நிமிடங்களில் ஒரு காரை உருவாக்க முடியும் என்பதை நிரூபித்தார். இன்னும் அதிக ஆராய்ச்சியும் , அதிக உழைப்பும் சேர அனைவரும் பிரமிக்கும் வண்ணம் 24 விநாடிகளில் அசெம்பிளி லைனிலிருந்து காரை வெளியே கொண்டு வந்தார்.

  உலகமெங்கும் பிரசித்தமான மாடல் டி கார் உருவாகவே அவர் பெயர் பிரபலமானது. அமெரிக்க சந்தையில் புகுந்த அவர் மக்களிடம் காரை விற்கத் தொடங்கினார். அமெரிக்காவில் பாதி கார்கள் அவர் தயாரித்த கார்களாகவே இருந்தன.

  உலகமே அதிசயித்த அந்த கால கட்டத்தில் ஹிட்லரே அவரை "ஊக்கமூட்டும் ஒருவர்" என்று புகழ்ந்தார்.

  மாடல் டி காரின் விற்பனை: மாடல் டி கார் மக்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. 165 லட்சம் கார்கள் விற்கப்பட்டன. 1908-ல் இருந்து 1927 முடிய தயாரிக்கப்பட்ட இந்தக் கார்கள் 2012-ம் ஆண்டிலும் கூட அமெரிக்காவின் டாப்-டென் கார்களில் ஒன்றாகத் திகழ்ந்தது.

  குடும்பம்: கிளாரா ஜேன் பைரண்ட் என்பவரை அவர் 1888-ம் ஆண்டு மணந்தார். அவருக்கு எட்சல் போர்டு என்று ஒரு மகன் உண்டு. வாழ்நாளில் அவரைத் தேடி ஏராளமான விருதுகள் வந்து குவிந்தன.

  அமெரிக்காவை உருவாக்கிய முக்கியமான ஒருவராக அவர் கருதப்பட்டார். 1999-ல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், மார்டின் லூதர் கிங், மதர் தெரசா ஆகியோர் அடங்கிய 18 பேர் பட்டியலில் அவரும் ஒருவராக அமெரிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  மனிதப் பண்புகள்: தனது நிறுவனத்தில் 20 சதவீதம் பணியை மாற்றுத்திறன் கொண்ட ஊனமுற்றோருக்காக அவர் தந்தார். அந்தக் காலத்தில் மற்றவர்கள் தரும் சம்பளத்தை விட இரு மடங்கு ஊதியத்தை அவர் தனது தொழிலாளர்களுக்கு வழங்கியதோடு, நிறுவனத்தில் தனக்குக் கிடைத்த லாபத்தை ஆறுமாதத்திற்கும் மேலாகப் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் அவர் பிரித்துக் கொடுத்தார்.

  எடிசனின் கடைசி மூச்சு: எடிசன் மீதான அவரது பக்தி அளப்பரியது. ஒரே ஒரு அதிசயமான எடுத்துக்காட்டைக் கூறலாம்.

  எடிசன் மரணப்படுக்கையில் இருக்கிறார், இறக்கப்போகிறார் என்பதை அறிந்தவுடன் போர்டு அவரது மகனிடம் ஓடோடிச் சென்று ஒரு சின்ன டெஸ்ட் டியூப் குழாயைக் கொடுத்தார். "எடிசனின் கடைசி மூச்சை இதில் எனக்குப் பிடித்துக் கொடுங்கள்" என்று வேண்டினார்.

  விசித்திரமான இந்த வேண்டுகோளை எடிசனின் மகனும் ஏற்றார். அவரது கடைசி மூச்சு அந்த டெஸ்ட் டியூப் குழாயில் பிடிக்கப்பட்டது. எடிசனின் மகன் உடனடியாக ஒரு கார்க்கை மேலே வைத்து அதை சீலிட்டார்.

  போர்டு அதை தான் அமைத்த 'தி ஹென்றிபோர்டு" என்ற மியூசியத்தில் பாதுகாப்பாக வைத்தார். அதை இன்றும் அந்த மியூசியத்தில் காணலாம்.

  சோயா பீன்ஸ் தகடினால் ஆன கார்!

  போர்டுக்கு அரசியலிலும் ஆர்வம் உண்டு. அமெரிக்க ஜனாதிபதியான உட்ரோ வில்சன் அவரை செனட்டுக்கு நிற்குமாறு வற்புறுத்த அவரும் போட்டியிட்டார். ஆனால் 4500 ஓட்டு வித்தியாசத்தில் தோற்றார்.

  இறக்கும் போது அவர் தன் பெயரில் 161 பேடண்ட் காப்புரிமைகளைக் கொண்டிருந்தார்.

  சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பில் பெரும் அக்கறை கொண்டவர் அவர். காரின் வெளிப்புறத் தகடுகளை சோயா பீன்சினால் செய்து காரின் எடையை வெகுவாகக் குறைக்க வேண்டும் என்பது அவரது ஆசை.

  ச.நாகராஜன்

  இரண்டாம் உலகப் போர் குறுக்கிடவே அவரால் தனது சோயாபீன்சினால் ஆன தகடுகள் கொண்ட காரை உற்பத்தி செய்ய முடியவில்லை.

  மறுபிறப்பில் நம்பிக்கை: தான் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்று தீவிரமாக நம்பினார் போர்டு. இதற்குக் காரணம் மறுபிறப்பில் அவருக்கு இருந்த நம்பிக்கை. ஆர்வமும் உழைப்பும் வெற்றி தரும். இருக்கவே இருக்கிறது புனர்ஜென்மம். பொறுமையுடன் இருந்தால் அடுத்த ஜென்மத்திலாவது வெற்றி வராமலா போய்விடும் என்பது அவரது எண்ணம்.

  தன் வெற்றிக்குக் காரணம் ஏதோ ஒரு மகத்தான சக்தி தான் என்று அவர் கூறினார். "மகத்தான சக்தி ஒன்று தனது அலைகளை என் மீது வீசிக் கொண்டிருக்கிறது. சொந்தமாக நான் ஒன்றுமே செய்யவில்லை. மறைந்திருக்கும் ஆற்றல் சக்திகளே என்னை முன்னுக்குத் தள்ளி வழி நடத்துகின்றன" என்றார் அவர்.

  தனது 26-ம் வயது முதலே மறுபிறப்பில் நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதை அவரே சான்பிரான்சிஸ்கோ எக்சாமினர் என்ற பத்திரிகைக்கு 1928-ம் ஆண்டு ஆகஸ்ட்

  28-ம் தேதி அளித்த பேட்டியில் குறிப்பிடுகிறார் இப்படி:

  26-ம் வயதில் மறுபிறப்பு பற்றிய நம்பிக்கையைக் கொள்ள ஆரம்பித்தேன். மதம் ஒன்றும் தர முன்வரவில்லை. வேலை கூட பூரண திருப்தியைத் தரவில்லை.

  ஒரு பிறப்பில் நாம் பெற்ற அனுபவத்தை இன்னொரு பிறவியில் நாம் பயன்படுத்த முடியவில்லை எனில் அது மிக மோசம். மறுபிறப்பு பற்றி நான் கண்டுபிடித்த போது ஒரு பிரபஞ்ச திட்டத்தை கண்டு கொண்டது போல இருந்தது. எனது கருத்துக்களை நிறைவேற்ற ஒரு வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்தேன். காலம் என்பது இனி ஒரு எல்லைக்குட்பட்டதாக இல்லை. கடிகாரத்தின் முள்களுக்கு நான் இனி அடிமை இல்லை.

  மேதைத் தனம் என்பது அனுபவம். சிலர் அதை ஒரு பரிசு என்றோ அல்லது ஒரு திறமை என்றோ நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் அது பல ஜென்மங்களில் ஏற்பட்ட அனுபவங்களின் விளைவே. சிலர் மற்ற ஆன்மாக்களை விட முதியவர்கள். ஆகவே அவர்களுக்கு அதிகம் தெரியும். மறுபிறப்பைக் கண்டுபிடித்ததிலிருந்து எனது மனம் தெளிவாக இருக்கிறது.

  இந்த உரையாடலை நீங்கள் பாதுகாத்தீர்கள் என்றால் இது மனித மனங்களை தெளிவாக இருக்கச் செய்கிறது என்று எழுதுங்கள். நான் மற்றவர்களுக்குச் சொல்ல விரும்புவது வாழ்க்கை பற்றிய நீண்ட நோக்கு நமக்குத் தரும் அமைதியைப் பற்றியே"

  போர்டு கூறியதில் ஒரு சிறிய பகுதியையே மேலே நாம் படித்தோம். இன்னும் ஏராளமாக அவர் மறுபிறப்பு பற்றிக் கூறியிருக்கிறார்.

  மனித வாழ்வில் ஒரு ஆறுதலையும் அர்த்தத்தையும் தரும் மறுபிறப்பு நம்பிக்கையே தன் வெற்றிக்குக் காரணம் என்று அவர் கூறியிருப்பது பொருள் பொதிந்த ஒன்று.

  மறைவு: பெருமூளையில் ஏற்பட்ட ரத்த ஒழுக்கினால் 1947-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ம் தேதி அவர் தனது 83-ம் வயதில் மரணமடைந்தார்.

  வரலாறு கண்ட மாமனிதர்: சாதாரண கடிகார ரிப்பேர் செய்து கடிகார பாகங்களைக் கழட்டி அதை மறுபடியும் பூட்டி தனது வாழ்க்கைப் பாதையை ஆரம்பித்த போர்டு 200 பில்லியன் டாலருக்குச் சொந்தக்காரராக ஆனது எதைக் குறிக்கிறது? அவரது ஆர்வம், உழைப்பு, பொறுமை ஆகியவற்றையே குறிக்கிறது.

  வரலாற்றில் நாம் காணும் அதிசய மனிதராகத் திகழும் இவரது பொன்மொழி:

  செய்யும் ஒரு வேலையில் வெற்றி காணவேண்டுமெனில், எந்த ஒரு அமைப்பையும், வழிமுறையையும் எப்போதும் சீர்திருத்தவோ, அல்லது அடியோடு நீக்கவோ, ஒழிக்கவோ தயாராக இருங்கள்,

  எல்லாமே உங்களுக்கு எதிராகத் திரும்பி விட்டது எனில், ஆகாய விமானம் காற்றுக்கு எதிராகவே தனது பறக்கும் வேலையைத் தொடங்குகிறது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

  தொடர்புக்கு:- snagarajans@yahoo.com

  Next Story
  ×